வெ. இறையன்பு மிக சிறந்த எழுத்தாளர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வீட்டு நூலகம் வைத்திருப்பவர்களின் வீட்டில் கண்டிப்பாக அவருடைய புத்தகம் எதாவது இடம் பெற்றிருக்கும். அதில் தினத்தந்தி பதிப்பகத்தின் “நமக்குள் சில கேள்விகள்?” புத்தகம் மட்டும் கிண்டிலில் கிடைக்கிறது. அவருடைய “கேள்வியும் நானே… பதிலும் நானே…” புத்தகத்தின் மறுவடிவம் தான் இந்த நமக்குள் சில கேள்விகள் புத்தகம். அந்த புத்தகத்தில் உள்ள கேள்விகள் பதில்கள் அனைத்தும் மனசாட்சிக்கு நேர்மையான முறையில் எழுதப்பட்டதாக இருக்கும். குறிப்பாக நேர்மையாக சம்பாதித்த பணத்தில் சாப்பிடும் எல்லா உணவும் உயர்ந்த உணவே என்ற வரி நம் மனதை வெகுவாக கவர்கிறது. நீங்கள் எதாவது திருமண தம்பதிகளுக்கு பரிசாக இந்த புத்தகத்தை கொடுக்கலாம்.
- கண்ணுக்குத் தெரியாதவாறு கடமையாற்றுபவர்களைப் பற்றி…?
கண்ணுக்குத் தெரியாத வேர்தான் கிளைகளையும், மலர்களையும், கனிகளையும் தாங்குகிறது. கண்ணுக்குத் தெரியாத இருதயமும், சிறுநீரகமும், கல்லீரலும், நுரையீரலும், மூளையும் நாம் உயிர் வாழ பெரிதும் உதவுகின்றன. கண்களுக்குத் தெரியாத காற்றில்தான் சுவாசிக்கும் உயிர்க் காற்றும், முகரும் நறுமணமும், நுகரும் ஓசைகளும், ரசிக்கும் இசையும் கலந்திருக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத கடமை வீரர்கள், இருதயத்தைப் போல இருப்பவர்கள்.
- அனுபவம் மட்டும் போதுமா?
அனுபவம் நமது நினைவில் நீடித்து நின்றால்தான் அது நினைந்து நினைந்து இன்புறத்தக்கதாக இருக்கும். எல்லா அனுபவங்களும் அப்படி ஆவதில்லை. நம்முடைய வாழ்க்கையில் இதுவரை சந்திக்காத நிகழ்வுகளே அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் போன இடங்களுக்கே சுற்றுலா சென்றால், மகிழ்ச்சிக்குப் பதிலாக அயர்ச்சி ஏற்படுகிறது. சிலரோடு புதிய இடத்துக்குப் போனாலும் அயர்ச்சி ஏற்படுவது உண்டு!
- பொருட்களுக்கும், ‘புருஷர்’களுக்கும் உள்ள வேறுபாடு?
பொருட்களின் மதிப்பு, உபயோகிப்பதால் கூடுகிறது. மனிதர்களோடு வைத்திருக்கும் உறவு அவர்களை உபயோகித்துத் தூக்கி எறியாமல் இருக்கும்போது விலைமதிப்பற்றதாக விளங்குகிறது.
- ஓய்வு என்பதற்கான இலக்கணம்?
அட்டவணையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருப்பதே ஓய்வு!
- மாயையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
மாயையை ‘மாயை’ என்று உணர்கிறபோதே அதுகுறித்த மயக்கம் உதிர்ந்துவிடுகிறது!
- தமிழைக் கற்பதில் இன்றைய தலைமுறையின் முயற்சி எவ்வாறு உள்ளது?
ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்த்த தலைமுறை இப்போது வாரிசுகளுக்குத் தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கற்றுத் தருகிற நிலையில் நம் தாய்மொழியின் தலையெழுத்து இருக்கிறது.
- இருளும், ஒளியும் எதிர்ப் பதங்களா?
