இன்று தேசிய இளைஞர் தினம்! – வீரத்துறவி விவேகானந்தர் பிறந்த நாள்!

vivekananda

இந்தியா இளைஞர்களின் கையில்!

இன்றைய இளைஞர்களிடம், உங்களுக்குப் பிடித்த பொன்மொழி ஒன்றை கூறுங்கள் என்றால் பெரும்பாலானோர் விவேகானந்தரின் பொன்மொழியையோ அல்லது அப்துல்கலாமின் பொன்மொழியையோ கூறுவார்கள்.

தேசத்தின் மிகப்பெரிய சக்தி இளைஞர்கள் என்பதை நன்கு உணர்ந்தவர். வீரம்மிக்க நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்த உலகையே மாற்றிக்காட்டுகிறேன் என்று கூறியவர். இதுபோன்ற அவருடைய பெரும்பாலான உரைகள் இளைஞர்களை தட்டியெழுப்பும் விதத்திலயே இருக்கும்.
அதனால் அவரை போற்றும் விதமாக அவருடைய பிறந்தநாளை 1984 -ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இத்தினத்தை “தேசிய வாலிபர் தினமாக” அறிவித்தது. அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் தேதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இத்தினத்தை அனுசரிக்கப்படுகிறது. வீரத்துறவியின் 155வது பிறந்தநாள் இன்று. 33வது தேசிய இளைஞர் தினம்.

33ஆண்டுகளாக இளைஞர் தினம் அனுசரித்தாலும் அதிக இளைஞர்களை கொண்ட இந்திய தேசம் இன்னும் சரியான வளர்ச்சியடையவில்லையே. இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததே.

” நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தை பார், ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை! “. இது விவேகானந்தரின் பொன்மொழிகளுள் ஒன்று. ஆனால் இளைஞர்கள் இந்தியாவில் வெகுவாக இருந்தாலும் அவர்களின் திறனை பயன்படுத்த தெரியாமல் தான் இந்திய நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அவர்களை தேவையற்ற விஷியங்களில் நேரத்தை வீணடிக்க வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இளைஞர்களின் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை வழங்கவதற்கு வழிசெய்ய முடியாமல் கட்சிப்பெருமையை நிலைநாட்டும் திட்டங்களையே செயல்படுத்தி வருகிறது. அதனாலயே, லட்சக்கணக்கான திறமைமிகுந்த இளைஞர்கள் வேற்று தேசத்திற்கு சென்று தங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படிபட்ட குறைகள் காலங்காலமாக நிலவி வருகிறது. வருடந்தோறும் இதே நாளில் பாரத பிரதமர்கள் தேசிய இளைஞர் தினத்தினையொட்டி சிறப்புரை ஆற்றுகிறார்களே தவிர இளைஞர்களின் சக்தியை எப்படி திறம்பட பயன்படுத்த தவறிவிடுகிறார்கள். அதனால் தான் கோடி இளைஞர்களை வைத்திருந்தாலும் ஒலிம்பிக்கில் பத்து பதக்கங்களைக் கூட வெல்ல முடிவதில்லை.

விவேகானந்தரின் இளமை!

கொல்கத்தா நகரில், வக்கீல் விஸ்வநாத தத்தருக்கும் – புவனேஸ்வரி அம்மையாருக்கும் 1863ம் வருடம் ஜனவரி 12ல் மகனாக பிறந்தார். அவருக்கு நரேந்திரன் என்று அவருடைய பெற்றோர்கள் பெயர் இட்டனர். சிறுவயதிலிருந்தே தன் அம்மையாரிடம் புராணக்கதைகள் கேட்டு வளர்ந்ததால் அவருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு தோன்றியது. தியானத்தில் அதிக ஈடுபாடு உடையவர். பின்னாளில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சிறந்த மாணவராக விளங்கினார். விவேகம் மிக்க இந்த இளைஞனை விவேகானந்தா என்று பெயரிட்டவர் அவர் குருநாதரே.

வீரம்மிக்க இளைஞன்!

கொல்கத்தா நகரில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் சாலையில் குதிரை வண்டி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த வண்டியின் உள்ளே தாயாகி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் பயணித்துக் கொண்டிருந்த வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரை திடீரென்று கட்டுப்பாடற்று வேகமாக ஓடத் தொடங்கியது. குதிரை வளர்த்தவரோ சாலையில் விழுந்து கிடக்க, குதிரை வண்டி வேகமாக ஓடியது. உள்ளே செய்வதறியாத பெண் மரண பயத்துடன் அமர்ந்திருக்க, மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தது. அப்போது சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த விவேகானந்தர் சட்டென குதிரையின் மீது பாய்ந்து அடக்க முயற்சித்து தோல்வி கண்டார். தரையில் விழுந்து கைகால்களில் ரத்தகாயங்கள் ஏற்பட்டது. இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து குதிரையை அடக்கி, அந்த பெண்ணை காப்பாற்றினார். அப்போது அவருக்கு வயது பதினைந்து. இந்த சம்பவத்தை கண்கூடாக பார்த்து வியந்த மக்கள்கூட்டம் அவரது வீரத்தை வெகுவாகப் பாராட்டினர். ஆனால் விவேகானந்தர் அந்த பாராட்டுகளையெல்லாம் சிறிதும் காதில் போட்டுக்கொள்ளாமல் இயல்பாக அந்த இடத்தை கடந்து சென்றார். இந்த பாராட்டுக்களை அவர் விரும்பவில்லை. காரணம் அவர் அந்த செயலை சாகசமாக எண்ணவில்லை. தன்னுடைய கடமையாக எண்ணினார். சகமனிதன் இக்கட்டான சூழலில் இருக்கும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காப்பாற்றுவது இன்னொரு சகமனிதனின் கடமை தானே. இது போன்ற எண்ணம் இன்றைக்கு எத்தனை இளைஞர்களிடம் உள்ளது. கண்முன்னே இளைஞி கத்தி குத்துப்பட்டாலோ, குடும்பம் தீக்குளித்தாலோ, சகஇளைஞர்கள், சகமனிதர்கள் அவர்களை உடனே காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் அல்லது செல்போனில் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கவனத்தை ஒருங்கிணைக்கும் திறன்!

