சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை” வெளியிட்ட நீட் தேர்வு குறித்த புத்தகம் நீட்தேர்வு வேண்டும் என்று சொல்கிறதா அல்லது வேண்டாம் என்று சொல்கிறதா?

NEET exam book published by the _Agaram Foundation_

கடந்த 2017 ஆம்  ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த  சர்ச்சைகள் விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வருடமும் மே மாதங்களுக்குப் பிறகு, இந்த நீட் தேர்வு என்கிற ஒரு விஷயத்தால் ஏகப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி நோயாளிகளாக மாறுகிறார்கள்.  அதே சமயம் ஒரு சில மாணவர்கள்  தற்கொலை முடிவுக்குச் செல்கிறார்கள். இன்னும் சிலர் தற்கொலையே செய்து கொள்கிறார்கள். இந்த நீட் தேர்வு வந்த பிறகு தங்களுடைய மகனோ அல்லது மகளோ நான் மருத்துவம் படிக்க விரும்புகிறேன் என்று அப்பா அம்மாவிடம் சொன்னாள், அந்த அப்பா அம்மாக்களின் அடிவயிற்றில்  நெருப்பு எரிய ஆரம்பித்து விடுகிறது, தொடர்ந்து அவர்கள் பயத்தில் வாழ்நாட்களை கழிக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு அச்சத்தை மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த நீட் தேர்வு எப்படி இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறியது என்பது குறித்தும் அதை சமாளிக்க கூடிய வகையில் அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களை எப்படி ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து இந்த மாதிரியான தேர்வுக்கு தயார்படுத்துவது என்றும்  கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட விவாதிக்கப்பட்ட கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பு தான் அகரம் அறக்கட்டளையின் நீட் தேர்வு குறித்த புத்தகம். 

இந்த ஆண்டிலிருந்து தமிழகத்தில் நீட் தேர்வு வருகிறது என்று ஒரு செய்தி வந்தபோதே, மக்கள் இளைஞர்கள் எல்லோரும் பெரிய அளவில் ஒன்று சேர்ந்து அதனை எதிர்த்து இருந்தால் அது இவ்வளவு தூரம் வந்து இவ்வளவு மாணவர்களின் உயிரைப் பறித்து இருக்காது. இந்த மாதிரி விஷயங்கள் தமிழகத்திற்குள் நுழையும் போதே இது தமிழகத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்று ஆரம்ப கட்டத்திலேயே சில கல்வியாளர்கள் சொன்னாலும் அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. பிரச்சனை எங்கோ நடக்கிறது என்பது போல் இருந்து விட்டு, பிறகு அந்தப் பிரச்சினை மெல்ல மெல்ல எல்லா வீடுகளுக்கும் பரவி  தங்களின் கழுத்தை நெரிக்கும் போதுதான் “அட இது இவ்வளவு பெரிய பிரச்சினையா” என்று யோசிக்க தொடங்குகிறார்கள். அதனால் தான் அனிதா மாதிரியான திறமைசாலி மாணவிகளை நாம் இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. “நான் செத்துப் போகிறேன்… இதற்குப் பிறகாவது எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடுங்கடா…” என்று அந்த மாணவி ஒட்டுமொத்த தமிழகத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்கிறாள். அதற்குப் பிறகுதான் எல்லோருக்கும் இதை எதிர்க்க வேண்டும் என்கிற ஒரு எண்ணம் ஆழமாக பிறக்கிறது.  பிரச்சினை, திணிப்பவர்கள் மீது மட்டுமல்ல திணிப்பதை மங்குனித்தனமாக ஏற்றுக்கொள்பவர்கள் மீதும் இருக்கிறது. 

