தயாரிப்பு : கோனிடெல்லா புரொடக்சன் கம்பெனி
தயாரிப்பாளர் : ராம் சரண்
இசை : அமித் திரிவேதி
ஒளிப்பதிவாளர் : ரத்ன வேலு
கதை : பருச்சூரி பிரதர்ஸ்
வசனம் : விஜய் பாலாஜி, சதீஷ் முத்துக்குளம் (தமிழ்)
இயக்கம் : சுரேந்தர் ரெட்டி
எடிட்டிங் : ஸ்ரீகர் பிரசாத்
நடிகர் நடிகைகள் : மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், ஜெகபதிபாபு, விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, நாசர்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று மொத்தம் ஐந்து மொழிகளில் இந்தப் படம் ரிலீசாகி உள்ளது. ஐந்து மொழிகளிலும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. சிரஞ்சீவி ஹீரோ என்பதாலும் ராம் சரண் தயாரிப்பு என்பதாலும் பாகுபலி அளவுக்கு பில்டப் கொடுக்கப் பட்டதாலும் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், ஜெகபதிபாபு, விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, நாசர் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருப்பதால் இந்தப் படத்திற்கு பெரிய அளவில் ஓப்பனிங் கிடைத்துள்ளது. குறிப்பாக விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா கூட்டணிக்காக தமிழ் ரசிகர்கள் நிறைய பேர் கூடி இருந்தனர். சுதந்திர போராட்ட படம் என்பதால் படம் அருமையாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் ஆந்திர மன்னன் என்பது தான் படத்தின் ஒரு வரிக் கதை. வீர பாண்டிய கட்டபொம்மன், மருத நாயகம் போன்றவர்களை கொண்டாடிய தமிழர்களுக்கு இந்தக் கதை புதிதல்ல. அதை மீறியும் இந்தப் படம் தமிழ் ரசிகர்களை எவ்வகையில் திருப்தி படுத்தியது?
கமல்ஹாசன், அரவிந்த் சாமி ஆகியோரின் குரல் மனதை கவர்கிறது. சிரஞ்சீவிக்கு தமிழ்க் குரல் கொடுத்துள்ளார் அரவிந்த் சாமி. ரஜினியின் குரலைப் போல அரவிந்த் சாமியின் குரலிலும் ஒரு காந்த சக்தி இருப்பதால் அவருடைய குரல் பெரிய அளவில் மனதை கவர்கிறது. மதன் கார்கி வரிகளில் சுனிதி சாகன், ஸ்ரேயா கோசல் பாடிய ஓ சாயிரா பாடல், சங்கர் மகாதேவன், ஹரிசரண், அனுராக் குல்கர்னி பாடிய பாராய் நரசிம்மா நீ பாராய் பாடல், விஜய் பிரகாஷ், சாசா திருப்தி பாடிய அங்கம் உன்னிடம் பாடல், ஹரி சரண் பாடிய சுவாசமாகும் தேசமே பாடல் என்று மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. நான்கு பாடல்களும் ஓகே ரகமே. பெரிய அளவில் கவரவில்லை. பாகுபலி படத்துக்கு வசனம் எழுதிய மதன் கார்கி ஏனோ இந்தப் படத்தில் வெறும் பாடல்களை மட்டும் எழுதி உள்ளார். மதன் கார்கியின் பாடல் வரிகளும் மனதை கவரவில்லை. தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படத்திற்குப் பிறகு தமிழ் டப்பிங் படத்தில் நடித்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். தக்ஸ் ஆப் இந்துஸ்தான் போல எங்கு சொதப்பலாக இருந்திடுமோ என்ற பயம் இருக்கவே செய்தது. நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. சைரா நரசிம்ம ரெட்டியின் குருவாக அமிதாப் வருகிறார். வழக்கம்போல நன்றாக நடித்துள்ளார். இவரை இன்னும் கொஞ்சம் நன்றாகப் பயன்படுத்தி இருக்கலாம். ஜான்சிராணியாக மிரட்டுகிறார் அனுஷ்கா. ப்பா என்னா கம்பீரம்! அனுஷ்கா வேற லெவல்! சைரா நரசிம்ம ரெட்டிக்கு அனுஷ்கா கொடுக்கும் பில்டப் செம. மன்னர் பற்றிய படம் என்றாலே அந்தப் படத்தில் அனுஷ்காவின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. வீரம் மிக்க பெண் என்றாலே அனுஷ்கா தான் நினைவுக்கு வருகிறார். இளம் வயது சைராவாக நடித்த பையனும் நன்றாக நடித்துள்ளார். அவருடைய பாளையக்கார தாத்தாவாக நாசர். சொல்ல தேவையில்லை! தன்த வேலையை சரியாக செய்துள்ளார். தண்ணீருக்குள் தியானம் செய்வது போல் அறிமுகமாகிறார் மெகா ஸ்டார். படம் முழுக்க தாங்கிப் பிடிக்கிறார். நாட்டியக் காரியாக தமன்னா. நகை நட்டுகளுடன் கூடுதல் அழகாக இருக்கிறார் தமன்னா. ஏழைத் தாயாக ரோகிணி நடித்துள்ளார். தமன்னா, நாசர், அனுஷ்கா, ரோகிணி என்று பாதி பாகுபலி இந்தப் படத்தில் உள்ளது. அப்படி இருந்தும் எந்தக் காட்சியும் பாகுபலியை