பிரபஞ்சன் பார்வையில் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும்!

Educational institutions and teachers in the view of Writer Prapanchan

எழுத்தாளர் பிரபஞ்சன் புதிய தலைமுறையில் எழுதிய தொடர் மயிலிறகு குட்டி போட்டது என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி அவற்றில் உள்ள வரிகள்…

1.பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பகைவர்களாகவே இருக்க என்ன காரணம்?

படிக்கும் குழந்தைகளுக்குப் படிப்பை ஒரு முழு நேரக் கட்டாயத் தொழிலாக அவர்கள் மாற்றியமைத்துவிட்டார்கள். உறங்கி விழித்தவுடனே ஒரு மாணவர்க்குப் பள்ளிக்கூடம் தொடங்கிவிடுகிறது. பகல் முழுவதும் தொடரும் அது மாலையிலும் வீட்டுப்பாட உருவில் அல்லது டியூசன் உருவத்தில் தொடர்கிறது. கனவிலும் பள்ளிக்கூட வகுப்பறையில் துர்ச்சொப்பனம் நீள்கிறது. மாணவர்கள் என்கிற இளம் மனிதர்கள் மேல் வகுப்பறை செலுத்தும் வன்முறை இது.

ஆசிரியர்கள் பலரையும் கொடுங்கோலர்களாக நினைக்காத மாணவர்கள் இல்லை. இதன் பழியை முழுதும் ஆசிரியர்கள் மேல் சுமத்த முடியாது. ஒரு வகுப்பறையில் அறுபதும் எண்பதுமான மாணவர்கள். முடித்துத் தீர வேண்டிய ஏராளமான பாடத்திட்டங்கள். ஓய்வற்ற பணி. மாலைகளிலும் நோட்டு திருத்தும் பணி. போதுமான ஆசிரியர்கள் இல்லாமை. இது ஒரு பக்கம். நம் வகுப்பறைகள் பிரிட்டிஷ் காலத்து அரதப் பழசான வகுப்பறைகள். உயரமான மேடையில் ஆசிரியர். கீழே பள்ளத்தில் மாணவர்கள். இதன் அர்த்தம் அரசியல் அல்லவா? ஆசிரியர் ‘ஒன்றும்’ தெரியாத மாணவர்களை கற்றுக் கொடுத்து கடைத்தேற்றவே அவதாரம் செய்துள்ளார் என்கிற பழைய பஞ்சாங்கமே கருத்தாட்சி செய்கிறது நம் வகுப்பறையில். ஒரு மூத்த அனுபவமிக்க தோழனே ஆசிரியன் என்கிற கருத்து உலகின் பல நாடுகளிலும் நிலைபெற்று விட்டது. இந்த நவீன ஆசிரியன் கற்றுத் தருவதில்லை மாறாக விளக்கம் தருகிறான். பிரான்ஸ் தேசத்தில் ஒரு மாணவன் மாணவி பின் தங்குவதாக தெரிந்தால் பெற்றோர் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். ஆசிரியர்கள் பெற்றோர்களூக்கப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். நம் தேசத்தில் மாணவர்களின் தவறுகளுக்குப் பெற்றோர் முட்டிபோட வேண்டி இருக்கிறது. தவறுபவர்களை தவறுபவர்களாகச் சுட்டித் திருத்துபவர்களே ஆசிரியர்கள்.

2.உங்கள் குழந்தைகளைப் படித்த ஆசிரியர்களிடம் அனுப்பாதீர்கள். கற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் அனுப்புங்கள் என்றார் ஒரு ஞானி.

3.தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம் இல்லை இந்தி கட்டாயம் என்றால் என்ன அர்த்தம்?

ஒரு மனிதன் அவன் விரும்பும் உலகின் எந்த மொழியையும் பயிலும் உரிமையை அவனுக்கு அளிப்பதுதான் ஜனநாயகக் கல்வியின் அடிப்படை. இந்தி வந்தால் அது தமிழின் இடத்தை எடுத்துக்கொள்ளும் என்று சொன்னவர்கள் தாங்களே தமிழின் இடத்தில் ஆங்கிலத்தை வைத்தார்கள்.

ஆங்கிலம் தமிழர்க்கு மிக மிக அவசியம் என்பதற்கு இரண்டாவது கருத்தில்லை. தமிழர்களின் முன்னேற்றத்துக்கு இசைவாக இருக்க வேண்டியது ஆங்கிலம் என்பதற்கும் நாடு முழுக்கப் பெட்டிக்கடைகளைப் போல ஆங்கிலப் பள்ளிகள் தோன்றியமைக்கும் வித்தியாசம் உண்டு என்பதை அரசுகள் இன்னும் உணரவில்லை. இன்னும் நாம் 1960களில் இல்லை. இந்தி பேசாதவர் விரும்பாதவரை இந்தி ஆட்சி மொழி ஆகாது என்று சொன்ன நேரு இல்லை. இந்திக்குப் பிடிவாதம் பிடித்த லோகியாவும் இல்லை. இந்தியைக் கோரைப்பல் கொண்ட அரக்கியாக சித்தரித்த தலைவர்கள் வடவர் ஆதிக்கத்தில் தம்மையும் ஓர் அங்கமாக்கிக் கொண்டார்கள். நிலையான ஆட்சி தர இந்திராவை அழைத்தார்கள். தில்லி ஏகாதிபத்தியம் தோழமை ஆக்கியது.

தமிழ்க் குழந்தைகள் நிர்ப்பந்தங்கள் அற்று விருப்பத்தோடு இந்தி பயில்வது அவசியம் என்று நான் இப்போது உணர்கிறேன். அவர்கள் உருதுவைக் கற்கலாம். சமஸ்கிருதத்தையும் பிரஞ்சு மற்றும் ஜெர்மன் ஸ்பானிஸ் போன்ற மொழிகளையும் கற்க வேண்டும்.

4.படிப்பு மட்டுமல்ல, மனிதனாக வாழ்வதற்கு வேறு பண்புகள் வேணும். அந்தப் பண்புகளுக்கு அழகு சேர்ப்பதே படிப்பு.

 

Related Articles

ஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வீடு தேடிவந்... ஒரு துக்கவீட்டிற்கு எப்படி வரவேண்டும் என்பதை விஜயிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சமூகவலை தளங்களில் கருத்துக்கள் மீம்ஸ்கள் குவிந்து வருக...
மூடப்பட்டு வரும் சினிமா தியேட்டர்கள்? தி... துருப்பிடித்துப் போன இரும்புக் கேட்டுகள், வெள்ளை படிந்து போன ஜன்னல் கண்ணாடிகள்,  புழுதிகளும் பறவை எச்சங்களும் நிறைந்த, சாயம் இழந்துபோன தியேட்டர் சுற்ற...
சிரியா போரில் இறந்துபோன பிஞ்சு உயிர்களுக... இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பரியேறும் பெருமாள். அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் "...
சர்கார் படத்தில் மதுக்கடைகளை அடித்து நொற... கஜா புயலுக்கு முன்பு வரை சமூக வலைதளங்கள் அதிகம் பேசிக்கொண்டு இருந்த விஷியம் சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த இலவச மிக்சி, கிரைண்டர், டிவி போன்றவற்றை ...

Be the first to comment on "பிரபஞ்சன் பார்வையில் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும்!"

Leave a comment

Your email address will not be published.


*