கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீ டு என்ற இயக்கம் தொடங்கப்பட்டு அதன் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் பேசலாம் என்ற தகவல் வெளியானது. அதை தொடர்ந்து உலகின் பல பெண் பிரபலங்கள் தங்களின் கடந்த கால வாழ்வில், நிகழ்கால வாழ்வில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். அதை தொடர்ந்து பல பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் சொல்ல ஒரு தளம் அமைந்து விட்டது என்ற நம்பிக்கை பிறந்தது. அதே சமயம் இந்த மீ டு இயக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அச்சம் எழுந்தது. தமிழகப் பெண்கள் இந்த தளத்தில் பதிவிட ஆரம்பித்தால் என்னென்ன பிரச்சினை நடக்குமோ யாரெல்லாம் மாட்டுவார்களோ என்று பலருக்கு எதிர்ப்பார்ப்புகள் எகிறி இருந்தது.
இந்நிலையில் சின்மயி பதினைந்து வருடங்களுக்கு முன்பு தனக்கு நடந்த பிரச்சினையை பொதுவெளியில் சொன்னது தான் தாமதம், பிரச்சினை பூதாகரமாக மாறிவிட்டது. காரணம் சின்மயி குற்றம் சுமத்தி இருப்பது ஆறு தடவைக்கும் மேல் தேசிய விருது பெற்ற பிரபல பாடலாசியர் வைரமுத்து மேல். இந்த விவகாரத்தில் சின்மயியைக் காட்டிலும் வைரமுத்துவுக்குத் தான் பலத்த ஆதரவு இருந்தது. காரணம் அவர் பெரிய கை. ஆதரவாக பேசினால் ஆதாரம் கிடைக்கும் என்ற சபலம்.
ஒரு வேளை சின்மயி வைரமுத்துவை குற்றம் சாட்டாமல் வேறு யாராவது ஒரு பிரபலமாகாத நபரை கூறியிருந்தால் இந்நேரம் சின்மயியை வீர மங்கை, பெண் சிங்கம் என்று புகழ்ந்து தள்ளி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் சின்மயி முழுக்க முழுக்க உண்மையை தான் கூறுகிறார் என்று குறிப்பிடவும் முடியாது.
குடும்ப பெண்களின் நிலை:
பிரபலமான பெண்கள் வீண் விளம்பரத்துக்காக (கண்டிப்பாக சின்மயியை குறிப்பிடவில்லை) தங்கள் இஷ்டத்துக்கு கதை அளந்தால் மீ டூ என்ற தளத்தின் நோக்கமே வீணாகிப் போகிறது. பிரபலங்கள் செய்யும் இந்த தவறு பிரபலமாகாத பெண்களை பெரிதும் பாதிக்கிறது.
பிரபலமாகாத பெண்கள் தங்கள் பிரச்சினையை எங்கே கூறுவார்கள்? அவர்களின் இந்தப் பிரச்சினைக்கு இந்த சமூகம் செவி சாய்க்குமா? கண்டிப்பாக கிடையாது. அவர்கள் வீட்டிற்குள்ளயே அழுது புலம்பி செத்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும் எல்லா வயதிலும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சிறுமியில் இருந்து கிழவிகள் வரை தொடர்ந்து கற்பழிப்புகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் பாதிக்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் அந்தப் பெண்களின் குடும்ப உறுப்பினர்களால் நடப்பவையே. ஆக அவர்கள் சொன்னாலும் பிரச்சினை. அப்படியே சொன்னாலும் யாரும் நம்ப போவது இல்லை.
Metoo வில் ஆண்களும் :
சில ஆண்களுக்கு இளம் வயதில் வயது முதிர்ந்த பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து இருக்கிறது. அவர்களுக்கு அப்போது அவை பாலியல் துன்புறுத்தல் என்பது தெரிய வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் அதை இப்போது நினைவு கூர்ந்து அதை கிளறி புகை வர வைத்தால் என்ன ஆகும்?
சினிமா பிரபலங்களில் பல ஆண்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஆமாம் என ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பு கேட்டு உள்ளார்கள். பொதுவெளியில் தங்களுடைய இமேஜைப் பற்றி கவலை படாமல் மன்னிப்பு கேட்கும் இந்த மனநிலை எத்தனை பேருக்கு வரும்.
இது ஒருபக்கம் இருக்க எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் குற்றம் சுமத்தப்படுவதற்கு முன்பாக தாங்களாகவே வந்து தான் செய்த குற்றம் இது. பல வருடங்களுக்கு முன்பு என்னால் பிறருக்கு நடந்த பாலியல் சீண்டல் நிகழ்வு இப்போது எனக்கு உறுத்தலை உண்டாக்கி இருக்கிறது. அதற்காக நான் இப்போது மனம் வருந்துகிறேன் என்று சொல்லத் தயார்? இப்படி ஒருத்தன் கிளம்பினால் அவனை பேப்பயல் என்று பேசத் தான் செய்வார்கள். ஆனால் அதுக்கு செவி சாய்த்து பயந்து தன்னை நல்லவன் என்று காட்டிக் கொள்வது அழகு இல்லை. குற்றத்தை தாமாக ஒப்புக் கொண்டு உரியவரிடம் தாமாக முன் சென்று மன்னிப்பு கேட்பது தான் அழகு. அப்படி பட்ட அழகான மனம் உடைய அழகிய மனிதர்கள் இந்த உலகில் எத்தனை பேர்? அந்த அழகான மனிதர்களின் பட்டியலுக்குள் நாமும் அடங்குவோமா?
வழி வழியாக வரும் பாலியல் துன்புறுத்தல் :
பெண்களின் உடலை வலுக்கட்டாயமாக ஆண்கள் சீண்டுவதும் ஆண்களின் உடலை பெண்கள் வலுக்கட்டாயமாக சீண்டுவதும் ஒரு மரபு நோய் போன்றது. இதை நாம் நம்முடைய முன்னோர்களிடம் இருந்து தான் கற்றுக் கொள்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
அழகான மனிதர்களாக வாழ தெரியாமல் தன்னிடம் இருந்து வழிவந்த ஒரு தலைமுறைக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்காமல் சீண்டுவதை ஒரு பெருமையாகவும் ஹீரோயிசமாகவும் உருவகப்படுத்தி வைத்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
மாற்றமாவோம், இனி ஒரு இனி ஒரு விதி செய்வோம், களம் இறங்குவோம், முன்னுதாரணமாய் வாழ்ந்து காமிப்போம் என்று புரட்சியாக பேசிய முன்னோடிகள் கூட ஒழுக்கமாக வாழ்ந்தது போல் (மிக சிலரை தவிர) தெரியவில்லை. ஆக ஒரு இனம் தன் எதிர்பாலின இனத்தை தீண்டுவது இன்னும் சில காலம் நீடிக்கவே செய்யும் என்பது உறுதி. நம் கொண்டாடும் விஷியங்களும் பின்பற்றும் விஷியங்களும் அப்படிபட்டது.
Be the first to comment on "Metoo – பிரபலமாகாத பெண்கள் தங்கள் வலியை யாரிடம் கூறுவார்கள்?"