மாரடைப்பு, சாலை விபத்து, தற்கொலை இந்த மூன்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் அதீத மன உளைச்சல். இப்படி மன உளைச்சலுடன் வாழும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி என்ற வார்த்தையை மறந்து வருகிறோம். நம்முடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் அருவி பட வசனத்தை பார்ப்போம்.
” நீ கடவுளுக்குப் பயப்படாம இருக்கலாம்… அப்பா அம்மாவ மதிக்காம இருக்கலாம்… ஆனா சமூகம்னு ஒன்னு இருக்குல்ல… நீ இந்த சமூகத்துக்குள்ள வாழனும்னா சமூகம் சொல்லிக் கொடுக்கற நியாய தர்மங்கள மதிக்கனும்… அப்ப தான் வாழ்க்கைல எல்லோரை மாறியும் சந்தோசமா வாழ முடியும்… உனக்கு இந்த சமூகத்துல சந்தோசமா வாழனும்னு ஆசை இல்லையா… “
” வாழ்க்கைல எது சந்தோசம்… நீங்களாம் சந்தோசமாவா இருக்கிங்க… இந்த சமூகம் சொல்லிக் கொடுக்கற மாதிரி வாழ்ந்தா சந்தோசமா வாழ முடியும்… அப்படி என்ன சொல்லிக் கொடுக்குது இந்த சமூகம்…
பொய் சொல்லாத தப்பு பண்ணாத எதுத்து கேள்வி கேட்காத எல்லா பாரத்தையும் கடவுள் மேல இறக்கி வை… எல்லாத்தையும் பாலோவ் பண்ணா சந்தோசமா வாழ முடியுமா… இந்த சமூகத்துல நாம சந்தோசமா வாழனும்னா இந்த ரூல்ஸ மட்டும் பாலோ பண்ணா போதாது… அதவிட முக்கியமான ஒரு பொறுப்பு இருக்கு…
ஒரு குடும்பம்… ரெண்டு குழந்தைங்க… ஒரு அளவான குடும்பம்… மாச சம்பளத்துக்கு ஒரு வேலை… மூனு வேள சாப்பாடு… ஒரு வீடு சொந்த வீடு…ஒரு சாதாரண டீவி அது வாங்கியாச்சுனா ஒரு எல்சிடி… அதுவும் வாங்கியாச்சுனா ஒரு எல்ஈடி… அதுவும் வாங்கியாச்சுனா இல்ல பத்தாதுனு ஒரு ஹோம் தியேட்டர்… முடிஞ்சா ஒரு கார்… முடிஞ்சா அதவிட ஒரு பெரிய கார்… அதுவந்துடுச்சு வீட்ல மூனு கார் இருக்குன்னா…
பசங்களுக்கு ஒரு ஸ்கூல்… கண்டிப்பா கவுர்மெண்ட் ஸ்கூல்ல சேர்க்க கூடாது… ஒரு பிரைவேட் ஸ்கூல் இங்கிலீஸ் மீடியம் ஸ்கூல்… டிஐவியோ டான் பாஸ்கோவோ… ஒரு வாரத்துல ஒரு நாள் பீச்சு… இல்லனா ரெஸ்டரண்ட் இல்லனா ஷாப்பிங் மால்… இல்லனா ஒரு படத்துக்கு கூட்டிட்டு போகனும்… நல்ல தியேட்டர்ல… அங்க போனா நூத்தி இருபது ரூபா…
என்ன மயிறு படம் எடுக்குறாங்க… ஒரு குடும்பம் ஆயிரம் ரூபா செலவு பண்ணி ஒரு படம் பாக்க போனா அந்தப் படத்துல எதாவது இருக்கனும்ல… ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது… ஆனா நீ அந்தப் படத்த பாத்து தான் ஆகனும்…ஏனா அதான் விதி…