அவை எதிரிகளல்ல; இடம் மாறிகள். அவற்றை எதிரிகளாக சித்திரித்தவர்கள் நாம். இருபத்து நான்கு மணி நேரமும் ஒளியே இருந்தால் ஆறுகள் வற்றும், மரங்கள் கருகும், மண்… தரிசாகும், தூக்கம் துண்டிக்கப்படும். மானுடம் பட்டுப்போகும்.
- அமைதிக்கும், மவுனத்துக்குமான வேறுபாடு?
அமைதி… மேல் மனத்தில் நிகழ்கிறது. மவுனம் ஆழ்மனத்தில் நிலைகொள்கிறது. அமைதியாக இருப்பவர்கள் அடுத்தவர்களுடன் பேசுவதில்லையே தவிர, தங்களுக்குள் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
- உச்சியை அடைந்தவுடன் என்ன தோன்றும்?
‘நாமா இவ்வளவு உயரம் ஏறினோம்?’ என்கிற மலைப்புதான் முதலில் தோன்றும். ஏறும் வரை இருந்த களைப்பு ஏறிய பின் நீங்கும்.
- பயன்பாடா… வடிவமா… எது முக்கியம்?
‘எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்றார் தொல்காப்பியர். எல்லாப் பொருட்களும் பயன் குறித்தே மகத்துவம் அடைகின்றன. அழகும் ஒரு பயன்பாடு. ஆனால், இரண்டில் எது முக்கியம் என்று வருகிறபோது… உபயோகம், வடிவத்தை பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. அதனால்தான் மழை பெய்யும் இரவில் நிலவு நமக்குத் தெரிவதில்லை.
- அன்புதான் ஞானத்துக்கு அடிப்படையா?
அன்பு மெருகேறினால் கருணை. கருணை மேம்பட்டால் ஞானம். அந்த ஞானம் ரசவாதம் அடைந்தால் மெய்ஞானம். அதனாலேயே ‘அன்பிற் சிறந்த தவமில்லை!’ என்று பாடினார் பாரதி. அனைத்துக்கும் அடிப்படை அன்புதான்.
- ‘தனிமை’ என்றால் என்ன?
ஒற்றைப் புல்லாங்குழலின் இசையில் ஒட்டுமொத்த வாத்தியக் குழுவின் வாசிப்பின் மகிழ்ச்சியை அடைவதே தனிமை. *
- ‘தோன்றிற் புகழொடு தோன்றுக…’ என்றால்?
புகழோடு இருக்கும்போதே அந்த இடத்தை விட்டு வெளிவரவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உள்ளே நுழைவது மட்டுமல்ல; வெளியே வருவதும் முக்கியம். தொடங்குவது மட்டுமல்ல; எப்போது நிறுத்த வேண்டும் என்பதும் நமக்குத் தெரிய வேண்டும்!
- மகத்தான மனிதர்களை எப்படி அடையாளம் காணுவது?
மகத்தான மனிதர்கள் தங்களுடைய சாதனைகளையோ, சங்கடங்களையோ, அரும் பணிகளையோ, மற்றவர்களுக்கு உதவிய நிகழ்வுகளையோ வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்புவதில்லை. அவர்கள் துயரங்களின்போதும் தூண்களைப் போல ஆடாமல், அசையாமல், வளையாமல் உறுதியாக நிற்கிறார்கள்.
- இறந்த தாய் – தந்தையை நினைத்து சிலர் வருந்துகிறார்களே?
இறந்த பிறகு சாமியிடம் சென்றதாக எண்ணி வணங்குகிற மக்கள் அவர்கள் உயிருடன் இருக்கும்போது தெய்வத்திடம் இருந்து அவர்கள் வந்ததாகக் கருதி ஏன் மதிக்கக் கூடாது?
- ‘முட்டாள்’ எனத் திட்டினால் எப்படி அதை சகித்துக் கொள்வது?
