தானா சேர்ந்த கூட்டம் – சினிமா விமர்சனம்

தயாரிப்பு: ஸ்டூடியோ கிரீன்
இயக்கம்: விக்னேஷ் சிவன்
மூலக்கதை: ஸ்பெசல்26
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
இசை: அனிருத்
நடிகர்கள்: சூர்யா, கார்த்திக், கலையரசன், நந்தா, ரம்யாகிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ்,…

முதலில் இந்தப்படம் இன்றைய காலகட்டத்திலும் ஒன்றிப்போவதற்கு நாம் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும். காரணம், அன்றிலிருந்து இன்று வரை வேலையில்லா திண்டாட்டம் சிறிதளவும் மாறாமல் அப்படியே இருப்பதுதான்.

படத்தின் கதை 1987ம் ஆண்டு நடப்பதாக காட்டப்படுகிறது. அந்தக்காலத்தில் அரசு வேலைக்காக தீவிரமாக பயிற்சி செய்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் அந்த அரசு வேலையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பணியில் இருக்கும் அரசு அதிகாரிகளோ, ஒவ்வொரு பணி நியமனத்துக்கும் தனி மதிப்பு உண்டு என்று லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதியே இல்லாத சிலரை பணியில் சேர்த்துவிடுகின்றனர். இன்றைய காலகட்டத்திலும் இது நடக்கிறது தானே.

மெட்ராசில் வசித்து வரும் சாதாரண இளைஞனாக சூர்யா. அவருடைய நண்பராக கலையரசன். கலையரசனுக்கு போலீஸ் வேலை என்றால் உயிர். தனக்கு பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் செத்துவிடுவேன் என்ற அளவுக்கு போலீஸ் வேலையை நேசித்து, அந்த வேலையை வாங்குவதற்காக தீவிரமாக உழைத்து தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குகிறார். இருந்தாலும் அந்த போலீஸ் வேலை அவருக்கு கிடைக்கவில்லை. காரணம், பணிநியமனத்துக்கு அவரால் முடியாத தொகையை அதிகாரிகள் லஞ்சமாக கேட்கிறார்கள். சூர்யாவுக்கு தன்னுடைய அப்பா கிளர்க்காக பணியாற்றும் சிபிஐ அலுவலகத்தில் தான் ஒரு சிபிஐ அதிகாரியாக ஆகவேண்டும் என்று கனவு. கனவை நிஜமாக்க கடுமையாக உழைத்து தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்ற போதிலும் நேர்முகத்தேர்வில் அவரை வேண்டுமென்றே நிராகரிப்பு செய்கிறார்கள். இனி இந்த வழி சரியாகாது என்று தன்னுடன் ஒரு படையை அமைத்துக்கொண்டு சிபிஐ என்று தில்லாலங்கடி வேலை செய்கிறார். இப்படி தகுதி இருந்தும் வேலை பெறமுடியாத இளைஞர்களின் நிலைமையை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய பாணியில்.

சுருங்கச்சொன்னால் ஸ்பெசல் 26 பிளாட்டுக்குள் “வறுமையின் நிறம் சிவப்பு” படத்தையும் “தில்லுமுல்லு” படத்தையும் “குள்ளநரி கூட்டம்” படத்தையும் கலந்துகட்டி கொடுத்திருக்கிறார்கள்.

நடிகர்கள் பட்டாளம்

அயன் படத்தில் பார்த்த ஜாலியான அதே சமயம் சீரியசான சூர்யாவை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. கலையரசனும் சூர்யாவும் ஹவுசிங் போர்டில் ஒன்றாக வளர்ந்து வரும் இளைஞர்கள் என்பதை காட்டும் காட்சிகள் ஏனோ மெட்ராஸ் படத்தை நினைவூட்டுகிறது. கலையரசன் வரும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு யதார்தத்தமாக இருக்கிறது. கொஞ்ச நேரமே வந்தாலும் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளார் கலை.

