ஆனந்த விகடனோ அல்லது தி இந்து தமிழ் திசை யோ எந்த பத்திரிக்கை என்று தெரியவில்லை… ஆனால் லிப்ட் படத்தின் விமர்சனத்தில் இந்த படம் ஐடி ஊழியர் களின் உண்மை நிலையை ஓரளவுக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறது என்று விமர்சனம் எழுதி இருந்தார்கள். அந்த விமர்சனத்தை பார்த்த பிறகே லிப்ட் படம் பார்க்க தோன்றியது.
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் ஐடி ஊழியர்களை கலாய்த்து இருப்பார்கள். அதாவது ஐடி ஊழியர்கள் வேலையை ஒழுங்காக செய்யாமல் எந்நேரமும் பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் திரிந்து கொண்டிருப்பதை போல சிவகார்த்திகேயன் வசனம் பேசியிருப்பார். அந்த அளவுக்குத்தான் ஐடி ஊழியர் களின் வாழ்வியலை தமிழ் சினிமா புரிந்து வைத்திருந்தது.
ரஜினி முருகனுக்கு முன்பு ஐஐடி ஊழியரின் வாழ்வியலை சொன்ன படம் என்றால் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தை பற்றி குறிப்பிடலாம் அந்த படத்தில் தனுஷ் சோர்வின் காரணமாக கம்பியூட்டரை வேகமாக தட்ட எல்லோருடைய கம்ப்யூட்டரிலும் பிரச்சனை ஏற்படும் உடனே அந்த பிரச்சனையை ஒரு நாள் இரவு முழுக்க அமர்ந்து ஒரே ஆளாக பிரச்சினையை தீர்ப்பது போல் காட்சி வைத்திருப்பார்கள். அந்த காட்சியை இப்போது ஐடி இளைஞர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
இதேபோல நிவின்பாலி நடித்த நேரம் படத்தையும் இங்கு குறிப்பிடலாம். அந்த படத்திலும் ஐடி துறையில் நிவின் பாலி வேலை செய்து கொண்டு இருப்பார். ஆனால் அமெரிக்காவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள கம்பெனியில் அவரை வேலையை விட்டு தூக்கி விடுவார்கள். திடீரென வேலையை விட்டு தூக்கினால் ஒரு இளைஞன் எவ்வளவு துன்பப்பட நேரிடும் என்பதை அந்த படத்தில் அழகாக காட்டியிருப்பார்கள்.
அதேபோல சமீபத்தில் வெளியான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் படத்தில் ஐடி துறையில் நடைபெறும் மீட்டிங்கில் ரவுடியை பற்றி பேசுவது போல் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அந்த காட்சியை ஐடி துறை ஊழியர்கள் நிறைய பேர் சமூக வலைதளங்களில் கலாய்த்து இருந்தார்கள். இத்தனைக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஐடி துறையில் பணியாற்றியவர். அவரை எந்த காரணமும் இன்றி திடீரென வேலையிலிருந்து தூக்கி வெளியேற்றினார்கள். ஐடி துறை எப்படிப்பட்டது என்பதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பல பேட்டிகளில் விரிவாகப் பேசியுள்ளார். கிட்டத்தட்ட அவருக்கு நேர்ந்தது தான் கவின் நடித்துள்ள “லிப்ட்” படத்தின் மையக்கதை ஆகும்.
ஐடி துறையில் பெண்கள்:
காதலும் கடந்து போகும், ஆண் தேவதை, தரமணி ஆகிய படங்களில் ஐடி துறையில் பணியாற்றும் பெண்களின் நிலையை பற்றி பேசி இருப்பார்கள். முதலில் காதலும் கடந்து போகும் படத்தை பற்றி பார்ப்போம். இந்த படத்தில் மடோனா செபாஸ்டின் ஏற்கனவே ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருப்பார். திடீரென எந்த காரணமும் சொல்லாமல் கம்பெனி அவரை வேலையைவிட்டு தூக்கும். அதன் பிறகு அந்தப் பெண் எவ்வளவு துன்ப படுகிறாள் என்பதை வலியுடன் காட்டியிருப்பார்கள் இந்த படத்தில். அதன் பிறகு அந்த பெண் பல கம்பெனிகளுக்கு வேலை தேடி செல்வார். அப்படியே வேலை தேடிப் போகும் போதெல்லாம் அவர் சொல்ல முடியாத அளவுக்கு அவமானம் படுவார். குறிப்பாக ஒரு கம்பெனிக்கு நேர்முகத்தேர்வுக்கு போகும்போது அங்கு உனக்கு பாட வருமா ஆட வருமா என்பது போல் அவரைக் கேட்டு அசிங்கப் படுத்தினார்கள். இன்னும் மோசமாக ஒருத்தர் என்னுடன் ஒரு நாள் இரவு தங்க முடியுமா என்று கேட்டார். அந்த மாதிரியான அவமானங்களுக்குப் பிறகு அந்தப் பெண் மிகுந்த துயரத்திற்கு ஆளாகுவாள். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுவாள்.
அடுத்ததாக ஆண்தேவதை படத்தைப் பற்றி பார்க்கலாம். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ரம்யா பாண்டியன் ஐடி துறையில் வேலை பார்ப்பவராக நடித்திருப்பார். தன் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு பெண் என்னென்ன சம்பவங்கள் எல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக காட்டி இருப்பார்கள் இந்தப் படத்தில்.
