நம் இந்திய சமூகத்தில் எப்படியாவது சாதிக்கலாம் என்று ஏகப்பட்ட இளைஞர்கள் தினமும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கோடி கணக்கான இளைஞர்கள் மது அருந்துதல் ஜாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் வைத்துக்கொள்ளுதல் நெற்றியில் ஜாதி பொட்டை வைத்துக்கொள்ளுதல் கையில் பட்டா கத்தியை எடுத்துக் கொண்டு திரிதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இத்தனை கோடி இளைஞர்களுக்கு மத்தியிலும் வைரம் போல சில இளைஞர்களும் இருக்கிறார்கள்.
அந்த வைரம் மாதிரியான இளைஞர்கள் என்பவர்கள் அரசு வேலையில் இருக்கும் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் அல்லர். சுயதொழில் செய்து கோடிக்கணக்கில் சொத்து குவித்து வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் அல்லர். எழுதப் படிக்கத் தெரியாத அம்மா அப்பாக்களுக்கு பிறந்த, அல்லது அம்மா அப்பா இருவரில் ஒருவரை இழந்த அல்லது அம்மா அப்பா இருவரையும் இழந்த மாணவர்களை இங்கு வைரம் என்று குறிப்பிடுகிறோம்.
இவர்களுக்கெல்லாம் உழைப்பு படிப்பு புத்தகம் இந்த வாக்கியங்களை தவிர வேறு எதுவும் தெரியாது. இப்படி தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் மாணவர்கள் இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்களுடைய இலக்கை சரியான நேரத்தில் அடைந்து விட்டார்களா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
சரியான நேரத்தில் அவர்களால் இலக்கை அடைய முடியவில்லை என்று சொன்னதும் சில மேல்தட்டு மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து படிப்பில் கவனமாக இருந்தால் தன் இலக்கில் கவனமாக இருந்தால் நிச்சயம் வெற்றி அடையலாம். வெற்றி தோல்விக்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாது என்று அறிவுரை வழங்குவார்கள். அப்படியே அறிவுரை வழங்குபவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் அவர்களுடைய பரம்பரை படிப்பறிவு பெற்ற ஜாதி அதிகாரமும் செல்வாக்கும் பெற்ற நில புலன்கள் கொண்ட பணக்கார மேதாவிகள்.
அவர்கள் படித்த பள்ளி எல்லாம் இன்டர்நேஷனல் சிலபஸ் சென்ட்ரல்போர்டு சிலபஸ் போன்ற உயர்தரக்கல்வி என்று சொல்லக்கூடிய பாடத்திட்டங்களையும் பணக்காரப் பிள்ளைகள் மட்டுமே காலடிகள் பதிக்கக்கூடிய பணக்கார பள்ளிகளில் படித்து வளர்ந்தவர்கள் அவர்கள்.
அந்த மாதிரியான பள்ளிகளிலிருந்து படித்து வந்தவர்கள் தங்களுடைய அடுத்த தலைமுறையையும் அதைவிட சிறப்பான பள்ளிகளில் படிக்க வைக்க முயல்கிறார்கள் அல்லது வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். அப்படிப்பட்ட மேதாவிகள் தான் ஏழை மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்து விட்டால் நீங்கள் படிப்பில் கவனமாக இல்லை என்று குறை கூறுகிறார்கள்.
அந்த மேதாவி கருமங்களை நாம் விட்டு விடுவோம். இப்போது நம் வீட்டு வைரங்களைப் பற்றி பார்ப்போம். இந்த வைரங்களுக்கு சிறு வயது முதலே வைராக்கியம் பற்றிக்கொள்கிறது.
