மிளகு பொங்கல், பெப்பர் சிக்கன், ரசம் , முட்டை வறுவல். இதில் எல்லாம் சேர்க்கப்படும் பொதுவான ஒரு உணவுப் பொருளை பற்றித்தான் தொடரின் இந்தப் பகுதியில் பார்க்க இருக்கிறோம். அந்த உணவுப் பொருள் மிளகு என்னும் கருப்பு தங்கம். மிளகிற்கு எதற்காகக் கருப்பு தங்கம் என்று பெயர்? தங்கத்தைத் தந்து மிளகை பெரும் அளவுக்கு அதன் தேவை அப்போது இருந்ததா? வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.
உலக வரலாறு
உலக வரலாற்றைத் தீர்மானித்த காரணியாக மிளகு ஒரு காலத்தில் இருந்தது என்றால் நம்புவீர்களா? உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அது தான் உண்மை. கிழக்கு இந்திய கம்பெனி வணிகம் செய்ய வந்ததாகச் சொல்லி, பிறகு தங்களது ஆட்சி அதிகாரத்தை இந்திய நிலப்பரப்பு முழுக்க பரவ செய்ததற்குப் பின்பு மிளகு இருக்கிறது. எப்படி என்று பார்ப்பதற்கு முன்பு, மிளகின் மூலத்தைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.
மிளகின் தடம் சங்க இலக்கிய பாடல்களில் காணக் கிடைக்கிறது. அன்றைய காலங்களில் முத்து மற்றும் தங்கத்திற்கு இணையாக மிளகு பெயர் பெற்று இருந்திருக்கிறது.
‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கரியோடு பெயரும்
வளங்கெழு முசிறி’
இது ஒரு அகநானூறு பாடல். மிளகிற்கு அப்போது கறி என்று பெயர். கிரேக்கர்களை யவனர் என்று விளிக்கும் வழக்கம் சங்க இலக்கியங்களில் இருந்திருக்கிறது. முசிறி என்னும் துறைமுகத்திற்கு நிறையக் கப்பல்களில் வந்த கிரேக்கர்கள், பொற்காசுகள் தந்து மிளகை வாங்கிச் சென்றனர் என்ற பொருள் தருகிறது இந்த அகநானூறு பாடல்.
‘மனைக் குவை இய கறிமுடையாற்
கலிச்சும்மைய கரைகலக்குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரை சேர்க்குந்து’
மிளகின் மதிப்பைச் சொல்லும் மற்றுமொரு பாடல். இது புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.முசிறி துறைமுகம் அதிக ஆழம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கிறது. இதனால் வணிகம் செய்ய வரும் கப்பல்கள் சிரமம் இன்றி வந்து சென்றன. சின்ன சின்ன படகுகளில் மிளகை ஏற்றி, கிரேக்கர்களின் கப்பல்களில் கொண்டுபோய் இறக்கினார்கள். அதற்குப் பதிலாக தங்கள் கப்பல்களில் இருந்த பொற்காசுகளை பரிசாக அளித்தனர் கிரேக்கர்கள் என்று பொருள் தருகிறது இந்தப் பாடல்.
இந்தச் சங்க இலக்கிய பாடல்களின் மூலம், மிளகின் வரலாறு தென் இந்தியாவில் இருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். குறிப்பாகக் கேரளா மலபார் கடற்கரைகளில் மிளகு வணிகம் மிக அதிக அளவில் நடந்து வந்துள்ளது.
மிளகு பெயர்க்காரணம்
மிளகிற்கு இணையான தமிழ் சொல் பிப்பாலி. கிரேக்க வணிகர்களால் அதிக அளவு வாங்கப்பட்டு பிப்பாலி விநியோகம் செய்யப்பட்ட வந்ததால், பிப்பாலி மருவி கிரேக்கத்தில் பிப்பர் ஆனது. கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்துக்கு வந்து பிப்பர் பிறகு பெப்பர் ஆனது. மிளகாய் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, காரத்திற்காக மிளகு சேர்ப்பது ஒன்று தான் உலக மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மிளகாயின் பயன்பாட்டுக்கு பிறகு, காரத்திற்காக பயன்பட்ட காரணத்தால் பிப்பாலி, மிளகு ஆனது.
உலக வரலாற்றை மட்டுமல்ல, இந்திய வரலாற்றையும் மிளகு தீர்மானித்தது எப்படி?
