இவ்வளவு தாங்க வாழ்க்கை ! – அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 15 உண்மைகள்!

That's All Life - must know about these 15 Facts to Everybody!

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? நம் வாழ்க்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறதா? என்று மனத்தெளிவு இல்லாதவர்கள் இந்த கேள்வி பதில் தொகுப்பை கட்டாயம் படிக்க வேண்டும்!

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மகாநதி நாவலில் கிடைத்த வரிகள் கேள்வி பதில்களாக…

1.தலைவன் யார்?

மக்கள் தங்கள் தலைவர்களைத் தாங்களே உருவாக்குகிறார்கள். தலைவர்களுக்கு இல்லாத பொய்ச்சிறப்புகளை இருப்பதாகப் பாவித்து அவர்களின் மேல் ஏற்றுவார்கள். தலைவர்களைத் தங்களினும் மேம்பட்டவர்களாக மேம்பட்டராகவே படைக்கப்பட்டவர்களாகத் தாங்களே கருதிக் கொள்வார்கள். தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அங்க அசைவுகளுக்கும் தாங்களே புதுப்புது அர்த்தம் கற்பித்துக் கொள்வார்கள். தலைவர்களை விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டவர்களாக நினைப்பார்கள். அவர்களை யாரேனும் விமர்சித்தால் விமர்சிப்பவரைத் தங்கள் எதிரிகளாகக் கற்பிதம் செய்து கொள்வார்கள்.

2.தொண்டன் யார்? தொண்டராய் வாழ்தல் என்பது?

அதாவது ஒரு தலைவரின் கட்டளையை ஏற்றல். அதைச் செயல்படுத்துதல். காதுகளைத் தீட்டி தலைவன் வசம் ஒப்புவித்தல். அவன் இட்ட காரியங்களுக்கு எனத் தன் சொந்த உடம்பையும் ஒப்படைத்தல். தனக்கெனத் தனி மூளையும் தனி மனசும் தனி விருப்பு வெறுப்பும் வேண்டாதிருத்தல். கடலில் தன்னைக் கரைத்துக் கொள்ளுதல், துளியைக் கடலுக்கு இரையாய்க் கொடுத்தல். எவ்விதத்திலும் இன்னொன்றுக்காய் வாழ்தல். தனக்கென அளிக்கப்பட்ட ஒரு பிரத்யேக வாழ்க்கையை வீணே விரயம் செய்துவிடல்.

3.போராட்டம் என்பது?

ஆலை முதலாளிகளோட சண்டைபோட்டு நாலணா கூலி உயர்வு வாங்கிக் கொடுத்தோம். தொழிலாளிகள் சுதந்திரமே கிடச்சிட்டதா நினைச்சுக்கிறாங்க… சுதந்திரத்தோட அர்த்தமே அவங்களுக்கு கூடக் கெடச்சிருக்கிற நாலணா தான்னு நினைக்கறாங்க… சுதந்திரம்கிறது இடையறாத போராட்டம்னு அவிங்களுக்குச் சொல்லணும்… போராடிப் போராடித்தான் வாழ்க்கை அங்குலம் அங்குலமா மாறிட்டு இருக்கு… இன்னும் நாம் நடக்க வேண்டிய தூரம் ரொம்ப அதிகம் இருக்குன்னு அவிங்களுக்கு எடுத்துச் சொல்லணும்…

4.தலைவன் ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வருகிறது?

ஊரில் கட்சிகள் பெருத்துப் போய்விட்டன. மனிதர்களுக்குத் தெய்வங்களாகும் ஆசை முளைவிட்டுவிட்டது. இனி இது வளர்ந்து மரமாகத்தான் ஆகும். என்னை வழிபடு, என்னைத்துதி, எனக்கு ஏவல் செய், என் உண்டியலை நிரப்பு, என் நாற்காலிக்கு உன் கால்களைக் கொடுத்து உதவு. உன் மூளையை மூடி அடைத்துவிடு. உன் மனதை இருட்டாக்கிக் கொண்டுவிடு, என்னைத் தொழு. நான் உங்கள் தலைவன், உன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதால்.