எல்லோருமே ஏதேனும் ஒரு நொடியில் ஏமாந்துவிடுகிறோம். அப்போது நம்மை வேறொருவர் முட்டாளாக்கிவிடுகிறார். எத்தனையோ செய்திகள் நமக்கு தெரியாமல் இருக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொள்ளும்போது… ‘இதுகூடத் தெரியாமல் இத்தனை நாட்கள் முட்டாளாக இருந்திருக்கிறோமே?’ என்று நாம் நினைப்பது உண்டு. முட்டாள்தனத்தை ஒத்துக்கொள்கிற போது, அதுகுறித்த அறிவு ஏற்படுகிறது. வாழ்நாளெல்லாம் முட்டாளாக இருப்பதைவிட… ஓரிரு நிமிடம் முட்டாளாக இருப்பதிலும், அதை ஒத்துக்கொள்வதிலும் எந்தத் தவறுமில்லை.
- ‘அரை வேக்காடு’ என்றால் என்ன?
‘அரைவேக்காடு’ என்பது முட்டைக்குப் பொருந்தும்; மூளைக்குப் பொருந்தாது. எந்தப் பொருண்மை (பொருளின் தன்மை) குறித்தும் யாரும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க முடியாது. ‘நோபல்’ பரிசு பெற்றவர்களும், அந்தத் துறையில் ஒருவகையில் ‘அரைவேக்காடு’கள்தாம். ஆனால், அவர்கள் நம்மைவிட அதிகம் வெந்திருக்கிறார்கள்.
- சிகிச்சை இல்லாத போதைப் பொருள் எது?
புகழ்!
- உலகம் பொய்யா… மெய்யா?
காகித மலர்கள் நெடுநாட்களுக்கு அப்படியே இருக்கின்றன. நிஜ மலர்களோ சீக்கிரமே வாடிவிடுகின்றன. மாறாமல் இருப்பது பொய் மலர். உலகம் மெய்யாக இருப்பதால்தான் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது.
- சமூகத்தின் விசித்திர செயல்பாடு எது?
உலகத்தோடு எல்லா விதத்திலும் ஒத்து வாழ்பவர்களையும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களையும் உயிருடன் இருக்கும்போதும், கலகக்காரர்களை அவர்கள் இறந்த பிறகும் கவுரவப்படுத்துகிறது சமூகம்.
- போட்டிக்கும்… பொறாமைக்கும் என்ன வேறுபாடு?
அடுத்தவர்களைவிட நாம் உயரமாக இருக்க வேண்டும் என முனைவது போட்டி. நம்மைவிட மற்றவர்கள் குள்ளமாக இருக்க வேண்டும் என நினைப்பது பொறாமை. செயல்பாட்டில் இருக்கிறது போட்டி. வயிற்றெரிச்சலில் இருப்பது பொறாமை!
- அரசாங்கத்தின் பணி என்ன?
‘அரசின் பணி, குற்றவாளிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவது என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் பணி மக்களை அரசிடம் இருந்து காப்பாற்றுவது என்றும்’ ரஷ்யாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய எழுத்தாளர் அயன் ரேண்ட் குறிப்பிடுகிறார். சர்வாதிகார நாடுகளில் இது சாத்தியமில்லை!
- ஆசிரியர்கள் பணியை எதோடு ஒப்பிடலாம்?
அதே இடத்தில் இருக்கும் வில்தான் விரைந்து செல்லும் அம்பை எய்கிறது. ஆசிரியர்கள் வில்லாக இருக்கிறார்கள். மாணவர்கள் அம்பாகிறார்கள்.
- மனிதனாக உருவாக்கிய உயிர் ஏதாவது உண்டா?
‘கம்ப்யூட்டர் வைரஸை’ உயிராகக் கருதிக்கொள்ளலாம். இங்கிலாந்தைச் சேர்ந்த வல்லுநர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறுவதைப் போல மனிதனாக உருவாக்கிய உயிர் ‘கம்ப்யூட்டர் வைரஸ்’. இயற்கை… பலன் அளிப்பவற்றை உருவாக்கியபோது, மனிதன்… பலவற்றை அழிக்கிற இதை உருவாக்கினான் என்பது சுடுகின்ற உண்மை. இது மனித இயல்பைக் குறிப்பிடுகிறது.
