பேசாத பேச்செல்லாம்!  – நீங்கள் யாருக்காவது ஒரு சிறந்த புத்தகத்தை பரிசளிக்க விரும்பினால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்! 

மொத்தம் 32 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தான் எழுத்தாளர் பிரியா தம்பி எழுதிய இந்த “பேசாத பேச்செல்லாம்” புத்தகம். இந்தப் புத்தகம் கற்றுக் கொடுத்த சில விஷயங்கள், புரிதல்கள், இந்தப் புத்தகத்தால் உண்டான கேள்விகள் போன்றவற்றை தொகுக்கப் பட்டிருக்கிறது.

  1. இன்றைய காலத்துப் பெண்கள் தங்களுக்கு பிறந்திருக்கும் மகள்களை எப்படி வளர்க்க வேண்டும்? இதற்கு முந்தைய காலத்தில் அம்மாக்கள் பாட்டிகள் எப்படி கலாச்சாரம் என்கிற பெயரில் கட்டுப்பாடுகளை நம்மில் திணித்தார்கள். அந்த மாதிரியான கலாச்சாரத் திணிப்புகள் நாம் நம்முடைய மகள் மீது திணிக்கக்கூடாது,  அவர்கள் நம்மைவிட துணிச்சலாகவும் புத்திசாலியாகவும் அதிசிறந்த கேள்விகள் கேட்கக் கூடிய மனிதர்களாகவும் இருக்கிறார்கள், முடிந்தவரை அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். அவர்களிடம் போய் நாங்கல்லாம் இந்த வயசுல இப்படி இல்ல எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? நீங்கள் இந்த காலத்துல இவ்வளவு ஈசியா சுதந்திரமா எல்லாத்தையும் அனுபவிக்கிறீங்க என்பது போன்ற வசனங்களை பேசி அவர்களின் சுதந்திரத்தை கட்டிப்போட வேண்டாம்.
  2. அம்மாவாக இருந்தாலும் சரி, அப்பாவாக இருந்தாலும் சரி, நீங்கள் உங்களுடைய கடந்த காலத்தை நினைவில் வைத்துக்கொண்டு நானெல்லாம் கல்லூரியில் படித்து முடித்த பிறகுதான் இருசக்கர வாகனங்களை ஓட்டி பழகிக் கொண்டேன், உனக்கு என்ன இவ்வளவு அவசரம் என்ற கேள்விகளெல்லாம் கேட்காமல், உங்கள் மகளுடைய உடல் அந்த வாகனங்களை தாங்கிப் பிடிக்க கூடிய அளவுக்கு இருக்கிறது என்றால் உங்கள் மகளின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் கியர் வண்டியையோ அல்லது ஸ்கூட்டியாக இருந்தாலும் கற்றுக் கொடுங்கள்.
  3. சென்னை போன்ற பெருநகரங்களில் பெண்கள் வேலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் கை நிறைய சம்பளம் வாங்கக்கூடியவர்களாத்தான் இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். வெளியில் சொல்லிக் கொள்ளும்படி எல்லா பெண்களும் 60 ஆயிரம் 80 ஆயிரம் சம்பளம் வாங்குவதில்லை. 10 ஆயிரம் சம்பளத்திற்குக் கூட சொந்த ஊரிலிருந்து வெளியேறி இங்கு வந்து தங்கியிருக்கும், இடத்திற்கு சரியான வாடகை கொடுக்க முடியாமல் தங்களுடைய உடை மற்றும் உணவுகள் போன்றவற்றை சரியாக பயன்படுத்த முடியாமல் மிக குறைந்த விலையில் கிடைக்கும் உணவுகளை மிக குறைந்த விலையில் கிடைக்கும் உடைகளை வாங்கி பயன்படுத்திக் கொண்டு வறுமையில் வாடும் படித்த பட்டதாரி பெண்களும் இருக்கிறார்கள். பெண்களுக்கு என்ன பிரச்சனை? படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அவர்கள் வீட்டில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு நன்றாக சாப்பிடுவார்கள், ஆண்கள் மட்டும் தான் வெளியே போய் கஷ்டப்பட்டு அலைந்து திரிவார்கள் என்ற பார்வையை இனிமேல் மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் பெரு நகரங்களில் வேலை பார்க்கும் பெண்கள்  வெளியே சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 
  4. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் காதலிக்கலாம். அவர்கள் எத்தனை பெண்களை காதலித்து இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர் திறமைசாலி என்கிற ஒரு தோற்றம் இந்த சமூகத்தில் உள்ளது. அதே சமயம் பெண்கள் குறைந்தபட்சம் இரண்டு இரண்டு அல்லது மூன்று ஆண்களை தங்களுடைய இளம் வயதில்  காதலித்து இருக்கிறார்கள் என்றால் அவர்களை ஒழுக்கம் கெட்டவளாக இந்த சமூகம் பார்க்கிறது.  திருமணமான பிறகு  ஆணும் பெண்ணும் தங்களுடைய பழைய காதல்களை பற்றி பரிமாறிக் கொள்ளும் போது அதில்,  பெண்களுடைய முன்னாள் காதலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து விட்டால் அவ்வளவு தான், அந்த பெண்ணின் வாழ்க்கை. அதே போல  அப்பாவுடைய கடந்த கால காதல் கதைகளை கேட்டு மகிழும் நாம் அம்மாவுடைய காதல் காதல் கதைகளை கேட்க தயாராகவும் இல்லை, அப்படியே அம்மா தன்னுடைய காதலை பழைய காதல் கதைகளை வெளியே சொன்னால் அவற்றை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை இங்கு யாருக்கும் இல்லை, நம்ம அம்மா இவ்வளவு தரம் குறைந்தவராக இருக்கிறாரா என்ற பார்வையில் தான் நாம் எல்லோரும் பார்க்கிறோம். காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது தானே அதில் ஆண்கள் மட்டும் இவ்வளவு பேரை காதலிக்கலாம், பெண்கள் இவ்வளவு பேரை மட்டும் தான் காதலித்து இருக்கணும் என்கிற விதியை விதிப்பது ஏன்? 