5.சுற்றுலா (மகிழுலா) செல்வது ஏன்?

முற்றிலும் புதிய சூழலில் நம்மை நாம் இழக்கத்தான். ஈடுபடுத்திக் கொள்ளத்தான். கற்சுவர்களுக்குள் தூங்கி விழித்து ஒரே மாதிரி சிந்தனை, ஒரே மாதிரி இட்லிகளைத் தின்பது, ஒரே மாதிரியான தெருவாழியே உலாவுவது ஒரே மாதிரியான முகங்களைப் பார்ப்பது ஒரே மாதிரியான கட்டடங்களில் பட்டு மீண்டு வரும் ஒரே மாதிரியான காற்றைச் சுவாசிப்பது ஒரே மாதிரி உட்காருவது, படுப்பது, என்கிற தினம்தினம் அலுப்பூட்டத்தக்க சூழ்நிலைகளிலிருந்து அடிக்கடி விடுபடுவது நம்மை நாம் கிழண்டு போகாமல் புதுசாக்கிக் கொள்வதாகும்.

6.கணவனைத் தேர்ந்தெடுத்தலின் முக்கியத்துவம்? ( அப்பா கதாபாத்திரம் விளக்குகிறது)

கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழப்போறது நீ… உன் முடிவு தான் எனக்கு முக்கியம்… உனக்கு சம்மதம்னா எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை. எதுவா இருந்தாலும் நல்லா யோசனை பண்ணி முடிவு எடு. இதுல கூச்சப்பட ஒன்றும் இல்லே… எதில் எல்லாம் நம்ம பொண்ணுங்க கூச்சப்படக் கூடாதோ அதில கூச்சப்பட்டு வீணாப் போறாங்க… கணவனைத் தேர்ந்து எடுக்குறதுல தான் பெண்ணோட சாமர்த்தியமும் சந்தோசமும் ஏன் வாழ்க்கையே அடங்கி இருக்கு…

7.பெண்களின் சமையலை பழிக்கக்கூடாது ஏன்?

உணவு எதுவாக இருந்தாலும் அது எத்தன்மையதாய் இருந்தாலும் அதை உருவாக்குவதில் பெண்களின் வியர்வை கலந்து இருக்கிறது என்கிற காரணத்தால் அவற்றை சகித்துக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

8.புளிப்பு, காரம் ஏன் அதிகம் கூடாது?

சாமியார்கள் தான் உணவில் புளிப்பு, காரம் அதிகம் சேர்க்கக்கூடாது என்பது இல்லை. எல்லோருக்குந்தான் அது. காரம், புளிப்பு குறைவா சேர்த்துக்கிறதுதான் வயிற்றுக்கு நல்லது. மிளகாய் காரத்தைவிட மிளகுக்காரம் நல்லது. புளியில் காரம் இல்லை. அதுக்குப் பதிலா எலுமிச்சம் பழம் சேர்த்துக்கலாம். பொதுவா இது எல்லாம் நம்ப உடம்புக்கு நல்லது.

9.காமராஜர், எம்ஜிஆர் காலம் போல் இல்லாமல் கல்வியின் நிலை எந்த காலகட்டத்தில் மாறியது?

குறிப்பாக 2001 – 2006 ஆகிய ஐந்து ஆண்டுகளில் கல்வியின் நிலைமையும், ஆசிரியர்களின் நிலைமையும் தாழ்ந்தன. கல்வியின் விலையோ உயர்ந்தது. கல்வி மட்டுமின்றி மதத்தாலும் மக்களைத் துண்டாட ஒரு ஆட்சி மதம்பிடித்துப் பிளிரியதும் அக்காலத்தில் தான்.

10.ஆசிரியர் வழிக்கல்வி, நூல்வழிக் கல்வி, மக்கள் வழிக்கல்வி என்பதன் அர்த்தங்கள் என்ன? இவற்றில் எது சிறந்தது?

