இந்தியாவில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு இந்திய சென்சார் குழு சான்றிதழ் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையிலோ, குறிப்பிட்ட நபரை தாக்கும் வகையிலோ, நாட்டு ஒற்றுமையை கலைக்கும் வகையிலோ காட்சிகள் இருப்பின் மற்றும் ஆபாசக் காட்சிகள், வன்மக் காட்சிகள் அதிகம் இருப்பின் அதனை கத்தரி போட்டு அல்லது அதற்கேற்ற சான்றிதழ் வழங்கி வருகிறது. அதில் அவ்வப்போது பல படங்களுக்கு தவறான சான்றிதழ் வழங்கி படைப்பாளிகளுடன் முரண்பட்டும் நின்றுள்ளது. இவை எல்லாம் ஒரு புறம் இருக்க இப்போது சினிமாவை மிஞ்சும் வகையில் சின்னத்திரை நிகழ்ச்சிகளும், விளம்பர படங்களும் உள்ளது. தொலைக்காட்சிகளில் இப்படி என்றால் சமூக ஊடகங்களில் எந்நேரமும் கருத்து மோதல்கள், வெறுப்புணர்வு பிரச்சாரங்கள், வதந்திகள் என்று தலை வலியை தந்து கொண்டு இருக்கிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எப்படி?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதன்மையாக கவனிக்க வேண்டியது தொலைக்காட்சி தொடர்கள். இந்த தொலைக்காட்சி தொடர்களை அதிகம் பார்ப்பது நம் வீட்டு பெண்கள் தான். யூடுப்பில் எதாவது ஒரு தொலைக்காட்சி தொடர் தினமும் டாப் டென் டிரெண்டிங்குள் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு சீரியல் பித்து பிடித்துப் போய் இருக்கிறார்கள். பெண்கள் கெட்டுப் போவதற்கும் எதற்கு எடுத்தாலும் சந்தேகம் படுவதற்கும் குடும்பங்களில் ஒற்றுமையை சிதைக்கும் வகையிலும் வன்மங்கள் நிறைந்ததாக இருக்கிறது. சொல்லப் போனால் தேவையற்ற விஷியங்களில் பெண்களை டிரக்கர் பண்ணி வருகிறது.
குழந்தையை கடத்துவது எப்படி? குடும்பத்தைக் கெடுப்பது எப்படி? மாமியாருக்கு விசம் வைப்பது எப்படி? சூனியம் வைப்பது எப்படி? அக்கம் பக்கத்தினரை புறணி பேசுவது எப்படி? மருமகள் குளிக்கும் போது உபயோகிக்கும் மஞ்சள் தூளில் பாஸ்பரஸ் கலப்பது எப்படி? டைவர்ஸ்
பெறுவது எப்படி? போன்ற தேவையற்ற விசியங்களைத் தான் பெண்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டு இருக்கிறது.
சீரியல்கள் இப்படி என்றால் மற்ற நிகழ்ச்சிகள் இதற்கும் மேல் இருக்கிறது. சினிமாவை மிஞ்சக் கூடிய வகையில் காமம் நிறைந்தவற்றை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரெடி ஸ்டடி போ என்ற நிகழ்ச்சி நைட் பத்து மணிக்கு மேல் போட வேண்டிய நிகழ்ச்சி என்று சமூக வலைத் தளங்களில் கருத்துக்கள் பரவிக் கிடக்கிறது. அதே போல அந்த டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் ஆடியன்ஸ் கூட்டத்தில் எதாவது ஒரு அழகான பெண் இருந்து விட்டால் அவரை மட்டும் பத்து பதினைந்து தடவை காட்டுகிறார்கள். அதுவும் அவர்களது முகத்தில் கூட போகஸ் இருப்பதில்லை, வேறு எங்கெங்கோ கவனிக்க வைக்கும் வகையில் போகஸ் இருக்கிறது. அந்த டிவியின் யூடூப் புரோமோ வீடியோக்களின் தம்பினால்களில் பெரும்பாலும் பெண்கள் படம் தான் இருக்கிறது. பெண் படத்தை தம்ப்னலாக வைத்தால் தான் பார்வைகள் கூடும் என்ற கேவலமான மனப்போக்கு. அடுத்ததாக சீசன் சீசனாக நடந்து வரும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டால் அங்கு அதற்கும் மேல். மாடர்ன் உடை அணிந்த இளம் பெண் ஒருத்தி நடுவில் நின்று பாடல் பாடினாலோ ஆடினாலோ அவளை அந்த டிவியின் கேமிராக்கள் காட்டும் ஆங்கிள்களைப் பார்த்தால் டிவியை உடைக்கும் அளவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.
விஜய் டிவியின் லட்சணம் இப்படி என்றால் ஜீ தமிழ் டிவி அதற்கும் மேல் இருக்கிறது. சமீபத்தில் நடந்த சிறப்பு கொண்டாட்ட விழாவில் பெட் ரூமில் நடக்க வேண்டிய காட்சிகள் எல்லாம் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இப்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும் இந்த வரிசையில் இணைந்து உள்ளது. இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வீடியோ கிளிப்கள் HOT Videos லிஸ்ட்டில் வருவதற்கு வெகு காலம் இல்லை. இந்த மக்கள் தொலைக்காட்சி, பொதிகை தொலைக்காட்சி எல்லாம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவுக்கு செய்து விட்டது இந்தப் பணக்கார சேனல்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்சார் போர்டு அமைத்தால் அதிக கத்தரிகள் வாங்குவதில் விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி போன்றவை எப்போதும் தொடர்ந்து முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும்.
