அரசாங்கம் வேலையோ, உணவோ தராத போது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகுமென்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிச்சையெடுத்தலைக் குற்றவிலக்கு செய்யகோரிய இரண்டு பொதுநல வழக்குகளை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளது. நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் சி.ஹரி ஷங்கர் ஆகியோர் இரண்டு பேர் கொண்ட அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.
‘நம்மிடம் ஒரு கோடி ரூபாய் இருக்கும் பட்சத்தில் நாம் யாரிடமும் பிச்சை கேட்கப் போவதில்லை. பிச்சையெடுத்தல் என்பது நிர்பந்தமே அன்றி தேர்வு அல்ல. ஒரு அரசாங்கம் உணவோ, வேலையோ தராதபோது பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகும்?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிச்சைத் தடுப்பு சட்டம், மும்பையின் படி பிச்சையெடுத்தலைக் குற்றச்செயலாக கருத முகாந்திரம் இருப்பதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் அது வறுமையின் காரணமாக பிச்சையெடுத்தல் தவறில்லை என்றும், எனினும் பிச்சையெடுத்தலை குற்றவிலக்கு செய்ய முடியாது எனவும் தெரிவித்தது.
பிச்சைக்காரர்களுக்கு ஆதரவாகப் பொதுநல வழக்குகள்
ஹர்ஷ மந்தர் மற்றும் கர்னிகா சாவ்னி ஆகியோர் பிச்சைக்காரர்களுக்கு ஆதரவாகப் பொதுநல வழக்கைத் தொடர்ந்தவர்கள். பிச்சையெடுத்தலைக் குற்றவிலக்கு செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கும் முயன்று வருகிறார்கள். பிச்சைத் தடுப்பு சட்டம், மும்பைக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள்.
சமூக நீதி அமைச்சகம் ,பிச்சைக்காரர்கள் மற்றும் வீடற்ற மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்க ஒரு மசோதாவைத் தயாரித்துள்ளதாக மத்திய அரசும், ஆம் ஆத்மீ அரசாங்கமும் நீதிமன்றத்திடம் அக்டோபர் 2016 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. ஆனால் பின்னர் சட்டத்தை திருத்தும் முன்மொழிவு கைவிடப்பட்டது
தற்போதைய பிச்சை தடுப்பு சட்டம், மும்பை அடிப்படையில் ஒருவர் பிச்சை எடுப்பாரேயானால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க முடியும். தொடர்ந்து அவர் தண்டிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரைக்கும் கூட சிறைத் தண்டனை வழங்க முடியும். ஆனால் தேசிய அளவிலான சட்டம் இன்று பிச்சையெடுத்தலுக்கு எதிராக இல்லை.
Be the first to comment on "அரசாங்கம் உணவு தராதபோது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகும்? கேட்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்"