சிதம்பர நினைவுகள் புத்தகத்தை நாம் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

What is the need to read the Chidambaram Memories book?

இந்தப் புத்தகத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன் இயக்குனர் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தையும் இயக்குனர் ராமின் கற்றது தமிழ் படத்தையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள். இந்த இரண்டு படங்களிலும் ஒருவன் துரத்தி அடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பான். அப்படி இருந்தும் அவனிடம் உச்சகட்ட மனிதம் என்பது பெரும்பாலான இடங்களில் காணப்படும்.

கற்றது தமிழ் படத்தில் ஆனந்தி எனும் அன்பைத் தேடி கையில் இருக்கும் கிழிந்த காசை வைத்துக் கொண்டு திரிதலும், தமிழ் வாத்தியாரை அப்பாவைக் காட்டிலும் நேசித்தலும், தனக்காக பல மைல் தூரம் கடந்து வந்திருக்கும் காதலனுக்கு ஆனந்தி சுடுதண்ணி கொடுப்பதும், ஆனந்திக்காக தனது பைக்கை விற்றலும், விபச்சார விடுதியில் சீரழிந்த ஆனந்தியை எந்தக் கேள்வியும் கேட்காமல் எனக்கு என் ஆனந்தி கிடைச்சிட்டா அதுவே போதும் என பிரபா சொல்லுதலும், பிரபாவையும் ஆனந்தியையும் காப்பாற்ற மாஸ்டர் ஒருவர் முயல்வதும் என அலைந்து திரிபவனின் வாழ்க்கை பயண படத்தின் ஏகப்பட்ட இடங்களில் உச்சகட்ட மனிதத்தை நாம் காணலாம்.

அதே போல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில், ஓநாய் குண்டடிபட்டு கிடக்க போலீஸை தாண்டி அந்த ஓநாயை மனித நேயத்தோடு ஆட்டுக்குட்டி காப்பாற்றுதலும், ஆட்டுக்குட்டி நீட்டும் பணத்தை தூக்கி வீசிவிட்டு ஹே ஹே நீ டாக்டர் என்று மனநோயாளி சொல்லுதலும், ஓநாயை காப்பாற்ற விபச்சாரி(திருநங்கை என நினைக்கிறேன்) அக்கா ஒருவர் குறுக்கே பாய்ந்து குண்டடி பட்டு இறத்தலும், தவறுதலாக செய்த குற்றத்திற்கு பிராய்ச்சிதமாக விழி திறன் இல்லாதவர்களை காப்பாற்ற ஓநாய் துடிப்பதும், விவரம் தெரிந்த பிறகு ஓநாய் நல்லவர் என்று அவருக்காக போராடி அவருடைய நம்பிக்கையை ஆட்டுக்குட்டி பெறுதலும் என்று படத்தின் பல படங்களில் உச்சக்கட்ட மனித நேயத்தைக் காணலாம்.

இந்த இரண்டு படங்களையும் நினைத்துப் பார்த்தால், இப்படிலாம் கூட ஒருத்தனுக்கு நடக்குமா
என்ற சந்தேகம் எழும். இது வெறும் மிகையான கற்பனை மட்டுமே, படைப்பாளிகளின் விரக்தி
மன நிலையைத் தான் இந்த படைப்புகள் காட்டுகிறது என்று எண்ணுவதற்கும் வாய்ப்பு உண்டு.
ஆனால் இது போன்ற சம்பவங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிஜமாகவே நடந்திருக்கிறது
என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஊரே கொண்டாடும் தீபாவளிக்கு ஒரு நேரம் சாப்பாடு சாப்பிடக்கூட வழி இல்லாமல் சுற்றும்
மனிதர்களை நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா, உடலை விற்று சம்பாதிக்கும் பணத்தை
போலீஸிடம் தாரை வார்க்கும் விபச்சாரிகளின் துயரத்தை பற்றி நாம்  கேள்விப் பட்டிருக்கிறோமா, இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும், இந்த மாதிரி விளிம்பு நிலை மனிதர்களையும் அலைந்து திரிந்தவனின் மனப் போக்கையும் பற்றி படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்பவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் பிடிக்கும். ( வட்டியும் முதலும் புத்தகம் பிடித்தவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் பிடிக்கும் )

கடுமையான பசியில் இருக்கும் ஒருவர், ரத்ததானம் செய்தால் காசு கிடைக்கும் என்று யாரோ
சொன்னதைக் கேட்டு ரத்ததானம் செய்கிறார் ஒரு மனிதர். பணமும் கிடைக்கிறது. ஆனால் அந்தப் பணத்தையும் வேறொருவருக்கு மருந்து வாங்கப் பயன்படட்டும் என்று கொடுத்துவிட்டு
பசியுடனே சுற்றித்திரிந்த ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறீர்களா?