- இப்போதெல்லாம் ஏன் அடிக்கடி சளி பிடிக்கிறது?
அந்தக் காலத்தில் அதிகக் குடைகளோ, மழை உடைகளோ இல்லை. மழையில் நனைந்து குழந்தைகள் விளையாடியபோது பெற்றோர் தடுத்ததில்லை. ஓடுகிற நீரில் காகிதக் கப்பல் விடுவது மழைக் காலத்து விளையாட்டாக இருந்தது. அதனால் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு சளி பிடிப்பது குறைவாக இருந்தது. இன்று குழந்தைகளை மழையில் நனைய அனுமதிப்பதில்லை. இடி இடித்தாலே பள்ளி விடுமுறை வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பட்டாசுச் சத்தத்தையே இடி என்று எண்ணிப் பதறுபவர்களும் உண்டு. குடை, மழைக்குக் காட்டும் கறுப்புக் கொடி. அது நம் எதிர்ப்பு சக்தியை ஏப்பமிட்டுவிடுகிறது.
- ஆசிரியர்கள், பெண்கள், காவலர்கள் பற்றி அதிக நகைச்சுவை வெளியாகிறதே… ஏன்?
யார் முன்பு அதிகம் பயப்படுகிறோமோ அவர்களைப் பற்றி மறைவாக நமக்குள்ளே கிண்டலடித்து ஆறுதல் அடைவது ஒரு விதமான மனவியல் பிறழ்வு.
- பூமிக்கு ஏன் இவ்வளவு பொறுமை?
பூமி… வெட்டுபவனுக்கும் நீர் தருகிறது. மண்வெட்டியால் கொத்துபவனுக்கும் உணவு தருகிறது. பெண்களின் பாதம் படப் பட பூமிக்கு பொறுமை குணம் போதிக்கப்பட்டது!
- ஒரு நிறுவனத்தின் தலைமை எப்படி இருக்க வேண்டும்?
நம்மினும் நிறுவனம் முக்கியம் என்று உணர வேண்டும். நமக்குப் பின்னும் அது நீடிக்க வேண்டும் என விரும்ப வேண்டும். அதைப் பயன்படுத்தி நாம் பெருமை தேடாமல், நம்மால் அதற்குப் பெருமை சேர்க்க வேண்டும்.
- யாரும் பாராட்டாவிட்டால் மனம் சோர்ந்து போகிறதே?
நம் உழைப்பால் ஏற்படும் திருப்தியே விருது. உடலில் வழியும் வியர்வையே பன்னீர். பயன் பெற்றவர்கள் கண்களில் ஏற்படும் ஒளியே பரிசு. நன்றாக உழைப்பவர்கள், நகங்களையே இயற்கை அணிவித்த கணையாழியாகக் கருதிக்கொள்கிறார்கள்.
- நம்பிக்கையின் முக்கியத்துவம் குறித்து?
சிறந்த மருந்துகூட நம்பிக்கை இல்லாமல் உண்டால் நஞ்சாக மாறக்கூடும்.
- கஞ்சர்களை எவ்வளவு ‘நையாண்டி’ செய்தாலும் திருந்துவதில்லை. சிக்கனவாதிகள் எப்படி?
கஞ்சத்தனத்தைப் பற்றி நகைச்சுவை சொன்னால் ‘கருமி’கள்தான் அதிகமாக சிரித்துத் தொலைக்கிறார்கள். அவர்கள் தங்களைவிட ‘கருமி’களாக இருப்பவர்களை நினைத்துக் கொள்கிறார்கள் போல! ஆனால், எல்லாக் ‘கருமி’களும் அடுத்தவர்கள் பணத்தில் தாராளமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். சிக்கனவாதிகள் மற்றவர்கள் பணமும் வீணாகக்கூடாது என்று எண்ணுவார்கள். அதுவே அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு.
- விளையாடுவது எதற்காக…?
