Comparing one person with another is brutal ( ஒருத்தர நீங்க ஏன் மத்தவங்க மாதிரி இல்லைன்னு
கேட்குறது மிகப் பெரிய வன்முறை ) – இயக்குனர் ராம் எழுதி இயக்கி இருக்கும் பேரன்பு படத்தில்
வரும் முக்கியமான வசனம் இது.
இந்த comparison என்பது ஏன்? எதற்காக? இதனால் உண்டாகும் பிரச்சினைகள் என்னென்ன
என்பதை பற்றி யோசித்திருக்கிறோமா?
ஒருவர் நம்மை வேறு ஒருவருடன் வைத்து ஒப்பீடு செய்தால் நமக்கு எரிச்சல் வரும். ஒப்பீடு
செய்பவரை மனதுக்குள் அசிங்கம் அசிங்கமாக கெட்ட வார்த்தையில் திட்டுவோம். காரணம்
நம்மை மற்றவருடன் ஒப்பீடு செய்வதற்கு யாருக்கும் அருகதை இல்லை.
நான் யார்? என்னுடைய திறமை என்ன? நான் வளர்ந்த சூழல் என்ன? இது எதுவும் தெரியாமல்
என்னை வேறு ஒருவனுடன் ஒப்பீடு செய்து பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? அல்லது
அவன் யார்? அவனுடைய குணாதிசியம் என்ன? வளர்ந்த சூழல் என்ன? திறமை என்ன? இவை
எதையும் பார்க்காமல் மிக எளிதாக ஒப்பீடு செய்து பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது?
என்ற கேள்வியை எழுப்புகிறோம்.
இப்படி ஒருவரை மற்றொருவருடன் கம்பேர் செய்பவர்கள் நிச்சயம் Intravert என்றால் என்ன?
Extravert என்றால் என்ன? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
Intravert என்றால் என்ன?
உள்ளுக்குள்ளயே போதுமான ஆற்றல் இருக்கிறது என்பது இதன் அர்த்தம். இவர்களுக்கு
இயற்கையாகவே மூளை தூண்டுதல் இயற்கையிடம் இருந்து தன் அனுபவங்களில் இருந்து
சிந்தனையில் இருந்து கிடைக்கிறது.
அதனாலயே அவர்கள் வேறு நபர்களுடன் தொடர்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லாமல்
போகிறது. எப்போதும் சிந்தித்த படி மௌனமாக இருப்பார்கள். மென்மையான புன்னகை,
போதுமான அளவு பேச்சு என்பது தான் இவர்களுடைய குணாதிசியம்.
யாருமே கண்டுகொள்ளாத ஓடி ஆடித் திரியும் குழந்தைகளை ரசித்தல், தேர்ந்தெடுத்தவர்களின்
உரையாடலை கவனித்தல், புதுமையை தனிமையை கண்டுபிடிப்பை விரும்புதல், கற்பனை
திறனை வளர்த்தல், பிடித்தமான புத்தகங்களை வாசித்தல், கும்பலோடு கோவிந்தா போடாமல்
இருத்தல், தேவைக்காக ஆமாம் சாமி போடாமல் தனித்திருப்பது இவர்களின் சிறப்பம்சம்.
அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன், திரைப்பட இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் என உலகை தன்
பக்கம் கவனிக்க வைத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அதிகம் வாய் பேசாதவர்களே.
இடம் பொருள் ஏவல் அறிந்து தேர்ந்து எடுத்த வார்த்தைகளால் முன்னேறிச் செல்வது இவர்களின்
மற்றொரு சிறப்பம்சம் எனவும் கூறலாம். அதே சமயம் Intravert களால் மட்டுமே சாதிக்க முடியும்
என்று கூறிவிட முடியாது.
Intravert ல் இரண்டு பிரிவு உண்டு. ஒன்று Unstable Intravert. மற்றொன்று Stable Intravert.
பேச ஆசைப்பட்டு தயங்கி பயந்து போதல், பதட்டப்படுதல், மன அழுத்ததிற்கு உள்ளாதல்
போன்ற குணாதிசியங்கள் உள்ளவர்கள் Unstable intravert என்றும் பேச ஆசைப்பட்டு
கட்டாயமாக பேசிவிடுதல், loose talk விடுதல் போன்றவற்றால் சில சமயங்களில் உளறுவாய்
என்று வாங்கி கட்டிக்கொள்பவர்களும் பிறரால் தனிமைபடுத்தப்பட்டு மன உளைச்சலுக்கு
உள்ளாகும் குணாதிசியங்கள் உள்ளவர்கள் Stable Intravert என்றும் வரையறுக்கப்படுகிறார்கள்.
