போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று பஸ்ஸை காணோம் என்று புகார் தருகிறார் நாயகன். பிளாஸ்பேக் விரிகிறது. லட்சுமி சோடா பேக்டரி நடத்தி வரும் முதலாளி நாயகனின் கதை சொல்லப்படுகிறது. அதே சமயம் நாயகனுக்கு எப்படி கை போயிருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இட்லிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நாயகியின் அம்மா இறந்துவிட சொந்தபந்தம் இல்லாத அழகான நாயகி தனிமையாக்கப் படுகிறாள். காமவெறி பிடித்த ஆண்களால் நாயகிக்கு இம்சை ஏற்பட அவளுக்கு ஆதரவு தருகிறான் நாயகன். இருவருக்கும் காதல் மலர்கிறது.
திடீரென ஒருநாள் நாயகன் மீது கவுர்மென்ட் பஸ் இடிக்க நாயகனின் கைகள் பறிபோகின்றன. இதற்குப் பிறகு நாயகனும் நாயகியும் எப்படி இணைந்து வாழ்ந்தார்கள், அவர்களுக்கு என்ன பிரச்சினை வந்தது, அதை எப்படி இருவரும் எதிர்கொள்கிறார்கள்… நாயகனுக்கு அரசிடமிருந்து நஷ்ட ஈடு கிடைத்ததா அதற்காக “தோழர் வெங்கடேசன் ” எவ்வளவு தூரம் போராடினார், மீண்டும் அவர் முதலாளி ஆனாரா என்பதே படத்தின் கதை.
“இங்க யாரு மனச பாக்குறாங்க உடம்ப தான பாக்குறாங்க”, “நான் உன்ன என் அம்மா மாதிரி பாத்துக்குறேன்… “, ” கை எடுக்கலனா செத்திருப்பியா… இதுக்கு நான் செத்தே போயிருக்கலாம்… “, ” லேட்டா கொடுத்தாலும் கடவுள் எனக்கு எப்பவும் பெஸ்டா தான் கொடுக்கிறார் “, போன்ற வசனங்கள் கவனத்தை பெறுகின்றன.
தமிழக அரசு போக்குவரத்து துறையின் அலட்சிய நடவடிக்கைகள் மற்றும் ஊழலைப் பற்றி கோர்டில் இரண்டு வக்கீல்களும் பேசிக்கொள்வது அருமையான காட்சி. பல நாட்டு சட்டங்களை கலந்துகட்டி தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது என்று எதிர் தரப்பு வக்கீல் சொல்லும் காட்சி செம.
அறிமுக நடிகர் அரிசங்கருக்கு இது நல்ல அறிமுகம். நன்றாக நடித்துள்ளார், சிறந்த அறிமுக நடிகருக்கான விருதுகளைப் பெற வாய்ப்புள்ளது. நாயகி அழகாக இருக்கிறார், மேக்கப் அவ்வளவாக இல்லாதது கூடுதல் அழகு. ஆனால் நாயகன் அளவுக்கு நாயகி மெனக்கெட்டு நடிக்கவில்லை.
இசையமைப்பாளர் சகிஷ்னாவின் பின்னணி இசை சுமார். சில இடங்களில் இரைச்சலாக ஒலிக்கிறது. நம்ம முதலாளி நல்ல முதலாளி என்று அடிக்கடி ரிங்டோன் ஒலிக்கிறது, தேவையான இடங்களில் மட்டும் ஒலிக்க விட்ருக்கலாம். பாடல்கள் கேட்கும் ரகமே.
புதுமையான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை என்று படம் அட்டகாசமாக இருக்கிறது. ஆனால் போதிய விளம்பரம் இல்லை. மௌத் டாக் மூலமாகப் பிக்கப் ஆனால் தான் உண்டு.இந்தப் படம் பார்த்த தியேட்டரில் பத்துக்கும் குறைவான நபர்களே இருந்தனர். வழக்கம் போல ஒரு நல்ல படம் தோல்வியை சந்திக்க இருக்கிறது. ஊக்குவிக்கும் கடமை எல்லோருக்கும் உண்டு. தயாரிப்பாளர் சுசூந்திரனுக்கும் இயக்குனர் மகாசிவனுக்கும் பாராட்டுக்கள்.
Be the first to comment on "தோழர் வெங்கடேசனை மிஸ் பண்ணாதீங்க! – தோழர் வெங்கடேசன் விமர்சனம்!"