கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாட்சப்பில் சாதி ஆணவ படுகொலை வீடியோ தீயாக
பரவியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வீடியோவில் இளைஞர்
சங்கரை கூலிப்படை ஒன்று சரமாரியாக வெட்டி சாய்த்த காட்சி இன்னும் கண் முன் நிற்கிறது.
இன்று கொடிய மிருகங்களிடம் சிக்கி உயிர்நீத்த சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்.
அதனையொட்டி சங்கரின் சொந்த ஊரான உடுமலையில் இன்று சங்கரின் பெயரில் "சங்கர்
சமூகநீதி அறக்கட்டளை" ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
சங்கரின் மீது சாதி வன்முறை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தை சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர்.
பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி
மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால்
கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வீட்டின் எதிர்ப்பை மீறி இருவரும்
திருமணம் செய்துகொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் மற்றும்
உறவினர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர். கடந்த ஆண்டு மார்ச்
13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் குடும்பத்தினர் அனுப்பிய
கூலிப்படை சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் பலர் வேடிக்கை பார்க்க வெட்டி சாய்த்தது.
இதனால் சங்கர் உயிருக்குப் போராடி உயிரிழந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் கவுசல்யா
உயிர் பிழைத்தார். ஒட்டுமொத்த தமிழகத்தையே இந்த ஆணவப் படுகொலை பெரும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சங்கர் சமூகநிதி அறக்கட்டளை
இன்று சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உடுமலைப்பேட்டையில்
நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் கோபி
நயனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் ஒன்று சேர்ந்து பலர் முன்னிலையில்
சங்கர் சமூகநீதி அறக்கட்டளை ஒன்றை துவக்கி வைத்தனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், " கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 187 சாதி
ஆணவ படுகொலைகள் இந்த தமிழ்மண்ணில் நடந்துள்ளது " என்றார். பின்னர் பேசிய இயக்குநர் சமுத்திரக்கனி, ” ஜாதி கண்ணீர் ரூபத்திலும் தாய் ரூபத்திலும் வரும்” என்று சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை உஷாராக இருக்குபடி வலியுறுத்தினார்.
Be the first to comment on "கடந்த 5 ஆண்டுக ளில் 187 ஆணவ படுகொலைகள்! – இன்று உடுமலை சங்கரின் 2ம் ஆண்டு நினைவு தினம்!"