இதாங்க ஆயிரத்தில் ஒருவன் படத்தோட கதை!

Aayirathil Oruvan Movie Story

இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே. சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

ஒரு குக்கிராமம்… தற்போதைய தஞ்சாவூர்… சோழன் தன்னுடைய குழந்தையை கொடுத்துவிட்டு பாண்டியனுடன் போர் புரிவதாக பாட்டு பாடுகிறார்கள் கூத்துக் கலைஞர்கள்.

தஞ்சை கி. பி. 1279… சோழர்களின் கடைசி மன்னன் ஆட்சியின் போது…

சோழ ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதிகள் கொழுந்துவிட்டு எரிகிறது. சோழ வீரர்கள் பாண்டியர்களால் தாக்கப்படுகிறார்கள். சோழர் குல பெண்களை நிர்வாணமாக்கி கற்பழிக்கின்றனர். இவை அனைத்தையும் தனது கோட்டையின் மேல்புறத்திலிருந்து பார்க்கிறான் சோழ ராஜ்ஜியத்தின் கடைசி மன்னன்.

தனது மகனுக்கு ( அதாவது சோழ ராஜ்ஜியத்தின் கடைசி இளவரசனுக்கு ) முத்தம் கொடுத்து மந்திரவாதியிடம் மகனை ஒப்படைக்கிறான். தூது வரும்வரை காத்திருங்கள் எத்தனை ஆண்டுகளானாலும் சரி… என்று கூறுகிறான்.

மந்திரவாதி துணையுடன் மக்களோடு மக்களாக அந்த இடத்தைவிட்டு வெளியேறுகிறான் சோழர்களின் கடைசி இளவரசன்( பார்த்திபன் ).  தங்களது சாம்ராஜ்யம் எரிந்து சரிவதை கோபக் கண்களால் பார்த்தபடியே இளவரசன் அங்கிருந்து பல்லக்கில் வேறு இடத்திற்குச் செல்கிறான்.  ஆயிரத்தில் ஒருவன் என்று டைட்டில் வருகிறது.

கடல் கடந்து போன அந்த சோழ இளவரசன் வெகுநாள் கழித்து ஒரு தீவை சென்றடைந்தான். அதன் பின்னர் அவன் எங்கு போனான் என்ன ஆனான் என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. அந்த சோழ இளவரசனை கண்டுபிடிக்க பல பாண்டிய மன்னர்கள் முயற்சி செய்தனர். ஆனால் போகும் வழியில் சோழர்கள் செய்து வைத்துவிட்டு போன பொறிகளை சமாளிக்க எவராலும் முடியவில்லை. சோழ இனத்தை கூண்டோடு அழிக்க வேண்டும் தங்கள் குலதெய்வ சிலையை மீட்க வேண்டும் என்ற கனவு பாண்டியர்களுக்கு நிறைவேறாமலயே போய்விட்டது. ஆயினும் அவர்கள் தங்கள் முயற்சிகளை கைவிடவே இல்லை. தலைமுறை தலைமுறையாய் தங்கள் பிள்ளைகளுக்கு சோழ இளவரசன் கதையையும் தங்கள் குலதெய்வ சிலையை மீட்க வேண்டிய கட்டாயத்தையும் சொல்லி வைத்துவிட்டுச் சென்றனர். அவன் வாழ்ந்த இடத்தைக் கண்டுபிடிக்க பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். சிலர் பாதியிலயே திரும்பி வந்து அந்தச் சோழன் போன பாதை மிகுந்த அபாயகரமானது யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று அறிவுரை சொன்னார்கள். அதை பொருட்படுத்தாது சென்றவர்கள் யாரும் திரும்பி வரவில்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கனவு என்று கருதப்படும் அந்த சோழ இளவரசன் வாழ்ந்த இடத்தை பல தடங்கல்களை தாண்டி ஒரு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்.

