“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம்” – யானை டாக்டர் புத்தக விமர்சனம்!

Yaanai Doctor book review

கதாபாத்திரங்கள் : 

ஆனந்த் – வன அலுவலரின் நண்பன், 

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி – யானை டாக்டர், 

மாரிமுத்து – உதவியாள், 

செல்வா – வளர்ப்பு யானை, 

கதைச் சுருக்கம் : 

வன அலுவலர் இரவு வனவலத்தை முடித்துவிட்டு அதிகாலையில் நன்கு உறங்கிக் கொண்டிருக்க அவருடைய நண்பர் ஆனந்தனிடம் இருந்து போன் வருகிறது. சலிப்புடன் எடுத்துப் பேசுகிறார். விருதுப் பட்டியலில் உள்ள பெயர்களை இன்று மாலை அறிவிப்பார்கள் என்று சொல்கிறான் ஆனந்த். 

யாருக்கு விருது? என்ன விருது? என்ற கேள்விக்கு விடை தருகிறது கதை. அந்த வன பகுதியில்  நீண்ட காலமாக வசித்து வருபவர் யானை டாக்டர். வன விலங்குகள் பற்றி குறிப்பாக யானைகள் பற்றி ( ஏகப்பட்ட யானை சடலங்களின் பிரேத பரிசோதனை செய்துள்ளார், உலக நாடுகள் பலவற்றிற்கு சென்று யானைகளுக்கு சிகிச்சை செய்துள்ளார், கையேடு எழுதி உள்ளார், நிறைய சிகிச்சைகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார் )அதிக அறிவுடையவர் டாக்டர் கே என்கிற கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கும் வன அலுவலர் வண்டுகடியால் தாக்கப்பட மாரிமுத்து உதவியுடன் முதன்முறையாக கிருஷ்ணமூர்த்தி டாக்டரை சந்திக்கிறான். அரிப்பை உணர வலியை உணர அவர் சொல்ல அப்படியே அவரிடம் பேச்சு கொடுத்து நண்பனாகிறார் வன அலுவலர். பிறகு டாக்டர் கேவும், வன அலுவலரும் வன விலங்குகள் பற்றி குறிப்பாக யானைகள் பற்றி நிறைய பேசுகிறார்கள். காட்டு விலங்கான செந்நாயை அன்பால் வசீகரித்த டாக்டர் கேவை கண்டு அதிசயிக்கிறார் வன அலுவலர். ஒருமுறை யானை ஒன்றின் காலில் பீர்பாட்டில் குத்திவிட அதற்கு சிகிச்சை அளிக்க வன அலுவலரை தன்னோடு அழைத்துச் செல்கிறார் கே. யானை டாக்டர் அவற்றிற்கு சிகிச்சை அளித்த முறையை கண்டு வியக்கிறார் வன அலுவலர். இதே போல முதுமலையில் ஒரு யானையின் காலில் பாட்டில் குத்திவிட அங்கு சென்று மற்ற யானைகள் கண்முன்னே  அவற்றை சரிசெய்கிறார் யானை டாக்டர். இதுபோன்ற யானை டாக்டரின் சாகசங்களை சேகரித்து அவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கிடைக்க வேண்டுமென விருதுகுழுவுக்கு அனுப்புகிறார் வன அலுவலர். அந்த விருது பற்றித்தான் நண்பன் ஆனந்தனிடம் இருந்து போன் வந்தது. சில நிமிடங்களில் அந்த விருது பட்டியலில் யானை டாக்டரின் பெயருக்குப் பதிலாக ஒரு சினிமா நடிகரின் பெயர் நுழைந்துவிடுகிறது. இது பற்றி யானை டாக்டரிடம் தகவல் தெரிவிக்கிறார் வன அலுவலர். யானை டாக்டரோ யாருக்கு வேண்டும் அந்த விருது என்று அதைப்பற்றி பெரிதாக கவலைகொள்ளாமல் இருக்கிறார். வன அலுவலரும் யானை டாக்டரும் இரவு வேளையில் பேசிக் கொண்டிருக்க தூரத்தில் சத்தம் கேட்கிறது. யானை டாக்டரும் வன அலுவலரும் சத்தம் வந்த திசை நோக்கிச் செல்கிறார்கள். அங்கே குட்டியானை ஒன்று காயம்பட்டு டாக்டர் கேவை தேடி வந்துள்ளது தெரிய வருகிறது. அது டாக்டர் ஒருமுறை முதுமலையில் யானைக்கு சிகிச்சை அளிக்கும்போது மறைந்திருந்து டாக்டரின் செய்கையை பார்த்த யானைக் குட்டி. தற்போது தனக்கொரு பிரச்சினை என்றதும் பல மைல் தூரம் கடந்து யானை டாக்டரை மறக்காமல் அவருடைய வாசனையை பிடித்து அவர் இருப்பிடம் தேடி வந்துவிட்டது. அந்த குட்டி யானையின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கிறார் மருத்துவர். குட்டி யானை தும்பிக்கையால் தடவிக் கொடுத்து நன்றி சொல்லி செல்கிறது. வன அலுவலரும் டாக்டரும் வீட்டிற்குள் நுழைய முற்பட சற்று தூரத்தில் பெரிய அசைவுகளின் சத்தம் கேட்கிறது. அப்போது தான் தெரிகிறது குட்டி யானை மட்டும் இவ்வளவு தூரம் தனியாக வரவில்லை… அவரைத் தேடி யானை கூட்டமே வந்துள்ளது என்று. யானை டாக்டர் செய்த உதவிக்காக யானைக் கூட்டம் பிளிறலில் நன்றி சொல்லி இருளில் மறைந்து செல்ல வனஅலுவலர் இந்தக் காட்சியை வியந்து பார்க்க யானை டாக்டர் மிகச் சாதாரணமாக அவரை வீட்டிற்குள் அழைக்கிறார். தன் இனத்திற்காகப் போராடும் டாக்டரின் மீது எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தால் அந்த யானைகள் அவரை மறக்காமல் பல மைல் தூரம் கடந்து வந்திருக்கும்? யானைகளின் இந்த அன்பையும் நம்பிக்கையையும் விட பத்மஸ்ரீ விருது அவ்வளவு பெரியது இல்லை… என்று முடிகிறது இந்த அற்புதமான கதை. 

