ரணசிங்கம் என்ற நாயகன் வழியாக ரத்தம் சொட்ட சொட்ட ஒரு சரித்திர நாவலை நம்முள் பதிய வைக்கிறார் எழுத்தாளர் வேல ராம மூர்த்தி. அந்தப் புத்தகத்தில் உள்ள உவமைகள், வீர வசனங்கள், வாழ்வியல் பற்றிய கருத்துக்கள் போன்றவற்றை இங்கு பார்ப்போம்.
முற்றிப் பழுத்தால் தான் பக்தி மேலிடுகிறது.
வலம்புரிச் சங்கு வடிவில் கடல் சூழப் படுத்திருக்கும் தென்கோடித்தீவு தனுஷ்கோடி. கிழக்கே பெண் அலைகளும் மேலைக் கடல் நெடுக ஆண் அலைகளும் நீர்த்தூவி சிலிர்ப்பூட்டின. பெண் அலைகள் சாந்தமானவை. கண்மாய் அலைபோல் சளப் சளப் என இதமாகப் புரண்டு வந்து பாதம் நனைக்கும்.
தீராத ஆங்காரத்தோடு குமுறும் ஆண் அலைகள், பௌர்ணமி, அமாவாசை இரவுகளில் பனை உயரம் சீறி கரையேறி வந்து மிரட்டிப்போகும். உயிர்களைக் காவு கொள்ளாது. காலமெல்லாம் பொறுமை காக்கும் பெண் அலைகள், நூறாண்டுகளுக்கு ஒருமுறை பிரளயமாகப் பொங்கிப் பிரவகித்து, தனுஷ்கோடியை வாரிச் சுருட்டி வாயில் போடும். ஆறுமுறை தனுஷ்கோடியை விழுங்கி தண்ணீர் நிரப்பியது பெண் அலை தான்.
புயல் அபாயச் சின்னக்கொடி ஏற்றிய பின்னும் தீவைவிட்டு வெளியேறாத மீனவக் கன்னிமார் ஜலசமாதியாகிக் கீழை கடலுக்குள் அலைவதால் இது பெண் கடல் ஆனது. புண்ணியம் வேண்டி பெண் கடலில் இறங்கும் வாலிபர்களை, வா…வா… என சிரித்து மயக்கி இருகரம் கோத்துத் தழுவி, ஆழ்க்கடலுக்குள் இழுத்துப் போய்விடுவார்கள். அடுக்கடுக்காக ஆறு தனுஷ்கோடிகள் கடலுக்குள் புதைந்திருக்கின்றன. இப்போது உள்ளது ஏழாவது தனுஷ்கோடி. அழிய அழிய மீண்டு உருவானதே ஏழாவது துறைமுகம். கீழைநாட்டுச் சீமான்கள் கப்பலில் வந்துபோகும் முகத்துவாரம்.
தனுஷ்கோடியை சின்ன ரங்கூன் என்பார்கள். தெருவெல்லாம் செல்வம் சிந்திக் கிடந்தது. கொப்பரைத் திருவோடு ஏந்திய சந்நியாசிகள் யாரும் வாய்திறந்து ஐயா தர்மம் போடுங்க சாமி என்று கேட்பதில்லை. தானே விழும்!
வரம் வேண்டி வரும் தம்பதிகள், வேட்டி சேலையின் நுனிமுடிந்து ஒருசேர ஆழி ஸ்நானம் செய்யும் முன் கைநிறைய காசுகளைக் கடலுக்குள் வீசுவார்கள். விளையாட்டுச் சிறுவர்கள், அலைமோதும் குட்டிப்பாறைகளில் காத்திருந்து பாய்ந்து அள்ளிவரும் காசுகளே ஒவ்வொருவருக்கும் ஒரு பெட்டி தேறும்.
ஹே ராம்… ஸ்ரீ ராம்… ஹே ராம்… ஸ்ரீ ராம்… திரிந்த சடைமுடியுடன் காவி உடுத்திய சந்நியாசிகள் பெருவாரியாகக் கலந்திருந்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு வளர்த்திருந்த முடியும் சடை சடையாகத் தொங்கின. தெருக்களில் உரசித் திரியும் சகல தேசத்தவரும் அவரவர் மொழியில் பேசியது, வெள்ளை போலீஸைக் குழப்பியது.
