சர்வதேச அரசியலின் மிக முக்கிய செய்தியாக தற்போது விவாதிக்கப்பட்டு வருவது, வரும் மே
மாதம் டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்தித்து பேசவிருக்கும்
நிகழ்வைப் பற்றியதே ஆகும் . வடகொரியா பல்வேறு உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறித் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. அமெரிக்கா நேரடியாகவே வடகொரியா பிரச்சனையில் தலையிட்டு அந்நாட்டின் மீது பொருளாதார தடையையும் விதித்தது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே போர் நடக்கலாம் எனும் சூழல் இருந்தது. இந்த நிலையில் வரும் மே மாதம் நடக்கவிருக்கும் இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச
முக்கியத்துவம் பெறுகிறது.
பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்குத்
தயாராக இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து, வடகொரியா அரசு தரப்பில் அந்நாட்டு
அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்திக்க ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை
ஏற்று வரும் மே மாதம் வடகொரியா தலைவரை சந்திக்கிறார் ட்ரம்ப். இந்தச் சந்திப்பு இருநாட்டுத்
தலைவர்களுக்கு இடையே நடக்கும் முதல் சந்திப்பாக அமைய இருக்கிறது.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப் ‘தென்
கொரிய பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கிம் ஜோங் உன் நிரந்தரமாக இனி அணு
ஆயுத சோதனைகள் நடத்தப் போவதில்லை என்று உறுதி அளித்திருக்கிறார். இது ஒரு நல்ல
முன்னேற்றம். எனினும் எழுத்துப்பூர்வமாக கிம் ஜோங் உன் இனி அணு ஆயுத சோதனைகள்
நடத்தப் போவதில்லை என்பதை உறுதி அளிக்க வேண்டும். அது வரைக்கும் வடகொரியா மீது
விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடை தொடரும்’.
பணிந்த வடகொரியா
பலவேறு உலக நாடுகள் வடகொரியாவின் மீது பொருளாதார தடை விதித்தன. அமெரிக்காவும்
வடகொரியாவின் மீது பொருளாதார தடை விதித்தது. அணு ஆயுத சோதனைகளுக்கு எதிராகத்
தொடர்ந்து அமெரிக்கா எச்சரிக்கை குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது. தன் நாட்டின் மீது
விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடை காரணமாகவும், வடகொரியாவுக்கு ஏற்பட்டிருக்கும்
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் தற்போது அதன் தலைவர் கிம் ஜோங் உன்
பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தை எந்தத் தேதியில் எங்கே நடக்க இருக்கிறது போன்ற
விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் பதட்டத்தை ஏற்படுத்திய
உலகின் இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Be the first to comment on "வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை மே மாதம் முதல் முறையாகச் சந்திக்கிறார் டொனால்டு ட்ரம்ப்"