TON தமிழ் என்ற எங்கள் பக்கத்தில் தர்பார் படத்தின் விமர்சனம் பதிவிட்டிருந்தோம். அதன் டைட்டில் “பர்ஸ்ட் ஆஃப் படுத்து தூங்கிட்டு செகண்ட் ஆஃப் மட்டும் பாருங்க” என்ற வரிகள் இடம்பெற்றிருந்தது. அந்த வரிகள் ரஜினி ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. அந்த வரிகளுக்கான தெளிவான பதில் தர வேண்டியது எங்கள் கடமை என்பதால் இந்த பதிவு.
பலவீனம்:
ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்கள் கூட முதல்பாதி ஓரளவுக்கு பரவாயில்ல இரண்டாம்பாதி தான்… என்று இழுக்கிறார்கள். ஆனால் படத்தின் முதல்பாதி தான் மிகச் சலிப்பான இடங்கள் என்பது தான் எங்கள் பார்வை. அது ஏன் என்று சொல்கிறோம்.
பலமுறை பார்த்து சலித்துப்போன ரஜினியின் அறிமுகக்காட்சி. ஸ்லோமோசனில் ஓடி வருகிறார். பின்னணியில் பேரிரைச்சல். நாங்கள் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்ததை போலவே அறிமுக காட்சியை வித்தியாசமாக யோசித்திருக்கலாம். பொதுவான ரசிகர்களுக்கு சலிப்பு இங்கயே உருவாகிவிட்டது.
படத்தின் முதல்பாகத்தில் மெயின் வில்லனுக்கான காட்சிகள் ரொம்பவே குறைவு. ஆக கதாநாயகனுக்கு பெரிய தடைகள் என்பது எதுவுமில்லை. சின்ன வில்லனையும் சின்ன தடைகளையும் சடசடவென கடந்து வருவது ஹீரோயிசமும் இல்லை. குறிப்பாக அது ரஜினியிசம் இல்லவே இல்லை.
அதேபோல ரஜினி இஷ்டத்துக்கு குற்றவாளிகளை சுட்டுத் தள்ளுகிறார். என்கவுன்டர் என்பது அசால்ட்டான விஷியமல்ல அதற்கு எத்தனை வழிமுறைகள் இருக்கிறது அதில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்பதை துல்லியமாக விவரிக்கும் படங்கள் இன்று நிறைய வர தொடங்கிவிட்டன. அப்படி இருக்கையில் இப்போதுபோய் இஷ்டத்துக்கு சுட்டுத்தள்ளும் காட்சிகள் எடுத்து வைத்திருக்கிறார்கள். முதல் பாதியின் பெரும்பான்மையாக ரஜினி சுட்டுத்தள்ளும் காட்சிகள் தான். என்கவுன்டர் பற்றிய டீடெய்லிங் இல்லாத இந்தக் காட்சிகள் எல்லாம்… ஸ்ப்பா… இப்பவே கண்ண கட்டுது என்ற பீலிங்கை தான் பொதுவான ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.
இவற்றையெல்லாம் விட அபத்தம், மனித உரிமை ஆணையரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரிப்போர்ட்டை மாற்றி எழுத சொல்லும் காட்சி. இந்த இடத்தில் மொத்த படமும் சரிந்துவிட்டது என்றே கூற வேண்டும். நிஜ போலீசும் நிஜ மனித உரிமை ஆணைய உறுப்பினர்களும் இந்தக் காட்சியாய் பார்த்தால் சிரிப்பாய் சிரிப்பார்கள்.
இரண்டாம்பாதியில் வரும் ரயில்வே ஸ்டேசன் சண்டைக்காட்சி போல முதல்பாதியில் ரசிக்கும்படி மாஸான சண்டைக்காட்சி ஒன்றுகூட இல்லாதது. அறிமுக காட்சியில் வரும் ரஜினி வாள்வைத்து போடும் சண்டைகூட ஓரளவுக்கு ரசிக்கும்படி இருந்தது என்று எங்கள் விமர்சனத்தில் தெரிவித்து இருந்தோம். ஓரளவுக்கு ரசிக்கும்படி இருந்த காட்சியை இன்னும்கொஞ்சம் நன்றாக எடுத்திருந்தால் முதல்பாதி ஓரளவுக்கு ரசிக்கும்படி இருந்திருக்கும்.