  5. ஆண் பெண் நட்பு குறித்த புரிதல்கள் இன்னும் நம் சமூகத்தில் சரியாக யாருக்கும்  உண்டாகவில்லை. தொடுதல்களில் பலவகைகள் உண்டு. ஒருத்தர் நம்மை காமத்தோடு தொடுகிறாரா அல்லது எதார்த்தமாக நட்பு ரீதியாக தொடுகிறாரா என்பதை நம் எல்லோராலும் சுலபமாக கணித்து விட முடியும். அப்படி இருந்த போதிலும் யாராவது புதிய மனிதர் நம்மை தொட்டுவிட்டால் வெடுக்கென்று கையை எடுத்தால், அவருக்கு நாம் ஏதோ தவறு செய்து விட்டோம் போல என்கிற ஒரு எண்ணம் வருகிறது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இன்றைய சமூகத்தில்  பிறந்து வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் போன்றவற்றைச் சொல்லிக் கொடுங்கள். அந்த விஷயங்கள் தெரிந்து விட்டால் ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி பாலியல் வன்முறைக்கு உள்ளாக மாட்டார்கள்.   அந்த மாதிரியான விஷயங்களை கற்றுக் கொடுத்து விட்டால் ஆண் பெண் நட்பு எப்படி இருக்க வேண்டும்? என்பது அவர்களுக்கு இளம் வயதிலேயே நன்கு புரிந்து விடும். இதனால் பள்ளி கல்லூரி முடிப்பதற்குள்ளே  அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்வது, ஒரு பெண்ணை தொடர்ந்து சீண்டலுக்கு உள்ளாக்குவது போன்ற  புரிதலற்ற செயல்பாடுகள் எல்லாம் படிப்படியாக குறைந்துவிடும். 
  6. இந்த சமூகத்தில் உடல் கேலி யார் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்று யோசித்தால் பெரும்பாலும் அது பெண்கள் மீதுதான் பாய்கிறது. குறிப்பாக ஒரு பெண் குண்டாக இருந்து விட்டால் உடனே குண்டம்மா என்று சொல்வது, உயரமாக இருந்தால் இந்த பொண்ணு என்ன இப்படி இருக்குது? இதை கட்டிக்க போறவன் என்ன ஸ்டூல் வச்சா குடும்பம் நடத்துவான்? என்று கிண்டல் அடிப்பது,  குள்ளமாக இருந்தால் இந்த பெண்ணுக்கு என்ன கவலை? நடக்க முடியவில்லை என்றால் புருஷன் காரன் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவான் என்றும் கேலி செய்வதை தவிருங்கள். அதே சமயம்  முன்பின் அறிமுகமில்லாத வீட்டுக்கு பெண் பார்க்கப் போகும்போது நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெண் இல்லை என்றால் உடனே நீங்கள் அவரை பார்த்து கேலியாக அல்லது இளக்காரமாக சிரிக்காமல் முகத்தை சுளிக்காமல் தன்னைப் பெண் பார்க்க வந்திருக்கும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து சபையில் வந்து நிற்கும் அந்தப்  அந்தப் பெண்ணுக்கு பதில் மரியாதை கொடுங்கள். 
  7. பாலியல் வன்புணர்வு என்பது வீட்டிற்கு வெளியில் மட்டும் நடப்பதில்லை. வீட்டிற்கு உள்ளேயே கூட நடக்கின்றன. நெருங்கிய உறவினர் என்கிற பெயரில் சில ஆண்கள் தங்கள் வீட்டு பெண்களை காமத்தோடு தொடுகின்றனர். குறிப்பாக தங்கள் வீட்டு சிறுமிகளை தொடக்கூடாத இடங்களில் தொடுகின்றனர்.  அதேபோல சில பெரியவர்கள் நம்ம வீட்டு குழந்தை தானே என்கிற பெயரில் தங்களுடைய ஆண் பேரன்களை தொடக்கூடாத இடங்களில் தொடுகிறார்கள். குறிப்பாக பிறப்புறுப்பை விளையாட்டு சாமான் போல் வைத்து அந்த பெரியவர்கள் விளையாட்டு காட்டுவது போன்ற அவலங்கள் எல்லாம் நடக்கின்றன. இன்றைய காலகட்டத்தை பொருத்தவரை குட் டச் பேட் டச் என்பதை குழந்தைகளுக்கு எவ்வளவு ஆர்வமாக முக்கியமாக சொல்லி கொடுக்கிறோமோ அதே போல அந்த மாதிரியான முதியவர்களுக்கும் ஏன் அப்பா அம்மா உட்பட எல்லாருக்கும் குட் டச் பேட் டச் என்பதை சொல்லித் தரவேண்டும். அல்லது அவர்களாகவே கற்றுக் கொள்ள முற்படவேண்டும்.  
  8. பெண்களுக்கு ஊரைச் சுற்றி பார்க்கும் உரிமை, இந்த சமூகத்தில் மிக குறைவாகத்தான் உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே சுதந்திரமாக செல்ல வேண்டுமென்றால் இந்த சமூகம் அவர்களை கோவிலைத் தவிர உறவினர்களின் வீடுகளுக்கு அல்லது தோழிகளின் வீடுகளைத் தவிர மீதி எந்த இடத்திற்கும் அந்த பெண்களை விடுவதில்லை. 