ஒரு முறை விவேகானந்தர் வெளிநாட்டிற்கு ஆன்மிக உரை ஆற்றச் சென்றிருந்தார். அப்போது குளத்துக்கரையில் மிதந்துகொண்டிருந்த முட்டை ஓடுகளை சரியாக குறிபார்த்து சுடும்போட்டியை நான்கு தங்களுக்குள் நடத்திக் கொண்டு இருந்தனர். சிறுவர்கள் யாரும் அதை சரியாக குறிபார்த்து சுடவில்லை. அவர்களை கவனித்துக்கொண்டிருந்த விவேகானந்தர், அவர்களிடம் சென்று, ” நான் முயற்சிக்கலாமா…” என்று வினவி அவர்களிடமிருந்து துப்பாக்கியை வாங்கினார். பட்பட்டென்று அந்த முட்டை ஓடுகளை சுட்டுத் தள்ளினார். சிறுவர்களுக்கோ ஆச்சர்யம். ” துப்பாக்கி சுடுவதில் நன்கு பயிற்சி பெற்றவரா நீங்கள்… ” என்று சிறுவர்கள் வினவ, ” என் வாழ்க்கையில் இப்போதுதான் முதல்முறையாக துப்பாக்கியை தொடுகிறேன்… ” என்றார். முதல்முறை துப்பாக்கியை கையில் தூக்கினாலும் எந்த பதட்டமுமின்றி அவரால் அந்த முட்டை ஓடுகளை சுட்டுத்தள்ளியதற்கு காரணம், கவனத்தை ஒருங்கிணைத்து தன்னுடைய குறிக்கோளை அடையும் திறன். இன்றைய இளைஞர்களிடம் இந்த திறன் இருக்கிறது. அதைவிடுங்கள், முதலில் எத்தனை பேருக்கு குறிக்கோள் இருக்கிறது. ” தம்பி உன்கிட்ட இருக்குற தனித்திறமை என்னப்பா… உன் லட்சியம் என்ன? ” என்று கேட்டால் முக்கால்வாசி இளைஞர்கள் திருதிருவென முழிப்பார்கள் அல்லது இந்த கேள்வி கேட்பவரை கெட்ட வார்த்தையில் திட்டி அனுப்புவார்கள். இதுதான் இன்றைய இந்திய இளைஞர்களின் லட்சணம். இளைஞர்களின் இந்த நிலைமைக்கு காரணம் சரியான வழிகாட்டுதல் இல்லாததே. மது, மாது, சினிமா, கிரிக்கெட் இந்த நான்கு விஷியங்களுக்கும் இளைஞர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள். மது அருந்தும் பழக்கம் முன்பைவிட இப்போதைய இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. பார்ன்வெப்சைட் பார்ப்பதில் உலக அளவில் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். சினிமா நடிகர்களுக்காக சண்டை போட்டே பாதி இளைஞர்களின் இளமைக்காலம் வீணாகப் போகிறது.

இன்று பாரத பிரதமர் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு சிறப்புரை ஆற்றுவார். டுவிட்டரில் ஏதேனும் பதிவிடுவார். அடுத்த வருடமும் இதே நாளில் தேசிய இளைஞர் தினம் அனுசரிக்கப்படும். அவரும் சிறப்புரை ஆற்றுவார். டுவிட்டரில் இந்த வருடம் பதிவிட்டதே கொஞ்சம் மாற்றி அடுத்த வருடம் பதிவிடுவார்.

இந்தியா வழக்கம்போல அதே நிலையில் இருக்கும்! நாமும் நம்மை நாம் திருத்திக்கொள்ளாமல் செம்மறி ஆட்டுக்கூட்டமாய் காப்பி பேஸ்ட் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்போம்!

Related Articles

தி ஜானகிராமனின் “அம்மா வந்தாள்R... ஒவ்வொருவரும் தன் வாழ்வில் கண்டிப்பாக படிக்க வேண்டிய பத்து தமிழ் நாவல்கள் என்று பட்டியலிட்டால் அவற்றில் தி ஜானகிராமனின் அம்மா வந்தாள் புத்தகம் கண்டிப்ப...
“தப்ப நான் செஞ்சுட்டு தண்டனைய அவனு... இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் புனித். இவர் இயக்கி உள்ள " காதல் ஒன்று கண்டேன் " என்ற குறும்படம் யூடூப்பில் வெளியான ஒரே நா...
இன்றைய தண்ணீர் விலை? – லிட்டருக்கு... மனிதர்களாகிய நாம், தனது சுயநலத்துக்காக இயற்கையை கொன்று வருவதோடு மட்டும் அல்லாமல் இன்றைய தண்ணீர் விலை? லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு? என்று கேட்கும் ...
கலைஞர் கருணாநிதி எழுதிய பராசக்தி திரைப்ப... சமீபத்தில் நடந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பராசக்தி படம் திரையிடப்பட்டது. பல ஆண்டுகள் ஆனாலும் பேசக்கூடிய வியக்ககூடிய படமாக இருக்கும் இந்தப் படத்த...

Be the first to comment on "இன்று தேசிய இளைஞர் தினம்! – வீரத்துறவி விவேகானந்தர் பிறந்த நாள்!"

Leave a comment

Your email address will not be published.


*