கேட்கலனா கொல்வோம் – சாதிவெறியன்களுக்கு சாட்டையடி தந்த தமிழா தமிழா !

If you do not hear, will be kill - caste mania people got whip

சமீபத்தில் பரியேறும் பெருமாள் வெளியாகி சமூகத்தில் இந்த சாதி எப்படி குரூரமாகச் செயல்படுகிறது என்ற விவாதத்தை உண்டாக்கியது. ஒசூர் ராகவேந்திரா தியேட்டரில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு வந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஒசூர் நல்ல முன்னேற்றம் அடைந்துவிட்டது போல இவ்வளவு முற்போக்கா இருக்கே என்று வியக்க வைத்தது.  அப்படிபட்ட ஒசூரில்   சமீபத்தில் நடைபெற்ற ஆணவக் கொலை அனைவரையும் திடுக்கிட வைத்து உள்ளது. இந்நிலையில் ஜீ தமிழ் டிவியில் கரு. பழனியப்பனின் தமிழா தமிழா நிகழ்ச்சி,  ” காதலை விட ஜாதியே முக்கியம், ஜாதியை விட காதலே முக்கியம் ” என்ற தலைப்பில் விவாதம் நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்க சில விஷியங்கள் நடந்தன அவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

1. சாதி தான் முக்கியம் என்பவர்களுக்கு காதல் வந்துள்ளதா? என்ற கேள்வி காதலை விட சாதியே முக்கியம் என்ற தரப்பினரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் :

* பார்த்ததும் காதல் வந்தாலும் குடும்பத்துக்கு செட்டாகுமானு யோசிச்சு பாத்துட்டு செட்டாகுதுன்னு தோணுச்சுனா பிரிந்திடுவோம்…

* அத்தை பொண்ணு மாமா பொண்ணு என்று சொந்த ஜாதி பெண்ணை மட்டுமே காதலிக்க வேண்டும்…

* அக்கா தங்கச்சி அந்தப் பெண்ணுடன் பழக கூடிய சாதியா ? னு பார்ப்போம். புழங்குற சாதி இல்லைன்னு தெரிஞ்சதும் காதலை விட்றுவோம்… இப்படி குடும்ப சூழல் பாத்துட்டு காதலை விட்ருவோம்.

2. சாதியை பெருமையாக உணர்ந்த தருணம் ? இந்தக் கேள்வியும் சாதியை ஆதரிப்பரிடம் முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் :

* முன்னபின்ன அறிமுகமில்லாத நபராக இருந்தாலும் நம்ம சாதிக்கார பையன் உடன் நம்பி பெண்ணை அனுப்பலாம்… என்று ஒருவர் சொன்னதற்கு, காதலும் அறத்தை உடையது. அறத்தை முன் நிறுத்துவதால் சாதியை காட்டிலும் காதல் பாதுகாப்பானது என்ற கருத்தை முன் வைத்தார்.

* உதவுவதை சாதியின் பெருமையாகப் பார்க்கிறோம்,  குழந்தை உடைய பெண்மணிக்கு உதவியது எங்களின் சாதி குணமாக பெருமையாகப் பார்க்கிறேன் என்றார் ஒருவர்.

* பிஎபிஎல் படித்த பெண் கல்லூரியில் என்ன சாதி என்று விசாரித்த போது தன்னுடைய சாதியை சொன்னதும் எதிரில் இருப்பவர்கள் மிரண்ட போது பெருமை அடைந்ததாக குறிப்பிடுகிறார். அவரிடம் சாதிகள் இல்லையடி பாப்பா என்று கற்றுத் தந்த டீச்சர் ஒரே சாதியா… என்ற கேள்வி எழுப்ப, அதெல்லாம் வெறும் மார்க்குக்கு மட்டுமே என்று அபத்தமான பதிலை அளித்தார் அந்தப் பெண்மணி.