இப்படி Intravert குணாதிசியம் உடையவர்களால் சகஜமாகப் பேச முடியாது. அதிகம் நபர்களை
கூட வைத்திருக்க பிடிக்காது. அதிகம் நண்பர்கள் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். ஓரிரு
நண்பர்கள் மட்டுமே அவர்களை புரிந்துகொண்டவராக இருப்பார்கள். அதேபோல அந்த ஓரிரு
நண்பர்களும் உண்மையானவர்களாக இருப்பார்கள்.
திருவிழாக்கள், திருமண விழாக்கள் போன்ற கூட்டம் நிறைந்த கலகலப்பான இடத்தில் அவர்கள்
மட்டும் மௌனமாக சுற்றி நடப்பவற்றை கவனிப்பவராக இருப்பார்கள். அந்த சமயங்களில் நாம்
அவர்களை தவறாகப் புரிந்துகொண்டு ஊமைக்கோட்டான், பேக்கான், பொட்டை, தொடை
நடுங்கி, உம்மனாமூஞ்சி, தூங்கமூஞ்சி என்று சகட்டுமேனிக்கு அவரைப் பற்றி தாழ்த்தி பேசத்
தொடங்கிவிடுகிறோம். குறிப்பாக “ஏய்… மத்தவங்கலாம் எப்படி கலகலன்னு இருக்காங்க… நீ மட்டும் ஏன் இப்படி உர்ருன்னு இருக்க… பையன பாரு மயிர பாரு…” என்று சட்டென்று அவர்களுடைய சுயமரியாதையை காலி செய்து கம்பேரிசன் என்கிற பெயரில் அத்தனை பேர்
முன்பு மட்டம் தட்டுகிறோம்.
ஆனால் Intravert கள் தான் அதிக சாதனைகள் நிகழ்த்தியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்
சுற்றியிருப்பவர்களால் மட்டம் தட்டப்பட்டு வெற்றியாளர்களாக மாறினாலும் முடிந்தவரை
தற்பெருமை பேசுவதை விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களை தொடக்க
காலத்தில் கண்டபடி கேலி செய்து மட்டம் தட்டியவர்கள் இப்போது “பரவாலயே… பையன்
அமைதியா இருந்து சாதிச்சிட்டான்… பையன்னா இப்படி இருக்கனும்… என் வீட்டுலயும் ஒன்னு
இருக்குதே… ” என்று இடத்திற்குத் தகுந்தது போல் பச்சோந்தியாக மாறி தங்கள் முகத்தில்
தாங்களே சாணி அடித்துக் கொள்வார்கள்.
Extravert என்றால் என்ன?
உள்ளுக்குள் போதுமான ஆற்றல் இல்லாததால் சுற்றி இருக்கும் மனிதர்களிடம் இருந்து மூளை
தூண்டுதலுக்கான ஆற்றல் பெறப்படுகிறது. இவர்களால் பேசாமல் இருக்க முடியாது என்பது
இவர்களின் அடையாளம்.
கிட்டத்தட்ட Intravert ன் எதிர் குணாதிசயம் உடையவர்கள் என்று கூறலாம். தனிமை பிடிக்காது,
பெரும்பாலும் படையுடன் சுற்றுவார்கள், புத்தகத்தை திறந்த சில நிமிடங்களிலயே தூங்கி
விடுவார்கள், பேசியே சமாளிக்கும் காரியம் சாதிக்கும் திறமை உடையவர்களாக இருப்பார்கள்.
வாயுள்ள பிள்ள பொழைச்சிக்கும், வாய் இல்லனா இவனலாம் நாய் தூக்கிட்டு போயிடும்
என்பதற்கேற்ப இவர்களின் செயல்பாடுகள் இருக்கும். இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்து
இருத்தல், துறுதுறுவென சுற்றித் திரிதல் என்று அலப்பறை செய்வார்கள்.
இவர்களுக்கு எக்கச்சக்கமான நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர்
உண்மையான நண்பர்கள் என்பதை இவர்களால் கண்டறிய முடியாது. காரணம் சிந்தனைக்கும்
கவனிப்புக்கும் இவர்களால் நேரம் ஒதுக்க முடியாததால் கடைசி வரைக்கும் உடன் சுற்றித் திரியும் எல்லோரும் நல்லவர்கள் என்று அப்பாவியாக நம்பித் திரிவார்கள்.
ஒரு இடத்தில் நிலவும் பொருளற்ற மௌனத்தை கலைப்பவர்களும் இந்த அப்பாவிகளே. பலருக்கு
பஞ்சாயத்து செய்து வைத்து கோமாளி ஆவதும் இந்த அப்பாவிகளே.
