தமிழகப் பெண்களைப் பொறுத்த வரை பெரும்பாலான கோலம் போடுவது எப்படி ? சமையல் செய்வது எப்படி ? போன்ற புத்தகங்களை தான் நேரம் செலவழித்து படிக்கிறார்கள். கொரியன் சீரியஸ் பார்ப்பது, ஆங்கில நாவல்கள் படிப்பது என்று தமிழகத்தில் சில பெண்கள் பல தரப்பட்ட விஷியங்களில் ஆர்வம் செலுத்தினாலும் பெரும்பாலான பெண்கள் அழுது தீர்க்கும் சின்னத் திரை சீரியல்களிலயே இன்னமும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
அப்படி பட்ட பெண்கள் எல்லாம் அம்மா அப்பா பேச்சைக் கேட்பது தான் நல்ல பிள்ளைக்கு அழகு என்று நம்பிக் கொண்டு, அம்மா அப்பா இளம் வயதிலயே திருமணம் செய்து வைத்தாலும் உடனே தலையாட்டிக் கொண்டு அடுப்படியில் அழுகையை அடக்கிக் கொண்டு வாழத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் இனி பெரியாரின் ” பெண் ஏன் அடிமையானாள் ? ” புத்தகத்தைப் படிக்கப் போவது இல்லை.
ஆக அடுத்த தலைமுறை பெண்களாவது சுதந்திர உணர்வுடன் அடக்கி முடக்கிப் போடும் விஷியங்களை தைரியமாக எதிர்க்கும் உணர்வுடன் வளர வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகத்தை தமிழக மாணவ மாணவிகள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். ஒரு சில சமூக நல அமைப்புகள் இந்தப் புத்தகத்தை வெறும் 10 ரூபாய்க்கு அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் பலரிடம் கொண்டு சேர்த்து வருகிறது. ஆனால் இப்பணி பலருடைய ஆதரவுடன் இன்னும் நிறைய இடங்களில் தொடர வேண்டும். இந்தப் புத்தகம் பற்றி தெரியாத பெண்ணே இல்லை என்று கூறுமளவுக்கு அதிக இடங்களில் ( பெரிய பெரிய ஹோட்டல் புத்தக அலமாரிகளில் ) வைக்கப்பட வேண்டும்.
கற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத் தடை, பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும் போன்ற தலைப்புகளில் பெரியாரின் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் உள்ள வரிகளில் சில வரிகள் இங்கே :
* ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத் தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன.
* பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.
* எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக் காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா ? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.
* பெண் விடுதலையில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக்கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள்.
* பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள். ஏனெனில் இன்னமும் பெண்களுக்கு தாங்கள் ஆண்களைப் போல முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை.
* பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம். ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது என்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டு இருக்கிறாள்.
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : 80
Be the first to comment on "பள்ளி கல்லூரி மாணவிகள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்! – பெண் ஏன் அடிமையானாள்?"