3. நமக்கு இந்த காதல்லாம் வேணாம்ப்பா என்று அவனுடைய அடிப்படை உணர்வை முடக்குவது ஏன் ? அத எப்படி பூடகமா சொல்லுவிங்க… என்ற கேள்வி மீண்டும் சாதியை ஆதரிப்போரிடம் எழுப்ப பட்டது. அதற்கு சிலரின் பதில்கள் :

* பத்து வயசு பொண்ணுகிட்ட ஒருத்தன் லவ் லெட்டர் கொடுத்தா சாதிய கேளு. வேற சாதின்னா செட் ஆகாதுன்னா சொல்லு என்று சொல்லிக் கொடுக்குறேன் என்றார் ஒருவர். அதற்கு இளைஞர் ஒருவர் கொதித்து எழுந்து, அப்பா நல்லொழுக்கம், படிப்பு பற்றி பேசுவது தான் சரியானது.  படிப்பு, நல்லொழுக்கம் சோறு போடுது. சாதி சோறு போடுதா? என்ற வினாவை எழுப்ப,

* இது இரண்டும் திருமணத்துக்குத் தானே. அதற்குத் தான் சாதிப்பெருமையை குடும்ப பெருமையை சொல்லி வளர்க்குறோம். சாதி சோறு போடுதான்னு சொல்றிங்களே ? சாதி சலுகை இல்லாம சோறு திங்குறிவிங்க எத்தனை பேர்? என்று பதில் கேள்வி எழுப்பினார் சாதியை ஆதரிக்கும் படித்த பெண்.

* காதல் கடைசி வரைக்கும் வராது ஆனா சாதி வரும் என்று சொல்லி புரிய வைப்போம்.

* சுயசாதில மட்டுமே திருமணம்.,வேறு சாதிகூட நட்பு வச்சிக்கலாம். ஆனா நட்போட நிறுத்திக்கனும் என்று சொல்லி புரிய வைப்போம்.

* நிஜ சம்பவத்த சொல்லி பயமுறுத்தி புரிய வைப்போம்…

இப்படி அதிகாரமா சொல்றது தனிமனித உரிமை முடக்கம் இல்லையா? என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் :

இந்த உலகமே மண்ணுக்கு பொண்ணுக்கு செத்திருக்கு… என்று ஒருவர் சொல்ல, ஆனா எந்தப் பொண்ணுக்குனு சொல்ல நீ யாரு?னு எதிர் கேள்வி எழுப்பினார் இளைஞர் ஒருவர்.

இப்படிபட்ட சாதி வெறிப்பிடித்த பெற்றோரை மெச்சூரிட்டி வரும்போது பிள்ளைகளே  எதிர்ப்பார்கள் என்ற உண்மையை சொன்னார் ஒருவர்.

4. சாதியை மீறி காதல் செய்வது என்பது நாடக காதல் ? அல்லது திட்டமிட்ட காதல் ? என்று சொல்வது ஏன் ? என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் :

வசதியான பெண்ணை உயர்சாதி பெண்ணை குறிவைத்த காதல் என்பது தான் நாடக காதல் அல்லது திட்டமிட்ட காதல் என்று வரையறுக்கப்படுகிறது. இது போன்ற காதல் செய்யும் பையனை வர வைத்து வெட்டினோம் என்பதை குறிப்பிட்டார் ஒருவர்.