நினைவூட்டவில்லை. நயன்தாரா அறிமுகம் ஆகும் காட்சி அழகு. தண்ணீரில் பிரதிபலிக்கும் நயன்தாராவின் முகம் அவ்வளவு அழகு. நரசிம்ம ரெட்டியின் மனைவி சித்தம்மாவாக நடித்துள்ளார் நயன். அவருக்கான டப்பிங் மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. வெள்ளைக்கார வில்லனின் அறிமுகம் செம மிரட்டல். குதிரையை ஓடவிட்டு நிலத்தை கைப்பற்றும் வெள்ளைக்கார துரையின் காட்சி புதுமை. நரசிம்ம ரெட்டியும் கிஸ்தி கேட்கும் ஜாக்சன் துரையும் சந்தித்து கொள்ளும் காட்சி செம. உனக்கு எதுக்குடா கட்டனும் கிஸ்தி என்று சிரஞ்சீவி சொல்லும் போதெல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்த சிவாஜி தான் நினைவுக்கு வருகிறார். வெள்ளைக்காரர்களின் நிறவெறி, எளியவர்கள் மீதான மனிதாபிமானமற்ற சர்வதிகாரம் பற்றிய காட்சிகள் மிரட்டல். பார்க்கும் பார்வையாளர்களுக்கே கோபம் வருமளவுக்கு வெள்ளைக்காரர்களின் அதிகாரத்தை நன்கு காட்டி உள்ளனர். இடைவேளைக் காட்சி நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. குறிப்பாக நரசிம்ம ரெட்டி வெள்ளைக்காரர்களை அடித்து துவைக்கும் காட்சியில் அனல் பறக்கின்றன. சண்டைப் பயிற்சிக் குழு நன்றாக வேலை செய்துள்ளது. சண்டைப் பயிற்சி இயக்குனர் தேசிய விருது வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். இடைவேளைக்குப் பிறகு தான் விஜய் சேதுபதி வருகிறார் விஜய சேதுபதி. அவர் இந்தப் படத்தில் நடிக்காமலே இருந்திருக்கலாம். அவ்வளவு குறைவான காட்சிகள். விளம்பரத்திற்காக அவரை பயன்படுத்தி உள்ளது படக் குழு. கிச்சா சுதீப் வில்லத்தனம் காட்டுகிறார். வழக்கம்போல அவருடைய நடிப்பு மனதை கவர்கிறது. இடைவேளைக்குப் பிறகு வரும் சண்டைக் காட்சிகள் அனைத்தும் அருமையாகவும் புதுமையாகவும் இருந்தன.
” அடிமையா உயிர் வாழ்றத விட எதிர்த்து போராடி சாவுறது மேல் “, ” கொல்றதோ கொல்லப் பட்றதோ முக்கியமல்ல ஜெயிக்கனும் அதான் முக்கியம் “, ” கத்தி உன் ஆயுதம் இல்ல புத்தி தான் ஆயுதம் “, ” தெய்வம் கூட மனுசனுக்குத் தான… “, ” கட்டுக்கதைகள நம்புறதுல இந்தியர்ங்க தான் முன்னோடி… “, ” நீ என்ன வேண்டான்னு சொன்னாலும் என் இதயம் உங்கட்ட தான் இருக்கு.., “, ” எதுக்காக பொறந்தோம்னு தெரியும் போது தான் எதுக்காக சாகனுங்கறது தெரிய வரும்… “, ” நமக்கு சொந்தம் இல்லாதத எடுக்கறதுக்குப் பெயர் தான் திருட்டு… “, ” ஒரு தலைக்கு இத்தன பருந்துக வரக் கூடாதே… ” போன்ற வசனங்கள் படத்திற்குப் பக்க பலமாக அமையாவிட்டாலும் ஓரளவுக்கு மனதை கவர்கின்றன.
சவுண்ட் டிசைனிங் டிபார்ட்மெண்ட், விஎப்எக்ஸ் டிபார்ட்மெண்ட் நன்றாக வேலை செய்துள்ளது. ஹாலிவுட் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. மேக்கிங் அவ்வளவு பிரம்மாதம். காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டும் என்று மெனக்கெட்டு உள்ளது படக்குழு. அவர்களுடைய உழைப்பு ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. பின்னணி இசை நிறைய இடங்களில் காதை கிழிக்கிறது. தீட்டு தீட்டு என தீட்டி வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். இரண்டு மணி ஐம்பது நிமிடங்கள் ஓடுகிறது படம். அப்படி இருந்தும் சலிப்பு தட்டவில்லை. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் அப்படி. ஒளிப்பதிவு அருமை. காட்சிக்கு காட்சி வியப்பைத் தருகிறது ரத்ன வேலுவின் ஒளிப்பதிவு. எடிட்டிங்கும் ஒளிப்பதிவும் படத்திற்குப் பக்க பலம். நயன்தாரா, தமன்னா ஆகிய இருவரையும் இன்னும் கொஞ்சம் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். அவர்களுடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலிமையாகப் படைத்திருக்கலாம்.
சிவாஜியின் வீர பாண்டிய கட்டபொம்மனுக்கும் பிரபாஸின் பாகுபலிக்கும் நடுவில் இருக்கிறது சைரா நரசிம்மா ரெட்டி. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.
Be the first to comment on "சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி எப்படி இருக்கு? – சைரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்!"