மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் வரிசையில் நெடுநல்வாடை என்று விளம்பரங்கள் செய்துகொண்டது நெடுநல்வாடை படக்குழு. தினத்தந்தி உள்பட பல பத்திரிக்கைகள் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளது. படம் அந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதா என்ற சந்தேகத்துடன் தியேட்டருக்குள் நுழைந்தால் திரையில் தெரிந்த சில காட்சிகளிலயே தெரிந்துவிட்டது ஆமா இது நல்ல படம் என்று. ஒரு சிறுகதையை ஒரு நாவலை படிக்கப் போகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது.
நடிகர் நடிகைகள் :
பூ ராமு தான் படத்தின் நாயகனே. அவருக்கு நெடுநல்வாடை படம் இன்னொரு பூ என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு படத்தை தாங்கி பிடித்திருக்கிறார். மூக்குப் பொடி தாத்தாவாக கரும்பு வெட்டு தாத்தாவாக ஈக்குமாறு கிழிக்கும் தாத்தாவாக பேரனை ஆளாக்கி காட்டும் தாத்தாவாக என்று அந்தக் கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்துள்ளார். வேறொருவரை அந்த இடத்தில் பொறுத்தி பார்க்க முடியாத அளவிற்கு ஒன்றிப் போயுள்ளது அவரது நடிப்பு. தேசிய விருது எதிர்பார்க்கலாம்.
அவரை அடுத்து மனம் கவருபவர் நந்துவாக வரும் நாயகி. சாதுவான கதாநாயகன் சாதுர்யமான கதாநாயகி இருவருக்குமான கெமிஸ்ட்ரி பக்கா. நாயகனிடம் அடிக்கடி வம்பு இழுக்கும் பெரியவர்களிடம் பதிலுக்குப் பதில் பேசும் வாயாடி நாயகி. ( லூசு ஹீரோயினாக இல்லாமல் வாயாடி ஹீரோயினாக கவர்கிறார் ) தலை நிறைய மல்லிகை பூவுடன் திரையில் தோன்றி நம் மனதை வெகுவாக கவர்கிறார். தாரை தப்பட்டை சூறாவளி, பருத்திவீரன் முத்தழகு, பூ மாரி வரிசையில் நெடுநல்வாடை நந்துவையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இவர்கள் இருவரையும் தொடர்ந்து நடிப்பில் அசத்தியவர்கள் என்றால் அவர்கள் 90களின் பிற்பகுதியில் வந்த சிறுவர்களே. கோபக்காரர்களாக வரும் கொம்பையா மைம் கோபி, நாயகியின் அண்ணன் ஆகியோரும் தங்கள் வேலையை சரியாக செய்துள்ளார்கள். நாயகன் இன்னும்கொஞ்சம் பெட்டராக பண்ணியிருக்கலாம். அறிமுக நடிகர் என்பதால் இதுவே போதும் என நினைத்துக்கொண்டார்களோ என்னவோ?
தொழிற்நுட்பங்கள் :
சவுண்ட் டிசைனிங் மற்றும் கேமரா ஆகிய இரண்டு குழுவும் தீயாக வேலை செய்திருக்கிறது வெல்டன். அறிமுக இசையமைப்பாளர் தேவையில்லாத பல இடங்களில் வாசி வாசி என்று வாசித்து தள்ளியிருக்கிறார். ஒரு சில இடங்களில் பக்குவமாக இசையமைத்திருக்கலாம். பாடல்கள் கேட்கும் ரகம். கிளைமேக்ஸ் பாடலும் காட்சிகளும் ஏனோ கரகாட்டக்காரன் கிளைமேக்ஸை நினைவூட்டியது.
சுப்ரமணியபுரம், ஆடுகளம், பருத்திவீரன், கற்றது தமிழ், பரியேறும் பெருமாள் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்த சின்ன படத்திலும் லைவான சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருப்பது சிறப்பு. பகல் மற்றும் இரவு நேர சண்டைக்காட்சிகள் இரண்டுமே பிரம்மாதம். பேரனை வளர்த்து ஆளாக்கிய தாத்தா பேரனின் கைபிடித்ததும் இழுத்துக் கொண்டிருந்த தன் உசர விடும் தாத்தா, மகனை வளர்த்து ஆளாக்கிய தென்மேற்குப் பருவக்காற்று அம்மாவை நினைவுக்கு கொண்டுவருகிறார்.
சடங்குகள், வட்டார வழக்குகள், கிராமத்து நக்கல் நய்யாண்டி பாஷை என்று இயக்குனர் குழு டீட்டெய்லிங் பார்த்து பார்த்து எந்த இடத்திலும் பிசுறு தட்டக் கூடாது என்பதற்காக மெனக்கெட்டுள்ளது என்பதற்கு காட்சிகளே உதாரணம். வெறித்தன உழைப்பு ! மொத்தத்தில் இந்த
நெடுநல்வாடை தாத்தாவை எல்லோருக்கும் பிடிக்கும் !
Be the first to comment on "நெடுநல்வாடை தாத்தாவை எல்லோருக்கும் பிடிக்கும் – நெடுநல்வாடை விமர்சனம்!"