தயாரிப்பு: சத்ய ஜோதி பிலிம்ஸ்
இயக்கம்: ஆர் எஸ் துரை செந்தில் குமார்
இசை: விவேக் மெர்வின்
நடிகர் நடிகைகள்: தனுஷ், சினேகா, நாசர், சதீஷ், முனீஷ் காந்த்…
எதிர் நீச்சல் எனும் மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த டைரக்டர் ஆர் எஸ் துரை செந்தில் குமார். அப்படிப்பட்ட துரைசெந்தில் குமாரும் தனுசும் இணையும் இரண்டாவது படம் இது. ப்ரோமோசன் பத்தாததால் பொங்கல் தினத்தில் கூட பெரிய பெரிய சிட்டிகளில் உள்ள நிறைய தியேட்டர்களில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. துரைசெந்தில் குமாரும் தனுஷும் இணைந்து இதற்கு முன் கொடுத்த கொடி படம் பெரிய வெற்றி தராததால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக குறைவாக இருக்கிறது என்பதே உண்மை. பாடல்களாவது ஓரளவுக்கு கவர்ந்தது. ஆனால் ட்ரெய்லர் பெரிய அளவில் கவரவில்லை. சரி படமாவது கவர்ந்ததா என்று பார்ப்போம்.
மகாநதி, ஹே ராம், விருமாண்டி போன்ற அழுத்தமான கதையம்சம் கொண்ட படத்தில் நடித்த பிறகு ஒரு காதலா காதலா, பஞ்ச தந்திரம், வசூல் ராஜா போன்ற காமெடி/கமர்சியல் படத்தில் நடிப்பது கமல் வழக்கம். தனுஷ் அந்த வழியைத் தான் பின்பற்றி வருகிறார்.
சரி படத்திற்கு வருவோம். தனுசின் கொடி படத்தில் திரிஷாவுக்கு அரசியல்வாதியாக கனமான கதாபாத்திரம், அதே போல இந்தப் படத்தில் சினேகாவுக்கு கனமான கதாபாத்திரம். தனக்கு கொடுத்த கன்னியாகுமரி என்ற கதாபாத்திரத்தை மிக நன்றாக செய்துள்ளார் சினேகா. சில இடங்களில் மட்டும் வேலைக்காரன் பட சினேகா, சிலம்பாட்டம் சினேகா நினைவுக்கு வந்து செல்கிறார். பட்டாஸ்க்கு ஜோடியாக சாதனா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அழகாக இருக்கிறார். ஓவர் வெள்ளையான இந்த நடிகை ஓரளவுக்கு நடிக்கவும் செய்துள்ளார்.
தான் இயக்கிய பவர் பாண்டி படத்தில் தீனாவை அறிமுகப்படுத்திய தனுஷ் இந்தப் படத்தில் கலக்கப்போவது யாரு சதீஷை ( பா. ரஞ்சித் வாய்ஸில் பேசும் ஒரே மிமிக்ரி ஆர்டிஸ்ட் ) அறிமுகப்படுத்தி இருக்கிறார். சதீஷ் மற்றும் முனிஸ்காந்த் வரும் இடங்கள் எல்லாம் ஓரளவுக்கு கலகலப்பாக செல்கிறது. டங்காமாரி பாடலை போல சில் புரோ பாடலும் செம துள்ளலாக இருக்கிறது. அந்தப் பாடலுக்கு தனுஷின் நடனம் மற்றும் செட் அமைப்பு இரண்டும் பட்டாஸ்.
சில் புரோ, அனிருத் பாடிய எதிர்வீட்டு ஹீரோயினுமா நீ ஜிகிடி கில்லாடி, நிரன்ஜனா மற்றும் விஜய் யேசுதாஸ் பாடிய பிரியாத என்ன, அறிவு பாடிய மவனே நீ மோதிட வாடா ஆகிய நான்கு பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக பிரியாத என்ன என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். பின்னணி இசை சுமார். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், உடை வடிவமைப்பு மற்றும் இதர தொழில்நுட்ப வேலைப்பாடுகள் எல்லாம் ஒரு கமர்ஷியல் படத்துக்கே உண்டான தன்மையுடன் இருந்தன.
முதல்பாதியில் சினேகா போடும் அடிமுறை வர்மக்கலை சண்டைக்காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. திருடனாக சுற்றிக்கொண்டு இருக்கும் பட்டாஸ் என்கிற சக்தி தான் யார் தன்னுடைய அம்மா யார் என்பதை தெரிந்துகொண்டு போடும் இடைவேளை சண்டைக்காட்சியில் இன்னொரு தனுசான (அப்பா தனுஷ்) திரவியப் பெருமாள் அறிமுகமாகிறார். இதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் எளிதில் யூகித்துவிட்டனர். இது படத்தின் மிகப்பெரிய பலவீனம். வளர்ந்து நிற்கும் தனுசுக்கு முடி நரைக்காத அம்மா மேக்கப் கூட இல்லாத சினேகா அம்மா என்பது ஏற்க முடியாத விஷயம்.
