எழுத்தாளர் தமிழ்மகனின் “மீன்மலர்” சிறுகதை தொகுப்பு ஒரு பார்வை!

A view on Tamilmagan's Meenmalar Short Story

தமிழ்மகன் என்கிற பா. வெங்கடேசன் எழுதிய புத்தகம் மீன்மலர். இருபது வயதுகளிலயே எழுத தொடங்கி இளம் வயதிலயே தமிழக அரசின் இலக்கிய விருதுகளை வென்றுள்ளவர். மீன்மலர் சிறுகதை தொகுப்பில் உள்ள சில சிறுகதைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

1.புண்ணியவதி

இனிமே என் முகத்துல முழிக்காதடா… என்று மறுமணம் செய்துகொண்டதால் மகனை விரட்டியடிக்கிறார் அப்பா. அந்த அப்பா பல வருடங்கள் கழித்து பேத்தியிடம் தன் மருமளைப் பற்றி விசாரித்து (வீட்டை விட்டு விரட்டி ஒதுக்கி வைத்தது தவறு என்றுணர்ந்து மருமகளை புண்ணியவதி என புகழ்ந்து) குற்ற உணர்வால் துண்டுக்குள் முகத்தை மறைத்து குலுங்கி அழுகிறார்.

2.சம்பா

சம்பா பருவத்துக்குள்ளயே இலவச ஆஸ்பத்திரி விவகாரம் மற்றும் ஏரிக்கரை குடிசை விவகாரம் தீர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் முடிவெடுக்க, கோயில் நிலத்தை தன் நிலம் போல் ஆண்டுவரும் தியாகி காளிநாயகர் நேக்காக பிரச்சினையைத் திசைதிருப்பிவிட்டு வீட்டிற்குத் திரும்பி சும்மா இருக்கறவங்களுக்கு சமூக அக்கறை வந்துடுச்சி… எப்படியோ குழப்பிவிட்டு திசைதிருப்பியாச்சு என்று பெருமிதம் அடைகிறார் காளி. சும்மா வந்த கோயில் நிலத்தை தன்னுடையதாக நினைத்துக்கொண்டு சுயநலத்தால் பொதுநலம் நடைபெற விடாமல் தடுக்கும் மனிதர்களை சாடுகிறது இந்த சிறுகதை.

3.அமரர் சுஜாதா

அமரர் சுஜாதா இறந்த பிறகு நாயகனுக்கு அவரிடமிருந்து பாராட்டு இமெயில் ஒன்று வருகிறது. சிலிக்கான் சில்லுப்புரட்சி புத்தகம் பரிசாக வாங்க வேண்டும் என்று நினைத்த நாயகனுக்கோ இந்த இமெயில் விசித்திரமாக தெரிகிறது.இறந்த பிறகு எப்படி அவருடைய ஐடியில் இருந்து இமெயில் வரும் என்பது நாயகனுக்கு புரியாத புதிராக இருக்கிறது. நண்பர்களிடமிருந்து விசாரித்து ஓரளவு தெளிந்த பின் வீடு வந்து அந்த இமெயிலை தேடுகிறார். இமெயில் மாயமாய் மறைந்து போகிறது. எழுத்தாளர் சுஜாதாவை நாயகன் எவ்வளவு விரும்புகிறான் என்பதை விவரிக்கிறது இந்த சிறுகதை.

4.அது இது

ஸ்ரீவெங்கடேஸ்வரா காலேஜ் போகாம வெங்கடேஸ்வரா எனும் மொக்க காலேஜூக்குச் சென்று கண்டவனிடம் பேச்சு வாங்கி கையில் இருந்த காசை விற்று மகனுக்காக சீட் வாங்குகிறார் அப்பா. வீட்டிற்கு வந்து மகனிடம் சொல்ல மகனோ நான் சொன்னது வேற காலேஜ் நீங்க போனது வேற காலேஜ் என்கிறான். இது தெரிந்ததும் சீட் புக்கிங் பண்ண கொடுத்த பணத்தை வாங்க லோலோன்னு அலைகிறார் அப்பா. கடைசியில் படிக்கற பையன் எங்க இருந்தாலும் படிப்பான் என்று சொந்தபந்தங்கள் அவனை நடுவில் அமர வைத்து அறிவுரை வழங்க குற்றம் செய்தவன் போல் மகன் தலைகுனிந்து இருக்கிறான். ஒரு சின்ன கவனக்குறைவு வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டி போடுகிறது என்பதை விளக்குகிறது இந்த சிறுகதை.

