“அன்பின் அன்பர்களே”
இப்படித்தான் எந்த மேடையிலும் தனது உரையைத் தொடங்குவார் நரன். அன்பின் அன்பர்களே என்று உரையைத் தொடங்கும் நபர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தால் நரனைத் தவிர வேறு யாரும் நினைவுக்கு வருவதில்லை. (இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்தாளர் பற்றிய வரிகளை படிக்க படிக்க ஏதோ அந்த எழுத்தாளரே காசு கொடுத்து மிகைப்படுத்தி எழுதச் சொன்னது போல் இருக்கும். ஆனால் அவருடைய புத்தகங்களை படித்தவர்களுக்கு கீழே உள்ள வரிகள் எவ்வளவு உண்மை என்பது புரியும். அவருடைய புத்தகங்கள் படித்த பிறகு உங்களுக்கு கூட இந்த வரிகள் முற்றிலும் உண்மை என்று தான் நினைக்கத் தோன்றும்.)
எழுத்தை, புத்தகத்தை உண்மையாக நேசிப்பவர்கள் தங்களுடைய ஆத்மார்த்தமான வாசிப்பை நூலகத்தில் இருந்து தான் பெரும்பாலும் தொடங்குவார்கள். தொடங்கி இருக்கிறார்கள். நரனும் அந்த வகையில் தன்னுடைய வாசிப்பை நூலகத்திலிருந்து தான் தொடங்கினார். நூலகத்தில் அவர் முதன்முதலில் எடுத்து படித்த புத்தகம் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் புத்தகம். பாலகுமாரன் அவர்கள் இயற்கையுடன் இணைந்த விட்ட பிறகு, அவருடைய நினைவாக முதலாமாண்டு பாலகுமாரன் விருதுகள் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த பாலகுமாரன் விருதை முதலாம் ஆண்டு முதல் முறையாக வாங்கியவர் எழுத்தாளர் நரன். “நரன் முதலில் படித்த புத்தகம் பாலகுமாரன் புத்தகம், பாலகுமாரன் விருதை முதலில் வாங்கியவர் நரன்” எழுத்தை எவ்வளவு நேசித்திருந்தால் இப்படி ஒரு தருணம் அவருக்கு அமைந்திருக்கும்.
”பெண்களின் உடல் அழகைப் பற்றியெல்லாம் வர்ணிக்கும் புலவர்கள்
அவர்களின் உரிமைகள் பற்றி நான்கு வரியாவது எழுதக் கூடாதா? ”
– தந்தை பெரியார்
பெரியாரின் இந்த வரிகளை தன்னுடைய ஒவ்வொரு படைப்பை எழுதத் தொடங்குவதற்கு முன்பும் மனதில் நினைத்துக் கொள்வார் போல… அவருடைய எந்த சிறுகதைகளிலும் கவிதைத் தொகுப்பிலும் பெண்ணின் உருவத்தை உடல் அழகைப் பற்றிய வர்ணிப்புகள் எதுவும் இருக்காது. (இருந்தால் கண்டுபிடித்து சொல்லுங்கள்). ஆனால் பெரும்பாலும் இவருடைய கதைகள் எல்லாம் பெண்கள் சார்ந்த கதைகளாகவே இருக்கும். அந்தப் பெண்களின் வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது, அவர்களின் மன ஓட்டங்கள் எப்படிப்பட்டது, அவர்கள் சுயநலமாக இருக்காமல் தன்னுடைய ரத்த உறவுகளுக்காக எவ்வளவு பொறுமையாக இருக்கிறார்கள், எவ்வளவு வலியை தாங்குகிறார்கள், எவ்வளவு அவமானத்தை சந்திக்கிறார்கள் என்பதை பற்றியே இவருடைய கதைகள் பேசும். அதனால்தான் நரன் என்றால் நிறைய பெண் வாசிப்பாளர்களுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட எழுத்தாளர் நரனை வேறு சில படைப்பாளிகளுடன் ஒப்பிட்டு பேசினால் மத்தவங்க கூட நரனை எல்லாம் கம்பர் பண்ணாதீங்க. அவரு தனிரகம் என்று சொல்லும் வாசகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அதே சமயம் நரனுடைய ஒரு சில படைப்புகளை நம்மால் முதல் சில வரிகளைத் தாண்டி படிக்க முடியாது. மிக குறைந்த சொற்களே இருந்தாலும் அந்த வார்த்தைகள் நம் மனதை என்னமோ செய்துவிடும். உதாரணத்திற்கு கீழே இருக்கும் இந்த வரிகளைப் படியுங்கள். “அவன் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது அதன் மேல் பெரிய பாறாங்கல்லை உருட்டி வைத்தார்கள்”. நரனின் “லாகிரி” புத்தகத்தில் இருக்கும் வரிகள் இவை.