இத தவிர்த்து தேவப் படும்போதெல்லாம் ட்ரெஸ்ஸு ஷூ செருப்பு துணிமணி… நீ எவ்வளவு வேணா வாங்கலாம்… வாங்கலாம்னுலாம் கிடையாது வாங்கித் தான் ஆகணும்… நீ என்ன வாங்கனும்னு உக்காந்து யோசனை பண்ண தேவ இல்ல… உன்ன சுத்தி நீ நின்னாலோ நடந்தாலோ பஸ்சுக்கு வெயிட் பண்ணாலோ நீ எங்க திரும்பினாலும் டிவி ரேடியோ நியூஸ் பேப்பர் இன்டர்நெட் மொபைல் ரோடு ரோடு முழுக்க கடை கடை முழுக்க அட்வடைஸ்மென்ட்… அட்வடைஸ்மென்ட் முழுக்க டிஸ்கவுன்ட் ஆஃபர் சேல் சேல் சேல்… முந்துங்கள் முந்துங்கள் முந்துங்கள்… ஆடி ஆஃபர்ல ஆடிபோவிங்க ஆடி… இங்க ஒரே ரூல் தான்… பணம்…
இந்த சமூகம் என்ன சொல்லுது… நீ பணக்காரனா இருந்தா மதிப்பேன்… இல்லனா உன்ன மதிக்க மாட்டேன்… சிம்பிள்… நீ எங்க வேணா வேல செய் எவன வேணா சொரண்டி தின்னு காக்கா புடி… அடிமையா இரு ஊழல் பண்ணு லஞ்சம் வாங்கு குத்து அடி மிரட்டு கொலை பண்ணு ரேப் பண்ணு… எத்தன பேர் வயித்துல வேணா மிதி… எவ்வளவு பேர வேணா முட்டாளாக்கு…
பல்லாயிரக்கணக்கான லட்சக்கணக்கான கோடிக்கணக்கான பணத்த வேணா கொல்லையடி யாரும் உன்ன தூக்கிப் போட்டு மிதிக்க மாட்டாங்க… ஏனா இந்த சமூகத்துல ஒரேயொரு விதிதான்… நீ பணம் சம்பாதிச்சா இந்த சமூகம் உன்ன மதிக்கும்… நீ பணம் சம்பாதிக்கலனா இந்த சமூகம் உன்ன மதிக்காது… சிம்பிள்…
உனக்கொரு சொந்த வீடு இல்லனா பொண்டாட்டி கூட பிரச்சினை வரும்… சொந்தக்காரங்க யாரும் உன்ன மதிக்க மாட்டாங்க… அப்பா அம்மா தம்பி தங்கச்சினு யாரும் உன்ன மதிக்க மாட்டாங்க… உன் பொண்ணுக்கு பையன் கொடுக்க மாட்டாங்க பையனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க… நான் எங்க போய் சம்பாதிக்கறது யாருக்காக பணம் சம்பாதிக்கனும்…
பதினெட்டு ட்ரெஸ்சு, சொந்த வீடு, மினரல் வாட்டர், நாலு லட்ச ரூபா கார், 120 ரூபாய்க்கு ஒரு குப்ப படம் எனக்கு தேவ கிடையாது… அப்ப இதெல்லாம் யாருடைய தேவ… எங்கயோ இருக்கற நாலு முதலாளிங்க அவன நக்கி திங்கற இங்க இருக்கற நாலாயிரம் முதலாளி… உலகத்துல இருக்கற அத்தன பணக்கார பன்னிகளும் கொழுத்துப் போறதுக்கு தேவ ஒரு பெரிய மார்க்கெட்… அந்த மார்க்கெட் தான் இந்தியா… இங்க நம்ம டீவில நூறு தடவ விளம்பரம் போட்டான்னா நீ அவன் சோப்ப வாங்கித் தான் ஆகணும் வேற வழியே கிடையாது… தினந்தினம் உழைச்சு உழைச்சு ஆசைப்பட்டு ஆசைப்பட்டு தேவையே இல்லாத குப்பை எல்லாத்தையும் வாங்கி எதுக்கு வாங்கினோம்ங்கறதே மறந்து போயி அடுத்த நாள் காலைல மறுபடியும் எழுந்திருச்சு உழைச்சு கொட்டனும் அப்பதான் உலகத்துல