5.ஔவை

எதாச்சும் பேசுங்க சார்… என்று நாயகனிடம் சொல்லிக்கொண்டே இருக்கும் தோழி திடீரென ஒரு நாள் திருமண செய்தி சொன்னதும் நாயகனின் முகம் வாடுகிறது. திருமணத்துக்குப் பிறகு பழையபடி பழக முடியாது என்று நாயகன் வருந்த ஒருமுறை ஔவைகள் பற்றி கூறியதை நினைவுபடுத்தி நீங்க எப்பவுமே என்னுடைய நண்பர் தான் பழையபடி நீங்க என்கிட்ட ஜாலியா பேசலாம் எனக் கூறி நாயகனுக்கு தோழி நெல்லிக்கனி பரிசளித்துவிட்டு செல்கிறாள். அதியமானுக்கும் ஔவைக்கும் இருந்த நட்பை போல பல ஆண்பெண் நட்பை விளக்குகிறது இந்தச் சிறுகதை.

6.வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி

ஆல்பெர்ட் எனும் டாக்குமெண்ட்ரி இயக்குனருடன் காட்டில் வாழும் மிருகமான சிங்கராஜா ஆங்கிலத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பம் குறித்து விவாதம் நடத்துகிறது. இலைதழைகள் நிறைந்த மண்பாதையில் நடந்தே பழக்கப்பட்ட விலங்குகள் சட்டென்று தார்ச்சாலையில் கால் வைக்கும்போது எப்படி உணர்கின்றன என்பது மனிதர்களுக்குத் தெரியுமா,  எங்களுக்கு மனிதர்கள் துரோகம் செய்கிறார்கள் என்று ஆல்பர்ட்டிடம் சிங்கம் முறையிடுகிறது. அனைத்தையும் கேட்டு மனம் வருந்துவது போல் நடித்த ஆல்பெர்ட் கடைசியில் தன் படையுடன் சிங்கங்களை கைது செய்து கூண்டுக்குள் அடைக்கிறான். மிருகங்களுக்கு இருக்கும் கருணையும் நன்றியும் கூட மனிதர்களுக்கு இருப்பதில்லை என்பதை விளக்குகிறது இந்தச் சிறுகதை.

7.மனக்குகை

கோயிலுக்குள் சென்றால் நம் பெரியாரிய கொள்கை என்ன ஆவது நம் தோழர்கள் பார்த்தால் என்ன ஆகும்… பெரியார், அண்ணா எல்லாம் சாமி கும்பிடவே மாட்டார்களா… அல்லது வெளியில் அப்படி வேசம்கட்டிக்கொள்கிறார்களா… மனதுக்குள் சந்தேக குகை எழுப்புகிறார் சாமிக்கண்ணு… சந்தேகித்து சந்தேகித்து கடைசியாக சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த மகளை வழக்கமான அப்பாவைப் போல வீட்டிற்குள் அடைந்துகிடைக்க வைக்கிறார். அவரை பரிசோதித்த டாக்டர் சரியான பெரியார் பைத்தியம் என்று கூறுகிறார். கொள்கை மீது சந்தேகம், தலைவர்கள் மீது சந்தேகம், மகள் மீது சந்தேகம் என்று சந்தேக பிசாசாக மாறிய மனிதரைப் பற்றிய கதை இது.

8.நோவா

உலக தலைவர்கள் ஒன்று கூடி நான்காம் உலகப் போருக்கான காரணம் எது என்று வினவ, புறம்பேசுதல் தான் அதற்கான காரணம் என்கிறது ஒரு தரப்பு. அதை ஏற்க மறுக்கும் ஒரு கூட்டம் , சரியென ஏற்கும் கூட்டம் என்று பெரிய தலைவர்கள் விவாதிக்கிறார்கள். கடைசியில் புறம்பேசுதல் நல்லதுக்கே என்று முடிவெடுக்க, குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் என நாயகன் குப்தா வருந்துகிறான். நாகாக்கா மனிதர்களால் தான் உலகப் போர்கள் நடந்துள்ளது என்பதை விவரிக்கிறது இந்த சிறுகதை.