இந்த மாதிரியான வரிகளை நரனுடைய புத்தகங்களில் நிறைய பார்க்கலாம். ஆனால் அந்த வரிகளைப் படித்த பிறகு புத்தகத்தையே சட்டென்று மூடிவைத்துவிட்டு நாம் வேறு ஒரு வேலையில் விஷயத்தில் கவனம் செலுத்தி விட்டு மனநிலை தெளிந்த பிறகு, அந்த மாதிரியான வரிகளை கண்டும் காணாததுபோல் மேலோட்டமாக வாசித்து விட்டு அடுத்தடுத்த வரிகளை படிக்கத் தொடங்குவோம்.
அந்த மாதிரியான வரிகளை படிக்கும் நமக்கே இதயத்துடிப்பு அதிகமாகி உடல் சூடாகி விடுகிறது. அப்படி என்றால் அந்த மாதிரியான படைப்புகளை எழுதும் எழுத்தாளர் எவ்வளவு பிரச்சினைகளை சந்திப்பார். “நாளைக்கு சாகப் போகிறவன் போல் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். தீவிர சிந்தனையாளர்கள், தீவிர வாசகர்கள், எழுத்தை மிகத் தீவிரமாக நேசிக்கும் மனிதர்கள் தான் இப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்வார்கள். படைப்பாளிகளின் உலகு முற்றிலும் வித்தியாசமானது. அவர்கள் உட்கார்ந்து ஒரு படைப்பை எழுத தொடங்கிவிட்டால்,வேறொரு உலகத்திற்குள் மூழ்கிப் போய் அங்கேயே தன்னை மொத்தமாக தொலைத்து விட்டு மீண்டும் இந்த இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதற்கு அவர்கள் படாதபாடு படவேண்டும். இதனால் அவர்கள் சந்திக்கும் மனரீதியான பிரச்சினைகள் நிறைய உண்டு. சில சமயங்களில் மனநல ஆலோசகர்களிடம் சென்று மருத்துவம் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை கூட வரும். அப்படிப்பட்ட தருணங்களை எல்லாம் கடந்து வந்தும் சந்தித்துக் கொண்டும் இருக்கிறார் நரன்.
அதேபோல ஒரு பேட்டியில் நரன் தன்னுடைய படைப்புகளைப் படைக்கும் விதத்தை கூறியிருந்தார். அவர் எழுதத் தொடங்கும் ஒவ்வொரு படைப்பும் அவர் நினைத்ததை விட அவரை மீறி ஒரு காட்டாறு போல நீண்டு கொண்டே போகும். ஆனால் இந்த பத்திரிக்கைகள் இவ்வளவு வார்த்தைகளுக்குள் படைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நிர்ப்பந்திப்பதால், படைப்பில் உள்ள வார்த்தைகளை சுருக்கச் சொல்வதால் அவர் தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் அதிக நேரம் எடுத்து எடிட் செய்ய வேண்டிய நிலைமை வந்து விடுகிறது. ஆனால் அப்படி எடிட் செய்த படைப்புகள் ஒவ்வொன்றும் வாசகர்களின் மனதில் அவ்வளவு உறுதியாக பதிந்து விடுகின்றன என்பது கவனிக்க வேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். இப்போது அவருடைய “ஏழு கடல்! ஏழு மலை!” என்கிற நெடுங்கதை தொடர் ஆனந்த விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் கடைசி ஊரின் கடைசி வீட்டில் இருக்கிற கடைசி பையன் இந்தியாவின் முதல் வீட்டில் யார் இருக்கிறார் எனத் தேடிப் போவது தான் இந்த ஏழு கடல் ஏழு மலை நெடுங்கதை தொடரின் கரு. அந்த தொடரில் ஒவ்வொரு வாரமும் சற்றும் சளைக்காமல் தொடர்ந்து சிக்ஸர் அடித்து கொண்டே வருகிறார் நரன்.