அன்றாட உணவுக்கே அடிப்படை தேவையான குடிநீர் மின்சாரம் போன்றவற்றிற்கு அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் போது அவர்கள் மற்ற விஷயங்களில் நாட்டம் இல்லாமல் போகிறார்கள். மற்ற விஷயங்கள் என்றால் விளையாட்டு, பொழுது போக்கு, பாலியல் சம்பந்தப்பட்ட அரட்டைகளில் போன்றவற்றில் அவர்களால் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை. மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக நண்பர்களுடன் பட்டும் படாமல் பழகி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வைரங்களின் வீட்டில் அவர்களுடைய பெற்றோர்கள் ஐயா ராசா எப்படியாவது படித்து மேல வந்துருய்யா… முதுகெலும்பு விண்ணு விண்ணுனு இழுத்துப் பிடிக்குதுய்யா… ரொம்ப நேரம் நிக்க முடியல, கண்ணு பார்வையெல்லாம் மங்கிட்டு வருது… நீ படிச்சு முன்னேறி எங்களை காப்பாத்தலனாலும் பரவால்ல… உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எப்படியாவது படிச்சிக்குயா… சொந்த பந்தம் கூட்டாளிங்க யாருமே வந்து காப்பாத்த மாட்டானுங்க… உன்ன படிப்புதான் காப்பாற்றும்… என்று சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள். அந்த வைரங்கள் அப்பாக்களின் அம்மாக்களின் அந்த கண்ணீர் மொழிகளை சரியாக உள்வாங்கிக் கொள்கிறார்கள்.
ஒரு சில வைரங்களிடம் அவர்களுடைய பெற்றோர்கள் தங்களது கஷ்டங்களை சொல்வதில்லை. தங்களுடைய கஷ்டங்களை பிள்ளைகளின் மனதில் இறக்கிவிட்டால் பிள்ளைகள் சந்தோஷத்தை இழந்துவிட்டு நண்பர்கள் யாருடனும் பழகாமல் தன்னந்தனியாக உழைப்பு உழைப்பு என்று அலைந்து திரிவார்கள் என்ற பயமும் பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதனால் அவர்களிடம் நாங்கள் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருப்பதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் வைரங்கள் தங்களுடைய அம்மா அப்பாக்களின் கஷ்டங்களை இயல்பாகவே புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு அறிவுரைகள் தேவையில்லை. இப்படி இயல்பாகவே புரிந்து கொள்ளும் வைரங்கள் சுயம்பு என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அம்மா அப்பாவை அடுத்து ஆசிரியர்களை முழுமையாக நம்புகிறார்கள். ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். எந்தெந்த விஷயங்களை எப்படி எப்படி புரிந்து கொள்ள வேண்டும் எந்தெந்த பாடங்களை எப்படி படிக்க வேண்டும் போன்ற கற்பித்தலில் தொடங்கி பஸ்சுக்கு காசு வழங்குதல், நோட்டுப் புத்தகங்களை இலவசமாக வழங்குதல் பள்ளி கட்டணத்தை செலுத்துதல் போன்ற கடமைகளை அவர்கள் மனதார செய்து வருகிறார்கள். ஆனால் எல்லா காலகட்டங்களிலும் நம் வைரங்களுக்கு அந்த மாதிரியான ஆசிரியர்களின் ஆதரவு கிடைப்பதில்லை.
பள்ளிகளில் நன்றாக ஒழுக்கமான பிள்ளைகளாக வளரும் வைரங்கள் கல்லூரிகளுக்கு வரும்போது பலதரப்பட்ட பகுதியிலிருந்து பல தரப்பட்ட சமூகத்தில் இருந்து வந்திருக்கும் மாணவர்களுடன் கூடி பழகும் போது அவர்களின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. அப்படி மன நிலை மாற்றத்தின் காரணமாக தடம்மாறி லட்சியத்தில் இருந்து விலகி ஒன்றுக்கும் இல்லாமல் குட்டிச்சுவராக போன சில வைரங்களும் இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் தங்களை புதுப்பித்துக் கொள்ள பல வருடங்கள் ஆகும்.
