ஒப்பீடு
ஹிட்லர்க்கும் மோகன்ராஜா படைத்த நம்ம ஊர் சித்தார்த் அபிமன்யுவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது. அது என்னவென்றால் அதிபுத்திசாலித்தனம், சுயசிந்தனை, விடாமுயற்சி, ஆர்வமாக புத்தகம் படிப்பது, பல உயிர்களை காவு வாங்கியது போன்றவை. அதே சமயம் பல வேற்றுமைகளும் உள்ளது. ஹிட்லர் இளம் வயதில் நல்லவராக தேசபக்தனாக வாழ்ந்தவர். சித்தார்த் அப்படி இல்லை. இளம்வயது முதலே தீய வழியில் சென்றவர்.
ரோல்மாடல் – தேர்ந்தெடுக்கும் பாதை
இப்ப எதற்கு இந்த ஒப்பீடு என்றால் ஒரு விருது நிகழ்ச்சியில் மோகன்ராஜா, ” தனிஒருவன் படத்த பலரும் ஆதரிச்சது சந்தோசமா இருக்கு. அதே சமயத்துல பல இளைஞர்கள் சித்தார்த் அபிமன்யுவ ரோல் மாடலா எடுத்துக்கிறேன்னு சொல்றாங்க… அது தவறு. அப்படி ரோல்மாடலா எடுத்துக்கிட்டிங்கனா அது எனக்கு மனக்கஷ்டத்தை உண்டாக்கும் ” என்றார். இவர் சொன்னது உண்மை தான். நம் தேசத்தில் நிறைய இளைஞர்கள் புத்திக்கூர்மையுடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததாலும், ஏமாற்றப்படுவதாலும், தொடர்ந்து அநீதிகளை சுமப்பதாலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை தவறானதாக அமைந்துவிடுகிறது.
சுருங்கச்சொல்ல வேண்டுமென்றால் அஞ்சாதே படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் தன் குறிக்கோளை அடைய விரும்பி கடுமையாக முயற்சி செய்வான் கிருபா. ஆனால் தேர்வின்போது உயிர்நண்பனால் தோற்கடிக்கப்படும்போது, ஏமாற்றப்படும்போது, அவன் தேர்ந்தெடுத்த பாதை வேறு. கடைசியில் அவனுடைய மரணம் எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இனி ஹிட்லரை பற்றி பார்ப்போம்.
ஹிட்லரின் நற்பண்புகள்
அடால்ப் ஹிட்லர்ஆரம்பகாலங்களில்,
- கூச்சசுபாவமான மனிதராக இருந்தவர். அவசியமில்லாமல் அடுத்தவர் வீட்டிற்குச்சென்று புறணி பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்.
- அவருக்கு சரித்திரம் பற்றி படிப்பதில் ஆர்வம் அதிகம். சரித்திர அறிவு பெருகப் பெருக அவருடைய தேசிய உணர்ச்சியும் வலுத்து வந்தது.
- தன் வெற்றியில் சந்தோசப்படுவாரே தவிர, பிறருடைய தோல்விக்காகச் சந்தோசபடமாட்டார்.
- தனக்கு பிடித்த பாடங்களை மட்டுமே கவனிப்பார். மற்றப்பாட நேரங்களில் தனக்கு பிடித்தமான ஒரு புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டிருப்பார். இதற்காக ஆசிரியர்கள் இவரைக் கோபித்துக்கொண்டது கிடையாது.
- கொஞ்சம் வித்தியாசமானவர்
வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு வரும்போது சிறிது வேகமாகவும், பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு போகும்போது சிறிது மெதுவாகவும் போவார்.
- ஹிட்லர் நல்ல ஓவியர். பூகோளத்தில் ஆர்வம் அதிகம். எல்லோரையும் போல ஏதாவது ஒரு உத்தியோகம் பார்த்து பிழைக்காமல் தன்னுடைய ஓவியம் வரையும் தனித்திறமையை நம்பி வாய்ப்புகள் தேடிதேடி ரோடுரோடாக அலைந்தவர். சுயமுயற்சியாலே சம்பாதித்து சாப்பிட்டவர். தனது தேவைக்கு பிறர் முகத்தை பார்த்ததே கிடையாது.