இன்று… மிங்ஹூ ஆ தீவு, வியட்நாம் அருகே… ஒருத்தன் இறந்து கிடக்கிறான். அவனைக் கடந்து அந்தப் பகுதியின் உள்ளே நுழைகிறார் ஆராய்ச்சியாளர் (பிரதாப் போத்தன்). அந்த இரவு நேரத்தில் அவரை பெரிய நிழல் துரத்துகிறது.

அடுத்த சில நாட்களில் ” பிரபல தொல்பொருள் ஆய்வாளர் காணவில்லை… இறந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது… ” என்று செய்தித்தாளில் நியூஸ் வருகிறது.

பிரதாப் போத்தனுடைய மகளான… தொல்பொருள் ஆராய்ச்சியாளரான… ஆண்ட்ரியா அப்பாவை எண்ணி தனிமையில் வருந்துகிறார் . அப்போது அவளைத் தேடி ரீமாசென் ( அனிதா – ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் ) படை வருகிறது.

“உங்கப்பா கடைசியாக வியட்நாம் பகுதிலருந்து தான் பேசுனார். ஒருவேளை உங்கப்பா அந்த சோழர்கள் வாழ்ந்த இடத்த கண்டுபிடிச்சிருந்தா அது பெரிய சாதனையா இருந்திருக்கும்…  அங்க போய் உங்கப்பாவ தொலவி பார்க்க அமைச்சர் வீர “பாண்டியன்” உத்தரவின் பேர்ல என் தலைமைல ஒரு குழு போவுது, நீங்க தொல்பொருள் ஆராய்ச்சியாளருங்கறதால விருப்பம் இருந்தா நீங்களும் எங்க கூட வரலாம்… ” என்கிறார் அனிதா.

ஆண்ட்ரியா ரீமாசென்னோடு சேர்ந்து பயணப்பட விரும்புகிறார். இந்தப் பயணத்தில் யார் இறந்தாலும் அரசு பொறுப்பேற்காது என்று எழுதி வாங்குகிறார்கள். அதே சமயம் ராணுவப் படை ஒன்று அவர்களோடு வருகிறது. ராணுவப் படைகளுக்கு எடுபிடி வேலை செய்ய குப்பத்து மக்கள் வருகிறார்கள். அவர்களின் தலைவனாக கார்த்தி இருக்கிறார். பல இரவுகள் பல பகல்கள் கடந்து கப்பல் பயணிக்கிறது. மிங்ஹூ ஆ தீவு, வியட்நாம் பகுதிக்கு சில வாரங்களில் கப்பல் வந்து நிற்கிறது.

அங்கிருந்து குறிப்பிட்ட பகுதிக்குச் செல்ல போட் கிடைக்கவில்லை. காரணம் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் பேய் இருப்பதாக நம்பிக்கை பரவிக்கிடக்கிறது. அப்படி இருந்தும் அதிக செலவு செய்து போட் மூலமாக பயணிக்கிறது ரீமாசென் குழு. குறிப்பிட்ட எல்லை வரைக்கும் போட் ஓட்டி வந்த வியட்நாம் ஆட்கள் அதற்குமேல் எவ்வளவு காசு கொடுத்தாலும் வரமாட்டோம் என்று தாவிக் குதித்து நீந்திச் செல்கிறார்கள். அதையடுத்து கார்த்தி குழு போட்டை இயக்குகிறது.

முதல் தடை ( கடல் பேய்கள் )

மண்ணு தட்டி போட்கள் நிற்க, இரவு நேரத்தில் நீருக்குள் இருந்து பல ஆவிகள் எழுந்து மனிதர்களை விழுங்குகிறது. ஆட்கள் தலைதெறித்து ஓடிவருகிறார்கள்.

அதை தொடர்ந்து சோழ இளவரசன் கடந்துபோன பாதையின் துவக்கத்தில் ரீமாசென் குழு நடந்து செல்கிறது. அங்கே குறிப்பிட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களை கடந்தால் தான் உள்ளே நுழைய முடியும்.