இந்தியாவில் கடலுக்கு அருகே இருக்கும் நிலப்பரப்பு மட்டும் மிகப் பெரும் நகரங்களாக இருப்பதற்கான காரணங்களை என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? காரணம் மிக எளிமையானது. பண்டைய காலங்களில் வணிகம் கடல் மார்க்கமாகவே நடந்து வந்துள்ளது. கடல் மார்க்கமாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழி கண்டுபிடித்து வைத்திருந்தனர் வணிகர்கள். பெரும் புயல், மழை, பசி, உயிர்கொல்லும் ராட்சத கடல் உயிரினங்கள் என அனைத்தையும் எதிர்கொண்டு பணம் ஈட்டக் கடல் மார்க்கமாக வணிகர்கள் வணிகம் செய்தனர். ஒரு கப்பலில் வணிகம் செய்ய பத்து பேர் புறப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் வணிகம் செய்து திரும்பவும் தாங்கள் கிளம்பிய இடத்திற்கே வரும்போது இரண்டு பேர் மட்டுமே உயிரோடு இருப்பார்கள். அந்த அளவுக்குக் கடல் வழி வணிகம் ஆபத்தானதாக இருந்திருக்கிறது. இந்தச் சூழலில் தான் மிளகு உலக வரலாற்றை, இந்திய வரலாற்றை எழுதும் காரணியாக உருவெடுத்தது.
கடல் மார்க்கமாக வணிகம் செய்வதில் கில்லாடியாக அப்போது இருந்தவர்கள் அரேபியர்கள். கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு வந்தடையும் வழியை அவர்கள் மட்டும் தெரிந்து வைத்திருந்தனர். இதனால் பண்ட மாற்று முறையின் மூலம் மிளகு இந்தியாவிடம் இருந்து வாங்கப்பட்டு பின்னர் உலகும் முழுவதும் விற்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்தியாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிளகு, ஐரோப்பியர்களுக்கு அதிக விலை வைத்து லாபத்துக்கு விற்கப்பட்டது. அரேபியர்களின் இந்தச் செயலை ஓரளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஐரோப்பியர்கள் இனி மிளகை தாங்களே இந்தியாவிடம் இருந்து வாங்கிக்கொள்வது என்று முடிவு எடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே போர்த்துகீசியனாகிய வாஸ்கொடகாமா மிளகைத் தேடி இந்தியாவுக்கு வந்தான். கடும் சிரமங்களுக்கு இடையே இந்தியாவுக்கான கடல் வழிப் பாதையை கண்டடைந்தான். சில நூறு பொற்காசுகளை தந்து, கப்பல் கப்பலாக மிளகை அள்ளிச்சென்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தான். அவன் வந்து சேர்ந்த இடம் கோழிக்கோடு. ஒவ்வொரு முறையும் மலபாரில் பெருத்த சேதத்தை விளைவித்து, கேரளா மக்களை அச்சுறுத்தி மிளகைக் கொண்டு சென்றான். அதன் பிறகு தொடர்ச்சியாக, டச்சுக்காரர்கள் மற்றும் டேனிஷ்காரர்கள் இந்தியாவுக்குக் கடல் வழிப் பாதையை உருவாக்கி மிளகைச் சல்லி சென்றனர்.
இதில் பரிதாபம் பிரிட்டிஷ் காரர்கள் தான். அவர்கள் தங்களுக்கு தேவையான மிளகு, லவங்கம் மற்றும் ஏலக்காய் போன்ற பொருட்களை டச்சுக்காரர்களிடம் இருந்தே வாங்க வேண்டிய நிலை இருந்தது. ஒரு நாள் திடீரென மிளகின் விலையை ஐந்து ஷில்லிங், அதாவது அன்றைய மதிப்பில் நான்கு ரூபாய் அளவுக்கு டச்சு வியாபாரிகள் ஏற்றி விட்டனர். இதில் கோபமடைந்து பிரிட்டிஷ் வியாபாரிகள், இனி டச்சுக்காரர்களிடம் மிளகு வியாபாரம் செய்வது இல்லை எனவும், சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் இந்தியாவில் மிளகு கொள்முதல் செய்வது என்றும் முடிவு எடுத்தனர். இது நடந்த பதினான்காம் நூற்றாண்டில்.
செப்டம்பர் 24 , 1549 வெறும் இருபத்து நான்கு லண்டன் வியாபாரிகள் ஒன்றிணைந்து 75000 முதலீட்டுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, இந்த நிறுவனம் முதலாம் எலிசபெத் ராணியால் அங்கீகரிக்கப்பட்டு, இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
ஆகஸ்டு மாதம் 24 , 1600 ஆம் ஆண்டு 24 ஹெக்டர் என்ற பெயர் கொண்ட , 500 டன் பிரிட்டிஷ் கப்பல் ஒன்று அந்த நிறுவனத்தின் சார்பாக இந்தியா அனுப்பி வைக்கப்பட்டது. வில்லியம் ஹாக்கின்ஸ் என்பவரது தலைமையில் வந்த அந்தக் கப்பல், மும்பை துறைமுகத்தில் கரை ஒதுங்கியது. அவர்களை இருகரம் கூப்பி வரவேற்றார் இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் ஜஹாங்கீர். அந்த நிறுவனம் பிறகு இந்திய வரலாற்றை மாற்றி எழுதிய கிழக்கு இந்திய கம்பெனி.