அப்படியொரு மனிதரான மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் “சிதம்பர ஸ்மரண” என்ற நூல். தமிழில் எழுத்தாளர் கே.வி.ஷைலஜா அவர்கள் “சிதம்பர நினைவுகள்” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சில தருணங்கள் இருக்கும். அப்படி தன் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களை கட்டுரைகளாக தொகுத்து எழுதியுள்ளார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

உருகி உருகி காதலித்த ஒரு பெண்ணின் முகம் தீய்ந்து போயிருப்பதைக் கண்டு தன் முகம் சிதைந்துபோனதுபோல் வருந்தும் பாலு அந்தக் காதலியின் தீய்ந்த கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் ஒரு குழந்தையைப் போல குடுகுடுவென ஓடிவருகிறார். கையில் காசு இல்லாதபோது விலைமாது ஒருவரிடம் ஆதரவு பெற்று அவர் மடியில் படுத்து உறங்கி அவரிடம் காசு வாங்கி வயிற்றை நிரப்புகிறார். நள்ளிரவில் போலீசிடம் சிக்கித் தவிக்கும் விலைமாது ஒருவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆதரவு தருகிறார். அதே போல பகற்பொழுதில் தன் வீட்டிற்கு ஊறுகாய் விற்க வரும் இளம்பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்டு அடிவாங்கி அவமானப்படுகிறார். இப்படி பெருமைகள் சிறுமைகள் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் பகிர்ந்துள்ளார்.

புத்தகத்தைக் கையில் எடுத்தால் முழுவதும் படித்து முடிக்காமல் கீழே வைக்கமாட்டீர்கள். அப்படியொரு மொழிநடை. படித்து முடித்ததும் பணமா? மனிதமா? இந்த இரண்டில் நாம் எதை விரும்புகிறோம் எதைப் போற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி நமக்குள் கட்டாயம் எழும். நம்முடைய சொந்த பந்தம் நமக்கு நல்லது தான் நினைக்கிறதா? நம் வீட்டு உறுப்பினர்கள் ஒழுக்கமாக இருக்கிறார்களா? இந்திய தேசத்தில் ஒரு பத்திரிக்கையாளன், கவிஞன், எழுத்தாளன் என பேனா பிடிப்பவன் எல்லாம் வசதி வாய்ப்போடு இருக்கிறானா? ஒரு பெண்ணை பார்த்ததும் நம் மனம் எங்கே செல்கிறது? பார்வை எங்கே செல்கிறது? அதற்கு காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடை கிடைக்கும். படியுங்கள்!

விலை: 150

பதிப்பகம்: வம்சி பதிப்பகம்

Related Articles

நெட்டிசன்களிடம் வகையாக மாட்டிக்கொண்டது ம... யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீர் என எதையாவது செய்து மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது தான் நமது பாரத பிரதமர் மோடியின் பொழுதுபோக்கு. அது மக்கள...
தையல் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்சனைகள... உடைகள் என்ற ஒரு விஷயம் கண்டுபிடித்த காலத்திலிருந்தே தையல் என்கிற ஒரு விஷயமும் இருந்துகொண்டு வருகிறது. பல வருடங்கள் கடந்து உடைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்...
சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை”... கடந்த 2017 ஆம்  ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த  சர்ச்சைகள் விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வருட...
ஒருத்தரை மட்டம் தட்ட எப்படியெல்லாம் யோசி... கடந்த டிசம்பர் 6 ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இந்தியா முழுக்க அனுசரிக்கப்பட்டது. முன்பிருந்ததை விட இப்போது அம்பேத்கரின் கருத்தியலில் அதிக ...

Be the first to comment on "சிதம்பர நினைவுகள் புத்தகத்தை நாம் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*