1. கேள்வி: பெட்ரோல் டீசல் முழுவதும் எதிர்காலத்தில் வற்றிப்போகும் வாய்ப்பு உள்ளதா? பெட்ரோல் முழுக்கத் தீர்ந்து விட்டால் கோடிக்கணக்கான வாகனங்களுக்கு மாற்று வழி என்ன?
பதில்: வாய்ப்பு உள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் வற்றி விடலாம் என்கிறார்கள். அதற்கான மாற்று எரிபொருளாக சூரியசக்தி, ஹைட்ரஜன் ஏன் விண்கலங்களில் பயன்படும் fuel cells என்று பல வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்குள் சைக்கிள் ஓட்டப் பழகுங்கள்.
2. கேள்வி: வெளிநாட்டில் இந்தியா கடன் வாங்குகிறது என்று செய்திகள் வருகிறதே ஏன் நாசிக்கில் தேவைக்கு ஏற்றார் போல் பணத்தை நாமே அச்சடித்துக் கொள்ள முடியாதா?
பதில்: நோட்டு என்பது ஒரு அடையாளம்தான். நோட்டு அடிப்பதற்கு பொருத்தமாக நம்மிடம் உற்பத்தி திறமை, ஏற்றுமதிப் பொருட்கள், தங்கம் ஏதாவது இருந்தாக வேண்டும். ரிசர்வ் வங்கியில் இதை கணக்கிடுவார்கள். மிக அதிகமாக அடித்தால் பிச்சைக்காரர்களை என்ன சாமி 100 ரூபாய் நோட்டு கொடுத்து ஏழை வயித்துல அடிக்கறீங்களே… ஒரு கப் டீக்கு கூட ஆகாது என்பார்கள்.
3. கேள்வி: பூனை நம்பர் 2 போனதும் பிறகு கர்ம சிரத்தையுடன் அதை மண்ணால் மூடி கிறதே! மனிதர்களுக்கு இல்லாத இந்த சுகாதார கலாசாரம் எங்கிருந்து பூனைக்கு வந்தது?
பதில்: இது சுகாதார கலாச்சாரம் என்பது கொஞ்சம் ஓவர் தான். பூனை பொதுவாக தன்னையும் தன் குட்டியையும் நக்கி நக்கி சுத்தப்படுத்தும். இதை எந்த வகையில் சேர்ப்பது? பொதுவாக மிருகங்கள் தங்கள் விசர்ஜன வஸ்துகளை குறிப்பாக சிறுநீரை இது என் ஏரியா Trespassers will be punished என்று போர்டு போடுவதற்கு பதிலாக பயன்படுகின்றன.
4. கேள்வி: 25 வயது வாலிபருக்கு பிறக்கும் குழந்தைக்கும் 50 வயதை கடந்த ஒரு முதியவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் ஆரோக்கிய வகையிலோ அல்லது அறிவு வளர்ச்சி வகையில் ஏதாவது வேறுபாடுகள் இருக்குமா?
பதில்: நோ இருக்காது. சில பிறவி வியாதிகளை பொருத்தவரை தாய் தந்தை இருவரையும் டி. என். ஏ அமைப்பு தான் முக்கியம். ஆரோக்கியமும் அப்படித்தான். அறிவு வளர்ச்சியை சூழ்நிலையை பொருத்தது. 35 வயதுக்கு மேல் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது குழந்தை நல்லபடியாக பிறக்க சில எச்சரிக்கைகள் தேவைப்படும், அவ்வளவுதான்.
5. கேள்வி: பல குரல்களில் பேசுபவர்களுக்கு இயற்கையிலேயே குரல்வளையில் ஏதாவது ஸ்பெஷாலிட்டி உண்டா? அல்லது அது பயிற்சியால் வரும் திறமையா?
பதில்: ஸ்பெஷாலிட்டி என்று எதுவும் இல்லை. பயிற்சியும் உன்னிப்பாக மற்றவர் குறைகளை கவனிக்கும் திறமையும் தான் முக்கியம். கவனித்து அந்த குரல்களில் உள்ள விசேஷங்களை மட்டும் ஹைலைட் பண்ணி பேச வேண்டும். உதாரணமாக நம்பியார் குரலில் ச உச்சரிப்பு ஷ போல் இருக்க வேண்டியது முக்கியம். நம்பியார் வாரியார் சிவாஜி கமல் ரஜினி இவர்களுடைய குறைகளை மக்கள் கேட்டு கேட்டு பழகியதால் மிமிக்ரி செய்யும்போது லேசாக பிழை இருந்தாலும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.