மேம்போக்காகப் பார்த்தால் பரிசுகளுக்காகவும், பதக்கங்களுக் காகவும் விளையாடுவது மாதிரித் தோன்றும். இன்னும் சிலருக்கோ புகழுக்காக என்பது போலத் தோன்றும். கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களுக்கு உடல் வலுவாவதற்காக விளையாடுகிறோம் என்கிற உண்மை புரியும். வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் வியர்க்க விறுவிறுக்க விளையாடி இருக்கிறோமா என்பதே அதற்கு முக்கியம். ஆனால், அதையும் தாண்டி விளையாட்டுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. நம் விழிப்புணர்வை கூர்மைப்படுத்துவதே அதன் இலக்கு. இதற்கு நாம் அடிக்கிறபோது உறுப்பாகவும், அடித்தது ஓடுகிறபோது பந்தாகவும் மாற வேண்டும். அந்த விளையாட்டால் ஏற்படும் விழிப்புணர்வை மற்ற செயல்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
- நேர்மையை விளக்க முடியுமா?
விளக்கத்துக்கு அப்பாற்பட்டது நேர்மை. பணம் வாங்காதது மட்டுமல்ல நேர்மை. லஞ்சம் வாங்காமல் நடத்தை விதிகளுக்கு எதிராக நடந்துகொள்கிற சிலர் உண்டு. நேர்மை என்பது செய்கிற பணியை செம்மையாகச் செய்வது, அலுவலகப் பணிகள் காத்திருக்கும்போது நேரத்தை விரயமாக்காமல் இருப்பது, எந்த நிகழ்விலும் இருவர் தொடர்புபட்டிருந்தால் நலிந்தவர்கள் சார்பாக முடிவு எடுப்பது, திறமைக்கே முன்னுரிமை தருவது, அவ்வப்போது பூச்சிமருந்து அடிக்காமல் ‘கிருமி’கள் வராதவாறு நடைமுறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது, விதிகளைவிட விதிகளை ஏற்படுத்திய நோக்கமே முக்கியம் என்பதை அறிந்து செயல்படுவது. பலருக்கும் நன்மை என்று தெரிந்தால், அநியாயமாக விதிக்கப்பட்ட சட்டத்தையும் மீறுதல் நலம். மகாத்மா காந்தி, உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தியது போல!
- பேய், பிசாசு இருக்கின்றனவா?
சில மனிதர்களின் நடவடிக்கையைப் பார்க்கும்போது அப்படித் தோன்றினாலும் அது பிறழ்வே தவிர, பிசாசு அல்ல! சில மனிதர்களிடம்தான் மிருகங்களிலும் கொடிய குரூரமும், அதிக ரத்தப் பசியும் அடங்கி இருக்கிறது. ‘சுத்த சைவம்’ என்று சத்தமாகச் சொல்லித் திரிந்த ஹிட்லர்தான்… லட்சக்கணக்கான மக்களை சித்திரவதை முகாம்களில் கொன்று குவித்தவர். இது போன்ற மனிதர்களே ரத்தக் காட்டேரிகள்.
- வாழ்வில் சிக்கனமும், எளிமையும் எங்கே இருந்து தொடங்க வேண்டும்? திருமணத்தில் இருந்து தொடங்க வேண்டும்!
- நிர்வாகத்தில் நேர்மையை நிலைநாட்ட என்ன செய்ய வேண்டும்?
கோப்புகள் காத்திருக்கும்போது இடைத்தரகர்கள் களம் இறங்கிவிடுகிறார்கள். அப்போது யூகங்களுக்கு வாய்ப்புகள் உருவாகின்றன. விரைவான நிர்வாகம் இருந்தால், பெரும்பாலும் தவறுகள் குறைந்துவிடும். எடுத்த முடிவுகளைப் பற்றியும், அவை எடுக்கப்பட்ட காரணங்கள் குறித்தும் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கப் பட்டால் நேர்மை எல்லா நிலைகளிலும் ‘ஜெகஜோதி’யாக பிரகாசிக்கும்.
- ஒரு காலத்தில் பணி ஓய்வு பெறும்போது மக்கள் வருந்துவார்கள். இப்போது மகிழ்கிறார்களே?