ஆ.வ. கல்வி என்பது பள்ளியிலோ, கல்லூரியிலோ சேர்ந்து, ஆசிரியர் நடத்தும் பாடங்கள் மூலம் கற்பது. நூ.வ.கல்வி என்பது நூலகத்திலும் அங்குள்ள நூல்களை எடுத்து வந்து படித்தும் பெறுவது. மக்கள்வழிக்கல்வி என்பது மக்களோடு மக்களாய் கலந்து பார்த்தும் கேட்டும் பழகியும் செய்தும் என பட்டறிவு மூலம் பெறுவது. இதில் கடைசி இரண்டும் அதிக அறிவை தரும். ஆனால் அதன் அடிப்படை முதலில்(ஆசிரியர் வழிக்கல்வி) இருப்பது.

11கல்விக்குப் பொறுப்புகள் யார்யார்?

முதலில் பெற்றோர். இரண்டாவது ஆசிரியர். மூன்றாவது கல்வி நிறுவனம். நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைவருக்கும் கல்வி கிடைக்கவில்லை என்பது நமது இயலாமை அல்லது பொறுப்பின்மை. சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கல்விக்கே பெரும் தொல்லை.

12.கல்வி எப்படி வியாபாரமானது?

தொண்டுள்ளத்தோடும் தியாக மனப்பான்மையோடும் அன்று துவக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கல்வி இருந்தது. பின்னர், கல்வியைச் சுய உரிமை ஆக்கிக் கொண்டு பண்டிதர் என்போர் என்று திண்ணைப்பள்ளிகளைத் துவக்கினார்களோ அன்றே கல்வியும் பாழானது. அதுபோல, ஒரு காலகட்டம் வரை பல்கலைக்கழகங்கள் எழுத்தர்களை ( clerks ) உற்பத்தி செய்யும் இயந்திரங்களாய் சமூக மற்றும் சமுதாய உணர்வற்றும் செயல்பட்டன என்பதும் உண்மை. இவற்றின் அவலங்கள் எத்தகைய கேவல முடிவைத் தந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. இதற்கும் மேலாக கல்விக்குச் செய்யும் செலவை முதலீடு என்று எண்ணாமல் செலவு என்று அரசு என்று கணக்குப் பார்க்க ஆரம்பித்ததோ கல்விக்கட்டணத்தைப் பெட்ரோல் விலையை ஏற்றுவது போல எந்த அரசு ஏற்றியதோ அன்று அனைத்தும் ஓய்ந்தன. அனைவருக்கும் கல்வி என்ற எண்ணமும் அணைந்தது. இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவதுபோல தனியார் கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் என்று ஒரு ஒழுங்குப் படுத்துதல் இல்லாமல் கதவுகள் திறந்துவிடப்பட்டனவோ அன்றே கல்வி கடைச்சரக்கு ஆனது. கல்வி வியாபாரமானதால் ஏழை மக்களின் உரிமையும் அவர்களது குறைந்த செல்வமும் கொள்ளைபோயின. அத்தோடு கல்வியின் முகம் மாறியது. கற்பும் அழிந்தது.

13.பள்ளி ஆய்வுக்குழு உறுப்பினர்கள் எப்படி இருக்கிறார்கள்?

ஆய்வுக்குழு உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்கள் தரும் அன்பளிப்புக்கும் உபசரிப்புக்கும் மயங்கி தரக்குறைவுக்குத் தலையாட்டக்கூடாது. படிக்கல்லே தன் எடையைக் குறைத்துக் கொண்டால் எடை என்னவாகும். தராசினால் என்ன பயன்?

ஆய்வுக்குழுக்கள் பொருட்களின் இருப்பைச் சரிபார்ப்பது போல( stock verification ) கல்வி நிறுவனங்களின் தகுதிகளைச் சரியாக மதிப்பீடு செய்து தகுதிப் பரிந்துரை செய்வதில் நேர்மையுடனும் உறுதியுடனும் இருந்தால் கல்வி நிலையங்களில் வசதிகள் இருக்கும். ஆசிரியர்கள் பணி சிறப்புடன் அமையும். மாணவர்களும் மணிகளாய் இருப்பர். கும்பகோணத்தில் கேட்ட சாவுமணிச் சத்தம் கேட்காது. மதுரையில், பள்ளியில் நடந்தது போன்ற தீவிபத்துக்களும் நிகழாது. அவரவர் பணியை அவரவர் ஒழுங்காகச் செய்தால் அதுபோதும். அதைவிட வேறேது வேண்டும்? ஆனால் சாமிக்கே நமது சமூகம் ‘லஞ்சம்’ கொடுத்தல்லவா வேண்டுதலை முன் வைக்கின்றது. இந்தப் பழக்கம்தான் இவனைக் கையேந்த வைக்கிறது. வலியவன் என்பவனுக்கு இவன் கொடுக்கிறான். எளியவனிடம் இவன் பிடுங்குகிறான். முதலில் இந்தப் பழக்கம் நீர்த்துப் போக வேண்டும் – எல்லா இடங்களிலும்.