6. கேள்வி: குழந்தை பிறந்தவுடனேயே அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல் அரவாணியாக தான் வரப்போகிறது என்பதை கண்டறிய முடியாதா? முடியுமென்றால் ஆரம்பகட்டத்திலேயே அதை நிவர்த்திக்க முடியாதா?
பதில்: முடியும் கருக்குழந்தையின் டிஎன்ஏ அமைப்பிலிருந்து தெரிந்துகொண்டு கருவை கலைக்க முடியும். இப்போதெல்லாம் பல பிறவி குறைகளை எதிர்பார்த்து சொல்லிவிட முடியும்.
7. கேள்வி: பிறவியிலேயே பார்வை இழந்தவர்களுக்கு நினைவாற்றல் இருக்குமா?
பதில்: ஏன் இருக்காது? நம்மை விட அதிகமாகவே இருக்கும். சில சமயம் நம் நினைவாற்றலை காட்சிகள் கவனம் கலைக்கும். அவர்களுக்கு தொடுகை வாசனை குரல்கள் ருசி போன்ற மற்ற நான்கு புலன் உணர்வுகள் மிகவும் தீட்டப்பட்டு இருப்பதால் அவை சார்ந்த நினைவாற்றல் இருக்கும். பார்வை சார்ந்த நினைவாற்றல் வேறு வடிவத்தில் இருக்கும். ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள்.
8. கேள்வி: அமெரிக்காவில் ஒரு சிறு தப்புக்கு கூட நஷ்ட ஈடாக பல கோடி டாலர்களை கன்ஸ்யூமர்கள் கறந்து விடுகிறார்களே… நம்ம ஊரில் ஏன் அந்த சட்ட திட்டங்களே இல்லை?
பதில்: நம் நாட்டிலும் சட்டதிட்டங்கள் இருக்கின்றன. Torts என்று சட்டத்தில் ஒரு பிரிவு உள்ளது. நுகர்வோருக்கான தனி கோடுகள் உள்ளன, சட்டங்களும் உள்ளன. என்னதான் இல்லை இந்த நாட்டில்? இருந்தாலும் அவைகளின் செயல்பாட்டில் உள்ள தாமதத்தினாலும் லஞ்சத்தினாலும் இந்திய உயிருக்கும் மனதுக்கும் மதிப்பில்லாததாலும் பிடிவாதமாக சண்டைபோட பலருக்கு தைரியமில்லாததாலும் அவை தோற்கின்றன. நஷ்ட வழக்குப் போட மேல்நாடுகளில் இதற்காகவே லாயர்கள் இருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் சேஷர்ஸ் என்பார்கள்.
9. கேள்வி: பிரவுன் சுகருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? சுகருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?
பதில்: தோற்றம்தான். நாட்டுச்சக்கரை போலவும் பனங்கல்கண்டு போலவும் தோன்றுவதால் அதற்கு செல்லப்பெயர். சாப்பிட்டுப் பார்த்தால் கசக்கும் தெரியுமோ? ஒரு போதை மருந்துக்கு ஸ்பீடு என்ற புனைப்பெயரும் உண்டு. தமிழில் செல்லாயி விபூதி என்றெல்லாம் சொல்கிறார்கள் எல்லாம் கேள்வி ஞானம்தான்.
10. கேள்வி: நம்ம ஊர் பட்டிமன்றம் கவியரங்கம் மாதிரி வெளிநாடுகளிலும் நடக்கின்றனவா அல்லது இவை தமிழர்களுக்கு மட்டும் ஆன கலாச்சாரமா?
பதில்: பட்டிமன்றம் – டிபேட் என்கிற வடிவில் ஒரு பொருளை பற்றி எடுத்து பேசவும் மறுத்துப் பேசவும் தொகுத்துப் பேசவும் மேற்கத்திய நாகரீகத்தில் மட்டுமல்ல. ஜனநாயகத்தின் அங்கமாக எங்கும் உள்ளது.
பார்லிமெண்டுகளில் நடைபெறுவது பட்டிமன்றங்கள் தானே? கோர்ட்டுகளில் நடைபெறுவது வழக்காடு மன்றம் தானே? கவியரங்கமும் அப்படியே! ஹிந்தியில் நகைச்சுவைக் கவிதைகளுக்கு என்றே கவியரங்கம் உள்ளது. தமிழில் நடைபெறும் எல்லா கவியரங்களும் எனக்கு நல்ல நகைச்சுவையே!
11. கேள்வி: உயிரினங்களிலேயே மனிதனுக்கு அடுத்து புறாக்கள் மட்டுமே உடலுறவுக்கு முன் முத்தமிட்டுக் கொள்கி றது என்கிறார்கள் நிஜமா?