அவருடைய படைப்புகளில் இருந்து முக்கியமான (அழகான) சில வரிகளை பார்ப்போம்:
* கன்னி மேரி மட்டும் தன் சிறு மகனை கையில் சுமந்தபடி இரண்டாயிரம் வருடங்களாக இந்த குழந்தையை இறக்கி விடாமல் சுமந்து கொண்டே இருக்கிறாளே பாவம் கை நோகாதா இந்த வெளிநாட்டு பெண்ணுக்கு…!
– மரிய புஷ்பத்தின் சைக்கிள் சிறுகதையிலிருந்து
* மனுஷன் தூங்கும் போது அவன் காது தான் கடைசியாக தூங்கும். காதும் வாயும் அக்கா தங்கச்சிங்க, எப்பவுமே ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியவே மாட்டாங்க… காது கேட்டுகிட்டு இருந்தாத்தான் வாயி “ம்” கொட்டும். காது உறங்கிட்டா, வாயும் உறங்கிடும்.
– பெண் காது சிறுகதையிலிருந்து…
* காமத்துக்கு தான் எத்தனை ஆயிரம் கதவுகள். எந்த கதவு எப்போது திறக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்தால் ஆவது அடைத்து வைக்கலாம். வயதான உடலிலும் அது திறந்து கொள்வது தான் கொடுமை. அடைக்கு தெரியாமல் அவமானப்படுவது அதை விட கொடுமையாக இருந்தது
– கேசம் சிறுகதையிலிருந்து…
* * பொதுவா நம்மைப் பார்த்து மத்தவங்க கேட்கிற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிக்கிட்டே இருந்தா கேள்விகளோடு எண்ணிக்கையும் கேக்குறவங்க எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கும்.
– அமரந்தா சிறுகதையிலிருந்து…
* “அம்மே… மீன் மட்டும் ஏன் மற்ற இறைச்சி போல் இல்லாமல் வாசமாய் இருக்கிறது?”
“அது பிறந்ததில் இருந்து தண்ணீக்குள்ளயே கிடந்து தன்னைத்தானே கழுவிக் கொண்டே இருக்குது இல்ல அதனால தான்…”
– குட்டியம்மை சிறுகதையிலிருந்து…
* ‘`கண்கள் பாதையைத் தொலைத்துவிட்டு நிற்கும்போதெல்லாம் – கால்கள் ஒரு புதிய பாதையைக் கண்டுபிடித்துத் தரும்’’
* ‘`பயணத்தில் மட்டும்தான் உன்னை நீயே எதிரில் சந்திப்பாய்’’
* `சமுத்திரத்தின் பயணத்திற்குத் தயாரான பின்
ஓடைகளின் ஆழம் பற்றி அச்சம்கொள்ள என்ன இருக்கிறது.’’
* ‘`பயணத்தில் பல ஆண்டுக்கு முன் உங்கள் தகப்பன் இளைப்பாறிய அதே மரத்தில் நீங்களும் இளைப்பாற வாய்ப்புண்டு : மரம் இருவரையும் அறியும்.’’
* “பகலைவிட இருள் பாதுகாப்பானது. அங்கு அவர்கள் தாயின் வயிற்றுக்குள் இருப்பதைப்போல் உணர்கிறார்கள்.’’