தனக்கு பிடித்தமான நடிகரின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் முதல் நாள் முதல் ஷோ எத்தனை பெண்களால் நிம்மதியாக போய் பார்க்க முடிகிறது? அப்படியே அவர்கள் ஆண்கள் கூட்டங்களை தாண்டி உள்ளே சென்றாலும் அந்த மிக சில எண்ணிக்கையில் உள்ள பெண்களைப் பார்த்து எவ்வளவு கேலி கூச்சல்கள் போடுகிறார்கள் இந்த ஆண்கள்.  அந்த மாதிரியான பிரச்சினைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண்கள் ஆண்களின் துணை இல்லாமல் தியேட்டர் மாதிரியான இடங்களுக்கு செல்ல முற்படுவது இல்லை. அப்படியே துணிச்சலோடு தியேட்டருக்குத் தனியாகச் செல்ல முயன்றாலும் வீட்டில் உள்ள அம்மா அப்பாக்கள் விடுவதில்லை, இது என்ன பழக்கம்? தியேட்டருக்கு பொட்ட புள்ள தனியா போவது? என்றும் அடிக்கடி தியேட்டர்ல போய் படம் பார்க்கிற பழக்கம் என்ன பழக்கம் இது? என்றும் கண்டிப்பார்கள். நீங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு அந்த மாதிரியான கட்டுப்பாடுகள் எல்லாம் வைக்காமல் தனியாக சென்று இந்த மாதிரியான சந்தோஷத்தை அனுபவித்து விட்டு வருகிறேன் என்று கேட்டால் அவர்களை அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். அவர்களுக்கு காவலர்களாக இருக்கிறேன் என்ற பெயரில் அவர்களை கட்டிப் போட வேண்டாம். 

