இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குனர் கரு பழனியப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நட்பே துணை.
மீசைய முறுக்கு எனும் வெற்றிப்படத்தை தந்த ஹிப்ஹாப் தமிழா இந்த முறை என்ன ஆவார்? என்ற கேள்வியுடன் தியேட்டருக்குள் நுழைந்தால் முதல் காட்சியிலிருந்தே பிரமிப்பைத் தருகிறது படம். ஹிப்ஹாப் தமிழா ஹாக்கி ப்ளேயரா? என்று வியப்பு சில நிமிடங்கள் என்றால் அடுத்த சில நிமிடங்களுக்கு ஒரே சிரிப்பு. மீசைய முறுக்கு படத்தில் பார்த்த கூட்டணி. இந்த முறை புட் சட்னி ராஜ் மோகன், சுட்டி அரவிந்த் மற்றும் எருமை சாணி விஜய், பிஜிலி ரமேஷ் போன்றோர் புதிதாக இணைந்துள்ளனர்.
அறிமுக நாயகி மனதை கவர்கிறார். தீப்தி நாயகியின் தோழியாக வருகிறார். பேசாமல் தீப்தியையே நாயகியாகப் போட்டிருக்கலாம். முதல் பாதி காதல் கலாட்டா என்று ஜாலியாகப் போகிறது. இடைவேளைக்கு முந்தைய சில நிமிடங்கள் தியேட்டரில் விசில் பறக்கிறது.
நடிப்பு நடனம் இசை மூன்றிலும் பட்டைய கிளப்பி இருக்கிறார் ஆதி. மறைந்த இயக்குனர் மணிவண்ணனை நினைவூட்டுகிறார் கருபழனியப்பன். நாங்களாம் ரொம்ப கேவலமானவிங்க என்று தன்னை தானே கலாய்த்துக்கொண்டு அமைதிப்படை படத்தை நினைவூட்ட செய்கிறார். இவருடைய கதாபாத்திரத்தையும் ஹரிஷ் உத்தமன் கதாபாத்திரத்தையும் இன்னுங்கொஞ்சம் வலிமையாகப் படைத்திருக்கலாம். ஆர் ஜே விக்னேஸ்காந்த் இந்தப் படத்தில் காமெடியனாக இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். பள்ளிக்கூடத்துல பாடம் படிக்கல என்ற நட்பை பாராட்டும் பாடல் மனதுக்கு இதம்.
விளையாட்டு வீரர்களுக்கு இன்னொரு தாய்மடி விளையாட்டு மைதானம். அந்த விளையாட்டு மைதானத்தை அரசியல்வாதியிடம் இருந்து பயிற்சியாளர்களும் விளையாட்டு வீரர்களும் எப்படி காப்பாற்றினார்கள் என்ற கதைக்களம் உண்மையிலயே தமிழ்சினிமாவுக்குப் புதுசு. இந்தக் கதைக்குள் ஹாக்கியை சேர்த்திருக்கிறார்கள். ஹாக்கியை இவ்ளவு டீப்பாக சொன்ன தமிழ்படங்கள் குறைவு. இயக்குனர் அணி டீட்டெய்லிங்கில் நன்கு வேலை செய்திருக்கிறது.
காசு வாங்காம நல்லவனுக்கு மக்கள் ஓட்டு போடுவாங்களா என்ற கேள்வியை எழுப்பி எலக்சன் சமயத்தில் தேவையான பார்க்க வேண்டிய படமாக மாறியுள்ளது இந்தப் படம். சென்ற ஆண்டு கனா இந்த ஆண்டு நட்பே துணை! கட்டாயம் நண்பர்களோடு பார்க்க வேண்டிய நல்ல படம்!
Be the first to comment on "நண்பர்களோடு பார்க்க வேண்டிய படம்! – நட்பே துணை விமர்சனம் !"