இதனால் தான் நடிகர் சூர்யா தன்னை நம்பி நிறைய மாணவ-மாணவிகள் தன்னுடைய அகரம் அறக்கட்டளையிலும்,  தமிழகத்தின் மற்ற மாவட்ட பகுதிகளிலும் கல்வி கற்று வருகின்றனர் என்பதை உணர்ந்த சூர்யா, அனிதா தற்கொலை செய்துகொண்ட  நாள் முதல் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வின் போது தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாகவும் மாணவர்கள் மீது திணிக்கப்படும் உளவியல் வன்முறைக்கு எதிராகவும் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்,  மத்திய அரசிடமும் மாநில அரசிடமும் கேள்விகள் கேட்கிறார், அவர்களின் கல்வி செயல்பாடுகள் குறித்து கட்டுரை எழுதுகிறார். அப்படி இருக்கையில் நடிகர் சூர்யா நீட் தேர்வு என்கிற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தக்கூடிய ஒரு தேர்வு முறையை, எதிர்க்கிறேன் என்கிற பெயரில் தன்னை நல்லவராகவும் சமூகப் பொறுப்புணர்வு உள்ளவராகவும் காட்டிக்கொள்ள முற்படுகிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுகின்றன. நீட் தேர்வு தமிழகத்திற்குள் கொண்டுவரப்படுகிறது என்று ஒரு அறிவிப்பு வந்தபோது, அதுகுறித்து நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?  என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அப்படி நீட்தேர்வு வரும்போது அந்த தேர்விற்கு ஆதரவு தெரிவித்து விட்டு இப்போது நீட் தேர்வை எதிர்க்கிறேன் என்று அவர் பேசுவது எந்த விதத்தில் நியாயம், இந்த நடிகர்கள் எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுவார்கள். அதை நம்பிக் கொண்டு எளிய மக்கள் இந்த பயனுள்ள நீட் தேர்வை எதிர்ப்பது அவர்களுக்கு அவர்களே குழியைத் தோண்டி  கொள்வதற்கு சமம் என்கின்றனர் நீட்தேர்வு ஆதரவாளர்கள். 

கே. சந்துரு அவர்கள் எழுதிய நீட் தேர்வுகள் ஒரு அறிமுகம், டாக்டர் ஜி. ஆர். ரவீந்திரநாத் எழுதிய நுழைவுத்தேர்வு சரியா?,  டாக்டர்  எல்பி தங்கவேலு எழுதிய தேவைதான் பொது நுழைவுத்தேர்வு, துளசிதாசன் எழுதிய மருத்துவ நுழைவுத்தேர்வு தமிழ்ச் சமூகம் பேசவேண்டும், பிரபா கல்விமணி எழுதிய நீட்  நுழைவுத்தேர்வுகள்: செய்ய வேண்டியது என்னென்ன?,  ரவிக்குமார் எழுதிய நீட் நுழைவுத் தேர்வு தமிழக அரசின் சட்டங்கள் நிரந்தர தீர்வைத் தருமா?, ப. தமிழ்க்குரிசில் எழுதிய நீட்தேர்வு ஆபத்தானதா?, தொல் திருமாவளவன் எழுதிய  நீட் தேர்வு தமிழக அரசின் சட்டம் மாணவர்களை திசை திருப்புகிறதா?,  9 மற்றும் 11ம் வகுப்பு பாட புத்தகங்களை புறக்கணிப்பதை தடுக்கப்பட வேண்டும், நீட் தேர்வு: அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் –  அரசு செய்திக் குறிப்பு, தா. நெடுஞ்செழியன் எழுதிய கேள்வி நேரம்:  புதிய தலைமுறை, கே வைத்தியநாதன் எழுதிய முடிவு அல்ல பாடம், மாநில பாடத்திட்டம் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை,  டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எழுதிய தமிழ் செழிக்க 6 அம்சத் திட்டம், பொன். தனசேகரன் எழுதிய தமிழ் வழி பிஈ படிப்பு வேலை கிடைக்குமா?, பாரதி தம்பி எழுதிய ஆங்கில வழிக்கல்வி தேவையா?  பாரதி தம்பி எழுதிய தாய்மொழிக்கல்வி:  ஆய்வுகள் சொல்வது என்ன?, சேகர் சுவாமி எழுதிய ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா?, டாக்டர் வா.செ. குழந்தைசாமி எழுதிய மைய அரசில் மாநில மொழிகள், பிரபா கல்விமணி எழுதிய நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் பயனடைவார்களா?,   ஆதர்சம் ஜெயின் எழுதிய  அண்ணா பல்கலைக்கழக முதல் ஆண்டு தேர்வுகளில், 50% பொறியியல் மாணவர்கள் தோல்வி?, த.செ. ஞான வேல் எழுதிய  இனி என்ன செய்ய வேண்டும்? என்ற 20 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தான் இந்த அகரம் அறக்கட்டளை வெளியிட்ட நீட் தேர்வு குறித்த புத்தகம். இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க சூர்யா தன் கைப்பட எழுதிய புத்தகம் அல்ல. சூர்யாவின் குடும்ப உறுப்பினர்கள் எழுதிய புத்தகமும் அல்ல. சரியான கல்வி முறை அமைந்து விட்டால், அங்குள்ள பிரச்சினைகளில் நிறைய பிரச்சனைகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்கிற நோக்கத்துடன் சூர்யா நடத்திவரும் அகரம் அறக்கட்டளையின்  பெயரில் வெறுமனே நீட் தேர்வை ஆதரிக்கும் வகையில் மட்டுமே எழுதப்பட்ட புத்தகம் அல்ல. 