9.காமம் செப்பாது கண்டது மொழிமோ

கலவியில் எந்தப் பாலினம் மேலோங்கி காணப்படுகிறது என்ற கேள்வி நாயகனுக்கு பல நாட்களாக இருந்து வருகிறது. பெண் பிறப்பு உறுப்புகளை பிறைகள் எனவும், ஆண் உறுப்புகள் சிலுவைகள் எனவும் பெண் மார்பகங்களை முருகா எனவும் ஆண்கள் பேசும் டபுள் மீனிங் வசனங்களை விவரிக்கிறது இந்தச் சிறுகதை.

குன்று இருக்கும் இடங்களில் எல்லாம் குமரன் இருப்பான் என்பதால் மார்புக்கு முருகன் என்றும் சிலுவை சுமப்பவன் தோற்றத்தில் உள்ளது தான்  ஆணுறுப்பு என்றும் கீற்றுத்தோற்றம் போல் பெண் உறுப்பு உள்ளதால் பிறை என்றும் டபுள்மீனிங் வசனங்களுக்கு விவரிப்பும் வழங்கப்படுகிறது.

அரிஸ்டாட்டில் சொல்வது மாதிரி இருக்குமா? கலவியில் யார் மேலோங்கி நிற்கிறார்களோ அவர்களுக்கு அந்தப் பாலினத்தில் குழந்தை பிறக்கிறது. இப்போது உலகமெங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பெண்கள் தான் மேலோங்கியிருப்பதாகச் சொல்ல முடியுமா? மகாபாரத காலத்து ஆய்வுக்கு இன்னும்கூட பதில் கிடைக்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது நாயகன் ஆனந்துக்கு. ஆண் பெண் இருபாலருக்கும் காமம் குறித்த சந்தேகங்களை விளக்குவது முக்கியமானது என்பதை விவரிக்கிறது இந்த சிறுகதை.

10.அம்மை

கருணாகரன் தான் படித்த பள்ளிக்கூடத்துக்கு பெரிய பிசினஸ் மேனாகத் திரும்புகிறார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு மிகவும் பிடித்த மீனாவை நினைவுகூறுகிறார். வகுப்பிற்கு வர வேண்டிய ஆசிரியர் லேபில் இருந்ததால் லேபிற்குச் சென்று திருமூர்த்தி ஆசிரியரை நாயகன் அழைத்துவர ஆசிரியரோ தவறுசெய்துகொண்டிருக்க… தன் மேல் தப்பு இல்லை என்று காட்டுவதற்காக பேண்டை மாட்டிக்கொண்டு கருணாகரனை அடிஅடி என்று அடிக்கிறார் தவறு செய்த ஆசிரியர். லேபிற்குள் இருந்து வெளியே வந்த மீனாவை பார்த்து அதிர்கிறார் நாயகன். அதையடுத்து மீனாவை பார்க்க மனமில்லாமல் அம்மை என பொய் சொல்லி பள்ளியை விட்டு நின்றுவிடுகிறார். பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களை விவரிக்கிறது இந்தச் சிறுகதை.

 

Related Articles

“ஜிப்ஸி” புத்தகத்தை எத்தனை ப... கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிப்ஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தார் இயக்குனர் ராஜூமுருகன். குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கியவர் இயக்...
விமானம் கண்டுபிடிச்சது வேணும்னா உங்க ஊர்... 'தற்போதைக்கு சேவை இல்லை', 'உங்கள் இடத்திற்கு இந்தச் சேவை இல்லை' போன்ற விதவிதமான புகார்களை உணவு செயலியில் பார்த்துச் சலித்து போன பிரான்ஸ் நாட்டைச் சேர்...
40 ஆண்டுகளாக இந்தக் குதிரை வெற்றிகரமாக ஓ... டிசம்பர் 12ம் தேதி என்ன விசேசம் என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ...
நாம் உண்ணும் உணவின் வரலாறு – பிரிய... இன்று மதியம் உங்கள் வீட்டில் என்ன சமையல்? புளிசாதம் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் தட்டில் புளிசாதம் பரிமாறப்படுகிறது. அதில் ஒரு பிடியை எடுத்து உண்ணுவ...

Be the first to comment on "எழுத்தாளர் தமிழ்மகனின் “மீன்மலர்” சிறுகதை தொகுப்பு ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*