2ம் தடை ( மனிதக் கறி உண்ணும் காட்டுவாசிகள் )

அவர்களோ மனிதக் கறி சாப்பிடும் பண்புடையவர்கள். அவர்களை நேருக்கு நேர் பார்த்தால் வெட்டி அவித்து தின்கும் பழக்கமுடையவர்கள். அந்தக் கூட்டத்தின் தலைவனிடம் ஆண்ட்ரியா தனது அப்பாவின் போட்டோவைக் காட்டி அவர் இப்ப எங்கே இருக்கிறார் எனக் கேட்கிறார். உடனே கூட்டத்தின் தலைவன் அவர்களை அங்க இருந்து போகச் சொல்லி துரத்துகிறான்.

அவர்கள் நடந்து வந்து குறிப்பிட்ட இடத்தில் முகாமிட்டிருக்க… விடியற்காலை சூரியனின் பின்புறத்தில் இருந்து ஏகப்பட்ட வில் அம்புகள் பறந்து வந்து முகாம்களில் உள்ளவர்களை தாக்குகிறது.

3ம் தடை ( காவல் வீரர்கள் )

சிவப்பு நிறம் பூசிய மனிதர்கள் பெரிய பெரிய ஆயுதங்களோடு வர… அவர்களை ராணுவப்படை சுட்டுத் தள்ளுகிறது. கார்த்தியின் உறவுகள் பலர் மடிந்துபோக கார்த்தி கிளம்புகிறோம் என்று சொல்ல ரீமாசென் அவர்களை ப்ளாக்மெயில் செய்து இருக்க வைக்கிறார். ராணுவ அதிகாரி, இங்க இந்த மாதிரி பிரச்சினை இருக்குன்னு முன்னாடியே சொல்ல மாட்டியா… என்று ஆண்ட்ரியாவை அதட்டுகிறார்.

ராணுவ தளபதிக்கும் கார்த்திக்கும்… ரீமாசென்னுக்கும் கார்த்திக்கும்… முட்டல் மோதலாகவே இருக்கிறது. ஆண்ட்ரியா மீது மட்டும் கார்த்தி தனிப்பாசம் காட்டுகிறார்.

4ம் தடை ( சர்ப்பம் )

பல தூரம் பயணித்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் முகாமிடுகிறார்கள். ராணுவ தளபதியிடம் ஆண்ட்ரியா இங்க பாம்பு இருக்கு என்று சொல்ல இராணுவ வீரர்களோ இங்க ஒரு பாம்பு இல்ல நிறைய பாம்பு இருக்கு என்று கேலி செய்து விரட்டுகிறார்கள்.

” சோழர்கள் தங்களோட பாதையை யாரும் பின்பற்றி வரக்கூடாதுன்னு கடல், காட்டுவாசிகள், காவல் வீரர்கள், சர்ப்பம், புதைக்குழி, பசி, கிராமம்னு மொத்தம் ஏழு தடைகள் செஞ்சு வச்சிருக்காங்கன்னு சோழ இளவரசன தேடிவந்த பாண்டிய தளபதி ஓலைச்சுவடி எழுதி வச்சிருக்கார்… நாம இப்ப 4 வது தடைல இருக்கோம்… ” என்று ஆண்ட்ரியா கார்த்தியிடம் சொல்ல அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தில் பாம்பு குவிந்து ஆட்களை கொல்லத் துவங்குகிறது. அங்கிருந்து கொஞ்சமே  தப்புகிறார்கள் மனிதர்கள். ஆற்றைக் கடந்து ரீமாசென், ஆண்ட்ரியா, கார்த்தி மூவரும் முன்னே செல்ல படைகள் பின்னாடி வருகிறது.

5ம் தடை ( புதைக்குழி )

மூவரும் கடும் மழையில் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கிருந்து நடந்து வந்து புதைக்குழியை சந்திக்கிறார்கள். புதைக்குழிக்குள் விழுந்த ரீமாசென்னை அதோடு விட்டிருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது. கற்களை உருட்டி புதைக்குழியை சோதித்தவர்கள் நடராஜர் நிழல் வந்ததும் அதில் ஓடி அந்த இடத்தை கடக்கிறார்கள்.