ஐடி துறையில் பெண்கள் பணியாற்றுவதால் அவர்கள் தங்கள் குழந்தையை எவ்வளவு மிஸ் செய்கிறார்கள் என்பதை காட்டி இருப்பார்கள். அவர்கள் குடும்பத்தில் என்னென்ன பிரச்சனை எல்லாம் ஏற்படுகிறது தன்னுடன் வேலை செய்யும் ஆண்களிடம் தான் எப்படியெல்லாம் சமரசமாக செய்ய வேண்டியது இருக்கும் என்பதெல்லாம் இந்த படத்தில் தெளிவாக காட்டி இருப்பார்கள். தன்னுடைய வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக குடிக்கின்ற பழக்கத்திற்கு அடிமையாகும் அளவுக்கு ரம்யா பாண்டியன் செல்வார். இது எவ்வளவு ஆபத்தான ஒரு சமூகத்தை உருவாக்குகிறது என்பதை அழுத்தமாக காட்டியிருப்பார்கள்.
அடுத்ததாக தரமணி படத்தை பற்றி பார்ப்போம். இந்த படத்தில் ஆண்ட்ரியா மாதம் எண்பது ஆயிரம் சம்பளம் வாங்கக்கூடிய ஒரு ஐடி ஊழியராக நடித்திருப்பார். அவர் அழகாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு அந்த ஐடி துறையில் பல தரப்பட்ட பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்து வரும். பணமே வேண்டாம் என்று பணத்தை வெறுத்து ஒதுக்கி அந்த வேலையை விட்டு விடுவார் ஆண்ட்ரியா.
லிப்ட்:
இந்தப் படங்களுக்குப் பிறகு ஐடி ஊழியர்கள் ஒரு நிரந்தரமற்ற வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்… அவர்களுக்கு தற்காப்பு என்பதே இல்லை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் வரலாம் என்பதை லிப்ட் படத்தில் அருமையாக காட்டி இருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐடி கம்பெனியில் டீம் லீடராக வந்து சேர்கிறார் கதைநாயகன் கவின். அவர் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இரவு இன்னும் கூடுதல் நேரமெடுத்து வேலையை முடிக்க வேண்டிய சூழல் வருகிறது. அவரும் முதல் நாள் என்பதால் தன்னுடைய வேலையை ஆர்வமாக ஏற்றுக்கொள்கிறார்.
வேலையை முடித்தவுடன் வீட்டிற்கு கிளம்பலாம் என்று கிளம்புகிறார். ஆனால் அவரால் அந்த பில்டிங்கை விட்டு வெளியே வர முடியவில்லை. தொடர்ந்து அந்த பில்டிங்கில் உள்ளயே ஓடிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் லிஃப்டில் ஏறி பயணிக்கும் போது வழியில் பாதியில் மாட்டிக்கொள்கிறார். அந்த பில்டிங்கில் இருக்கும் வாட்ச் மேன்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்துகொள்கிறார்கள் இதையெல்லாம் பார்க்கும்போது கவின் மிகுந்த பயத்திற்கு உள்ளாகிறார். அடுத்த சில நிமிடங்களில் தான் தெரிய வருகிறது தன்னைப் போல ஹீரோயினும் அந்த கட்டிடத்திற்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
இருவரும் சேர்ந்து அந்த கட்டிடத்திற்குள் இருந்து தப்பிக்க பலவிதமாக முயற்சிப்பார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியே செல்ல முடியாது. பிறகுதான் யோசிக்கிறார்கள்… ஏன் நமக்கு இந்த சூழல் வந்தது என்று கணிக்கிறார்கள். இவர்கள் வேலைக்கு சேர்ந்த அதே கம்பெனியில் இதற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் வேலை செய்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும்போது அந்த கம்பெனி அவர்களை சொல்லாமல் கொள்ளாமல் திடீரென வேலையை விட்டு தூக்குகிறது.
அந்த இரண்டு காதல் ஜோடியும் எதற்கு எங்களை திடீரென வேலையை விட்டு தூக்கினீங்கள்… எங்கள் மீது என்ன குற்றம் இருக்கிறது என்று தன்னுடைய அதிகாரியிடம் கேட்கும்போது அதிகாரியோ என்னையவே எதுத்துப் பேசுறியா நீ என்று சொல்லி பிளாக் மார்க் வைத்துவிடுவார். பிளாக் மார்க் வைத்ததும் இனி எங்கேயும் போய் வேலை கேட்க முடியாது இனி நம் வாழ்க்கை அவ்வளவுதான் என்று அந்த ஜோடியில் ஒருவர் பில்டிங்கில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இன்னொருவர் லிப்டிற்க்குள் சென்று கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். நாம் வெளியே இருந்து பார்க்கும்போது ஐடி துறை என்பது மிக உற்சாகமான துறை… அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது போல் தெரியும். ஆனால் உண்மை நிலை என்ன என்பதை லிப்ட் படத்தில்தான் தெளிவாக காட்டி இருக்கிறார்கள். அதற்காகவே இந்த படத்தை எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டும்.
Be the first to comment on "ஐடி ஊழியர்களின் உண்மை நிலையை சொன்ன தமிழ் படங்கள் ஒரு பார்வை!"