நிகழ்ச்சிகள் இப்படி இருக்க விளம்பர படங்கள் பெரும்பாலும் செமி பார்னோகிராபியாக இருக்கிறது. தரமற்ற பொருட்கள்( சோப்பு,சீப்பு உள்பட) கல்வி நிறுவனங்கள், தனியார் வங்கிகள் குறித்த விளம்பரங்கள் எல்லாம் முகச்சுளிப்பை உண்டாக்கும் வகையில் தான் உள்ளது.
சமூக ஊடகங்கள் எப்படி?
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி நம் உரிமையை மீட்டுத் தந்ததில் சமூக ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நற்பெயர் உண்டு. அதே சமயம், ரிசர்வ் பேங்க் அறிவித்த பிறகும் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாமல் போவதற்கும் இதே சமூக ஊடகம் தான் காரணமாக இருக்கிறது. எவனோ கிளப்பிவிட்ட வாட்சப் வதந்தி பொதுமக்களை வெகுவாகப் பாதித்து உள்ளது. மத்திய அரசின் தபால் துறை அலுவலகங்கள், வங்கி அலுவலகங்கள் தவிர மற்ற பெரும்பாலான இடங்களில் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாக் காசு தான். அந்த அளவுக்கு விபரீதம் தெரியாத சேட்டையர்கள் குவிந்து கிடக்கிறார்கள் இந்த சமூக ஊடகத்தில்.
இந்தியாவைப் பொறுத்தவரை சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஐம்பது கோடியை தொட்டு உள்ளது. (ஜியோ செய்த வேலை) இந்த ஐம்பது கோடி பேரில் கால் வாசி மக்கள் மட்டுமே சமூக ஊடகத்தை முறையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மற்றவர்கள்
எல்லோரும் எது உண்மைச் செய்தி சமூக ஊடகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் பயன்படுத்துபவர்கள்.
ஜாதி, மத கிளர்ச்சிகளை உண்டாக்கி அரசியல் நடத்த விரும்பும் சிலர், பொய்ச் செய்தி பரப்புவதை பொழுதுபோக்காக வைத்திருக்கும் சிலர் செய்யும் வேலைகள் தான் இவை. யூடுப் டிரெண்டிங்கில் இருப்பவை பெரும்பாலும் ஒன்றுக்கும் ஆகாத செய்தி தான். சமீபத்தில் டிரெண்டிங்காக இருக்கும் நிர்மலா தேவியை அவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் என்று வேறொரு புகைப்படத்துடன் இணைத்து வைத்து யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள். உண்மை என்ன என்று தேடிப் பார்த்தால் ஜெஸ்ஸி முரளி தரன் என்ற வேறொருத்தரின் புகைப்படம் அது. அவர் தற்போது
தன்னை நிர்மலா தேவியுடன் இணைத்து வைத்து செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி போலிஸில் புகார் அளித்துள்ளார்.
இதே போல பொய்ச்செய்தி பரப்புவர்களுக்கு எப்போதுமே துணையாக இருக்கிற இரண்டு அப்பாவி நபர்கள் என்றால் அது தனுஷ் மற்றும் அனிருத். ஆப்பிரிக்காவில் யாரோ இருவருக்கு டைவர்ஸ் நடந்தால் மாரி பட ஷூட்டிங்கில் இருக்கும் தனுஷ் தான் காரணம் என்கிறார்கள். கன்னட பட நாயகியின் போட்டோவை வைத்து அது கோலமாவு கோகிலாவில் நடிக்கும் அனிருத் என்கிறார்கள். ஷூட்டிங் முடியாத விஜய் படம் நூறு கோடி வசூலித்தது என்கிறார்கள். இவை உண்மையா பொய்யா என்று தெரியாமல் பகிர்ந்து கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது. கிளப்பி விடு, கொளுத்திப் போடு என்று இவர்கள் செய்யும் வேலை மிக விபரீதமானது. டுவிட்டரில் வெளியான சுச்சுலீக்ஸ் பதினெட்டு வயதுக்கும் குறைவான மாணவர்களை டுவிட்டர் வர வைத்து அந்த வீடியோக்களை பார்க்க வைத்திருக்கிறது. இவற்றிற்கு எல்லாம் காரணம் யார் நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ஸ் எவற்றில் எல்லாம் கவனத்தைச் செலுத்துவது. இதற்கு எல்லாம் தணிக்கை குழு அமைப்பார்களா என்பது தெரியவில்லை. ஒரு விஷியம் உண்மை எனத் தெரிவதற்கு முன்பு உணர்ச்சிவசப்பட்டு சில்லறைகளை சிதறவிடாமல் உண்மை எனத் தெரிந்து பகிர்ந்தால் நலம். சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை தணிக்கை குழு என்பது அதனை பயன்படுத்தும் பொதுமக்களே. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த நிறுவனங்கள் கொஞ்சம் சமூக அக்கறையோடு நிகழ்ச்சிகள் தயாரித்து ஒளி பரப்ப வேண்டும். இவற்றிற்கு எல்லாம் தனியாக குழு அமைத்து அதற்கு செலவு செய்வது என்பது வீணான செயல். அரசு கவனத்தில் மேற்கொள்ள வேண்டிய விஷியங்கள் நிறைய இருக்கும் போது மிக முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், அதிக பாலோயர்கள் கொண்டவர்கள் எல்லாரும் கொஞ்சமாவது சமூக அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்.
Be the first to comment on "தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்சார்?"