ஆனால் தடம் மாறாமல் தொடர்ந்து லட்சியத்தின் மீதே குறியாக இருக்கும் அந்த வைரங்கள் என்ன நிலைக்கு போகிறார்கள் என்பது ஆராய வேண்டிய விஷயமாக இருக்கிறது. எள்ளளவும் கவனச்சிதறல் இருக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் தொடர்ந்து படிப்பிலேயே மூழ்கி இருக்கிறார்கள். மற்றவர்களுடன் பேசும் போது கூட படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுகிறார்கள். இதனால் அவர்களால் வெளியுலகம் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று அவர்கள் ஒரு விடாப்பிடியான மனநிலையில் இருப்பது அவர்களுக்கு ஆபத்தாக மாறி விடுகிறது.
பள்ளிக்கூடங்களில் நீங்கள் ஒழுக்கமாக இருந்து கஷ்டப்பட்டு படித்து கொள்ளுங்கள் கல்லூரி போனால் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்லி வளர்க்கிறார்கள். கல்லூரி போனால் கல்லூரியில் எப்படியாவது இழுத்து பிடித்து நன்றாக படித்து விடுங்கள் பிறகு நீங்கள் சந்தோசமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த வைரங்களை கஷ்டம் ஒருபோதும் விடுவதாக இல்லை, அவர்களின் முதுகில் அது ஒரு பெரிய மலைப்பாம்பாக தொங்கிக் கொண்டே இருக்கிறது.
அவர்கள் தங்களுடைய இலக்கை பொறியாளர் மருத்துவர் என்று நிறுத்திக் கொள்வதில்லை. மாத சம்பளம் 50,000, 60,000 வாங்கி அம்மா அப்பாவை நிம்மதியாக வைத்திருக்க வேண்டும் என்று தங்கள் எண்ண ஓட்டத்தை அதோடு நிறுத்திக் கொள்வதில்லை. அவர்கள் பொறியாளர் மருத்துவர் ஆசிரியர் வழக்கறிஞர் என்ற நிலைகளைத் தாண்டி சாதனையாளன் என்கிற ஒரு நிலையைத் தேடி ஓடுகிறார்கள். சாதனையாளன் என்ற வார்த்தையின் அர்த்தம் தான் என்ன என்ற கேள்வி எழுகிறது.
சாதனைகள் சாதிப்பதன் மூலம் என்ன கிடைத்துவிடப் போகிறது என்று ஒரு கேள்வி எழுகிறது? சாதனைகள் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும் போது பத்திரிகைகளில் சாதனையாளர்கள் பற்றி நிறைய எழுதுகிறார்கள். அக்கம்பக்கத்தினர் நிறைய பாராட்டுகிறார்கள், சொந்தக்காரர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். உலகமே கொண்டாடுகிறது.
இப்படி உலகமே கொண்டாட கொண்டாட மேலும் மேலும் தன்னை நிரூபிக்க நிரூபிக்க அந்த வைரங்கள் எல்லாம் தங்களை பட்டை தீட்டிக் கொண்டே இருக்கின்றன. மேலும் மேலும் மிளிர்கிறார்கள், மேலும் கூர்மையாக்கிக் கொள்கிறார்கள், மேலும் திடம் ஆகிறார்கள்.
இப்படி அவர்கள் தொடர்ந்து ஓயாமல் சிறு வயது முதல் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் எந்த ஜாலி கேலி விருந்து என்று எதையும் அனுபவிக்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பதால் அவர்களே எதிர்பார்க்காத ஒரு நாளில் அவர்கள் தங்கள் உயிரை முற்றிலுமாக இழந்து விடுகிறார்கள். மிகக்குறுகிய காலத்திலேயே அவர்கள் உயிர் இழக்கும் போது, அந்த வைரங்களை உயிருக்கு உயிராக நேசித்த மனிதர்கள் எல்லாம் மனமுடைந்து போய் விடுகிறார்கள். வாழ்க்கை மீது இருக்கும் நம்பிக்கையை ஈர்ப்பை இழந்து விடுகிறார்கள். இப்படி அவர்களின் உயிர் பறிபோகிறது. இப்படி பறிபோன உயிர்களை வைத்து அரசியல் செய்யும் சில மேதாவிகள் இருக்கிறார்கள். அதுவும் எப்படிப்பட்ட அரசியல் என்றால் கொஞ்சமும் மனிதநேயம் இல்லாத ஈனத்தனமான அரசியல்.