அலை புரட்டிய மரக்கலங்கள் கரையோரம் நொறுங்கிக் கிடந்தன. பட்டு மணல் பரப்பெங்கும், மனித நடமாட்டம் இருந்ததற்கான தடயமே இல்லை. நரமாமிசம் தின்று பழகிப்போன ஆளுயர நாய்கள் உயிரோடு கரை ஒதுங்கும் இரைக்காக மணல் பொந்துகளில் பதுங்கியிருந்தன. மனிதக் கறி தவிர வேறு கறி தின்ன ஒப்பாத நாக்குகள், அடங்காத பசியோடு எச்சில் ஒழுக தரை தொட்டுத் தொங்கின. மனித வாடை நெருக்கி அடித்ததும் தொங்கிய நாக்குகளை உள்ளிழுத்து வாய்மூடி இன்னும் பதுங்கின. இளம்பச்சை ரேகை ஓடிய பளிங்குக் கண்கள் பிரகாசமடைந்தன. வெகுநாள் பட்டினி.
காட்டுக்குள் நுழையும்போது கூட்டமாக சேர்ந்து நுழைந்த போலீஸ்காரர்கள் உள்ளே செல்ல செல்ல பரவலாகப் பிரிந்து அலசி வந்தார்கள். ஒரு நாய்க்கு ஓர் ஆள் என்றாலும் மிச்சமான எண்ணிக்கையில் இருந்தார்கள். குறிபார்த்த நாய்கள் பாய்ந்து குரல்வளையைக் கவ்வி, மூச்சு காட்டவிடாமல் அதனதன் பதுங்குக் குழிக்குள் இழுத்துப் போய் ரத்தம் குடித்தன. எந்த நாயும் குரைக்கவில்லை. எல்லா நாய்களுக்கும் இரை கிடைத்துப் போனது. தப்பிய போலீஸ்காரர்கள் ஏதுமறியாமல் முன்னே போய்க்கொண்டிருந்தார்கள். காட்டைவிட்டு வெளியேறினால் தான் எண்ணிக்கை தெரியும்.
சர்க்கார் காரியங்களில் சாதி உறவுகளுக்கு இடமில்லை.
மாயழகி பதினாறு வயதில் புஷ்பவதி ஆனாள். நல்ல சாதிப் பாம்புக்குட்டியின் உடல் வாளிப்பு. நுங்கு நிறம். மயில் கண்ணு, முனை மழுங்கிய வேல் கம்பு மூக்கு. பல்லாங்குழி உதடுகளுக்கு உள்ளிருந்து கவண் கல்லாகத் தெறிக்கிற பேச்சு. பட்டை உரித்த நாட்டுக் கருவேலமர வலுவில் காலும் கையும், குதிரைக் குளம்படி வேகத்துக்குப் புழுதி பறக்கும் குதிகால் மிதி. கோதிப் பிடித்தால் இரண்டு கைகளுக்குள் அடங்காமல் நெளிவுநெளிவாக புட்டம் மறைந்து கீழே தொங்கும் தலைமுடி.
மாயழகி ஒருத்தி இருந்தால் சகலமும் இருக்கிற சந்தோசம். குடி தண்ணீர்க்கிணறு காலமெல்லாம் தெப்… தெப்… என நிறை பெருக்காகக் கிடக்கிற சந்தோசம். காடுகரைகள், கோடையிலும் பச்சைப் பசப்பேறி கண்களை நிறைக்கிற சந்தோசம்.
ஆப்பநாட்டுக்குமரிகள் அடிவயிற்றில் சுருக் வலியெடுத்துக் கன்னித்தீட்டு கண்டநாள் முதல் வீடுகளுக்குள் அடைபட்டுப் போவார்கள்.
அந்தக் கரை இறக்கத்தில் குடிதண்ணீர் கிணறு. இளநீர் மாதிரி குடிக்கக் குடிக்கத் திகட்டாது. ஒரு ஆள்மட்டம்தான் தண்ணீர் கிடக்கும்.
கண்மாய் அருகே வாகை மரம். பேய்கள் எல்லாம் வாகை மரத்தில் தான் குடியிருக்கும். எல்லாம் பெண் பேய்கள். அரளிக்காயை அரைத்துக் குடித்தவள். வீட்டு உத்திரத்தில் சேலையைப் போட்டு நாண்டுக்கிட்டு நின்றவள். தீயிட்டுக்கொண்டு கருகிச் செத்தவள் – எல்லாம் பேயாக அலைவார்கள்.
விடியவிடிய விதைப்பு பற்றிய யோசனை. மேட்டுப்புஞ்சையின் சனி மூலையில் இருந்து உழுதுப் போனார்கள்.
சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் இடத்துக்கே சகல விவரங்களையும் வரவழைத்துவிடுவார்.
ரணசிங்கத்தை நீங்கள் ஆப்பநாட்டுக்குள் தேடுவது கடல் மணலில் விழுந்த குண்டூசியைத் தேடுவதற்குச் சமம்.
ஆப்பநாட்டுக்காரனை ஓர் அந்நியன் தாக்கினால் கருப்பட்டிவட்டு மீது ஈக்கள் மொய்ப்பது போல் கூட்டமாகச் சேர்ந்து வந்து கொலை செய்வார்கள்!