அற்புதமான வரிகள் : 

  1. ’உண்மையிலே மனுஷன்தான் இருகக்றதிலேயே வீக்கான மிருகம். மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்…

’யானை மட்டுமில்லை, சிறுத்தை காட்டெருமை எல்லாமே அப்டித்தான். அவங்களுக்கு தெரியும்’ என்றார். நான் ‘ஆமா, பசுவுவுக்கு பிரசவம் ஆறதை பாத்திருக்கேன். கண்ணைமட்டும் உருட்டிக்கிட்டு தலைய தாழ்த்தி நின்னுட்டிருக்கும்…’ ‘ஆமா அவங்களுக்கு தெரியும், அதுவும் வாழ்க்கைதான்னு….மனுஷன்தான் அலறிடுறான். மருந்து எங்க மாத்திர எங்கன்னு பறக்கிறான். கைக்கு அகப்பட்டதை தின்னு அடுத்த நோயை வரவழைச்சிடறான்…

  1. பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும்.
  2. மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…
  3. மனிதனின் கீழ்மைகளை ஒவ்வொருநாளும் முகத்திலறைந்தது போலப் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் காட்டில் இருக்கவேண்டும். அனேகமாக இங்கே சுற்றுப்பயணம் வருபவர்கள் படித்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள். ஊரில் இருந்தே வறுத்த பொரித்த உணவுகளுடனும் மதுக்குப்பிகளுடனும்தான் வருவார்கள். வரும் வழிதோறும் குடித்துக்கொண்டும் தின்றுகொண்டும் இருப்பார்கள். வாந்தி எடுப்பார்கள். மலைச்சரிவுகளின் மௌனவெளியை காரின் ஆரனை அடித்துக்கிழிப்பார்கள். முடிந்தவரை உச்சமாக கார் ஸ்டீரியோவை அலறவிட்டு குதித்து நடனமிடுவார்கள். ஓங்கிய மலைச்சரிவுகளை நோக்கி கெட்டவார்த்தைகளை கூவுவார்கள்.

