டெல்லி ஆளுநரைச் சந்திப்பதற்காக நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் மாளிகையின் வரவேற்பறையிலேயே அமர்ந்து உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது இந்தப் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. டெல்லியின் முன்னேற்றத்திற்கான தடைகளை களைவதற்கான தமது போராட்டம் தொடர்கின்றது என்று தமது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று முதல் (புதன்கிழமை) காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். முன்னதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் சிசோடியா இதுகுறித்து தெரிவித்ததாவது ‘டெல்லி மக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுடன் இணைந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட இருக்கிறேன்’.
தீவிரமடையும் போராட்டம்
ஐஏஎஸ் அதிகாரிகளின் பகுதிநேர வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், கடந்த நான்கு மாதங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்தப் போராட்டத்தை ஆம் ஆத்மீ கட்சி முன்னெடுத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பவே இந்தப் போராட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஆம் ஆத்மீ கட்சி. மேலும் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஆளுநர் மாளிகைக்கு முன் இன்று அணிவகுக்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
தேவையற்ற போராட்டம் என்கிறது ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை இதுகுறித்து தெரிவிக்கையில் ‘யாரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை. ஆளுங்கட்சியின் இந்தத் தர்ணா போராட்டத்திற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை’ என்று தெரிவித்து இருக்கிறது.
Be the first to comment on "ஆளுநர் மாளிகையில் மூன்றாவது நாளாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா"