இவான்கா ட்ரம்ப் : அரசியல் வானின் பகட்டு நட்சத்திரம்

Ivanka Trump

செய்தி ஒன்று: ஹைதராபாத்தில் வீடற்ற தெருவாசிகளும், பிச்சைக்காரர்களும் அகற்றம். குண்டும் குழியுமான நகரச் சாலைகள் சீர் செய்யப்பட்டன.

செய்தி இரண்டு: இவான்கா ட்ரம்ப் இந்தியா வந்தார்.

இரண்டும் வெவ்வேறு செய்திகள். ஆனால் இரண்டுக்கும் தொடர்புண்டு.

உலக தொழில்முனைவோர் உச்சி மாநாடு

ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே ஹைதராபாத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள தொடங்கிவிட்டது. அடுத்தடுத்து இரண்டு முக்கிய மாநாடுகள் நடக்கவிருப்பதால் பிச்சைக்காரர்களும், தெருவாசிகளும் நகரத்துக்கு வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.  ஒன்று தற்போது நடந்துவரும் உலகளாவிய தொழில்முனைவோர் உச்சிமாநாடு, மற்றொன்றுடிசம்பரில் நடக்கவிருக்கும் உலக தெலுங்கு மாநாடு.

அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக சேர்ந்து நடத்தும் உலக தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகளும், வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப்நேற்று ஹைதராபாத் வந்திருந்தார். அவர் வருகையை ஒட்டித்தான் அதிர்ந்துகொண்டிருந்தது ஹைதராபாத்.

இந்த மாநாட்டில் பிரிட்டிஷ்  முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவியும், பெண்களுக்காகச் செயல்படும் செர்ரி பிளேர் அமைப்பின் நிறுவனருமான செர்ரி பிளேர் உட்பட ஆயிரத்து இருநூறு பேர் கலந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பெண்களுக்கான முன்னுரிமை மற்றும் செழிப்பான வாழ்க்கை என்ற நோக்கத்தை மையப்படுத்தியே இந்த மாநாடு நடைபெறும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இவான்கா பேசியது

தன் தலைமை உரையில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இருக்கும் நிரந்தர நட்பைக்  குறிப்பிட்ட இவான்கா, பிரதமர் மோடியின் தலைமையை புகழ்ந்து பேசினார். ‘சிறுவயதில் ஏழ்மையில் டீ விற்ற ஒருவர் இன்று நாட்டின் பிரதமராக முடியுமென்பதை நிரூபித்திருக்கிறீர்கள், இது மாற்றம் சாத்தியம் தான் என்பதை உணர்த்துகிறது’ என்றும் இவான்கா பேசினார்.

ஒரு பெண்ணாக, மாடலாக, தொழில் முனைவோராக, ஜனாதிபதியின் ஆலோசகராக ஆணாதிக்கம் மிக்க இந்தச் சமூகத்தில்தடைகளைத் தாண்டி தான் வளர்ந்து வந்ததைப் பகிர்ந்துகொண்டார்.

பிரதமர் மோடி பேசியது

இந்தியாவில் பெண்களை சக்தி வடிவமாகப் பார்க்கும் மரபையும், பெண்களின் முன்னேற்றம் என்பது நாட்டின் முன்னேற்றம் எனவும் குறிப்பிட்டு இந்திய பிரதமர் பேசினார்.

இவான்காவும் சர்ச்சைகளும்

பதினான்கு வயதிலேயே மாடலிங் துறையைத் தேர்ந்தெடுத்த இவான்கா  அடுத்த இரண்டாண்டுகளில் அழகி போட்டியை தொகுத்து வழங்கும் அளவிற்குத் தன்னை உயர்த்திக்கொண்டார். தன் தந்தையின் தொழிலான ரியல் எஸ்டேட் துறையிலும் ஆர்வம் கொண்ட அவர், இரண்டாண்டுகள் வேறு நிறுவனத்தில் பணியாற்றி அதைப்பற்றிக் கற்றுக்கொண்ட பின் தந்தையின் நிறுவனத்தில் சேர்ந்து நிறைய லாபம் ஈட்டித்தந்தார்.

இவான்கா ட்ரம்ப் என்ற தனது பெயரிலேயே ஆடை, பை விற்கும் நிறுவனத்தை நடத்திவந்தார். வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் பதவி கிடைத்ததும்  தன்னை விடுவித்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இருப்பினும் இவான்கா தனது தலைமையை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தவில்லை என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். குறிப்பாகச் சீனா போன்ற நாடுகளில் நடைபெறும் உழைப்பாளர் மற்றும் மனித உரிமை நலன்களுக்கு எதிரான செயல்களை தோலுரிக்க அவர் தவறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இவான்காவின் வணிக நோக்கம் ஒன்றுதான் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு தனது நிறுவனத்தின் பொறுப்புகளிலிருந்து விடுவித்துக்கொண்டதாகச் சொல்லப்பட்டாலும், இன்னும் அவர் தலைமை பொறுப்பில் இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து ஆராய்ந்த அசோசியேடட் பிரஸ் என்ற செய்தி நிறுவனம், இவான்கா மூத்த ஆலோசகராகப் பதவியேற்றுக்கொண்ட பிறகு, அவரது நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

இம்மாநாட்டில் குறைந்தது இரண்டு குழு விவாதங்களை இவான்கா தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தில் அவர் செய்தியாளர்களை சந்திக்கும் திட்டம் இல்லை.

ஹைதராபாத் வாசிகள் தங்கள் நகரம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.குண்டும் குழியுமாக இருக்கும் மற்ற மாநிலத்து மக்கள் எப்படியும் இவான்காவை தங்கள் மாநிலத்துக்கு அழைத்து வந்துவிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

செய்தி மூன்று: இந்தியாவிற்குப் பிரியாவிடை தந்தார் இவான்கா

செய்தி நான்கு: ஹைதராபாத்துக்கு மீண்டும் வந்தடைந்தனர் தெருவாசிகளும், பிச்சைக்காரர்களும்.

இவ்விரண்டும் வெவ்வேறு செய்திகள் ஆனால் இவ்விரண்டிற்கும் தொடர்புண்டு.

 

Related Articles

இயக்குனர் பாலாவிடம் ஓர் வேண்டுகோள்!... இயக்குனர் பாலாவை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. நாம் அனைவரும் பாலாவை பற்றி ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்போம். இருந்தாலும் இன்னும் கூடுத...
“ருத்ர தாண்டவம்” படத்தால் உண... எந்தெந்த பத்திரிக்கைகள்"அறம்" தவறாமல் நடந்து கொள்கின்றன... எவையெல்லாம் ஜால்ட்ரா அடிக்கும் பத்திரிக்கைகளாக இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள முடிந்...
சுறா படத்தில் உள்ள சொதப்பல்கள்! ... விஜய் நடித்த படங்களின் கதைகளை கூர்ந்து கவனித்தால் அந்தக் கதைகள் அனைத்துமே சிறப்பான கதைகள் என்பது புரிய வரும். ஆனால் காட்சி ஆக்குவதில் சொதப்பி விடுகிறா...
பொறாந்தோமா நல்லதுக்காக நாலு பேர பொளந்தமா... பாசமான ஒரு நபரை இழத்தலும் அதற்கு வில்லனை சண்டியர் நாயகன் பழிவாங்குதலும் என்பதுதான் முத்தையா படங்களின் மையக்கதை.  தாய்ப்பாசம், மாமனார் பாசம், பாட்டி பா...

Be the first to comment on "இவான்கா ட்ரம்ப் : அரசியல் வானின் பகட்டு நட்சத்திரம்"

Leave a comment

Your email address will not be published.


*