இந்த மாதிரியான மாணவர்கள் எல்லாம் எதற்காக சாதனை சாதனை என்று வெறித்தனமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி சாதித்து என்ன அனுபவிக்கப் போகிறார்கள் எப்போதும் போல அவர்கள் அப்பா அம்மா விரும்பும் ஒரு சாமானிய வாழ்க்கையை வாழ்ந்து விட்டுப் போக வேண்டியதுதானே என்று அறிவுரை கூறுகிறார்கள்.
உங்களுக்கு எல்லாம் சாதிக்கலாம் என்கிற ஒரு எண்ணமே வரக்கூடாது. உங்க அப்பா அம்மா என்ன தொழில் செய்கிறார்களோ அந்த தொழில் ரீதியாக நீங்கள் பிழைக்க வழியை பாருங்கள். அதை விட்டுவிட்டு பெரிதாக சாதிக்க உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு சாதிக்கிறேன் என்று முட்டி முட்டி மண்டையை உடைத்துக் கொண்டு மனநோயாளியாகி மரணம் அடைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அவர்கள் சொல்ல வருவது.
நம்ம பரம்பரையே கைகட்டி கூனி குறுகி நின்ற பரம்பரை, இனி நாமாவது கோட் சூட் போட்டு கம்பீர நடை போட வேண்டும் என்று அந்த வைரங்கள் ஓடி ஓடி உழைத்த உழைப்பை இந்த அதி மேதாவிகள் எல்லாம் எளிதில் கொச்சைப்படுத்துகிறார்கள். நீட் தேர்வின் போதும் சரி பல்கலைக்கழகத் தேர்வுகளின் போதும் சரி மேல்நிலைப்பள்ளி தேர்தலின் போதும் சரி தற்கொலை செய்துகொள்ளும் அத்தனை மாணவர்களை பார்த்தும் இந்த அதிமேதாவிகள் எல்லாம் இதே வார்த்தைகளை தான் அள்ளி வீசுகிறார்கள்.
இந்த மாதிரி நீங்களெல்லாம் சாதனையாளர்களாக மாறி என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பும் அந்த அதிமேதாவிகளுக்கு என்ன மாதிரியான தண்டனையை இந்த சமூகமும் நீதித்துறையும் வழங்கப் போகிறது. மரண தண்டனையை விட ஒரு கொடூரமான தண்டனை இருந்தால் அதை கொடுங்கள் என்று உங்களிடம் கேட்க தோன்றுகிறது. அதேசமயம் இவனுங்கள எல்லாம் அப்படியே உட்ரனும்… இவனுங்கள எல்லாம் ஒரு ஆளா மதிச்சிட்டிருந்தா நமக்கு மரியாதை இல்லாம போயிரும் என்றும் சொல்லத் தோன்றுகிறது. சிறுவயது முதல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பதால் அவர்கள் சந்தோசத்தை இழந்து, மிகக் குறுகிய காலத்தில் அவர்கள் உயிரை விடக் கூடிய சந்தர்ப்பம் அமைந்து விடுகிறது என்று பலதரப்பட்ட மக்கள் பயமுறுத்தினாலும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது அந்த வைரங்களின் விதி.
Be the first to comment on "ஏழை மாணவர்கள் மருத்துவர் ஆகி அப்படி என்ன செய்யப் போகிறீர்கள்? சாமானிய வாழ்க்கையை வாழாமல் ஏன் சாதனையாளன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்? "