மௌனம் பேசியதே படத்திற்கு பிறகு, சூர்யாவுடன் நந்தா இணைந்து நடித்துள்ளார். இவ்வளவு வருடங்களாகியும் இருவரும் அன்று பார்த்தது போலவே இளமையாக இருக்கிறார்கள். கலையரசனைப் போலவே இவருக்கும் முக்கியமான கதாபாத்திரம். இவரும் வெகு சிறப்பாக செய்துள்ளார்.

முதல் பாதி முழுக்க பயங்கர காமெடியாக செல்கிறது. இரண்டாம் பாதியில் நவரச நடிகர் கார்த்தி வந்ததும் படம் சீரியஸாகிவிட்டது. நேர்மையான அதிகாரியாக கார்த்திக் தன்னுடைய பணியை சிறப்பாகச் செய்துள்ளார்.

சூர்யாவின் அப்பாவாக தம்பிராமையா. பையன் எப்படியாவது நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று துடிக்கும் நடுத்தர அப்பாவாக கலக்கியுள்ளார். குறிப்பாக பிளாஸ்பேக்கில், தன்னுடைய அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ளும் காட்சியில் அவருடைய டச் செம!

சூர்யாவுடன் சிபிஐ அதிகாரிகளாக ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே வலம் வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர். குறிப்பாக ஜான்சிராணியாக ரம்யாகிருஷ்ணனின் கம்பீரம் அற்புதம். செந்தில் தோன்றும் காட்சிகளெல்லாம் சிரிப்பு மழை. முதல்பாதியில் இவர்கள் ஆனந்தராஜ் வீட்டில் மேற்கொள்ளும் ரெய்டில் தியேட்டரே குலுங்க குலுங்க சிரிக்கிறது. இப்படி சிரிக்க வைத்து இடைஇடையே அழவும் வைக்கிறார்கள். குறிப்பாக அனிதாவை நினைவூட்டிய காட்சியில் தியேட்டரே உறைந்து போயிருந்தது.

கீர்த்தி சுரேஷ் மனதை கவர்கிறார். முதல்பாதியில் வந்த அளவுக்கு இரண்டாம் பாதியில் இடம்பெறவில்லை. ஹீரோயின் வேண்டுமே என்று பாடல்களுக்கும் இரண்டு மூன்று காதல் காட்சிகளுக்கும் கீர்த்தி சுரேஷை பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்ற கேரக்டர்களைவிட கீர்த்தி கேரக்டரின் தாக்கம் குறைவு.

ஆர்ஜேபாலாஜி, அதிகாரிகள் நேர்முகத்தேர்வில் கேட்கும் ஒரு கேள்விக்கு நான்கைந்து பதில்களை சொல்கிறார். அதனாலயே உனக்கு வாய் ஜாஸ்தி என்று வேலை தேடி போகும் இடங்களில் நிராகரிக்கப்படுகிறார். படத்தின் அறிமுகக்காட்சியில் சீரியசாக தோன்றி இரண்டாம் பாதியில் அழ வைக்கிறார். அதேசமயம் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறார். சொல்லப்போனால் இரண்டாம் பாதியில் ஆர்ஜேபாலாஜியின் பங்கு மிக முக்கியமானது. அந்த அளவுக்கு ஆர்ஜேபாலாஜிக்கு முக்கியமான கதாபாத்திரம். அவருடைய சினிமா பயணத்தில் இந்த கதாபாத்திரம் மிக முக்கியமானது. அவரும் சிறப்பாகவே செய்துள்ளார்.

யோகிபாபு ஒரேயொரு காட்சிக்கு வந்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.

அனிருத்

படத்தின் இன்னொரு ஹீரோ அனிருத். சீரியஸான காட்சிகளில் உடலை சிலிர்க்க வைக்கிறது அவருடைய பிண்ணனி இசை. குறிப்பாக சூர்யா, தன்னுடைய பிளாஸ்பேக் சொல்லும் காட்சிக்கான பிண்ணனி இசை கண்ணீரை வரச்செய்தது.  சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு தியேட்டரில் பயங்கர ரெஸ்பான்ஸ். பட்டாம்பூச்சிய விட்டாபாருடா பாடலும் பீலா பீலா பாடலும் இனிமை. படத்தில் அனிருத் பங்கு எவ்வளவு என்பதை படம் முடிந்ததும் a film from aniruth என்று வருவது உணர்த்திவிடுகிறது.

