தமிழ் நாட்டின் முதல் பெண் டைரக்டர் டி. பி. ராஜலட்சுமி பற்றிய தகவல்கள்!

Information about Tamil Nadu's first female director T. P. Rajalakshmi
  1. ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் 1911 ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். சொந்த ஊர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு.
  2. தந்தை பஞ்சாபகேச அய்யர், கிராம கணக்குப்பிள்ளை. தாயார் பெயர் மீனாட்சி.
  3. இவருக்கு எட்டு வயதிலயே திருமணம் நடந்தது. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப் பட்டார். கணவனால் விரட்டப்பட்டு தாய் வீட்டில் வாழாவெட்டியாக வாழ்ந்து வந்தார்.
  4. எட்டு வயதிலயே வாழாவெட்டியாகத் திரும்பிய மகளை கண்டு பஞ்சாபகேச அய்யர் கதறினார். இதே சோகத்தில் படுக்கையில் விழுந்து சில நாட்களில் மரணம் அடைந்தார்.
  5. குடும்ப தலைவரை இழந்த குடும்பம் வறுமையால் வாடியது. மகளை அழைத்துக் கொண்டு பிழைப்புத் தேடி திருச்சிக்கு சென்றார். வீட்டு வேலைகள் செய்து சம்பாதித்த போதும் வறுமை அவர்களை வாட்டியது.
  6. ராஜலட்சுமிக்கு 11 வயது ஆனது. முன்பை விட மிக அழகாக தோன்றினார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கொடுத்த ஐடியா படி அப்போது பிரபலமாக இருந்த சி. எஸ் சாமண்ணா அய்யர் என்பவரின் நாடக கம்பெனியில் சேர்ந்தார். நாடகம் என்றாலே கேவலமாக கருதப்படும் காலம் அது. நாடகத்தில் நடித்தவர்கள் கூத்தாடிகள் என்று பேசப்பட்டனர். இதன் காரணமாக தாய் மீனாட்சி தன் மகளை நாடகத்தில் நடிக்க வைக்க தயங்கினார். ஆனால் குடும்ப நிலையை நன்றாக உணர்ந்திருந்த ராஜ லட்சுமி ” பரவாயில்லை அம்மா நாடகத்தில் நடிக்கிறேன். என்னை நல்ல நாடக கம்பெனியில் சேர்த்து விடு ” என்று தாயாரிடம் கூறினார் என்பது குறிப்பிட தக்கது.
  7. தமிழ் நாடக கலையின் தந்தை என்று போற்றப் படுபவரான சங்கரதாஸ் சுவாமிகளும் அப்போது அந்தக் கம்பெனியில் இருந்தார். ராஜ லட்சுமியின் அழகையும் பாடலையும் கண்ட சங்கரதாஸ் சுவாமிகள் இவளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு பாராட்டினார்.
  8. நாடக கம்பெனியில் ராஜலட்சுமி சேர்த்துக் கொள்ளப்பட்டார். மாத சம்பளம் 30 ரூபாய். பவளக் கொடி நாடகத்தில் அர்ச்சுனன் வேடத்தில் கதாநாயகனாக நடித்தார் ராஜலட்சுமி. தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டார்.
  9. கன்னையா என்பவர் நடத்தி வந்த நாடக கம்பெனியில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.ஜி. கிட்டப்பா நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக நடித்து மேலும் புகழடைந்தார் ராஜலட்சுமி. பிறகு தியாராஜ பாகவதருடன் நடித்து மேலும் புகழடைந்தார்.
  10. கோவலன், உஷா சுந்தரி, ராஜேஸ்வரி முதலிய ஊமை படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் வெற்றிகரமாக ஓடின. நாடகங்களிலும் ஊமைப்படங்களிலும் புகழ்பெற்று விளங்கியதால் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் படத்தில் நாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து கல்கத்தாவில் தயாரான வள்ளி திருமணம் படத்தில் நடித்தார். அதுவும் சூப்பர் ஹிட். பிறகு கல்கத்தாவிலயே தங்கி புகழ்பெற்ற நாடக நடிகரான வி. ஏ. செல்லப்பாவுடன் சாவித்ரி, திரவுபதி வஸ்திராபரணம், குலேபகாவலி ஆகிய படங்களில் நடித்தார். அத்தனையும் வெற்றி.
  11. வள்ளி திருமணத்தில் நாரதராக நடித்த, சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்ட காங்கிரஸ்காரரான டி. வி. சுந்தரம் என்பவரை மணந்தார்.