* “அவர்களுக்கு யாரும் எதுவும் தருவதில்லை. அவர்கள் இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள்”
* “மனிதனுக்கான ஆதி சாலைகளை முதலில் உருவாக்கித் தந்தவை விலங்குகளின் குளம்படிகள்தான்”
* “உறங்கும்போது எனக்கு தலைக்குமேல் நட்சத்திரம் வேண்டும். குளிக்கும்போது உடன் மீன்களும் நீந்த வேண்டும்.”
– ஏழுகடல்! ஏழுமலை! நெடுங்கதை தொடரிலிருந்து…
* திருமணத்துக்கு முன் வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ தன் மகன்கள் வேலைக்காகச் செல்லும்போது தானே சமைத்துச் சாப்பிடுவதை எண்ணிப் பெருமிதப்படும் பெற்றோர்கள், திருமணத்துக்குப் பிறகு, அதைத் தொடரும்போது ஏன் பதற்றமடைகிறார்கள்? அப்போது மட்டும் சமையலும், வீட்டைச் சுத்தப்படுத்துவதும், துணி துவைப்பதும் பெண்ணின் வேலைகளாக மாறிவிடுவது எப்படி?
* உலகத்தின் எல்லா நாடுகளையும்விட இந்தியாவில்தான் நிர்வாணச் சிலைகள் அதிகம். காமத் துய்த்தலில் அவ்வளவு வெளிப்படையான கலைப் படைப்புகள் இந்தியக் கோயில்கள் எங்கிலும் நிறைந்திருக்கின்றன. `காமசூத்ரா’ என்கிற மிகச்சிறந்த படைப்பை அளித்ததும் இந்த நாடுதான். அதேசமயம், உடலுறவு சார்ந்த புரிதல் இல்லாத நாடும் இதுதான். காமத் துய்த்தலில் பெரும்பாலும் இங்கே நிகழ்வது வன்புணர்வே. எதிர்பாலினரின் உணர்வுக்கும் உடலுக்கும் துளியும் மதிப்பளிக்காமல், ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் உடலுறவால் அந்த உறுப்பையும் மனதையும் சிதைவுறுத்துகிறோம். மனைவியின் பாலியல் மகிழ்ச்சி குறித்து ஆதுரமாக விசாரிக்கும் கணவன்களைக் காணவே முடியாத தேசம் நம்முடையது. ஆனால், அதே பெண்ணை, வீழ்த்தும் ஆயுதமாகப் புவி முழுவதும் நிறைந்திருக்கிறது `பாலுறவு’.
* இங்கே பல நேரங்களில் சாதியை மறுத்து, திருமணம் செய்துகொள்பவர்கள், மீண்டும் சாதிய அடையாளத்துக்குள் தள்ளப்படுகின்றனர். கலப்புத் திருமணம் செய்த பலரும் திருமணத்துக்குப் பிறகு, கணவனின் சாதியைத்தான் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது இருவருடைய சாதிகளில் எது ஆதிக்கச் சாதியோ அதைப் பின்பற்றுகிறார்கள். அதிலும்கூட முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது.
– ஆண்பால் பெண்பால் அன்பால் தொடரில் இருந்து…
தன்னுடைய உடலில் ஓடும் பல நரம்புகளில் தருணத்திற்கேற்ற எதோ ஒரு பச்சை நரம்பை உருவி அதை எழுத்தாணி ஆக்கி ஆண்மை பெண்மை என்ற வேறுபாடெல்லாம் இல்லாமல் ரத்தத்தை எழுத்து மையாக்கி எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் என்றால் அது கண்டிப்பாக நரன் என்று சொல்லலாம்.
நரனுடைய சிறுகதைகள் ரொம்ப அற்புதமான சிறுகதைகள். அதாவது யதார்த்தத்தை மட்டுமே சொல்லி சொல்லி ஒரு மாதிரி டயர்டா இருக்கும் இல்ல… இது ஒரு புனைவோட ஃபீல்… ஒரு கவிஞன் சிறுகதைகள் எழுதினால் எப்படி இருக்குமோ அந்த மாதிரியான சிறுகதைகள் நரன் உடையது. – பேட்டை தமிழ்ப்பிரபா
Be the first to comment on "கவிஞர் நரன்! – தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்த வரம்!"