முதலில் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏன் அவசியம்? அதை தமிழர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?  என்ற கேள்விகளில் தொடங்கி, நீட் தேர்வு தமிழக மாணவர்களின் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்தும்? தமிழக மாணவர்களின் மனநிலையை எந்த அளவுக்கு பாதிக்கும்?  தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு நீட்தேர்வு சாதகமாக இருக்கிறதா? அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதகமாக இருக்கிறதா? ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது? தமிழ்வழிக் கல்வியில் பயின்றவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது? அவர்கள் இந்த நீட் தேர்வை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இதில் யாருக்கு நீட்தேர்வு எளிமையாக இருக்கிறது? யாருக்கு நீட்தேர்வு கடுமையாக இருக்கிறது? அரசு பள்ளிகளில் பயின்று எத்தனை பேர் நீட் தேர்வில் வெற்றி அடைந்திருக்கிறார்கள்? அரசு சார்பாக அவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்ச்சி எவ்வளவு தரமானதாக இருக்கிறது? ஆங்கிலம் தெரியாமல் மாணவர்கள் எவ்வளவு அவதிக்கு ஆளாகிறார்கள்? ஆங்கிலம் தெரியாமல் மாணவர்கள் எவ்வளவு சாதித்திருக்கிறார்கள்? ஆங்கில வழிக்கல்வியில் பொறியியல் படித்தவர்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைகிறது? தமிழ் வழிக்கல்வியில் பொறியியல் படித்தவர்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைகிறது? மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் உண்மையாலுமே அந்த படிப்பிற்கு தகுந்த உழைப்பை போடுகிறார்களா அல்லது வெறும் ஆசை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்கள் மேல் பழி சுமத்துகிறார்கள்? மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களின் இன்றைய மனநிலை என்ன? நீட் தேர்வு வேண்டாம் என்றால் தமிழக அரசு கொடுக்கும் கல்வி முறை, தமிழகத்தின் கல்வி தரம் அவ்வளவு தாழ்மையானதாக இருக்கிறதா? தேர்வுகளை பார்த்து அஞ்சுபவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்க கூடியதாக இருக்கிறதா நீட்தேர்வு எதிர்ப்பாளர்களின் போராட்டம்? என்ற பலதரப்பட்ட கேள்விகள் குறித்து நீதிபதி, பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் கட்சித் தலைவர், சமூக சிந்தனையாளர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர் போன்ற பல தரப்பட்ட மனிதர்கள் உரையாடிய கருத்துக்கள் தான் இங்கு ஒட்டுமொத்தமாக குறிப்பிடபட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கட்டுரைகள் மேற்கண்ட நபர்கள் எழுதிய, தினமணி, தின இந்து, ஆனந்த விகடன் போன்ற பெரிய பத்திரிக்கைகளில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு. இப்படி ஆரம்ப காலத்தில் நீட் தேர்வுக்கு சூர்யா ஆதரவும் வரவேற்பும் தெரிவிக்க முக்கிய காரணம் அரசாங்கம் அகரம் அறக்கட்டளை புத்தகத்தில் உள்ளது போன்ற எல்லாத் தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அதற்கு தகுந்த முன்னேற்பாடுகளுடன் தான் நீட் தேர்வை தயார் செய்திருக்கிறது என்ற ஒரே எண்ணத்துடன் ஆதரவு தெரிவித்து விட்டார்.  ஆனால் நீட்தேர்வு ஆரம்பிக்கப்பட்ட வருடம் முதல் மாணவர்களுக்கு சரியான தேர்வு மையங்கள் அமைக்கப்படாமல் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அலைய விடுதல், அவர்களின் உடைகளை எல்லாம் களைந்து ஆராய்தல்,  இந்த நீட்தேர்வு மென்மேலும் பணக்காரர்களுக்கு மட்டும் உதவக்கூடிய வகையில் அமைந்து போனது, நீட் தேர்வால் நல்ல வருமானம் பார்க்கும் கோச்சிங் சென்டர்கள் அதிகமானது,  நீட் தேர்வு கொடுக்கும் குழப்பங்களும் மன உளைச்சல்களும் தாங்கமுடியாத மாணவ-மாணவிகள் பல வருடங்களாக அதற்கு நேரம் எடுத்து உழைத்து  கடைசியில் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது  போன்ற சம்பவங்களை பார்த்ததும் ஒரு தவறான முன்னெடுப்புகள் நாம் ஆதரவாக இருந்து விட்டோமே என்கிற ஒரு குற்ற உணர்ச்சியில் தான் தொடர்ந்து சூர்யா மத்திய அரசிடமும் மாநில அரசிடமும் கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருக்கிறார். இதில் எந்த விளம்பரமும் இல்லை, எந்த சுயநலமும் இல்லை. தன்மீது நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருக்கும் மனிதர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதை அவ்வளவே! 