ஒவ்வொரு காட்டுயிரையும் அவர்கள் அவமதிப்பார்கள். சாலைஓரத்துக் குரங்களுக்கு கொய்யாபழத்தை பிளந்து உள்ளே மிளகாய்ப்பொடியை நிரப்பி கொடுப்பார்கள். மான்களை நோக்கி கற்களை விட்டெறிவார்கள். யானை குறுக்கே வந்தால் காரின் ஆரனை உரக்க அடித்து அதை அச்சுறுத்தி துரத்துவார்கள். என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் காலிமதுக்குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள் என்பது. வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டு மதுக்குப்பியுடன் இருப்பவர்களை இறக்கி பெல்ட்டை கழற்றி வெறியுடன் ரத்தம் சிதற அடித்திருக்கிறேன். ஜட்டியுடன் கடும்குளிரில் அலுவலகம் முன்னால் அமரச்செய்திருக்கிறேன். ஆனாலும் காட்டுச்சாலையின் இருபக்கமும் குப்பிச்சில்லுகள் குவிவதை தடுக்கவே முடிவதில்லை.

மற்ற எந்த மிருகத்தைவிடவும் யானைக்கு மிக அபாயகரமானது அந்த குப்பி உடைசல். யானையின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது. குப்பிகள் அனேகமாக மரத்தில் மோதி உடைந்து மரத்தடியிலேயே கிடக்கும். யானை அதன் மகத்தான எடையுடன் அதன்மேல் காலை வைத்தால் குப்பி நேராக அதன் பாதங்களுக்குள் முழுக்க புகுந்துவிடும். இருமுறை அது காலைத்தூக்கி வைத்தால் நன்றாக உள்ளே செல்லும். அதன் பின்னால் யானை நடக்கமுடியாது. இரண்டே நாட்களில் காயம் சீழ் வைக்கும். புழுக்கள் உள்ளே நுழையும். புழுக்கள் சதையை துளைத்து சீழை உள்ளே கொண்டுசெல்லும். முக்கியமான குருதிப்பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்டதென்றால் அதன்பின் யானை உயிருடன் எஞ்சாது.

வீங்கிப் பெருத்து சீழ் வழியும் கால்களுடன் பலநாட்கள் யானை காட்டில் அலையும். ஒரு கட்டத்தில் நடமாட முடியாமலாகும்போது ஏதாவது மரத்தில் சாய்ந்து நின்றுவிடும். ஒருநாளில் முப்பது லிட்டர் தண்ணீர் குடித்து இருநூறு கிலோ உணவு உண்டு ஐம்பது கிலோமீட்டர் நடந்து வாழவேண்டிய உயிர் அப்படி ஐந்து நாட்கள் நின்றால் மெலிந்து உருக்குலைந்துவிடும். முதுகு எலும்பு மேலே துருத்தும். கன்ன எலும்புகள் புடைத்தெழும். காது அசைவது குறையும். மத்தகம் தாழ்ந்து தாழ்ந்து வரும். மெல்ல துதிக்கையை தரையில் ஊன்றி குப்புறச்சரிந்து நிற்கும். பின் மத்தகமே தரையில் ஊன்றும். அடுத்தநாள் பக்கவாட்டில் சரிந்து வயுறு பாறைபோல மறுபுறம் எழுந்து நிற்க விழுந்து கிடக்கும். வாலும் துதிக்கையும் மட்டும் சுழல கண்களை மூடித்திறந்தபடி நடுங்கிக்கொண்டிருக்கும். பிற யானைகள் அதைச்சூழ்ந்து நின்று தலையாட்டி பிளிறிக்கொண்டிருக்கும்.

அதன்பின் யானை சாகும். கடைசி துதிக்கை அசைவும் நின்றபின்னரும்கூட பலநாள் யானைக்கூட்டம் சுற்றி நின்று கதறிக்கொண்டிருக்கும். பின்னர் அவை அதை அப்படியே கைவிட்டு பலகிலோமீட்டர் தள்ளி முற்றிலும் புதிய இன்னொரு இடம் நோக்கிச் சென்றுவிடும். யானையின் தோலின் கனம் காரணமாக சடலம் அழுகாமல் இந்தக்காட்டில் எந்த மிருகமும் அதை சாப்பிட முடியாது. அழுகிய யானையை செந்நாய்கள் முதலில் தேடிவந்து வாயையும் குதத்தையும் மட்டும் கிழித்து உண்ணும். பின்னர் கழுகுகள் இறங்கி அமரும். கழுதைப்புலிகள் கூட்டம் கூட்டமாக வெகுதொலைவிலிருந்து தேடிவரும். மனிதனைவிட நூற்றிஎழுபது மடங்கு அதிக நியூரான்கள் கொண்ட மூளை கொண்ட காட்டின் பேரரரசன் வெறும் வெள்ளெலும்புகளாக மண்ணில் எஞ்சுவான்.