அன்றிருந்த பொருளாதாரச் சூழலில் சொற்ப ஓய்வு ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துவது சிரமம். ஓய்வு பெற்ற பிறகு சமூகமும் அவர்களை உதாசீனப்படுத்தும். எனவே, அன்று வருந்தினார்கள். ஆனால், இன்று பொருளாதார நிலை மேம்பட்டிருக்கிறது. அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்கள் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபட்டு தந்தை ஓய்வு பெறும்போது பெற்ற அளவு ஊதியத்தை, தாங்கள் பணியில் சேர்ந்ததுமே பெறுகிறார்கள். பிள்ளைகள் பெற்றோரை விருப்ப ஓய்வு கோர வற்புறுத்தும் நிகழ்வுகளும் உண்டு. சிலர் வெளிநாடுகளில் உள்ள மகன்களுக்கும், மகள்களுக்கும் பிறக்கும் குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொருட்டு வேலையை உதறுவதும் உண்டு. அது வரை அப்பா, அம்மா மீது வராத பாசம்… தனக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படுவதும் உண்டு.
- குழுவாகப் பணியாற்றுவதில் இந்தியர்களிடம் என்ன பிரச்சினை?
ஓர் அறையில் குத்து விளக்கு எரியும்போது, மின்விளக்கைப் போட்டால் அவற்றில் இருந்து வெளிப்படும் வெளிச்சக் கதிர்களுக்குள் தகராறு இல்லை. இரண்டு விளக்குகளுமே இருட்டை விரட்டுவதில்தான் ஈடுபாடு காட்டும். இரண்டு மனிதர்கள் ஒன்றாகப் பணியாற்றும்போது, எடுத்துக்கொண்ட முயற்சி முக்கியமே தவிர தன்முனைப்பு அல்ல! ஆனால், இந்தியாவில் இருவரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களில் யார் பெரியவர் என்பது முன் நிற்கிற காரணத்தால் முயற்சிகள் முனை மழுங்குகின்றன. வெளிநாடுகளில் பெரும்பாலான ஆய்வுக் கட்டுரைகள் இரண்டு பேர், மூன்று பேர் எழுதி வெளிவருகின்றன. நம் நாட்டிலோ அப்படிப்பட்ட கட்டுரைகள் குறைவு. தனக்கு மட்டுமே பெயர் வேண்டும் என்கிற சுயநலமே இதற்கு காரணம்.
- ‘அறியாமை’ ஆபத்தானதா?
அறியாமையைவிட அதை அறிந்துகொள்ளாமல் இருப்பதே பெரிய ஆபத்து. அறியாமையை அறிவதே அறிவுப் பயணத்தின் பெயர்ப்பலகை.
- நண்பர்களின் சிறப்பு குறித்து…?
நல்ல நண்பர்கள் நான்கு பேர் இருந்தால், நரகத்துக்கும் செல்லலாம். அவர்கள் அதை சொர்க்கமாக மாற்றிவிடுவார்கள்.
- உயர்ந்த உணவு எது?
நாம் நேர்மையாகச் சம்பாதித்த காசில் சாப்பிடுவது!
- எண்ணிக்கை முக்கியமா… எழுச்சி முக்கியமா?
எத்தனை சுண்டெலிகள் இருந்தாலும், பூனை வந்தால் பயந்து ஓடுகின்றன. ‘இந்தப் படை எலிகளின் கூட்டம். நான் அரவம்’ என்று குகன் கொக்கரித்ததாக கம்பர் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் பத்துப் பதினைந்து செந்நாய்கள் சேர்ந்தால் சிங்கத்தையே வேட்டையாடிவிடும். சிறுத்தைகள், செந்நாய்க் கூட்டத்தைக் கண்டால் மரத்தில் இருந்து இறங்காமல் மறியல் செய்வதைப் பார்க்கலாம். எழுச்சி மிக்கவர்களின் எண்ணிக்கையே புரட்சியைத் தீர்மானிக்கிறது; உலகை புரட்டிப் போடுகிறது!
- அண்மையில் நீங்கள் படித்து ரசித்த கவிதை?
