சர்டிபிகேட் : U/A
நேரம் : 135.58
உயர்நீதிமன்றம் தடை செய்ததால் ஒரு நாள் தாமதமாக ரிலீஸ் ஆன படம் நாடோடிகள் 2. சமுத்திரக்கனி படம் என்றால் பிரச்சார நெடி தூக்கலாக இருக்கும். இந்தப் படத்திலும் அது தவறவில்லை. அதே போல சமுத்திரக்கனி படத்தில் வசனங்கள் நன்றாக இருக்கும். இந்தப் படத்திலும் வசனங்கள் நறுக்கென்று இருந்தன. குறிப்பாக,
“இவன் உன் ஜாதிதானே, இவன் பையனுக்கு உன் பொண்ணை குடுப்பியா? மாட்டேல்ல… அப்புறம் என்ன மயிறு ஜாதி?
உன் ஜாதியில 2 லட்சம் பேர் இருக்காங்கன்னு சொன்னியே… அதுல எத்தனை பேர் படிக்காம இருக்கான், படிச்சுட்டு வேலையில்லாம இருக்கான், படிக்க வாங்குன கடனை காட்டமுடியாம இருக்கான், வெளிநாட்டுக்கு போய் வெளிய சொல்லமுடியாத கேவலமான வேலை பண்ணிட்டு இருக்கான்… அவனுக்குலாம் என்ன பண்ணியிருக்கு உங்க ஜாதி?
எவனா இருந்தாலும், முகத்துக்கு நேரா வா… ஜாதிக்கு பின்னால நிக்காத”
“மனுசனுங்கள்ல ரெண்டு விதம்
- தனக்காக சேத்து வைக்கிறவன்
- பொதுநலத்துக்காக சேர்த்து வைக்கிறவன்…”
“என் மகனுக்கு எந்த கெட்டபழக்கமும் கிடையாது…
அதான் பொதுநல தொண்டு இருக்கே அதவிட உலகத்துல வேற எதாவது கெட்ட பழக்கம் இருக்கா…”
“ஸ்ப்பா இந்த 10th படிக்கறது இருக்கே…
பயமுறுத்துறாங்களா…
ரொம்ப…
ஜாலியா படிங்க…
மிரட்டுனாங்கனா டென்த்ல அவிங்களோட மார்க் எவ்ளோனு கேளுங்க…”
“நீங்களா ஒரு வட்டத்த போட்டுட்டு அதுக்குள்ளயே எங்கள ஓட விடுங்க…”
“ஒவ்வொரு ஜாதிலயும் ஜாதியை வெறுக்கறவங்க இருக்காங்க…”
போன்ற வசனங்கள் கைதட்டலைப் பெற்றன.
தலையில் சிவப்பு துப்பட்டாவை கட்டிக்கொண்டு கூவி கூவி போராட்டம் செய்யும் அஞ்சலியின் அறிமுக காட்சி வீரத்தமிழச்சி ஜூலியை நினைவூட்டியது.
சகோ, தோழர் என்ற வார்த்தைகளை அடிக்கடி பலர் தேவையில்லாத இடங்களிலும் உச்சரிப்பது உச் கொட்ட வைக்கிறது.
சில இடங்களில் ஒலிக்கும் பின்னணி இசை நிமிர்ந்து நில் படத்தை நினைவூட்டியது. படத்தையும் நிமிர்ந்து நில் படம்போல் உணர்ச்சிகரமாக எடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் நிமிர்ந்து நில் படத்தைப் போலவே இந்தப் படமும் திரைக்கதையில் கோட்டைவிட்டிருக்கிறது.
ஜீவா, செங்கொடி என்று நிஜ போராளிகளின் பெயரை தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு வைத்துள்ளார் ‘வெல்வோம்’ சமுத்திரக்கனி. பாராட்டப்பட வேண்டிய விஷியம்.
பின்னணி இசையில் மிரட்டி உள்ளார் ஜஸ்டின் பிரபாகரன். குறிப்பாக பெரியார் திடல் காட்சி சிலிர்க்க வைத்தது. ரயிலா பாடல் கேட்க இனிமையாக இருந்தது.
சசிகுமார் பல இடங்களில் தன்னுடைய அமெச்சூர்டான நடிப்பால் வசன உச்சரிப்பால் சொதப்ப அஞ்சலி தன்னுடைய பக்குவமான நடிப்பால் படத்தை காப்பாற்றிவிடுகிறார்.
திருநங்கை சப்இன்ஸ்பெக்டர் ஆனதும் வரும் அவருயைட சிறுவயது சம்பவங்களை காட்டும் பாடல்காட்சி சிலிர்க்க வைத்தது. அதேபோல சம்போ சிவ சம்போ பாடல் இடம்பெறும் காட்சியும் சிலிர்ப்பை உண்டாக்கியது.
ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக இரவுநேரக் காட்சிகள் நன்றாக இருந்தன. எடிட்டிங் பரபரவென இருந்தது. நம்பகத்தன்மை இல்லாத சண்டைக்காட்சிகளை கொத்தாக தூக்கி எறிந்திருக்கலாம். சற்று செந்நிறமான கலர் டோனையே எல்லா காட்சிகளுக்கும் கொடுத்திருக்கிறார்கள் இது ஒருசில இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும் பல இடங்களில் உறுத்தலாக தெரிகின்றன. சங்கர் கௌசல்யா காதல் சம்பவங்களை படத்தோடு இணைத்து அதை அப்பா பட பாணியில் அனைத்து தரப்பினருக்கும் கொடுக்க முயன்று பாதி கிணற்றை தாண்டியிருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.
‘பிப்ரவரி 14ம் தேதி வரை இந்தப் படம் தியேட்டரில் ஓடினால் கண்டிப்பாக ஒருமுறை உங்கள் காதலருடன் காதலர் தினத்தில் இந்தப் படத்தைப் பாருங்கள். உண்மையான காதலர்களுக்கு சமுத்திரக்கனியின் காதல் தின சிறப்பு பரிசு “நாடோடிகள் 2”.
Be the first to comment on "‘பிப்ரவரி 14ம் தேதிக்கு சமுத்திரக்கனியின் சிறந்த பரிசு’ – நாடோடிகள் 2 விமர்சனம்!"