உலகின் தலை சிறந்த காவல் துறை என்று குறிப்பிடப்படும் ஸ்காட்லாந்து யார்டின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பதவி ஏற்க உள்ளார். அவரது பெயர் நீல் பாசு.
யார் இந்த நீல் பாசு?
நீல் பாசுவின் தந்தை இந்தியாவிலிருந்து பிரிட்டனில் குடியேறியவர். இதற்கு முன்பு நீல் பாசு ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையின் துணை ஆணையராகவும், பயங்கரவாத தடுப்பு படையின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர இருந்த நிறைய இளைஞர்களைத் தடுத்து நிறுத்தி, நல்வழிப் படுத்தியவர் என்ற வகையில் நீல் பாசு ஏற்கனவே பிரிட்டனின் பிரபலமான ஒரு காவல் துறை அதிகாரியாகத் திகழ்ந்து வருகிறார். அதையும் மீறி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்த இளைஞர்களுக்கு எதிராகக் கடுமையான பல நடவடிக்கைகளை எடுத்தவர்.
தலைசிறந்த காவல்துறையில் பதவி
நீல் பாசுவின் திறமையை மெச்சும் வகையில் தற்போது அவருக்கு ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவராக பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. பயங்கரவாத தடுப்பு படையின் தலைவராக மார்க் ரெய்லி என்பவர் உள்ளார். அவர் ஓய்வுபெற உள்ளதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த அதிகாரியான நீல் பாசு அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை அடுத்து பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த புதிய பதவியைக் குறித்து பேசிய நீல் பாசு ‘ பயங்கரவாத தடுப்பு படையின் தலைவராக பொறுப்பேற்கக் கேட்டுக்கொள்ளப்பட்டதை ஒரு சிறப்பு சலுகையாகக் கருதுகிறேன். கொடுக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பொறுப்பு சவாலானதாக இருந்தாலும் , அதை எனக்கு தரப்பட்டிருக்கும் கடமையாக எடுத்துச் செய்ய விரும்புகிறேன். பெரும் நோக்கத்திற்காகத் தரப்பட்டிருக்கும் இந்தப் பதவியை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
‘சிறந்த திறமையை வெளிப்படுத்தி இந்தப் பதவியை முன்னெடுப்பேன். பகலும் இரவும் தீவிரவாத தடுப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அசாதாரண மனிதர்களோடு பணியாற்றிய அனுபவம் நிச்சயம் எனக்கு கை கொடுத்து உதவும்’ என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "ஸ்காட்லாந்து யார்டு தலைவர் ஆகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்"