இப்படிபட்ட சில அப்பாவிகளால் திருவிழா, திருமண விழா போன்ற இடங்களில் சும்மா இருக்க
முடியாது. அங்க இங்க என்று அலைந்து எதோ ஒன்று செய்துகொண்டே இருப்பார்கள்.
எதிர்பாராத சமயங்களில் இவர்களுடைய செயல்கள் ஆபத்தை உண்டாக்கிவிட்டால் அந்த
இடத்தில் கம்பேரிசன் புகுந்துவிடுகிறது.
ஒரு இடத்துக்கு வந்தா கையும் காலையும் வச்சுக்கிட்டு சும்மா இருந்தா தான ஆவும் அந்தப்
பையன் பாரு எவ்வளவு அமைதியா இருக்கான்… நீயும் தான் இருக்கியே அடங்காப்பிடாரி,
வாயாடி, ஊதாரி, கோமாளி என்று வார்த்தைகளால் வாட்டி எடுத்து அவர்களின் முகம் வாடலுக்கு
காரணமாக அமைந்துவிடுகிறோம்.
Stable Extravert, Unstable Extravert என்று Extravertல் இரண்டு வகை உண்டு.
தேவை உள்ள இடத்தில் பேசி காரியம் சாதிப்பவர்கள் Stable Extravert என்றும் தேவை
இருந்தாலும் தேவை இல்லாவிட்டாலும் பேசி இந்த நிகழ்வின் இப்படி ஒருத்தன் இருந்தான்
என்பதை நினைவுபடுத்தும் வகையில் பேசிப்பேசியே மனதில் இடம்பிடிப்பவர்கள் Unstable
Extravert என்றும் வரையறுக்கப்படுகிறார்கள்.
கம்பேரிசன் இயற்கைக்கு மாறானது :
ஓரினச் சேர்க்கையாளர்களின் பிரச்சினை இயற்கையானது, திருநங்கைகளின் பிரச்சினை
இயற்கையானது என்பதை கடந்த சில நாட்களாக பலர் புரிந்துகொண்டு வருகிறார்கள்.
அதேபோல Intravert ம் Extravert ம் இயற்கையானது. நீ ஏன் அவன மாதிரி அமைதியான
மனிதனா மாறக்கூடாது, நீ ஏன் அவன மாதிரி கலகலன்னு இருக்க மாட்டிங்குற என்ற கேள்விகள்
எல்லாம் உச்சகட்ட அறியாமை.
நீ நீயாக இரு என்று சொல்பவர்கள் இங்கு மிகக் குறைவே. நான் அவரைப் போல ஆக வேண்டும்
என்று சபதம் எடுத்துக்கொள் என்று சொல்பவர்கள் மிக அதிகம். இந்த தவறான வழிகாட்டுதல்களால் ஒருவனின் தனித்தன்மை என்பது மறைக்கப்படுகிறது. இந்த கம்பேரிசனால் பிடிக்காத வேடத்தை ஏற்று அவன் கடைசி வரைக்கும் நடிகனாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
வன்முறையின் பிறப்பிடம் :
இப்படி இரண்டு தரப்பட்ட மனிதர்களும் நேசத்துக்கு உரியவர்கள் என்றாலும் இவர்களை பிரித்து
வைத்து பார்ப்பது கம்பேரிசன் என்ற மூளையற்ற செயல்.
ஒரு வீட்டில் அண்ணன் Intravert ஆகவும் தம்பி Extravert ஆகவும் இருந்தால் அந்த இடத்தில்
எளிதாக கம்பேரிசன் நுழைந்துவிடுகிறது. பெருசு வாயில்லா பூச்சி, ஏமாந்தது என்று மட்டம் தட்டி,
சிறுசு உசாரு, நல்ல விவரம் என்று உயர்த்திப் பிடிக்கிறோம். அல்லது பெருசு அமைதி, சிறிசு
அடங்காப் பிடாரி என்று மட்டும் தட்டுகிறோம். இந்தக் கம்பேரிசன்களால் சகோதரர்களுக்குள்
இடைவெளி விழுந்துவிடுகிறது. கடைசியில் சொத்துக்காக நடுரோட்டில் விழுந்து சண்டை
போடுவது, ஒருத்தரை ஒருத்தர் தாக்கி கொள்வது என்று வெகு இயல்பாக இரண்டு நபர்களுக்குள்
வன்முறை பிறந்துவிடுகிறது.
கம்பேரிசன் என்பது வார்த்தைகளால் நிகழ்த்தப்படும் வன்முறை என்பதை மதா, பிதா, குரு என்ற
படிநிலைகளில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மூளை உள்ளவர்கள் கம்பேரிசன் செய்ய
மாட்டார்கள். நீங்கள் எப்படி?
Be the first to comment on "நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் நீங்கள் யார்?"