ஒரு சில புத்தகங்களை ஒருமுறை படித்த பிறகு அதை மூலையில் கடாசி விடுவோம். உள்ளே இருக்கும் விசியம் அவ்வளவு சுவாரஸ்மற்றதாக பயனற்றதாக இருக்கும். ஒரு சில புத்தகங்களை திரும்ப திரும்ப படிக்க தோன்றும். வீட்டு நூலகத்திற்குள் நுழைந்தாலே கை தானாக அந்த புத்தகத்தை தேடிப் போகும். அந்தப் புத்தகத்தின் அத்தனாவது பக்கத்தில் உள்ள திருப்பம் பட்டாசாக இருந்ததே… அந்த சூழலை வருணித்த விதம் மிக அருமையாக இருந்ததே… அதெப்படி இப்படியும் கூட ஒரு படைப்பை உருவாக்க முடிகிறது என்ற எண்ணத்தை நமக்குள் பதிய வைக்கும் புத்தகங்கள் மிகக் குறைவே. அப்படிபட்ட புத்தகத்தில் ஒன்று தான் நிலம் பூத்து மலர்ந்த நாள். படிக்க படிக்க சுவை கூடிக்கொண்டே போகும்.
எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதிய நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீ.
நன்னன், பாரி, கபிலர், பரணர், அதியமான், ஔவையார் போன்றோர் இந்த நாவலில் வலம் வருகிறார்கள் என்றதுமே நமக்குள் ஆர்வம் அதிகமாகிவிடும் அல்லவா ? இவர்களுடன் நாம் பேசுவது போன்று இருந்தால் எப்படி இருக்கும் ? இவர்களின் நிறைகளை மட்டுமே சொல்லாமல் அவர்களின் குறைகளையும் சொன்ன புத்தகங்களை கையில் கிடைத்தால் நம்மால் சும்மா இருக்க முடியுமா?
கொலும்பன், சித்திரை, மயிலன் என்ற மூன்று கதாபாத்திரங்கள் கதையை நகர்த்திச் செல்கிறார்கள். மூவருக்கும் உள்ள ஒற்றுமை பாணன் கூத்தர் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதே. இவர்கள் மன்னரைப் புகழ்ந்து பாட்டுப் பாடி கூத்து நடத்தி மன்னரை திருப்திபடுத்தி அவர்கள் தரும் கொடையால் பொழப்பு நடத்துபவர்கள். அவ்வளவு லேசுப்பட்ட வாழ்க்கை அல்ல அது. வறுமை வாட்டி எடுத்துவிடும். நாடுநாடாக அலைந்து திரிய வேண்டும். அப்படிபட்ட குழுவைச் சார்ந்தவர்கள் தான் இந்த கொலும்பன், சித்திரை, மயிலன். இவர்கள் மூவரும் தங்கள் வறுமையைப் போக்க யார் யாரையெல்லாம் சந்தித்தார்கள். சந்திப்புகள் சாதகமாக இருந்ததா? போகும் இடங்களில் மரியாதை கிடைத்ததா? எளியோரை வைத்து அவர்களுக்குத் தெரியாமல் நடத்தப்படும் சூழ்ச்சிகள் எத்தகையவை ? போன்ற கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு கதையோடு இணைந்து பதில் சொல்லும் புத்தகம் தான் நிலம் பூத்து மலர்ந்த நாள் புத்தகம்.
மொத்தமாக 312 பக்கங்களை உடைய இந்தப் புத்தகத்தை தீவிர வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் ஒரே நாளில் ஒரே மூச்சில் எளிதில் படித்து முடித்துவிடுவார்கள். புதிதாக வாசிப்பைத்( ஆங்கிலம் கலந்த தமிழில் படித்து பழகியவர்களுக்கு ) தொடங்கி இருப்பவர்களுக்கு, ” ஐயோ… இது என்னடா… புரியாத தமிழ்ல இருக்கே… ” என்பது போல் தோன்ற வாய்ப்பு உண்டு. முதல் சில பக்கங்களை கடந்துவிட்டால் புதிய வாசகர்களுக்கும் இந்தப் புத்தகம் அதிகம் பிடித்துவிடும். (தமிழுக்குள் மூழ்கிவிடுவீர்கள்). முழுதாகப் படித்து முடித்துவிட்டுத் தான் மறுவேலை பார்க்கத் தொடங்குவீர்கள்.
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய கதைகள் இன்னும் நிறைய இருக்கு… என்ற தேடலை தொடங்கி வைக்க கூடிய புத்தகமாக இந்தப் புத்தகம் நிச்சயம் இருக்கும்.
பதிப்பகம் : வம்சி
விலை : 250
Be the first to comment on "நிலம் பூத்து மலர்ந்த நாள் புத்தக விமர்சனம்!"