6ம் தடை ( பசி )

புதைக்குழியில் இருந்து மீண்ட மூவரும் பிரதாப் போத்தனின் ஹேண்ட் பேக்கை, ஹேண்டிகேமை பார்க்கிறார்கள். பசியால் வாடுகிறார்கள்.

7ம் தடை ( கிராமம் )

மக்கள் வாழ்ந்து முடிந்த வசிப்பிடத்துக்கு வருகிறார்கள். தங்கப் பொருட்களை கண்டு அதிசயிக்கிறார்கள். ஒட்டகத்தை அடித்து தின்கிறார்கள். சில நிமிடங்களில் அந்த இடத்தில் பேரிரைச்சல் கேட்கிறது. மூவர் காது, வாயிலிருந்தும் ரத்தம் ஒழுக்க, மூவருக்கும் வெறி பிடிக்கிறது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொள்கிறார்கள். பைத்தியம் பிடித்தது போல ஓடிவருகிறார்கள். மந்திரவாதி முன்பு தன் ஆடைகளை மூவரும் அவிழ்த்து காண்பிக்கிறார்கள். கார்த்தியின் முதுகில் மட்டும் புலிச்சின்னம் இருக்க அவரை தூது என்று நினைத்துக்கொள்கிறார் மந்திரவாதி.

கடைசி மன்னனோ தன் மக்களை பஞ்சத்திலிருந்து மீட்க முடியாத ஆத்திரத்தில், மாரி பொழியவில்லை என்ற ஏக்கத்தில் எப்போதும் கடுகடுவென்றே இருக்கிறார்.

அப்படிப்பட்ட கடைசி மன்னன் இருக்கும் இடத்திற்கு மூவரையும் அழைத்துச் செல்கிறார் மந்திரவாதி . கார்த்தியை தூதுவனா என்று பரிசோதித்து அவன் தூதுவன் இல்லை என்றதும் மூவரையும் மந்திரவாதி தீயிட்டு எரிக்க முற்பட அனிதா மந்திரம் செய்து தனது முதுகில் புலிச்சின்னம் வர வைக்கிறார். அதைப் பார்த்ததும் எல்லோரும் அவரை சோழ வம்சத்தை சேர்ந்தவள் என்றே நம்புகிறார்கள். வணங்குகிறார்கள்.

”  சோழ தேசத்திலிருந்து வந்த நான்… நன்னை நம்பிராட்டியார் என்று விழிப்பார்கள்… நான் தென்னேருடைய சிவன் தஞ்சைக் காவலர் எம்மனூர் அரசர் உடையார் ஸ்ரீ ராஜேந்திர சேனரின் புதல்வி… நோன்பு நோற்று வந்துள்ள நான் மன்னரைக் கூடி புரவு தேதி புகழ வேண்டும் என்பது எம் தல்லை நொய்த்தவர் ” என்று அனிதா சொல்ல அவளை ராணி போல மக்கள் கொண்டாடுகிறார்கள். கன்னியா என்று அவருடைய சிறுநீரை வைத்து வயிற்றை தடவி பரிசோதிக்கிறார்கள். குளிப்பாட்டுகிறார்கள்.