இந்த புத்தகம் இதை மட்டும் வாசிப்பவருக்கு கற்றுத்தரவில்லை. இதைவிட இன்னும் எக்கச்சக்கமான புரிதல்களை இந்தப் புத்தகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒரு புத்தகம் வாசிப்பவர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றங்களை தந்திருக்கிறது, எவ்வளவு விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறது என்பதை பற்றி எழுதினால் கிட்டத்தட்ட அது இந்த புத்தகத்தின் பக்கங்களை விட அதிகமாகப் போகும். அந்த அளவிற்கு இந்த புத்தகத்தில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமான வரிகளாக இருக்கின்றன.  ஒரு சில புத்தகங்களில் மிக முக்கியமான வரிகளை தேடிப்பிடித்து அடிக்கோடிட்டு வைப்போம்.  எப்போதெல்லாம் மனம் சோர்வாக இருக்கிறதோ அப்போதெல்லாம் அந்த வரிகளை பார்த்து ரசிப்போம். ஆனால் இந்த புத்தகத்தை நீங்கள் எடுத்தால் இதில் எந்த வரிகள் முக்கியமான வரிகள் என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. ஏனென்றால் எல்லா வரிகளுமே உங்களின் மனச் சோர்வை நீக்கி உங்களை ஒரு புதிய மனிதனாக மாற்ற கூடிய வரிகளாக இருக்கின்றன. 

இந்த கட்டுரையின் கடைசி அத்தியாயத்தில் கடைசி வார்த்தையாக “நிறைந்தது” என்ற வார்த்தையை எழுதியிருந்தார் எழுத்தாளர் பிரியா தம்பி. அந்த நிறைந்தது என்ற வார்த்தையை படிக்கும்போது எழுத்தாளர் சி. சரவண கார்த்திகேயன் எழுதிய ஜல பிரவேசம் என்கிற சிறுகதை நினைவுக்கு வந்தது. அந்தச் சிறுகதையில் ஒரு பெண் எழுத்தாளர் சமூகத்தில் நடக்கும் அத்தனை அவலங்களையும் ஒரு வாரப் பத்திரிகையில் சுழட்டி அடிக்கும் வகையில் ஆவேசம் கொண்டு  அரசியல் கட்டுரைத் தொடர்கள் எழுதுவது போல் இருக்கும். அந்தக் கட்டுரைத் தொடர் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும். அப்படிப்பட்ட கட்டுரைத் தொடரின் கடைசி அத்தியாயத்தை  அடைந்ததும் அந்த பெண் எழுத்தாளர் “நிறைவு” என்ற வார்த்தையை எழுதி இருப்பார். அந்த கதையைப் படித்தவர்களுக்கு “நிறைவு” என்கிற வார்த்தை  என்னமோ செய்து விட்டது போன்ற உணர்வை தரும். கிட்டத்தட்ட  அப்படிப்பட்ட உணர்வைத்தான் எழுத்தாளர் ப்ரியா தம்பியின் பேசாத பேச்செல்லாம் கட்டுரைத் தொடரின் கடைசி வார்த்தையான “நிறைந்தது” என்ற வார்த்தை தந்தது, புத்தகம் வாசித்த பிறகு உங்களுக்கும் அந்த மாதிரியான உணர்வை தரும். 

Related Articles

காலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்ப... கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிக முக்கியமான படம் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெ...
சாவு வீட்டில் சிரித்துக்கொண்டே செல்ஃபி எ... இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அது சொல்லாக மட்டும் தான் இருக்கிறதே தவிர செயலில் யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை...
தீபாவளிப் பண்டிகை – அறிந்ததும் அறியாததும... தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதன் காரணம் – புராணப் பிண்ணனி, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.நரகாசுரன் என்ற அசுரனது கொடுமைகள் தாங்காமல் அனைவரும் கிருஷ்ண பா...
“ஆசப்பட்டா மட்டும் போதாது அடம்பிடி... இன்றைய தமிழ்சினிமாவின் மிக முக்கியமான நடிகர்கள் இரண்டு பேர். ஒருவர் விஜய்சேதுபதி மற்றொருவர் சிவகார்த்திகேயன். இருவருமே படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார...

Be the first to comment on "பேசாத பேச்செல்லாம்!  – நீங்கள் யாருக்காவது ஒரு சிறந்த புத்தகத்தை பரிசளிக்க விரும்பினால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்! "

Leave a comment

Your email address will not be published.


*