இருக்கற அத்தனை பணக்காரங்களும் சந்தோசமா இருப்பாங்க… அவிங்கள சந்தோசமா வச்சுக்கத்தான்கடவுள் உன்ன படைச்சிருக்காரு… இது எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு இந்த சமூகம் சொல்லி கொடுக்கற மாதிரி தேவ எல்லாத்தையும் பூர்த்தி பண்ணிகிட்டே செத்துப் போனா தான் அது ஒரு குடும்பம்… அப்ப தான் இந்த சமூகம் இந்த குடும்பத்த ஏத்துக்கும்… அப்ப தான் உன்ன இந்த சமூகம் ஏத்துக்கும்… இதுக்கு எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டா தான் இந்த சமூகத்துல என்ன சொல்றது… சந்தோசமா வாழ முடியும்… இப்படி ஒரு குப்பை வாழ்க்கை வாழ்றதுக்கு எய்ட்ஸ் வந்து செத்துப் போலாம்… “
இப்படி முடிகிறது அந்த வசனம். இதில் எவ்வளவு உண்மைகள்? நாம் ஒருவரை ஒருவர் பார்த்து வாழ்ந்தா இந்த மாதிரி வாழனும் என்று நம் வாழ்க்கைக்கு இன்னொருவனின் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்கிறோம். அருவியை போலவே மாநகரம் படத்திலும் ஒரு முக்கியமான வசனம் உண்டு. சென்னையில் வேலை என்பதை கௌரவமாக நினைக்கும் மக்களின் மனநிலையை விவரிக்கும் அந்த வசனத்தைப் பார்ப்போம்.
“இதான் உங்க கனவா இல்ல வேற எங்கயும் வேல கிடைக்காதனால இந்த வேலய சூஸ் பண்ணிங்களா…?”
” உண்மைய சொல்லனும்னா எனக்கு எங்க ஊரவிட்டு வர்றதுக்கே இஷ்டம் இல்லைங்க… அங்க சம்பளம் கம்மினாலும் நிம்மதியான வாழ்க்கை… ஆனா இங்க அப்பிடி இல்ல… எல்லாம் ஒரே பரபரப்பாவே இருக்கு… ஏன் இந்த ஆஃபிஸ கூட கண்டுபிடிச்சுட்டா போதும்னு ஆயிடுச்சு…அவ்வளவு சுத்திட்டேன்…
ஆனா சுத்தி இருக்கறவங்க எல்லாரும் உள்ளூர்ல வேல செஞ்சா மதிக்கறதே இல்ல… மெட்ராசு ஏசி ரூம்ல வேல… 25,000 சம்பளம்னா அந்தஸ்தே மாறுது… எல்லோருக்கும் எது சந்தோசமோ அதவே பண்ணலாம்னு தாங்க இந்த ஊருக்கு வேலைக்கு வந்தேன்…” என்பது தான் அந்த வசனம். இதே போல சொந்தக்காரன் வெளிநாட்டில் நிறைய சம்பாதிக்குறான் என்பதற்காக அவனை காப்பி அடித்து வெளிநாட்டில் போய் அவஸ்தை படுவதை இந்த சமூகம் பெருமையாக நினைக்கிறது.ஆக மொத்தத்தில் நாமெல்லாம் ஒருவர் வாழ்க்கையை ஒருவர் மாற்றி மாற்றி காப்பி அடித்து நமக்கான வாழ்க்கையை வாழாமல் அடுத்தவன் முன்னாடி வாழ்ந்து காட்டனும் என்பதற்காக சுய சிந்தனைகளற்ற ஒழுக்கமற்ற ஐந்தறிவு செம்மறி ஆடுகளாய் தான் வாழ்ந்து வருகிறோம்.
Be the first to comment on "இந்த சமூகம் எதை கற்றுக்கொடுக்கிறது? நாமெல்லாம் நிம்மதியாக இருக்கிறோமா?"