காதலிக்கும் பெண்ணிடம் ரஜினி காதலை சொல்ல பம்முகிறார்… இந்தக் காட்சி அப்படியே படையப்பா படத்தைதான் கண்முன்னே கொண்டுவருகிறது. இத தான் நாங்க படையப்பாலயே பாத்துட்டமே, இந்தப் படத்துல புதுசா என்ன இருக்கு என்று கேட்க தோன்றுகிறது.
இப்படி ஏகப்பட்ட அபத்தமான காட்சிகளை கொண்டுள்ள முதல்பாதியை சுமார் என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது.
பலம்:
படத்தின் பலவீனமாக இரண்டாம்பாதியை சிலர் சொல்கிறார்கள். ஆனால் படத்தின் பலமே உண்மையில் இரண்டாம்பாதி தான். ஏனெனில் இங்குதான் பெரிய வில்லனுக்கான அத்தியாயம் விரிகிறது. ரஜினிக்கான உண்மையான சவால்களே பெரிய வில்லன் வரும் இந்த இரண்டாம்பாதியில் தான் தொடங்குகிறது. சின்ன சின்ன பிரச்சினைகளை அசால்ட்டாக கடப்பது ரஜினியிசமா? வீழ்ந்தபின் மீண்டும் சிங்க கர்ஜனையுடன் எழுவதுதான் உண்மையான ரஜினியிசமாக நாங்கள் கருதுகிறோம்.
நான் இறந்துட்டேன்னு நீங்க தளர்ந்துடாதிங்க என்று நிவேதா பழைய வீடியோ மூலமாக சொன்னதும் சின்ன வில்லன் எப்படி செத்தான் என்ற குழப்பத்தில் சோர்ந்து போயிருக்கும் ரஜினி வெறிப்பிடித்த சிங்கம்போல எழுந்து நடந்துவரும் காட்சியல்லவா ரஜினியிசம்…
திருநங்கைகள் ஆடிப்பாட அவர்களுடன் ரஜினியும் நிவேதாவும் சேர்ந்து ஆடும் காட்சி, திருநங்கைகள் ஆடிப்பாட ரஜினி சண்டை போடும் காட்சி சூப்பர் என நாங்கள் ஏற்கனவே எங்கள் விமர்சனத்தில் தெரிவித்துவிட்டோம்.
படுக்கையில் மயக்கமடைந்த நிலையில் ரஜினிமீது நிவேதா படுத்துக்கொள்ளும் காட்சி, வீடியோவில் பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னங்கழுத்தில் வலிக்குது என நிவேதா சொல்லும் காட்சி, ஸ்ரீமன் ரஜினியிடம் நயன்தாராவின் அண்ணனாக பேசும் காட்சி, கருப்பு பனியனுடன் ரஜினி செய்யும் ஜிம் உடற்பயிற்சிக் காட்சி, சுனில் ஷெட்டியுடனான சண்டைக்காட்சி, கிளைமேக்சில் ரஜினியைப் பார்த்து போலீஸ் உடையணிந்த சிறுவன் ஒருவன் சல்யூட் அடிக்கும் காட்சி இவையெல்லாம் படத்திலயே ரொம்ப நன்றாக இருந்த காட்சிகள் எனலாம். இவை இரண்டாம்பாதியில் தான் இருந்தன. இதை தான் நாங்கள் எங்கள் விமர்சனத்தில் இரண்டாம்பாதி லேசான ஆறுதல் என கூறினோம்.
Be the first to comment on "தர்பார் படத்தின் பலம் மற்றும் பலவீனங்கள்! – ரஜினி ரசிகர்கள் கவனத்திற்கு!"