திறந்தவெளி கழிவறைகளை ஒழித்த எட்டுவயது மாணவனுக்கு பிரதமர் பாராட்டு

PM Modi

பிரதமரின் முப்பத்து எட்டாவது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் வரை துஷார் என்ற எட்டுவயது மாணவனைப் பற்றி நாட்டில் யாருக்கும் தெரியாது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு அச்சிறுவனின் பெயர் அநேகமாக அனைத்து நாளிதழ்களிலும் இடம்பெற்றது.

யார் இந்த துஷார்?

தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அத்திட்டத்தைப் பிரபலப்படுத்த நிறையப் பிரபலங்கள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில் நடிகர் கமலஹாசன் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர்களில் எவரும் செய்ய துணியாததை துஷார் செய்துகாட்டி சாதித்திருக்கிறார்.

மத்தியப்பிரதேசம் பாலகாட் என்ற மாவட்டத்திலுள்ள கும்ஹரி என்ற மிகச்சிறிய கிராமத்தை சேர்ந்தவன் துஷார். தான் பயின்ற பள்ளிக்கூடத்தின் மூலமாகத் தூய்மை இந்தியா திட்டத்தை பற்றித் தெரிந்துகொண்டான். மற்ற மாணவர்களைப் போல அல்லாமல், மிகத் தீவிரமாக அந்தத் திட்டத்தை தன் கிராமத்தில் செயல்படுத்தத் தொடங்கினான்

திறந்த வெளியில் அமர்ந்தால் விசில்

தூய்மை இந்தியா பற்றி தெரியவந்ததும் தன் கிராமத்திலிருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று செய்கைகளின் மூலம் தனித்தனியாக ஒவ்வொருவராகச் சந்தித்து அதுகுறித்து பிரச்சாரம் செய்தான். என்ன காரணத்திற்காக கை அசைவுகளின் மூலமாக தன் கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டான் என்பதை இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

துஷாரின் ஒருநாள் அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்குகிறது. திறந்தவெளியை மலம் கழிக்க பயன்படுத்த யாராவது அந்த அதிகாலையில் முயற்சி செய்தால், உடனடியாக விசில் சப்தம் கேட்கும். அப்படி அமர முயற்சி செய்தவர்கள், அந்தச் சப்தம் துஷாரிடமிருந்து வந்திருக்கிறது என்பதை அறிந்ததும் தங்கள் வீட்டுக் கழிவறைக்கு கிளம்பிச் செல்வார்கள்.

திறந்தவெளி கழிவறை இல்லாத கிராமம்

ஆரம்பத்தில் துஷாரின் இந்த முயற்சிகளுக்குப் பெரிய அளவில் பலன் இல்லை. ஆனால் தன் முயற்சியில் சிறிதும் பின்வாங்காத துஷார் தொடர்ந்து கிராம மக்களை நோக்கி தன் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருந்தான். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்குத்  தெரியப்படுத்தினான். மெல்ல மெல்லக் கிராம மக்கள் அவன் மேற்கொள்ளும் முயற்சிகளில் இருக்கும் நியாயங்களை உணரத் தொடங்கினர். திறந்தவெளியில் மலம் கழிப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.ஒரு கட்டத்தில் அந்தக் கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழிப்பவர்கள் யாருமே இல்லை என்ற அளவுக்கு நிலைமை மாறிப்போனது. எந்த அங்கீகாரமும் இல்லாமல் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்த துஷாருக்கு பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாகப் பெரிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

எதற்காகச் செய்கைகள்

துஷார் தன் பிரச்சாரத்தை செய்கைகளின் மூலம் தன் கிராம மக்களுக்குத் தெரியப்படுத்த ஒரு காரணம் இருக்கிறது. பிறவியிலேயே துஷார் கேட்கும், பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி.

குறையொன்றுமில்லை

பெரிய அளவிற்கு வசதிகள் இல்லாத ஒரு கிராமம். பிறவியிலேயே உடலில் ஒரு தடை. இதை எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல், தான் மேற்கொண்ட முயற்சிகளில் மட்டும் கவனத்தை செலுத்திய துஷார் நிச்சியம் கவனிக்கப்பட வேண்டியவன். ஒரு சிறுவன் சொல்வதை நாம் கேட்பதா என்ற ஆதிக்க மனம் இல்லாமல், போகப் போக அவன் பேச்சில் இருக்கும் நியாயத்தை உணர்ந்துகொண்ட அவன் கிராமத்து மக்களும் சேர்த்தே அடையாளப்படுத்தப் பட வேண்டியவர்கள்.

நம் காலத்து நாயகர்கள் நம் கண் முன்னேயே இருக்கிறார்கள். என்ன சமயங்களில் அவர்களுக்கு வயது எட்டாகக்கூட இருக்கக்கூடும்.

Related Articles

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் ம... குடியுரிமை சட்டம் 2016ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன...
ரொட்டி சாப்பிட்டுருப்பீங்க, ரோபோ கையால ச... இந்தியாவிலேயே முதல் முறையாக ரோபோக்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வகையில் ஒரு உணவகம் வடிவகைப்பட்டுள்ளது. மொமொ (Momo) என்று பெயரிடப்பட்டுள்...
பேட்ட – மரண மாஸ் பாடல் வரிகளும் இச... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. ரஜினி படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்பதாலும் அனிருத் இசை என்பதாலும் படத...
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய சில... எல்லோருடைய வாழ்விலும் கேள்வி என்பது மிக முக்கியமானது. அதனால் நல்லா இருக்கியா, வீட்டுல என்ன பண்ணுறாங்க போன்ற அடிப்படை கேள்விகளை நாம் நம்முடைய நண்பர்களி...

Be the first to comment on "திறந்தவெளி கழிவறைகளை ஒழித்த எட்டுவயது மாணவனுக்கு பிரதமர் பாராட்டு"

Leave a comment

Your email address will not be published.


*