சீரியல் கில்லர் (Serial Killer) என்ற வார்த்தையை நாம் அடிக்கடி சினிமாக்களில் கேள்விப் பட்டிருப்போம். நாட்டில் தொடர் கொலைகள் நடக்கும் போதெல்லாம் தொடர் கொலைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நம் நினைவுக்கு வந்து போகும், குறிப்பாக வேட்டையாடு விளையாடு திரைப்படம். அந்தத் திரைப்படத்திற்கு நிகரான சம்பவம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தெற்கு கர்நாடகத்தை அச்சுறுத்தி வந்திருக்கிறது. முப்பத்து இரண்டுக்கும் அதிகமான பெண்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் யார்? ஒருவன் செய்யும் செயலா அல்லது பலர் கூடிச் செய்யும் கும்பல் கொலையா என்று கண்டுபிடிப்பதற்குள் காவல் துறை மிகவும் திணறி தான் போனது.
ஒரே மாதிரியான கொலைகள்
அவ்வப்போது தெற்கு கர்நாடகாவில் இருக்கும் பேருந்து நிலையங்களில் உள்ள கழிவறைகளில் இருந்து பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வந்தன. வெவ்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களின் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும் காவல்துறையினரால் அதைக் கண்டுபிடிக்க இயலவில்லை. பாதிக்கப்பட்ட முப்பத்து இரண்டு பெண்களின் மரணமும் சொல்லி வைத்துச் செய்தது போல ஒரே மாதிரி நிகழ்த்தப்பட்டன. கொல்லப்பட்ட அனைவருமே பெண்கள், அவர்கள் அனைவருக்கும் சயனைட் விஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 2003 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொடூர சம்பவம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது. ஒட்டு மொத்த தெற்கு கர்நாடகத்தையே அச்சத்தில் உறைய வைத்தது. இறுதியாக 2010 ஆம் ஆண்டு காவல் துறையினர் சயனைட் மோகன் என்பவரைக் கைது செய்தது.
யார் இந்த சயனைட் மோகன்?
செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு வாக்கில், மடந்த்யார் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அனிதா பரிமார் என்ற பெண்ணிடம் அறிமுகம் ஆகிறார் சசிதர் பூஜாரி. பழக்கத்தின் ஊடாக அனிதாவிடம் அவரது செல்பேசி எண்ணைக் கேட்டு பெறுகிறார். தொடர்ந்து அனிதாவிடம் செல்பேசியில் பேசி வந்த சசிதர் தான் திருமணத்திற்குப் பெண் தேடி வருவதாகவும், அனிதாவையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளார். அதே ஆண்டு செப்டம்பர் இருபத்து நான்காம் தேதி, ஹசன் பகுதியில் இருக்கும் கணேஷ் லாட்ஜ் என்னும் விடுதிக்கு அனிதாவை அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளார். இதனை அடுத்து, அனிதாவுக்கு கருத்தடை மாத்திரையைக் கொடுத்து, ஹசன் பகுதியிலிருக்கும் பேருந்து நிலைய கழிவறைக்கு சென்று அதை விழுங்கும் படியும் அனிதாவிடம் சொல்லியுள்ளார். இதை அப்படியே செய்த அனிதா, மாத்திரையை விழுங்கிய சில நிமிடங்களில் ஹசன் பகுதி பேருந்து நிலைய கழிவறையிலேயே விழுந்து இறந்துள்ளார். உடனடியாக தாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பிய சசிதர் , அனிதாவின் நகைகள் அனைத்தையும் திருடி கொண்டு அங்கிருந்து தப்பித்து, பிறகு ஹசன் பகுதியில் இருக்கும் நகை வியாபாரி ஒருவரிடம் அனிதாவின் நகைகள் அனைத்தையும் விற்றுள்ளார். சசிதர் என்ற பெயரில் அனிதாவிடம் அறிமுகமானவரின் உண்மையான பெயர் மோகன் என்பதும், கருத்தடை மாத்திரை என்ற பெயரில் அனிதாவுக்கு கொடுத்தது சயனைட் என்பதும் பிறகு விசாரணையில் தெரிய வந்தது.
கொலை வழக்கு விசாரணை
2003 ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் கொலையில் இருந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக வெவ்வேறு பகுதிகளில் கொலைகள் செய்யப்பட்டு வந்தன. ஐந்து மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு நகரங்களில், வெவ்வேறு கால கட்டங்களில் கொலை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன. இந்தக் கொலைகளுக்கு இடையே சில ஒற்றுமைகள் இருந்த போதிலும், காவல் துறை அதைக் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலில் சயனைட் இருந்ததற்கான தடயங்கள் பிரேத பரிசோதனையின் மூலம் தெரிய வந்த போதிலும், அப்பெண்களின் மரணத்தைத் தற்கொலை என்றே காவல் துறையினர் முடிவு செய்து வழக்கை முடித்து வைத்து இருக்கின்றனர்.