திண்டுக்கல் சிவகுருநாதன் என்ற இளைஞரை பெண்ணுடைய செல்போன் மூலமாக நைசாக அழைத்து கண்டந் துண்டமாக வெட்டி இருக்கிறார்கள் சாதி வெறி பிடித்த மிருகங்கள். அந்த இளைஞனின் அம்மா அப்பா நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டிருந்தார்கள். அவர்கள்,  ” பெண் நர்ஸ்… பெண் மூலமாக நைசாக வரவழைத்து… முப்பது வருசமா கஷ்டப்பட்டு வளத்த பிள்ளைய கூறுபோட்டு குடுத்துட்டாங்க… எங்களுக்கு சொத்து பத்து எதுவும் கிடையாது… எல்லாம் பசங்க தான்… நல்ல படிப்பு… 20000 சம்பளம்னு நல்லா இருந்தா பையன ஒன்னத்துக்கும் இல்லாம பண்ணிட்டாங்க… எங்களுக்கு இன்னொரு மகன் இருக்கான்… அவன் ஒருவேள வேற சாதி பெண்ண காதலிச்சானா… நான் இந்த சாதிப் பெண்ண காதலிக்குறேன்னு இந்த உலகத்துக்கு  உலகத்துக்கு சொல்லிட்டு போ… செடி கொடி மண்ணு கூட காதலிக்குது… என் பையன் உனக்கு காதல் வரக்கூடாதா ? என்ற சொல்வோம் என்றனர் அந்த பெற்றோர்.

5. எப்படி பிரிப்பிங்க ? என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் :

* ஊரே எதித்து நிக்கும். அப்பாவுக்கு வலுவில்லனாலும் சொந்தபந்தம் உன்ன உசுரோட விடாதுனு சொல்லி பிரிச்சிடுவோம்…

* நான் வேற சாதி பெண்ணை காதலிக்குறேன்னு சொன்னதும் நண்பர்களாக இருந்தவர்கள் என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டு காதலிக்கும் பெண்ணை தனியாக அழைத்து உனக்காக அந்த சாதிக்கார பையன நரபலி கொடுக்க போறியா… என்று மிரட்டி உள்ளனர். இப்படி மிரட்டி மிரட்டியே காதல போராட்டத்தின் வடிவமா மாத்திட்டாங்க… என்றார் நிஜத்தில் சாதி ஆதிக்கத்தை சந்தித்து வரும் இளைஞர்.

* எல்லாம் சொல்லிப் பாப்போம்…  கேட்கலனா கொலை தான் பண்ணுவோம்… என்றார் இன்னொருவர். இவர் இப்படி சொன்னதும் கொதித்த கரு. பழனியப்பன்,

6. கொலை பண்ண உங்களுக்கு என்ன உரிமை இருக்கு ? என்ற வினா எழுப்பினார். அதற்கு அவர்கள் அளித்த பதில் :

பெத்தே வளத்து ஆளாக்குனேன். கஷ்டப்பட்டு வளத்தி ஆளாக்கினது நானு ஆனா என் பேச்சை கேட்காம போகும் போது என்னுடைய தன்மானம் பாதிக்கப்படும் போது வர்ற கோபத்துக்கு கொலை தான் செய்வேன்… என்று சொல்ல, சாதிக்காக கொல்வது பெருமை என்றால் இந்த சமூகம் நாசமாகப் போகட்டும்… என்று கொதித்தார் கரு. பழனியப்பன்.

இதை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எழுத்தாளர் ஆதவண் தீட்சண்யா கூறியது :

* இந்த சாதியும் இந்த சாதியும் சேரக் கூடாதுன்னு பயாலிஜிக்கல் காரணம் எதுவும் இல்லை ? நம்பிக்கையும் பிடிமானமும் மட்டுமே ? சாதி ஆட்களை மட்டும் பிரிக்கவில்லை. நிலத்தை, கல்வியை, அதிகாரத்தை பிரிக்கிறது. இப்போது தாழ்ந்த சாதிக் காரர்களையும் தங்களோடு இணைத்துக் கொண்டு சமத்துவம் என்றால் அவர்களுடைய அதிகாரம் பகிரப்படுவது அவர்களால் தாங்க முடியவில்லை. குறிப்பாக அதிகாரப் பகிர்வு பெண்களுக்குப் பிடிக்கவில்லை. சாதி பெண்ணால் தான் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. சாதி,  கலாச்சாரம் போன்றவை எல்லாம் அவள் தலையில் தான் கட்டப்படுகிறது. அவள் கொஞ்சம் பிசகினாலும் எல்லாம் காலி என்பது போல அவளை நடத்துகிறார்கள் என்றார்.

