நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று தற்போது திரைக்கு வந்துள்ள படம் டூலெட். இயக்குனராக அவதாரம் எடுத்த செழியன் முதல்முயற்சியிலயே தேசிய விருதையும் வென்றுவிட்டார். பார்வையாளர்களின் மனதை வென்றாரா என்பதைப் பார்ப்போம்.
வழக்கம்போல நல்ல சினிமா ஓடக்கூடிய சின்ன தியேட்டரில் இருபது பேர் பார்வையாளராக இருக்க படம் தொடங்கியது. (இதற்குமுன் நடுநிசி நாய்கள் என்ற படம் பின்னணி இசையே இல்லாமல் வெளியாகி உள்ளது) பிண்ணனி இசையே இல்லை என்ற குறையையே மனதில் ஏற்படுத்தாமல் ஒரு சிறுகதையைப் போல வரி வரியாக காட்சி காட்சியாக மிதந்து சென்று பார்வையாளருக்கு வாழ்ந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்தப் படம்.
2007 ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் வாடகை வீடுகள் தேடி அலைந்தவர்கள் என்னென்ன சவால்களை, அவமானங்களை சந்தித்தார்கள் என்பதுதான் மையக்கரு. இந்தக் கருவையை குருவி கூடுகட்டுவது அழகாக செதுக்கி வைத்திருக்கிறார் செழியன். வாடகை வீட்டு ஓனரம்மா வாடகை பணத்தை வாங்கி முதுகை சொறிவதாகட்டும், ஓனரம்மா திட்டியதால் சுவற்றில் வரைந்து வைத்ததை ரப்பர் வைத்து அழிக்கும் சிறுவனாகட்டும், சினிமாக்காரனுக்கு வீடு கிடைக்காது என்பதால் பொய்யான விசிட்டிங் கார்டு கொடுப்பதாகட்டும்… எல்லாமே சின்ன சின்ன கவிதைகள் மாதிரி திரையில் தெரிகிறது.
பாலுமகேந்திராவின் வீடு படத்தை பல இடங்களில் நினைவூட்டினாலும் ஒட்டுமொத்த படமாகப் பார்க்கும்போது இந்தப் படம் தனித்து தெரிகிறது. உதிரிப்பூக்கள், பூ, நண்டு, படங்களைப் போல டூலெட் சிறுகதை அழகாகப் படம் பிடிக்கப்பட்டு பார்வையாளர்களின் மனதை வெகுவாக கவர்கிறது.
டூலெட் – வாடகைக்கு வீடு தேடி அலைந்தவர்களுக்கு அலைந்துகொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல்!
Be the first to comment on "பக்கத்துல இருக்கறவங்க மேலயும் அக்கறை காட்டுப்பா! – டூலெட் விமர்சனம்"