- ஆசிரியர் சொல்லிக்கொடுப்பது பெரும்பாலும் ஒருசில மாணவர்களுக்கு உடனே புரிந்துவிடும். பலருக்கு புரிந்துகொள்ள தாமதமாகும். ஹிட்லர் அந்த அந்த ஒருசில மாணவர்களில் ஒருவர். ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதை அவர் மற்ற மாணவர்களுக்கு திருப்பிச்சொல்லும்போது ஒரு புதிய வேகம் அதில் காணப்பெறும். ஆசிரியர்கள் அவருடைய திறமையை அடிக்கடி பாராட்டிப் பேசுவார்கள். ஆனால் அதற்காக அவர் சிறிதும் கர்வங்கொண்டதே கிடையாது.
- இரவல் வாங்குவது என்றால் அது புத்தகம் மட்டும்தான். இரவு பகல் பார்க்காமல் புத்தகத்தை ஆர்வமாக படித்து முடிப்பார். அவர் வாடகை வீட்டில் வசித்து வந்த போது, அந்த வீட்டுப்பெண் சகோதரி பாப் ஹிட்லரிடம், ” எப்ப பாரு புத்தகம் படிக்கிறியே, இப்படி ஓயாம படிச்சா உடல் நலம் பாதிக்கப்படாதா… நீ பார்க்கும் வேலைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ” என்று வினவினார். அதற்கு ஹிட்லர், ” சகோதரி, வாழ்க்கைக்கு எது பயன்படும் என்பது எனக்கு தெரியும் ” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். படிப்பதில் அவ்வளவு ஆர்வம்.
- சிறுவயதில் விடுமுறைநாட்களில் கிராமத்து சிறுவர்களுடன் ஒன்றுகூடி பல இடங்களுக்கும் சென்று விளையாடுவார்கள். அப்போது அவர்களுக்கு தலைவன் ஹிட்லர் தான். ஆனால் அந்த சிறுவயதில் கூட, அவர் தனத பதவியை சுயநலத்திற்காக உபயோகித்ததில்லை. பிள்ளைகள் ஒன்றுகூடி ஒரு தோட்டத்திற்குள் புகுந்து ஏராளமான பழங்களை பறித்துக்கொண்டு வருவார்கள். ஹிட்லர் இவற்றை எல்லோருக்கும் பகிர்ந்துகொடுப்பார். பிறகு தான் மிஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு பழங்களை எடுத்து உண்பார்.
மெல்லிய கோட்டில் நின்றுகொண்டிருக்கும் திறமையான இளைஞர்களுக்கு, இப்படி ஆரம்பகாலகட்டத்தில் நல்லவராய் இருந்தவர் பல உயிர்களை கொன்று குவித்த சர்வதிகாரியாக மாறியதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்த பாதை. நாட்டுப்பற்று மிகுந்த, சமூக அவலங்களை கண்டு திறமையிருந்தும் எதுவும் செய்யாமுடியாமல் கையறுநிலையில் இருக்கும் இளைஞர்கள் ஒவ்வொருமே மெல்லிசான கோட்டில் தான் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள், சித்தார்த் அபிமன்யுவை ரோல்மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இல்லையென்றால் சிறந்த புரட்சியாளராக, சிறந்த போர் வீரராக போற்றப்பட்டிருக்க வேண்டிய ஹிட்லர், சர்வதிகாரியாக மாறி என்னைப்போல் யாரும் இருந்திட வேண்டாம் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கிப்போனதைப் போல தான் நம் வாழ்வும் மாறும்.
Be the first to comment on "ஹிட்லரிடம் இருந்த நற்பண்புகள் – ஹிட்லரும் சித்தார்த் அபிமன்யுவும்"