நகுலன் என்பவர் எழுதிய புதுக் கவிதை… ‘நான் இறந்ததும் இரங்கல் கூட்டம் நடத்தாதீர்கள்; ஏனென்றால், அதற்கு என்னால் வர முடியாது!’
- பல பெரிய மனிதருடைய அறிவுரைகளை பிள்ளைகள் ஏன் கேட்பதில்லை?
மிகச் சிறந்த மருத்துவராக இருந்தாலும் அவருடைய குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யும்போது சற்று பதற்றம். ஒப்பற்ற சிகை திருத்துபவராக இருந்தாலும் தன் தலைமுடியை அவரே வெட்டிக்கொள்ள முடியாது. அதைப் போலத்தான் பெரிய மனிதர்களுடைய பிள்ளைகள் 24 மணி நேரமும் அப்பாவோடு இருப்பதால், அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள். தூரத்தில் இருப்பவர்களுக்கு மலைமுகடுகள் உயரமாகத் தெரிகிறது. அதிலேயே இருப்பவர்களுக்கு அவற்றின் உயரம் தெரிய வாய்ப்பில்லை!
- மனிதன் ஒரு பழக்கத்தை உருவாக்க சராசரியாக எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு?
அழிக்கிற பழக்கங்கள் உடனே அரும்பிவிடுகின்றன. செதுக்குகிற பழக்கங்களுக்கு நிறைய நாட்கள் தேவைப்படுகின்றன. பழக்கம் என்கிற குதிரையின் கடிவாளம், வைராக்கியம் என்கிற சவாரியின் கைகளில் இருக்கிறது. *
- பெற்றோரின் சொத்துகளைப் பிடுங்கிக்கொண்டு சில பிள்ளைகள் அவர்களைத் துரத்தி விடுகிறார்களே?
சொத்து சேர்த்து வைக்காத பெற்றோர் மீது பிள்ளைகள் பாசமாக இருப்பதைப் பார்க்கிறேன். அதற்குக் காரணம் உண்டு. ஆசைப்படும் வயதில் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுக்காமல் பலர் மிச்சம் பிடித்து சொத்து வாங்குவதாலும், அவர்களோடு கொஞ்ச வேண்டிய நேரத்தை பணம் சம்பாதிப்பதில் வீணடிப்பதாலும் பாசம் குறைகிறது. பிள்ளைகள் எதிர்பார்ப்பது சொத்தையல்ல; அழுதுகொண்டு ஓடி வரும்போது கிடைக்கும் ஆறுதலான சொற்களையும், அரவணைப்பையுமே!
- எளிமை முக்கியம் எனத் தொடர்ந்து சொல்லி வருகிறீர்களே… அது எப்போது சாத்தியம்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயில்தான் படுப்பார். பாயின் விளிம்புகள் பட்டு முதுகில் தழும்புகள். மற்றவர்கள் ‘வேறு விரிப்பைத் தருகிறோம்’ என்றால்… அது வேண்டாம் என்று மறுத்து, ‘மரத்துக்கும், அதன் நிழலில் அமர்ந்திருக்கும் பயணிக்கும் என்ன உறவோ…அதுபோல எனக்கும், இந்த உலகத்துக்குமான உறவு’ என்று கூறுவார். நிரந்தரமாக நாம் நீடிக்கப் போவதாக நினைப்பதால்தான் பார்க்கிற எல்லா வசதிகளும் நமக்கு வேண்டும் என நினைக்கிறோம். உலகத்தில் நாம் தற்காலிகப் பயணி என நினைத்துக் கொண்டால்… ஆடம்பரம் அணுகாது; நிழலாக அண்டாது.
- மனத்தையும், உடலையும் எப்படி இணைப்பது?
விழிப்புணர்வை முழுமையாக்கும்போது மனத்தின் வேகத்துக்கு உடல் ஒத்துழைக்கிறது. பிசிறு தட்டினால் விபத்து; பிணைப்பு ஏற்பட்டால் மகசூல்!
Be the first to comment on "வெ. இறையன்புவின் “நமக்குள் சில கேள்விகள்?” – புத்தகம் ஒரு பார்வை!"