எல்லா ஊர்களிலும் வாள் வீச்சு, சிலம்பம், கை வளரி எறிதல், மல்யுத்தம் போன்றவற்றுக்கான பயிற்சிக் களரிகள் உண்டு. ஆறு வயதுச் சிறுவர்களாக இருக்கும்போதே பயிற்சிக் களரியில் சேர்த்துவிடுவார்கள். உடற்கூறு அறிந்த வஸ்தாவிகள் சிறுவர்களின் கால்மூட்டு கைமூட்டுகளில் நல்லெண்ணெய் போட்டு நீவி விடுவார்கள். எலும்பு மூட்டுகள் நெகிழ்ந்து விரும்பியவண்ணம் உடலை வளைக்கும் திறன் பெறுவார்கள். உடம்பில் எலும்பே இல்லாதவர்கள் போல் எப்படி வேண்டுமானாலும் உடலை இயக்கும் ஆற்றல் பெறுவார்கள். இந்த உடல்வாகு வாய்க்கப் பெற்றவனிடம் இருந்து எதிரி எப்படித் தப்பிக்க முடியும்.
மார்பு – தோண்டி எடுத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு போல விண் என்றிருந்தது.
மணமகன் வீட்டுப் பெண்கள் போய், மணமகளின் உடல்வாகு, பொருத்தம் அறிந்து வருவதுதான் மண உறவின் முதற்கட்டம். மணப்பெண் அகன்ற பாதங்களை உடையவளாகவோ கெண்டைக்கால் பருத்தவளாகவோ கழுத்தின் தோல், இரண்டு மடிப்புகளுக்கு மேல் உள்ளவளாகவோ இருக்கக் கூடாது. நெற்றிப்பொட்டின் மயிர்க்கற்றை குறுக்கு வாக்கில் வளர்ந்திருக்க வேண்டும். நெற்றியின்மேல் பாம்பின் தலையைப் போல் சுழி இருந்தால் தீங்கு வரும் அறிகுறி என்றெல்லாம் அவர்களுக்குள் சில நம்பிக்கைகள் வைத்திருந்தார்கள்.
மண் முடாக்களில் குதிபோட்டுக் கொதிக்கும் கிடாய்க்கறி குழம்பு பெருநாழி ஊரெல்லாம் மணத்தது. வாய் ஊறித்திரியும் சிறுவர்கள் கும்மாளமிட்டார்கள்.
தெருவெல்லாம் ஓடியவனின் அரைஞாண் கயிறைத் தொடுக்குப் பிடித்துக்கொண்டே மற்றவர்களும் ஓடினார்கள்.
கிடாய்களை கைக்கு ரெண்டு கால்களைப் பிடித்து படுக்கை வசமாகக் கிடாயை மலர்த்திப் போட்டார்கள். கத்தவிடாமல் கையால் வாயைப் பிடித்துக் கிடாயின் குரல்வளையில் சூரிக்கத்தியை வைத்து கர்ரக்க் என ஒரே அறுப்பு. பீச்சி அடிக்கிற ரத்தத்தை பூமி குடிக்கவிட்டார்கள். அறுக்க ரெண்டு பேர். தலைகீழாகத் தொங்கவிட்டுத் தோலை உரிக்க ரெண்டு பேர். பாளம் பாளமாகக் கறியை அரிந்து போடவும் எலும்பு வெட்டவும் நாலுபேர். விரித்த ஓலைப்பாய்களில் வந்துவிழும் கறியை அரிவாள்மனைகளால் அரிய ஏழெட்டுப் பெண்கள்.
நெல்லுச்சோறு வெந்து ஓலைப்பாயிலே மலைபோலக் கொட்டி வெள்ளைத் துணி போட்டு மூடிக்கிடக்குது. குதிரைக்களஞ்சியம் அரிசிச்சோறு. வெறுஞ்சோறையே உருட்டி உருட்டித் திங்கலாம் அவ்வளவு ருசி.
சோளத்தட்டை உடம்புதான் நெல்லுச்சோறு தேடும். உடம்பைக் கடம்பாக்கி உழைக்கிற சனத்துக்குக் கம்பஞ்சோறுதான். இறுகி வைரமாகும்.
இதெல்லாம் முக்கியமான வரிகளா என்று நினைக்கத் தோன்றும். வீரம் மிக்க நாயகனை பற்றிய இந்த நாவலை ஒரு முறையாவது படியுங்கள்! இந்த வரிகளின் அர்த்தம் புரியும்.
Be the first to comment on "வேல ராமமூர்த்தியின் பட்டத்து யானை நாவலிலிருந்து சில வரிகள்!"