விக்னேஷ் சிவன்

இந்தப் படமும் விக்னேசின் நானும் ரௌடி தான் பட தில்லுமுல்லு பாணி தான். அந்தப்படத்தில் போலீஸ் ஆகாமல் ரௌடியாக தில்லுமுல்லு வேலைசெய்து வில்லனை சாய்ப்பார்கள். இதிலும் சிபிஐ ஆக முடியாததால் சிபிஐ வேசமிட்டு தில்லுமுல்லு வேலை செய்து பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். அந்தப்படத்தில் police ஐ Rowdy ஆக்கினார்கள். இந்த படத்தில் not accepted ஐ note: accepted ஆக்குகிறார்கள். No வை Now ஆக்குகிறார்கள். இப்படி விக்னேசின் ஏபிசிடி விளையாட்டு இதிலும் உண்டு. அந்தப்படத்தில் கெட்ட வார்த்தையை ரோஜாபூமாலை ஆக்கியது போல இந்தப்படத்தில் மயிர் என்ற வார்த்தையை மயில் என்று ஆக்குகிறார்கள். அந்த படத்தில் பார்த்திபனுக்கு கிள்ளிவளவன் என்று பெயரிட்டிருந்தார்கள். இந்த படத்திலும் நச்சினார்க்கினியன், பரஞ்சோதி, மங்கையர்க்கரசி என்று கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தப்படத்தில் சில காட்சிகளில் சிரிக்க வைத்து சில காட்சிகளில் சீரியஸாக்கினார்கள். அதே போலத்தான் இந்தப் படத்திலும். கதைக்களம் மட்டும் வேறு. மற்றபடி இதுவும் நானும் ரௌடி தான் டைப்!

அறிமுக காட்சியில்  “ஜெயிச்சுருவோம்” என்றும், இண்டர்வெல் காட்சியில் பறையிசை ஒலித்துக்கொண்டிருக்க எங்க “அடையாளத்தை அழிக்க நினைச்சா…” என்றும், “எளியோரை வலியோர் அடிக்க நினைத்தால், எளியோர் வலியோரை திரும்ப அடிக்கிறானோ இல்லையோ கண்டிப்பா எவனாச்சும் ஒருத்தன் செம அடி அடிப்பான்… ” என்று சூர்யா வசனம் பேசும் காட்சிகளிலும்,

“ஆம்பளைங்க வெக்கமே இல்லாம பல கெட்ட வேலைகள் செய்யுறதெல்லாம் தப்பில்லாதப்ப, பொம்பளைங்க ஒருசில வேலைகள செய்யுறது மட்டும் எப்படி தப்பாகும்” என்று ரம்யாகிருஷ்ணன் வசனம் பேசும் காட்சியிலும், வசனகர்த்தா  விக்னேஷ் சிவன் கவனிக்கப்பெறுகிறார்.