சமூகத்தில் அனைவருக்கும் அனைத்திலும் பாதுகாப்பு வேண்டும். குறிப்பாகக் கல்வித்துறையில் அது துவங்க வேண்டும். மீண்டுமொரு பேராசிரியர், வடநாட்டில் நடந்ததுபோல அடித்துக் கொல்லப்படக்கூடாது – அதுவும் மாணவர்களால். தமிழகத்தில் வேளாண் பல்கலை மாணவிகள் கல்லூரிப் பேருந்திலேயே நெருப்பினால் கொல்லப்பட்டது போன்ற கேவலம் இனியொரு முறை வேறெங்கும் நடக்கக் கூடாது.

14.கல்வி உறவுகள் என்பது?

ஆசிரியர் மாணவர் உறவு, பெற்றோர் ஆசிரியர் உறவு.  இதற்கு பெற்றோர் ஆசிரியர் கூட்டம், ஆசிரியரின் ஹோம் விசிட் போன்றவை நன்கு பயனளிக்கும். மாணவ மாணவிகளின் குடும்ப சூழ்நிலை, பொருளாதார வசதி, கல்வி நிலை ( அப்பா அம்மாவின் ) ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் நன்கு பழக முடியும்.

15.ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

மாணவர்களைத் தம் பிள்ளைகளாய்ப் பார்க்கும் பெற்றோர் பார்வை வேண்டும். பொறாமை அரவே அகலக்கூடாது. ஆசிரியர் என்பவர் நல்ல ஒழுக்கங்களைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு அவரே பாடமாக வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்தல் வேண்டும். ஆனால் ஆசிரியர்களோ ஆசிரியத் தொழிலை சைடு பிசினஸ் ஆக்கிவிட்டு கடைகள் நடத்துவது, வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவது, ரியல் எஸ்டேட் வேலை ஆகியவை சில ஆசிரியர்களின் உண்மையான வேலையாகிவிட்டது.

 

Related Articles

வைபவ் நடித்த சிக்சர் திரைப்பட விமர்சனம்... ஆறுமணி அரவிந்தான வைபவ்வின் அறிமுக காட்சி சூப்பர். மாலை ஐந்தரை மணி ஆகிவிட்டால் எங்கு இருந்தாலும் வீட்டுக்கு ஓடி வந்துவிடும் வைபவக்கு மாலை ஆறுமணிக்கு மே...
கடந்த 5 ஆண்டுக ளில் 187 ஆணவ படுகொலைகள்! ... கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாட்சப்பில் சாதி ஆணவ படுகொலை வீடியோ தீயாக பரவியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வீடியோவில் இள...
சுஜாதா நினைவு தினம் இன்று! வித்தியாசமான ... 1. கேள்வி: பெட்ரோல் டீசல் முழுவதும் எதிர்காலத்தில் வற்றிப்போகும் வாய்ப்பு உள்ளதா? பெட்ரோல் முழுக்கத் தீர்ந்து விட்டால் கோடிக்கணக்கான வாகனங்களுக்கு மாற...
“நாயா அலஞ்சு நாய கண்டுபிடிச்ச தரன்... இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2018ம் ஆண்டின் இறுதியில் வெளியான படம் அடங்க மறு. ஒரே நாளில் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆனதால் ...

Be the first to comment on "இவ்வளவு தாங்க வாழ்க்கை ! – அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 15 உண்மைகள்!"

Leave a comment

Your email address will not be published.


*