சமூக ஊடகங்களைக் கடந்த ஒரு வாரமாக ஆக்கிரமித்து இருப்பது சிரியா உள்நாட்டுப் போர் குறித்த செய்திகள் தான். கொத்து கொத்தாக குழந்தைகளும், பெரியவர்களும் கொன்று குவிக்கப்படும் காட்சிகள் மனதைப் பதை பதைக்கச் செய்கின்றன. ஏன் இத்தனை உயிர்கள் அங்கே காவு வாங்கப் படுகின்றன? சொந்த நாட்டு மக்களையே ஒரு அரசாங்கம் கொன்று குவிக்கத் திட்டமிடுவது ஏன்? மனிதம் என்ற ஒன்றே அங்கு இல்லையா?
சிரியாவில் யார் வசிக்கிறார்கள்?
மத்திய கிழக்கில் அமைந்திருக்கும் எண்ணெய் வளம் மிக்க நாடு சிரியா. அந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களே. பத்து சதவீதம் அளவுக்கே கிறித்துவர்கள் சிரியாவில் வசித்து வருகிறார்கள். சிரியாவில் இருக்கும் இஸ்லாமியர்களில் 74% பேர் அரபு மொழி பேசும் சன்னி பிரிவினர், 16% பேர் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். இந்த இரண்டு பிரிவினர் இடையே உலகெங்கிலும் எப்போதும் அரசியல் பூசல் உண்டு.
தற்போது சிரிய நாட்டு அதிபராக இருப்பவர் பஷார் ஆல் ஆசாத். இவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருகிறார். சிறுபான்மை பிரிவான ஷியாவிலிருந்து ஒருவர் அதிபராக வந்திருப்பது அங்கிருக்கும் பெரும்பான்மை சன்னி பிரிவு இஸ்லாமியர்களுக்கு ஏற்கக் கூடிய ஒன்றாக இருக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு அதிபர் பஷார் ஆல் ஆசாத்தை எதிர்த்து உள்நாட்டில் கிளர்ச்சி வெடித்தது. தனக்கு எதிராகக் கிளம்பிய உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களை மிகக் கடுமையாக அடித்து ஒடுக்கினார் சிரிய அதிபர். சொந்த நாட்டு மக்களின் மீதே தாக்குதல்கள் நடைபெறுவதாகச் சொல்லி கொண்டு சிரிய நாட்டுப் பிரச்சனையில் தலையிட்டது அமெரிக்கா. சிரிய அதிபரை எதிர்த்து கலகம் செய்து கொண்டிருந்த புரட்சியாளர்களுக்குத் தாராளமாக ஆயுதங்களை வாரி வழங்கியது அமெரிக்கா.
தனக்கான மிகச் சரியான தருணத்திற்காகக் காத்திருந்த ரஷ்யா, சிரிய அரசுக்கு ஆதரவாகக் களம் இறங்கியது. புரட்சியாளர்களுக்கு அமெரிக்காவும், சிரியாவுக்கு ரஷ்யாவும் ஆதரவு அளித்தன. சிரியாவில் ரத்த ஆறு ஓடியது.
இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று, சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் பிரதிநிதி என்று தங்களை அழைத்துக் கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவின் இந்தச் சிக்கலான தருணத்தைப் பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் சிரியாவின் பல நகரங்கள் இருந்தன.
அகதிகளின் மரணம்
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த உள்நாட்டுக் குழப்பத்தை அடுத்துக் கிட்டத்தட்ட நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சிரியாவில் இருந்து வேறு நாட்டுக்கு அகதியாகச் செல்லும் பயணம் அவ்வளவு எளிதான ஒன்று அன்று. 2015 ஆம் ஆண்டு கிரீஸ் நோக்கி கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அதில் பல பேர் உயிரிழந்தனர். துருக்கியின் கடற்கரையில் சிரிய நாட்டுச் சிறுவன் ஒருவன் சடலமாக கிடந்தது ஊடகங்களில் வெளிவந்த பிறகே சிரிய போர் மீது சர்வதேசத்தின் பார்வை திரும்பியது.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கவுடா என்னும் பகுதியில் சிரியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரைக்கும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் நூறு குழந்தைகளும் அடக்கம்.
உண்மையில் தங்கள் வல்லாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் இரண்டு வல்லரசுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு இறையாகிறது சிரியா. செய்வதறியாது மவுன சாட்சியமாக பார்த்துக் கொண்டு நிற்கிறது சர்வதேச சமூகத்தின் மனசாட்சி.
Be the first to comment on "சிரியாவில் என்ன நடக்கிறது?"