பிறப்பு
மணிப்பூர் தலைநகரான இம்பாலில் உள்ள கோங்பாலில் 1972- மார்ச் 14ல் பிறந்தவர் இரோம்
ஷர்மிளா.
அப்படி என்ன செய்தார்?
கிளர்ச்சி மற்றும் நக்சல் போராட்டம் காரணமாக மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய
அரசு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்தியது. நீதிமன்ற உத்தரவின்றி
யாரையும் கைது செய்யவும், விசாரணை நடத்தவும் இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது. கடந்த
2000, நவம்பர் 2-ம் தேதி மலோம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருந்த
போது ஆயுதப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மலோம் படுகொலையை நேரில் பார்த்து கொதித்தெழுந்த இரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறக் கோரி நவம்பர் 4-ல் போராட்டத்தை தொடங்கினார். 3
நாட்களுக்கு பின் அவரை போலீஸார் கைது செய்து தற்கொலைக்கு முயன்றதாக வழக்குபதிவு
செய்தனர். உயிர் வாழ்வதற்காக மூக்கின் வழியே வலுக்கட்டாயமாக திரவ உணவு செலுத்தினர்.
தற்கொலை வழக்கில் கைதாகும் நபரை ஓர் ஆண்டு வரையில் மட்டுமே சிறையில் அடைக்க
முடியும்.
அந்த வகையில் இரோம் ஷர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு, பின்னர்
உண்ணாவிரதம் இருந்ததற்காக மீண்டும் கைதாவார்.
இரோம் ஷர்மிளாவை, மணிப்பூர் மக்கள் தங்களது இரும்பு பெண்மணி என போற்றுகின்றனர்.
தேர்தல் முடிவு – மக்கள் பரிசு
16 ஆண்டுகளாக நெடிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய இவர் உண்ணாவிரதத்தை
முடிவுக்குக் கொண்டு வந்தபின்னர் தேர்தல் அரசியல் மூலம் அதிகாரத்தை வென்றெடுத்து மக்கள் பணியாற்றப்போவதாகக் கூறினார். மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக இல்லை. வெறும் 90 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுத் தோல்வி அடைந்தார். தோல்வி காரணமாக விரக்தியடைந்த இரோம் சர்மிளா, தாம் அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். தென்மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யப்போவதாகச் சொல்லியவர், இப்போது கேரளமாநிலம் அட்டபாடியில் ஒரு பத்திரிகையாளர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மகளிர் தினத்தன்று தூத்துக்குடி மகளிர் கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
சமூகப் பார்வை
இவர் போன்ற உண்மையான போராளிகளை கோமாளிகளாக்கிவிட்டு கோமாளிகளை போராளி
என்று நினைத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம். இரோம் சர்மிளா போன்ற ஒரு உண்மையான
சமூகப் போராளியை ஓய்வெடுக்க வைத்துவிட்டது இந்த சமூகம்.
Be the first to comment on "மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா பிறந்தநாள் இன்று!"