இதை அடுத்து சாதிகளை போற்றிப் பாதுகாக்கும் சங்கத் தலைவர் திருமாறன் பேசியது :

இந்திய நாடு உறவின் அடிப்படையில் அமைந்த நாடு. பல்வேறு சாதி, மதம்னு காலங்காலமா இருந்து வர இந்தக் கட்டமைப்பை காதல் என்ற முறையில் உடைக்க வேண்டாம் என்பது தான் என் கருத்து. அதே சமயம் இதற்கு வன்முறை தீர்வு என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது. பெற்றோர்களுக்கு ஓகே என்றால் ஓகே தான் அத மீறி யாராலயும் எதுவும் செய்ய முடியாது என்றார்.

சாதியே முக்கியம் என்பவர்களைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க என்றதும் எதிரணியினர் சொன்னது :

* சமூக மனநோயாளிங்க

* செம்மறி ஆட்டுக்கூட்டம்

* தன்னம்பிக்கை இல்லாததால அடையாளம் தேடுறவங்க

* ரோபோக்கள்

* மிருகங்கள்

சாதியை விட காதலே முக்கியம் என்பவர்களைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க என்றதும் எதிரணியினர் சொன்னது :

* அபத்தமானவங்க

* முற்போக்கு என்ற பேருல கலாச்சார அழிவு ஏற்படுத்துறவங்க

* இவிங்களாம் குரூப்ல டூப்பு, தமிழ்நாட்ல எப்படி மதுவ ஒழிக்க முடியாதோ அதே மாதிரி சாதிய ஒழிக்க முடியாது

* ரொம்ப ஓவரா போயிட்டாங்க

சமூக வலைதளவாசிகளின் ஆதரவு :

காதலை விட ஜாதியே முக்கியம் என்று 35 % பேரும், ஜாதியை விட காதலே முக்கியம் என்று 65 % பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இறுதியாக நாம் கொண்டாடி வரும் சிறுதெய்வங்கள் பற்றி கரு. பழனியப்பன் கூறியது :

நாம் வழிபட்டு வரும் சிறு தெய்வங்கள் அனைவருமே காதல் காரணமாக கொல்லப்பட்டவர்கள் தான் என்ற உண்மையை சொல்லி, ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ஆணவப் படுகொலைகளின் காலம் புத்தகத்தை அறிமுகப் படுத்தி வைத்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Related Articles

ஆர்யாவின் கண்கள் இரக்கமற்றது? ஏன் தெரியு... இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா அவர்களின் படத்தில் அறிமுகமாகி பிறகு இயக்குனர் விஷ்ணு வர்தனின் அறிந்தும் அறியாமலும் படத்தில் மறு அறிமுகமானவர் நடிக...
கிரேஸி மோகன் பற்றிய சில தகவல்கள்!... 40 ஆண்டுகளில் 6500 க்கும் மேற்பட்ட நாடகங்கள் மேடையேற்றம் செய்துள்ளார்.  மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, அண்ணாமலை, வாசூல்ராஜா எம்பிபிஎஸ் ப...
எல்கேஜி பையங்கூட சிஎம் ஆகிடலாம் தமிழகத்த... ஜல்லிக்கட்டு புரட்சியின் போது மக்களுடன் மக்களாக நின்ற திரைப்பிரபலங்களில் முக்கியமானவர்கள் ஹிப்ஹாப் தமிழா, ராகவா லாரன்ஸ், ஆர்.ஜே. பாலாஜி. ஹிப்ஹாப் தமிழ...
இன்டெல் உருவாக்கத்தில் வருகிறது ஸ்மார்ட்... ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது கூகுள் க்ளாஸெஸ் (Google Glasses) என்னும் தயாரிப்பு. அந்த முகக்கண்ணாடியை நீங்கள் அணிந்...

Be the first to comment on "கேட்கலனா கொல்வோம் – சாதிவெறியன்களுக்கு சாட்டையடி தந்த தமிழா தமிழா !"

Leave a comment

Your email address will not be published.


*