அடிமுறை சண்டைக்காட்சிகள், எம்எம்ஏ சண்டைக்காட்சிகள் இரண்டும் ரசிக்கும்படி இருந்தன. சில இடங்களில் 7ம் அறிவு, பூலோகம் படங்கள் எல்லாம் நினைவுக்கு வந்துசெல்கின்றன. கிளைமேக்ஸில் தனுஷ் மீடியாக்களுக்கு முன் அடிமுறை பற்றி பேசும் காட்சி அப்படியே எதிர்நீச்சல் படத்தை நினைவூட்டுகிறது. தனுஷ் எரிந்துகொண்டே தன் குருவின் சிலையை தாங்கி பிடிக்கும் காட்சி மட்டும் ரசிக்கும்படி இருந்தது. வில்லன் கதாபாத்திரம் படுமொக்கையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது, இந்த வில்லனை ஜெயிச்சா என்ன தோத்தா என்ன மொத படத்த முடிச்சு தொலைங்கடா என்ற சலிப்பை உண்டாக்குகிறது.
முதல்பாதியில் திருவிளையாடல் ஆரம்பம் சுள்ளான் ரக துள்ளலான தனுஷை பார்க்கலாம். இரண்டாம் பாதியில் அசுரன் சிவசாமி ரக சீரியசான தனுஷை பார்க்கலாம். உண்மையை சொல்லப்போனால் தனுஷ் போன்ற மிக அற்புதமான நடிகருக்கு இந்தப் படம் தேவையில்லாத ஆணி தான். படம் பெரிதாக கவரவில்லை. தனுசுக்கு இது கண்டிப்பாக தோல்வி படம் தான்.
“மற்ற கலைகளுக்கு கொடுக்கிற மொக்கியத்துவத்தை அரசாங்கம் அடிமுறை என்ற தற்காப்புக்கலைக்கும் கொடுக்க வேண்டும்” என்று நிஜத்தில் போராடிக்கொண்டிருக்கும் திருப்பூரை சேர்ந்த சக்தி திரவியபெருமாளின் கதையை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் சிறப்பாக எடுக்கவில்லை. அவசர அவசரமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். பொங்கல் விடுமுறையில் பொழுதுபோகாதவர்கள் வேண்டுமானால் இந்தப் படத்தை ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.
கைதட்டல் மற்றும் சிரிப்பலைகள் உண்டாக்கிய வசனங்கள் :
- அவனுங்க திருட்டுப் புத்தி இருக்கறவனுங்க இல்ல… புத்தி முழுக்க திருட்டு இருக்கறவனுங்க…
- சினேகா: போயிட்டு வரேன்
போலீஸ்: ஜெயிலருந்து போகும்போது போயிட்டு வரேன்னு சொல்லக்கூடாது… இனிமேலாவது கோபத்த கன்ட்ரோல் பண்ணு…சினேகா: போயிட்டு வருவேன்…
- மனோபாலா: நம்ம லெவலுக்கு இங்க இருக்கனுமா…
சதீஷ்: இருக்காத போயி சுடுகாட்ல இரு…மனோபாலா: நம்ம லெவலுக்கு போயஸ் கார்டன்ல இருக்கனும்
சதீஷ்: போய் சேர்ற வயசுல போயஸ் கார்டனா…
- தனுஷ்: பஞ்சருக்கு ஸ்போர்ட்ஸ்ல இன்ட்ரஸ்ட்… ஸ்போர்ட் விளையாடுனதுக்காக மேன் ஆஃப் தி மேட்ச் வாங்குன கப்பு அது…
ஹீரோயின்: என்ன ஸ்போர்ட்…தனுஷ்: பப்ஜி…
- கிக் பாக்ஸிங் உலகலெம் இருக்குனு சொல்லுங்க… ஆனா உலகத்துல இதுதான் நம்பர் ஒன்னுனு சொல்லாதிங்க…
- தமிழர்கள வீரத்தால கொல்ல முடியாது விஷத்தால தான் கொல்ல முடியும்
- பேருக்கு பின்னாடி அப்பன் பேர போட்டுக்கறத மட்டும் பெரும இல்ல… அந்தப் பேர காப்பாத்தனும்…
- எந்த ஊருனா நீ…
கீழடிஅப்ப உன் இஷ்டத்துக்கு அடி…
Be the first to comment on "நவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்!"