  1. என்னிக்காவது தமிழ்நாட்டிலே யானை இல்லாம போனா அப்றம் நம்ம பண்பாட்டுக்கே என்ன அர்த்தம்? மொத்த சங்க இலக்கியத்தையும் தூக்கிப்போட்டு கொளுத்திர வேண்டியதுதான்’
  2. அதிகாரத்தை ரெண்டு வழியிலே மனுஷன் ருசிக்கலாம். கீழெ உள்ளவங்க கிட்ட அதை செலுத்திப்பாக்கலாம். மேலே பாத்து கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிண்டே இருக்கலாம். 
  3. ’கோயிலிலே யானைய வளக்கிறத தடை பண்ணியாகணும். கோயில்கள் யானை வாழறதுக்குண்டான எடமே கெடையாது. யானையோட கண்ணுக்கு பச்சைத்தழையும் மரங்களும்தான் பட்டுண்டே இருக்கணும். அந்தக்காலத்திலே யானைய பட்டத்துயானையா வச்சிருந்தாங்க. இன்னைக்கு உண்டக்கட்டி குடுத்து யானைய வளக்கலாம்னு நெனைக்கறானுங்க. பத்து பைசாவ யானை கையிலே குடுக்கறானுங்க அற்ப பதர்கள். நான்சென்ஸ். நீ யாருன்னு உனக்கு தெரிஞ்சா நீ வச்சிருக்கற அந்த உலோக துண்ட அதுக்கு பிச்சையா போட உனக்கு கை கூசாது? கோயில்யானைகளை மாதிரி இழிவுபட்டு அவமானப்பட்டு பட்டினி கிடக்குற ஜீவன் வேற இல்லை…கண்டிப்பா தடை செஞ்சாகணும்’

’மதச்சடங்குன்னு சொல்லி சிலபேர் அதை எதிர்ப்பாங்க. ஆனா நூறுவருஷம் முன்னாடி பொட்டுக்கட்டுறதையும் அப்டிச் சொல்லித்தான் எதிர்த்தாங்க. யானைய சுதந்திரமா விட்டுரணும். அவன் காட்டோட அரசன். அவனை ஊரிலே போர்ட்டராகவும் பிச்சைக்காரனாகவும் வச்சிருக்கிறது மனுஷ குலத்துக்கே அவமானம்.

  1. இது ஜனநாயக நாடு. நீதிமன்றத்திலே தேவாங்குகள் உக்காந்திருக்கு.

இந்தச் சிறுகதை எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. ஏனோ தானோ என்று கவனத்தை சிதறடித்து வாசித்தால் இந்தக் கதை புரியவே புரியாது. பொறுமையாக நிறுத்தி நிதானமாக படித்தால் மட்டுமே இந்தக் கதை புரியும். புத்தகமாகவும் கிடைக்கிறது. நண்பி நண்பர்களுக்கு பரிசளிக்க நினைப்பவர்கள் இந்தப் புத்தகத்தை தாராளமாக பரிசளிக்கலாம். 

 

Related Articles

உலகிலேயே அதிக “செல்ஃபி பைத்தியங்கள... ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ. 2000 அபராதம் என செல்பி பைத்தியங்களுக்கு செக் வைத்து உள்ளது.  அந்த அளவுக்கு செல்பி மோகம் பிடித்தவர்களாக மாறிவி...
நடிகர்களின் மீது பித்து பிடித்தது போல் இ... பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கிற்கு நடிகர் விஜய் சென்றிருந்தபோது அவருடைய தலை முடியை வைத்து இது டோப்பா முடி என்று அஜித் ரசிகர்கள...
ஜிப்ஸினா மதம் பிடிக்காத மனுச சாதிங்க ... அட்டகத்தி தினேஷ் நடிப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ராஜூமுருகன் வெளியான அற்புதமான படம் குக்கூ. அதை தொடர்ந்து இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெ...
வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பதற்கும் ந... இனி வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.மா...

Be the first to comment on "“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம்” – யானை டாக்டர் புத்தக விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*