இன்று( ஏப்ரல்12) சென்னையில் நடைபெறவுள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் பாரத பிரதமர் வருகை தந்துள்ளார். அவருடைய வருகையை எதிர்த்து தமிழகம் முழுக்க பல இடங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளது. டுவிட்டரில் #gobackmodi என்று ஹேஸ்டேக் இட்டு நம்பர் ஒன் ட்ரெண்டிங் ஆக்கியுள்ளனர் நெட்டிசன்கள். விமான நிலையத்தில் அவரது எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன் போன்ற தமிழ்சினிமாவின் ஆகச்சிறந்த படைப்பாளிகள் கைதாகியுள்ளனர். இவ்வளவு எதிர்ப்புகளை தாண்டி மோடி வந்து திறந்து வைக்கும் ராணுவ கண்காட்சியின் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்ப்போம்.
சுதந்திர போராட்ட காலத்தில் அந்நிய நாட்டு பொருட்களை புறக்கணித்து பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி இந்திய தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார் மகாத்மா. தற்போது இந்தியாவில் இதை செயல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றே கூறலாம்.
சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையிலும் உள்நாட்டு குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ராணுவ தளவாட உற்பத்தி பொருட்களின் கண்காட்சி வருகிற பதினான்காம் தேதி வரை மூன்று
நாட்களுக்கு நடக்க உள்ளது.
தென்னிந்தியாவில் இதுவே முதல்முறை. ரூ. கோடி செலவில் நடக்கும் இந்த கண்காட்சியில் 701 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அவற்றில் 162 வெளிநாட்டு நிறுவனங்களும், 539 இந்திய நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. பெல், பிஇஎம்எல் போன்ற இந்திய நிறுவனங்களும், அமெரிக்காவின் போயிங், பிரான்சின் ரபேல், ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்தக் கண்காட்சியை 14ந் தேதி வரை பொதுமக்கள் பார்க்க முடியும். அப்படி கண்காட்சியை
பார்க்க விரும்பும் பொதுமக்கள் www.defexpoindia.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம். நபருக்கு நூறு ரூபாய். ஆன்லைனில் மட்டுமே நுழைவுச்சீட்டை பெற முடியும்.
புதிய தொழில் தொடங்குவோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 13, 15 ம் தேதிகளில் சென்னை துறைமுகத்தில் உள்ள போர்க்கப்பல்களை பொதுமக்கள் பார்வையிடவும் வழிவகை செய்துள்ளனர். பார்க்க விரும்பும் மக்கள் தங்கள் அடையாள அட்டையும் அதனோடு அதன் நகலையும் எடுத்துச் சென்றால் அவர்களை அணி அணியாக பிரித்து பார்வையிட வைப்பார்கள்.
மோடிக்கு எதிர்ப்புகள் தெரிவிப்பது ஒருபுறம் இருக்கட்டும். முடிந்தால் இந்தக் கண்காட்சியை
பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் இது போன்ற கண்காட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு
ஒரு முறை மட்டுமே நடைபெறும்
Be the first to comment on "#gobackmodi எதிர்ப்பையும் தாண்டி பிரதமர் தொடங்கி வைத்த ராணுவ கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள்! – டெபெக்ஸ் போ – 2018"