* ஒரு சமூகத்தில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும் அது கல்வியின் மூலம் நிகழ்ந்தாலே அது உண்மையான மாற்றம். அதேசமயம் கல்வியின் மூலம் நிகழ்த்தப்படுகிற  மோசடிகள் அணு ஆயுதங்களால் நிகழ்த்தப்படுகிற  ஆபத்தை விட பல மடங்கு ஆபத்துக்களை விளைவிக்கும்.  கல்வியின் மூலம் கிடைக்கின்ற பலன் பல தலைமுறைகளுக்கு பயனளிக்கக் கூடியது என்பது போலவே  கல்வியின் பெயரால்  குளறுபடிகள் ஏற்படுத்தும் விளைவுகளும் பல தலைமுறைகளை பாதிக்கும். சிலரின் கை கால்களை மட்டும் கட்டிப் போட்டுவிட்டு ஓட்டப்பந்தயத்தில் முதலில் வந்தவர்களுக்கு பரிசுகள் அறிவிப்பது எத்தகைய அபத்தமோ,  அதை விட அபத்தமாக பலவிதமான தடைகளை கல்விச் சூழலில் ஏற்படுத்திவிட்டு அனைவருக்கும் ஒரே விதமான தேர்வினை வைக்கிறோம்… என்கிற சூர்யாவின் வரிகளோடு இந்த புத்தகம் தொடங்குகிறது. 

Related Articles

இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று R... என்ன தான் குப்பை அள்ளுறவனா இருந்தாலும் அவன் மனசு சுத்தம் என்பது படத்தின் மையக்கரு. சமூக வலைதளங்களில் போராளி வேசம் போட்டுத் திரியும் போலி பொதுநலவாதிகள்...
மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம்ப... பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக பல்வேறு மொழிகளில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், சினிமா ரசனை ரீதியாகவும் பல்வேறு சாதனைகளைச் செய்தது. மறக்கவே முடியாத...
கிறுக்கத்தனமான கிகி சேலஞ்ச்! – பப்... அது என்ன கிகி சேலஞ்ச்! உலகில் உள்ள பைத்தியங்கறை அரவேக்காட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்த கிகி சேலஞ்ச்! இப்போது உலகம் முழுக்க டிரெண்டாகி வ...
சென்னைக்கு அருகே சேட்டிலைட் நகரம் உருவாக... புனே மற்றும் கொல்கத்தாவில் அமைந்திருப்பது போல சேட்டிலைட் நகரம் ஒன்றை சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் உருவாக்க மாநில திட்டமிடல் துறை திட்டமிட்டு இருக்க...

Be the first to comment on "சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை” வெளியிட்ட நீட் தேர்வு குறித்த புத்தகம் நீட்தேர்வு வேண்டும் என்று சொல்கிறதா அல்லது வேண்டாம் என்று சொல்கிறதா?"

Leave a comment

Your email address will not be published.


*