  12. தமிழ்நாட்டு நடிகைகளில் முதன்முதலாக சிகரம் தொட்டவர் டி. பி. ராஜலட்சுமி தான். ரசிகர்களும் பத்திரிக்கையாளர்களும் பாராட்டு விழா நடத்தி அவருக்கு சினிமா ராணி என பட்டம் கொடுத்தார்கள்.
  13. பிறகு ராஜம் தியேட்டர்ஸ் என்ற சொந்தப் படக் கம்பெனியை தொடங்கி மிஸ் கமலா என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்திற்கு கதை எழுதியதுடன் டைரக்சனையும் அவரே கவனித்தார். அதனால் தென்னிந்தியாவின் முதல் பெண் டைரக்டர் ஆனார் ராஜலட்சுமி. பிறகு மதுரை வீரன் என்ற படத்தை தயாரித்து வி.ஏ. செல்லப்பாவுடன் ஜோடியாக நடித்து நல்ல வெற்றி கண்டார். இதே காலத்தில் அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சிறந்த டைரக்டராக விளங்கிய எல்லீஸ் ஆர் டங்கனின் டைரக்சனில் உருவான சீமந்தினி என்ற படத்தில் நடித்தார். 1938 ல் நந்த குமார் என்ற படத்தை ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தயாரித்தார். இதில் டி. ஆர். மகாலிங்கம் பால கிருஷ்ணனாகவும் ராஜ லட்சுமி யசோதையாகவும் நடித்தனர்.
  14. மகாத்மா காந்தியின் மேல் காங்கிரஸ் கட்சியின் மேல் கொண்ட பற்றால் சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து இந்தியத் தாய் என்ற படத்தை உருவாக்கினார். ஆனால் சென்சார் கெடுபிடியினால் அவர் முயற்சி வெற்றி பெறாமல் நஷ்டத்தில் முடிந்தது. படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ராஜலட்சுமி ஜீவ ஜோதி, இதய கீதம் படங்களில் தாயாக நடித்தார். கடைசி வரை புகழோடும் வசதிகளோடும் வாழ்ந்து மறைந்தார் ராஜலட்சுமி. சுஹாசினி, சுதா கொங்கரா, லட்சுமி ராம கிருஷ்ணன், ஐஸ்வர்யா தனுஷ், புஷ்கர் காயத்ரி, கிருத்திகா உதய நிதி ஸ்டாலின் என்று பெண் டைரக்டர்கள் தமிழ் சினிமாவில் தடம் பதித்து வருகிறார்கள். இவர்கள் போன்ற வளர்ந்த வளரும் வளர போகிற அனைத்து பெண் டைரக்டர்களுக்கும் டி. பி. ராஜ லட்சுமி தான் முன்னோடி. நடிப்பு, டைரக்சன், தயாரிப்பு என்று அனைத்து துறைகளிலும் ஈடுபாடு கொண்டு அந்தக் கால கமலஹாசனாக திகழ்ந்திருக்கிறார் டி. பி. ராஜ லட்சுமி. இவரை மிஞ்ச இப்போதைக்கு தமிழ் சினிமாவில் ஆள் இல்லை.

 

Related Articles

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2018 ஐபிஎல் ...  வரிசை எண் போட்டி எண் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 1 07-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை...
இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கி... இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்...
கூர்கா படத்தின் கதை திருடப்பட்டதா? ̵... கூர்கா படம் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் 2 வது படம். ஹீரோவாக நடித்த முதல் படம் தர்ம பிரபு. ஜீவி யின் டார்லிங், ஜீவி யின் எனக்கு இன்னோரு பேரு இ...
நோட்டு கொடுக்கலனா நோட்டாவுக்குத் தான் ஓட... அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்... தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் துணை முதல்வர் பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு பணம்?...

1 Comment on "தமிழ் நாட்டின் முதல் பெண் டைரக்டர் டி. பி. ராஜலட்சுமி பற்றிய தகவல்கள்!"

  1. டி .பிராஜலெட்சுமி போன்ற தைரியமான பெண்களிடமிருந்து நாம் கற்று கொள்ள வேண்டயது ஒன்றுமில்லையென்றாலும் வாழ்ந்து ஜெயிக்க முடியும் என்று.

Leave a comment

Your email address will not be published.


*