” இந்த நாளுக்காக எத்தனை வருசம் காத்துட்டு இருந்தோம்… எத்தனை தலமுறையா இந்தப் போராட்டம்… என் பேரு அனிதா பாண்டியன்… நான் பாண்டிய அரச குடும்பத்துல பிறந்தவ… பரம்பர பரம்பரையா எங்க கனவு ஒன்னே ஒன்னுதான்… காணாம போன அந்த சோழ இளவரசன் வாழ்ந்த இடத்த கண்டுபிடிக்கனும்… எங்க குலதெய்வ சிலைய மீட்கனும்… தாய்ப்பாலோட சேத்து எங்க ரத்தத்துல கலந்துபோன வெறி அது. யூனியன் மினிஸ்டர் வீரபாண்டியன், எக்ஸ் மேஜர் ரவிசேகரன் இப்படி அரச குடும்பத்துல பிறந்த எட்டு பேர் மிச்சம் இருக்கோம்… எங்க பெற்றோர்கள் எங்கள பாண்டியர்களா தான் வளத்துருக்காங்க… பல கலைகள் கத்துக் கொடுத்துருக்காங்க… மக்களோட மக்களா நாங்க கலந்துட்டாலும் இன்னும் எங்க வெறி அடங்குல… எங்க தெய்வத்தோட சிலைய கடத்திட்டுப் போன சோழர்கள் இன்னும் இருப்பாங்கன்னு நான் எதிர்பாக்கல… நல்லது எங்க பாண்டிய வம்சத்தோட சபதம் என்னால நிறைவேறனும்… எங்க வம்சத்த காலங்காலமா அடக்கி வச்சிருந்த சோழ நாய்கள கூண்டோட அழிக்கனும்…இப்ப என் கைல இருக்குற ஆயுதம் ஒன்னே ஒன்னு தான்… என் உடம்பு… இத வச்சு எப்படி தாக்கனும்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்துருக்காங்க…  நீங்க எங்களுக்குப் பண்ண கொடுமையெல்லாம் எங்களுக்கு சொல்லப் பட்டிருக்கு… ” என்று தனது மனதுக்குள் பேசிக்கொள்கிறார் அனிதா பாண்டியன்.

“சேதி என்ன… ஓலைச்சுவடி எங்கே…” என்று மன்னன் கேட்க… “நீ என்னுடன் கூடு… குருதியுடன் குருதி கலக்கட்டும் புறவு சொல்கிறேன் நான் கொணர்ந்த சேதியை… அரசிகள் உன்னுடன் தான் கூடுகிறார்களா அல்லது மற்றாடவர்களுடனா… ” என்று அனிதா பாண்டியன் கூற இருவருக்கும் கத்திச் சண்டை வருகிறது. முத்தம் கொடுத்து மன்னனை மடக்க முற்பட, நிழல் தீண்டல் மூலம் அனிதாவின் காமவெறியை அடக்கி சேதியை கேட்கிறார் மன்னன்.

இன்னும் மூன்று நாட்களில் சோழ தேசம் ( தஞ்சை ) போகப் போகிறோம் என்பது தான் செய்தி என்கிறாள் அனிதா. மெய்யாகவே சோழத் தூது நீவிர் தானா…  தூதன் வருவன், வதைக்கப் படுவன், மதலை விழிநீர் துடைப்பன், மாரி பெய்யும் உரைத்தது ஏதுமே வாய்க்கவில்லையே என்று மன்னன் கேட்க நம்புங்கோள் என்கிறாள் அனிதா.

அதை உண்மையென நம்பி மக்களை தயார் படுத்துகிறார் மன்னன். இதற்கிடையில் அனிதா மேஜர் ரவிக்கு கடைசி சோழ மன்னன் பற்றி குறிப்புகளை தூதுப் பெண் மூலம் அனுப்புகிறாள். செய்தி அறிந்த மேஜர் ரவி சேட்லைட் போன் மூலம் தகவல் சொல்லி ஏகப்பட்ட இராணுவ வீரர்களை ஆயுதங்களை வரவழைக்கிறார்.

கார்த்தியை பலி மைதானத்துக்குள் தள்ளிய மன்னன்… வேடிக்கைப் பார்க்க கார்த்தியோ பாறை வீசும் தடியனை வீழ்த்துகிறார். உடனே கார்த்திக்கு மன்னன் பரிசு கொடுக்க… மக்கள் கார்த்தியை கொண்டாடுகிறார்கள். ஆண்ட்ரியா தன்னுடைய அப்பாவை மீட்கிறார்.

