மெட்ரிக் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தெலுங்கானா கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இணைப்பு நீக்கம்
மாணவர்களைத் தண்டிப்பது மட்டுமல்லாமல், சில பள்ளிகள் மாணவர்களைக் கூட்டாக காப்பியடிக்க விடுவதாகவும் தெரிய வந்துள்ளது. அது போன்ற சம்பவங்களில் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெலுங்கானா கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தொடங்குகிறது மெட்ரிக் தேர்வுகள்
மார்ச் 15 ஆம் தேதி தெலுங்கானா முழுவதும் மெட்ரிக் இடைநிலை தேர்வுகள் நடைபெற உள்ளன. 2500 மையங்களில் ஐந்து லட்சத்து அறுபதாயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.
அம்மாநில பள்ளி கல்வி இயக்குநரகம் மாவட்டம் தோறும் தேர்வுகளைக் கண்காணிக்க மாவட்ட தேர்வாளர்களை நியமித்துள்ளது. தேர்வுகளை மேற்பார்வையிடும் விதமாக 1997 ஆம் ஆண்டு ஆந்திர மாநில கல்விச் சட்டம் 1982 மற்றும் ஆந்திரப் பொதுப் பரீட்சை (தூக்குதல்கள் மற்றும் தவறான வழிகாட்டுதல் தடுப்பு சட்டம்) சட்டத்தை அமுல் படுத்தவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் இருந்து அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. கூடவே ஐந்தாயிரம் முதல் ஒரு இலட்சம் வரை அபராதமாக விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.
எதிர்ப்பு வலுக்கிறது
வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள். குழந்தை உரிமைகள் சங்க தலைவர் அச்சுதா ராவ் இது குறித்து பேசும் போது ‘தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களின் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்வது என்பது சிறுவர் நீதி சட்டத்திற்கு புறம்பானது’ என்று தெரிவித்தார்.
‘தேர்வு முறைகேடுகள் சட்ட’தின் படி கூட்டாக தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவது என்பது தண்டனைக்குரிய குற்றமே ஆகும். ஆனால் அதை பதினாறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பொருந்தாது. அப்படித் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களைச் சிறுவர் சீர் திருத்த பள்ளிகளுக்குக் கூட அனுப்ப இயலாது. ஏனென்றால் அவர்கள் திருட்டு, பாலியல் வன்கொடுமை போன்ற தீவிர குற்ற செயல்களில் ஈடுபடுவதில்லையே’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஷ்ரவன் குமார் அரசின் இந்த நடவடிக்கை குறித்து பேசும் போது ‘தேர்வு முறைகேடுகளைக் குற்ற செயலாக அரசு கருதுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, முறையான வழி காட்டுதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி அவர்களை நல் வழிப்படுத்தி அதன் மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதே சிறந்த வழி முறையாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
அதீத சூழ்நிலைகளில் மட்டும்
அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்த பள்ளி கல்வி இயக்குநர் கிஷன் ‘மாணவர்களுக்குச் சிறை தண்டனை என்பது அதீதமான சூழல்களில் மட்டும் தான். ஒரு மாணவன் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுகிறான் என்றால், அவனைப் பிடித்து உடனே சிறையில் அடைப்பது அரசின் நோக்கம் அல்ல. ஏற்கனவே இருக்கும் தேர்வு முறைகேடு சட்டத்தின் படியே அந்த மாணவனுக்குத் தண்டனை வழங்கப்படும்’ என்றார்.
‘முன்பு அமலில் இருக்கும் சட்டத்தின் படி, ஒரு மாணவன் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவன் தொடர்ந்து தேர்வு எழுதும் வாய்ப்பு மறுக்கப்படும். அரசின் இந்த கடும் நடவடிக்கைகள் மாணவர்களைக் காட்டிலும் பள்ளிக்கூடங்களுக்கே அதிகம் பொருந்தும். சில பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக மாணவர்களைத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட ஊக்குவிக்கின்றன. அவ்வாறு ஈடுபடும் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், பள்ளி நிர்வாகத்திற்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படும்’ என்று மேலும் கிஷன் தெரிவித்தார்.
ஹைதராபாத் உயர் நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படியே, தெலுங்கானா அரசு தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான இந்தக் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் 2500 மையங்களில் 400 மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
Be the first to comment on "தெலுங்கானாவில் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் பள்ளி மாணவர்களுக்கும் இனி சிறை தண்டனை"