இனி பயணங்களில் வண்டி ஆவணங்களைச் சுமந்து செல்ல வேண்டிய அவஸ்தை இல்லை. உங்கள் திறன்பேசியில் டிஜிலாக்கர் செயலியில் கோப்புகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வண்டி ஆவணங்களைப் போக்குவரத்து காவலர்களிடம் காண்பித்தால் போதுமானது. கர்நாடக மாநிலத்தில் இந்தத் திட்டம் செயல் வடிவம் பெற்றுள்ளது.
‘டிஜிலாக்கர் செயலியில் கோப்புகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ் மற்றும் உமிழ்வு சான்றிதழ் போன்ற வண்டி ஆவணங்களை இனி போக்குவரத்து காவலர்களிடம் காண்பிக்கலாம். அவை அச்சு ஆவணத்துக்கு நிகரான ஒன்றாகக் கருதப்படும். விரைவில் வண்டியின் காப்பீடு ஆவணமும் இந்தப் பட்டியலில் இணைய இருக்கிறது’ என்று கடந்த செவ்வாயன்று போக்குவரத்து கமிஷனர் தயானந்த தெரிவித்தார். இருப்பினும் வழக்குகளின் போது டிஜிலாக்கர் செயலி ஆவணங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
ஆதாருடன் இணைக்கப்படுகிறது
சமீபத்தில் கர்நாடக மாநில மின் ஆட்சித்துறை, போக்குவரத்து துறையை டிஜிலாக்கர் செயலியுடன் இணைத்திருந்தது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்கள் அச்சு ஆவணங்களை டிஜிலாக்கர் செயலியில் சேமிக்க முடியும். இதன் உண்மைத்தன்மையை டிஜிலாக்கர் செயலி ஆதாருடன் இணைக்கப்படும் போது சரிபார்க்கப்படும்’ என்று கூடுதல் காவல்துறை கமிஷனர் ஹிதேந்திரா தெரிவித்தார்.
டிஜிலாக்கர் என்றால் என்ன?
டிஜிலாக்கர் என்பது திறன்பேசியில் இயங்கும் ஒரு செயலி. அது ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு குடிமகனுக்கு அரசு தரும் அனைத்து ஆவணங்களையும் இதில் பதிவேற்றிக்கொள்ளலாம். ஐடி சட்டம் 2000த்தின் படி, அப்படி டிஜிலாக்கரில் பதிவேற்றப்படும் ஆவணங்கள், அசல் அச்சு ஆவணங்களுக்கு நிகரான ஒன்றாகவே கருதப்படும்.
உதவிக்கு அழையுங்கள்
போக்குவரத்த்து துறை சார்ந்த அனைத்துப் புகார்களுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் உதவி மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் வாட்சப், டிவிட்டர், மின்னஞ்சல், பேஸ்புக் மற்றும் தொலைப்பேசி வாயிலாகவும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
வாட்சப் : 9449863459
ட்வீட்டர் : @tdkarnataka
பேஸ்புக் : tdkarnataka
மின்னஞ்சல் : tdkarnataka@gmail.com
தொலைப்பேசி : 080-25136500
Be the first to comment on "வண்டி ஆவணங்களை இனி டிஜிலாக்கர் செயலி மூலமும் காண்பிக்கலாம்"