அனிதா தனது பாண்டிய சிலையை கண்டதும் கட்டிப்பிடித்து அழுகிறாள். குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கிறாள்.  அனிதா தான் தூது என்றால் முன்னோர்கள் சொன்னது போல மாரி பொழிந்திருக்க வேண்டுமே என்று மக்கள் கேட்க, அந்நேரத்தில் அனிதாவின் சூழ்ச்சி மன்னனுக்கு தெரிய வருகிறது. அந்தக் கோபத்தில் கார்த்தியை எல்லோரும் அடிக்க அதை ஓவியமாக இருந்ததை நினைவுபடுத்துகிறார் மன்னர். கழுத்து அருகே கத்தி வைத்து சாகத்துணிந்த சிறுவனை ( பார்த்திபனின் மகன் ) தூக்கிக் கொள்கிறார் கார்த்தி. அதுவும் ஓவியமாக இருந்தது மன்னனுக்கு நியாபகம் வருகிறது. மந்திரவாதி எழுந்து கார்த்தியிடம் வருகிறார் அச்சமயம் மாரி பொழிகிறது. மந்திரவாதி தனது சக்தியை கார்த்திக்கு வழங்கிவிட்டு உயிர் துறக்கிறார்.

அடுத்த நாள் எல்லோரும் பாண்டிய படையுடன் தாக்குதலுக்கு தயாராக இருக்கின்றனர். இராணுவ படை மீது அம்பு விடுகிறார்கள். பாறைக்கற்கள் வீசுகிறார்கள். இடையில் வீரர்களின் தாகத்திற்கு தண்ணீர் தரப்படுகிறது.

விஷம் கலந்த தண்ணீரைப் பருகியதும் சோழ வீரர்கள் யுத்த களத்தில் மயங்கி வீழ்கிறார்கள். இதை எதிர்பாராத மன்னன் கலங்குகிறான். பாண்டியர்கள் துப்பாக்கி தாக்குதலை நடத்தி பிறகு வெடிகுண்டு தாக்குதலை நடத்துகிறார்கள். கடைசியில் யுத்த களத்தில் கார்த்தி, பார்த்திபன் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். பாண்டியர்களின் ராணுவ படை சோழ மன்னனின் ராஜ்யத்துக்குட்பட்ட பகுதியில் நுழைகிறது. பாண்டிய நாட்டு குலதெய்வ சிலையை கைப்பற்றுகிறது. சோழ தேசத்து மக்களை சிறை பிடிக்கிறது. இராணுவ படையினர் மக்களை சங்கிலியால் கட்டி துன்புறுத்த தொடங்க, இன்னும் சிலர் சோழர் குல பெண்களை நாசம் செய்கிறார்கள்.

ஆண்ட்ரியா சங்கிலியின் சாவி எடுத்துக் கொடுக்க… சோழ மன்னன் சங்கிலியை அவிழ்த்து… எழுந்து சென்று நதியருகே செல்கிறான். அப்படியே சாய்கிறான். அந்த நேரத்தில் சோழ இளவரசன் எங்கோ ஓட அவரை பின்துரத்துகிறார் கார்த்தி. நதியை கடந்து ஓடுகிறார் கார்த்தி. அவரை ராணுவத்தினர் சிலர் தேடிச் செல்கிறார்கள்.

சோழ மன்னனின் சடலத்தை தூக்கி குழியில் வீசுகிறார்கள் ராணுவத்தினர். சங்கிலியில் இணைக்கப்பட்ட மக்கள் மன்னனின் சடலத்தை எடுத்துக் கொண்டு நீருக்குள் மூழ்கிச் சாக, சோழ இளவரசனை தூக்கிக்கொண்டு தப்புகிறார் கார்த்தி.

சோழன் பயணம் தொடரும்…

Related Articles

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து... தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ...
இனி நீங்கள் போனில் உரையாட வேண்டியதில்லை.... வார இறுதியில் முடி திருத்த விரும்புகிறீர்கள், உங்களுக்கு விருப்பமான முடிதிருத்தகத்துக்கு திறன்பேசியில் அழைத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். இது த...
அற்புதம்மாள் வாழ்க்கையை படமாக எடுக்கிறார... பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என்று தொடர்ந்து வெற்றிப் படங்களையும் விருது படங்களையும் தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். அவ...
செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி ... கடந்த டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வர...

Be the first to comment on "இதாங்க ஆயிரத்தில் ஒருவன் படத்தோட கதை!"

Leave a comment

Your email address will not be published.


*