2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த அனிதாவின் மரணத்தையும் கூட, காவல்துறையினர் கொலையாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும் அனிதாவின் மரணம் வேறு வகையில் சர்ச்சையை உண்டு செய்தது. தக்ஷிணா கன்னடா மாவட்டத்தில் நிகழ்ந்த இனவாத மோதல்களின் போது, அனிதா ஒரு இஸ்லாமிய இளைஞனுடன் சென்று விட்டதாக அனிதாவின் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பங்கிரா என்ற அனிதாவின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பண்ட்வல் காவல் நிலையத்தைத் தீயிட்டு கொளுத்தப் போவதாக மிரட்டியதாலும், பெரிய அளவுக்கு அவர்கள் போராட்டம் செய்ததாலும் அனிதாவின் மரணத்தை முறையாகக் காவல் துறையினர் புலன் விசாரணை செய்ய தொடங்கினர்.
அனிதாவின் செல்பேசி அழைப்புகளை ஆராய்ந்த காவல் துறை, அதனைத் தொடர்ந்து மடிகேரி, காசர்கோடும் மற்றும் புத்தூர் போன்ற நகரங்களுக்குப் பயணம் செய்தது. தொடர் விசாரணையை அடுத்து, அனிதா செல்பேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் அனைத்தும், தொலைந்து போன பெண் ஒருவரின் செல்பேசி எண்ணுக்குப் பேசப்பட்டு இருக்கிறது என்பது தெரிய வந்தது. இதனால் பாலியல் வணிகம் சார்ந்த ஒரு வழக்காக இது இருக்கும் என்று தான் காவல் துறையினர் முதலில் இதைக் கணித்தனர். இறுதியாக டெரலாகேட்டே என்னும் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞனைக் காவல் துறை நெருங்கியது. அவன் தனக்கு இந்தச் செல்பேசியை தனது மாமா மோகன் குமார் தான் தந்தார் என்பதை உறுதிப் படுத்தினான். இப்படித்தான் மோகன் குமார் காவல் துறை நெருங்கியது.
கைது செய்யப்படுவதற்கு முன்பு, பண்ட்வல் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா பூசாரி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் மோகன். சுமித்ராவை பயன்படுத்தி மோகனைப் பிடிக்க திட்டமிட்ட காவல் துறையினர், அவ்வாறே திட்டம் தீட்டி மோகனைக் கைது செய்தனர். காவல் துறையினர் சந்தேகித்ததை விடக் கூடுதலான குற்றங்களை மோகன் செய்திருப்பது காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தங்களிடம் சிக்கியிருப்பது ஒரு தொடர் கொலைகாரன் என்பதும், அவன் முப்பத்து இரண்டு பெண்களை சயனைட் வைத்துக் கொன்றிருக்கிறான் என்பதும் காவல் துறையினருக்கு முதலில் தெரியாது. கொலை செய்யப்பட்ட அனைத்துப் பெண்களும் தங்கள் திருமண புடவையையே உடுத்தி இருந்தனர். திருமண ஆசை காட்டி, பெண்களை வன்புணர்வு செய்து, பிறகு சயனைட் கொடுத்து அவர்களைக் கொள்வதே மோகனின் பாணி. திருமணத்திற்காகப் பெண்கள் அணிந்து வந்த நகைகளைத் திருடி பிறகு நகை வியாபாரிகளிடம் அதை விற்று விடுவார் மோகன். ஊடகங்களில் இந்த வழக்கு பெரும் வெளிச்சம் பெற்றமையால் மோகன் சயனைட் மோகன் ஆனார்.
தண்டனை
கடந்த வெள்ளி கிழமையன்று மோகன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307ன் கீழ் மரணமடையும் வரை சிறை தண்டனை (imprisonment until death), பிரிவு 392ன் கீழ் கொள்ளை அடித்த குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை (six years imprisonment for robbery), பிரிவு 201ன் கீழ் ஆதாரங்களை அழித்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை (five years for tampering with evidence), பிரிவு 328ன் கீழ் விஷம் தந்து கொலை செய்த குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் (seven years for causing hurt by poisoning) , பிரிவு 366ன் கீழ் கடத்தல் குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் ( six years for abduction) மற்றும் பிரிவு 376ன் கீழ் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் (seven years for rape) தண்டனையும் வழங்கப்பட்டது.
இது மோகன் மேல் குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்படும் ஐந்தாவது வழக்கு ஆகும். இன்னும் அவர் மேல் நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒரு வேளை, அனிதாவின் உறவினர்கள் அந்த மரணத்தைக் கடந்து சென்று இருப்பார்களே ஆனால், இன்னமும் மோகன் சுதந்திரமாக வெளியே சுற்றி திரிந்து கொலைகள் செய்து கொண்டு இருந்திருக்கக்கூடும். காவல் துறையினர் தங்கள் கடமையை மெத்தனப் போக்கு இன்றி செய்வது ஒன்றே பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
Be the first to comment on "கர்நாடக சீரியல் கில்லர் சயனைட் மோகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்"