வணிகம் செய்வதற்காக மட்டும் என்று சொல்லி இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கு இந்திய கம்பெனி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தங்களது அதிகாரத்தை இந்திய நிலப்பரப்பு முழுவதற்கும் செலுத்தியது. அதன் பிறகு நடந்தது எல்லாமும் வரலாறு.
இப்படி இந்தியாவில் விளைந்த மிளகு, இந்தியாவுக்கே ஆபத்தாக முடிந்தது. ஒருவேளை இந்தியாவில் மிளகு விளையாமல் போயிருந்தால்? இந்திய வரலாறு வேறு மாதிரி இருந்திருக்குமா என்பது சுவாரசியமான தேடல். ஒரு வேளை, உலக வரலாறும் கூட மாற்றி எழுதப்பட்டிருக்கும்.
மிளகு அவ்வளவு முக்கியமா?
இந்தக் கேள்விக்கு பதில் சர்வ நிச்சயமாக ஆம் என்பது தான். மிளகாயின் வரலாறு வெறும் 200 ஆண்டுகள் தான். அதற்கு முன்பு மனிதனின் கார தேவைக்கு மிளகு ஒன்று தான் வடிகால். மிளகை இடித்து பொடியாக்கி அதை உணவில் சேர்த்து சமைத்து வந்தனர். மிளகு சமையல் செய்ய மட்டும் தானா? வேறு எந்தத் தேவைக்கும் மிளகு பயன்படவில்லையா என்றால் பயன்பட்டது. எவ்வாறு என்று பார்ப்போம்.
இன்று நம்மிடையே குளிர்சாதன பெட்டி இருக்கிறது. அதன் மூலம் உணவை, சமைத்த உணவைப் பதப்படுத்தி வைத்துக் கொள்கிறோம். பண்டைய காலங்களில் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? பண்டைய காலத்து மக்கள் மிளகை உணவு பதப்படுத்தும் ஒரு பண்டமாக உபாயகப்படுத்தி வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மிளகில் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு என்பதையும் அந்த காலத்து மக்கள் உணர்ந்தே இருந்துள்ளனர்.
உலகின் மிகப் பழமையான, மூத்த நாகரிகங்களில் ஒன்றான எகிப்து நாகரீகத்தில் இறந்தவர்கள் பதப்படுத்தி பாதுகாக்கும் முறை உண்டு. மம்மி என்று அந்த பதப்படுத்தப்பட்ட இறந்த உடல்கள் அழைக்கப்படுகின்றன. இவ்வாறாக மம்மி ஆக்கப்பட்ட அரசர்களின் மூக்கு துவாரத்தில் மிளகு வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் எகிப்து மக்கள் மிளகை மருத்துவ குணம் கொண்ட ஒன்றாகவும், விலை உயர்ந்த ஒன்றாகவும் கருதியிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கிமு 1213 ஆம் நூற்றாண்டில், ராம்சிஸ் என்ற எகிப்தின் இரண்டாம் அரசனின் மரணத்தின் போது, மிளகு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பண்டைய நாகரீகங்களில், பெரும் செல்வம் படைத்த பெண்கள் தங்களின் திருமணத்தின் போது நிறையத் தங்க நகைகளோடு சேர்த்து, மிளகு எடுத்து வருவதை தங்களின் செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கொண்டிருந்தனர். தங்கத்தை விடவும், முத்துமணி ரத்தினங்களை விடவும் மிளகு அன்று அதிகம் மதிப்புப் பெற்று இருந்தது.
அடுத்த முறை மிளகு பொங்கல் சாப்பிடும் போது, மிளகை எடுத்து ஓரமாக வைப்பதற்கு முன்பு, அதன் வரலாற்றைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
மற்றுமொரு உணவோடு அடுத்த பகுதியில் சந்திப்போம்.
பிரிட்டிஷ்காரர்கள் வணிகத்திற்காக தான் இந்தியா வந்தார்கள். நருமணப்பொருட்களை வாங்க என்பதும் உண்மை. ஆனால் அவர்கள் இந்தியாவில் நிலை நிருத்த அப்போதைய இந்திய மன்னர்களின் நிலை மற்றும் இந்தியாவின் செல்வச் செழிப்பு. வங்காளத்தில் உருவான கைத்தறி ஆடைகளுக்கும் உலகளவில் மிகுந்த வரவேற்ப்பு உண்டு.உற்பத்திப்பொருட்களுக்கான துறையும் அப்போது இந்தியாவில் சிறப்பாக இருந்தது. இதுபோன்ற பல்வேறு காரணங்கள் காரணமாகவே பிரிட்ஷார் இந்தியாவில் கால் ஊன்றினர். வெறுமனே நருமணப்பொருட்களுக்கு மட்டும் அல்ல.இந்தியாவின் வரலாற்றை கொஞ்சம் ஊன்றி படியுங்கள்.