ஒரு அரசுப்பணிக்கு ஆயிரம் பேர் போட்டிபோட்டு வரிசைல நிக்குறான் என்று போலீஸ் அதிகாரி வசனம் பேசும் காட்சி மூலமாக போட்டிகள் அதிகமானதையும், ரம்யாகிருஷ்ணனின் ஏறுவரிசைகள் பிள்ளைகள் மூலமாக அந்த போட்டிக்கு காரணம் மக்கள்தொகை தான் என்பதை பதிவு செய்த காட்சியிலும்,  தான் பார்க்கப்போகும் பணி எப்படிபட்டது  என்றே தெரியாமல் எதோ ஒரு வேலை கிடைச்சா போதும் என்று அனைத்து வேலைகளுக்கும் அப்ளை செய்யும் பட்டதாரிகளை CBIக்கு விளக்கம் தெரியாமல் CBI இண்டர்வியூக்கு வரும் பட்டதாரிகள் மூலமாக சுட்டிக்காட்டிய காட்சியிலும், ஆங்காங்கே யூடியூப், டப்ஸ்மேஸ் பிரபலங்களை பயன்படுத்திய காட்சியிலும், எங்கே கிளைமேக்ஸ் அயன் படம் மாதிரி முடிஞ்சிடுமோ என்று எண்ணுகையில் அந்த இடத்திலும் ஒரு டுவிஸ்ட் வைத்த காட்சியிலும், படத்தின் எந்த காட்சியிலும் சிகரெட், மது போன்றவற்றை இடம்பெறச் செய்யக்கூடாது என்பதற்காக நட்சத்திர ஹோட்டலில் கூட சூர்யா கேங், மாம்பழ ஜூஸ் குடிக்கும் காட்சியிலும், எதிர்காலத்தில் சினிமாவுக்கு செமயா டாக்ஸ் போடுவாங்க, எதிர்காலத்துல ஓட்டுக்குகூட காசு வாங்க வச்சிடுவாங்க என்று பாலாஜியும் சூர்யாவும் வசனம் பேசும் காட்சியிலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கவனிக்க வைக்கிறார்கள்.

கலை

1987 காலகட்டத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் தப்பித்தவறிகூட ஒருகாட்சியிலும் செல்போனைக் காட்டாமல், அன்றைய டெலிபோன்கள், பெட்டிக்கடையில் சூடமிட்டாய், சீரகமிட்டாய், அந்தக்காலத்து நியூஸ்பேப்பர், கமல் ரசிகர் மன்றத்தில் வறுமையின் நிறம் சிவப்பு, நாயகன் பட போஸ்டர்கள், அருகே தில்லுமுல்லு போஸ்டர்,  டிஆரின் ஒரு தாயின் சபதம் பட போஸ்டர் போன்றவற்றினை மிகுந்த கவனத்துடன் கையாண்டிருக்கிறார்கள்.

சில குறைகள்

சூர்யாவை!!! நடுவிரல் காட்ட வைத்த காட்சியையும்[ இந்தக்காட்சிக்கு தியேட்டரே கத்தியது!], கோவிலில் டான்ஸ் ஆடும் காட்சியில் சூர்யாவின் காலணியை பிளர் செய்த காட்சியையும் அப்படியே வெட்டித்தூக்கி இருக்கலாம். இதுபோல ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் அற்புதமான டீம் வொர்க் அந்த குறைகளை மறக்கடிக்கச் செய்கிறது.

மொத்தத்தில் இந்தப்படத்தை சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி பேசியதற்காக ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம் எனலாம்.

தமிழகத்தில் மட்டும் இந்தப்படம் ஐநூறு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. தெலுங்கிலும் ” கேங் ” என்ற பெயரில் முந்நூறுக்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது. பொங்கல் கொண்டாட்டத்திற்கு உகந்தது.

Related Articles

வழக்கு விவரங்களை பொது மக்களுக்குத் தெரிவ... தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கோடி கணக்கில் உள்ளது. அவற்றையெல்லாம் தீர்த்து வைக்கத் ...
பள்ளிப்பருவத்தில் வருவது காதலா? வெறும் இ... 96 (Tamil Movie) IMBD Rating - 9.4/10இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரு...
நாற்பதிற்கும் மேற்பட்டோருக்கு ஹெச்ஐவி கி... உத்தர பிரதேசம் மாநிலம் பங்காரமு என்ற டவுன் பகுதியில் இருப்பவர் ராஜேந்திர யாதவ் . தனது வண்டியில் கிளம்பி கிராமம் கிராமமாக சென்று மருத்துவம் பார்ப்பதே அ...
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பற்றிய சில ச... காமராஜ் - ஈஸ்வரி என்ற தம்பதிக்கு கடைக்குட்டி மகனாக பிறந்தார். தாய் தந்தை இருவரும் யூனியன் டிஸ்பென்ஸரியில் நர்சிங் அசிஸ்டென்டாக வேலை பார்த்தவர்கள்....

Be the first to comment on "தானா சேர்ந்த கூட்டம் – சினிமா விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*