பதில்: ஒட்டகச்சிவிங்கி மீன்கள் பசுக்கள் நாய்க்குட்டிகள் எல்லா மிருகங்களும் முத்தம் கொடுக்கும். மனிதன் மட்டும் தான் அதை ரொம்ப மிகைப்படுத்தி இடுப்பை வளைத்து சத்தம் கொடுத்து ரகளை பண்ணி கொடுப்பான். முத்தம் மனித நாகரிகத்தில் பல விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.
12. கேள்வி: ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது கடலோரத்தில் உள்ள தமிழர்கள் குளிப்பதை பார்த்து தான் தாங்களும் தினமும் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர் என்று புகைப்பட கலைஞர் இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் ஆக குளியல் நாகரீகத்தில் நாம் தான் முன்னோடியா?
பதில்: இருக்கலாம். ஆங்கிலேயர்கள் குளிர் தேசத்தில் இருந்து வந்தவர்கள். தினப்படி குளித்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான். அப்படிக் குளித்தாலும் தண்ணீர் தொட்டியில் வாரம் ஒருமுறை மிதந்து விட்டு துடைத்து கொள்கிறவர்கள். அவர்கள் முதலில் வந்து இறங்கியது கேரளாவில். அங்கே பலர் குளிப்பதை ஒரு மத நம்பிக்கையாகவே கொண்டவர்கள். தினம் இரண்டு வேளை குளிக்க வில்லை எனில் அவர்களுக்கு பொறுக்காது. கேரளாவுக்கு ஈடாக குளிப்பவர்கள் ஜப்பானியர்கள்.
13. கேள்வி: மாதவிடாய் பிரச்சனை விலங்குகளுக்கும் உண்டா?
பதில்: உண்டு. நாய் குரங்கு கரடி குதிரை மான் நரி எல்லாவற்றுக்கும் உண்டு. ஆனால் நம்மைப் போல் மாதாந்திர கணக்கு வராது. சில சமயம் இரண்டு மாதம் சில சமயம் ஆறு மாதம் இயற்கையைப் பொறுத்த வரை பெண் இனம் வருடம் முழுவதும் கர்ப்பமாக இருப்பதை குறிக்கோள். நமக்குத்தான் எல்லா கர்ப்ப நிகேதங்களும்! ஆப்பிரிக்கப் பழங்குடியினர் சிலருக்கு மாதவிடாய் கிடையாது. பால் கொடுப்பது கர்ப்பமாவது இரண்டு காரியம்தான்.
14. கேள்வி: கையில் உள்ள விரல்களை நகங்களை விட காலில் உள்ள விரல்களின் நகங்கள் வளர்ச்சி குறைவாக இருப்பது ஏன்?
பதில்: காரணம் கைக்கு ரத்த சப்ளை காலை விட அதிகம். அதற்கு காரணம் நம் செயல்களில் மிகப்பல கை சார்ந்ததாக இருப்பது தான். காலால் என்ன பிரயோசனம்? நடக்கலாம் ஃபுட்பால் ஆடலாம். சும்மா கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஆட்டலாம். கை! அப்பா எத்தனை காரியம்! படம் போடுகிறது, பியானோ வாசிக்கிறது, கொலை செய்கிறது.
உங்கள் கை நகம் மாதத்திற்கு 3 மில்லி மீட்டர் வளருகிறது. கால் நகம் அதில் பாதி தான். விஷயம் தெரியுமோ அதிகம் குடித்தால் நகம் வளராது.
15. கேள்வி: பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் நம் நாட்டில் இன்னமும் அறிமுகப் படுத்தப் படாமல் இருப்பது ஏன்?
பதில்: அச்சடிக்க அதிக செலவாகும். கட்டுக்கட்டாக சேர்த்து வைப்பது கஷ்டம். இந்தியாவில்தான் அதிகம் ரூபாய் நோட்டுகள் புழங்குகின்றன. கிரெடிட் கார்டு டெபிட் கார்டு எலக்ட்ரானிக் பணமாற்றம் முழுமையாக வந்த பிறகு மெல்ல மெல்ல காகித நோட்டுகளின் தேவை குறைந்துவிடும். அமெரிக்காவில் பெரும்பாலானோர் 100 டாலருக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. அதுவும் திருடர்கள் மிரட்டினால் கொடுப்பதற்கு. இல்லை என்றால் பெரிதாக அடி விழும். மற்றதெல்லாம் பிளாஸ்டிக் கார்டுதான்.
Be the first to comment on "சுஜாதா நினைவு தினம் இன்று! வித்தியாசமான கேள்விகளுக்கு சுஜாதாவின் சுவாரஸ்யமான பதில்கள்!"