தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்கள் படும்பாடு – தாய்மொழிப்பற்று இல்லாத தமிழகம்!

tamil-medium-school

தாய்மொழிப்பற்றின் காரணமாகவும் போதிய வசதி இல்லாததாலும் நமக்கு வாய்ச்சது இதுதான் என்று தமிழ்மீடியத்தில் படித்த இளைஞர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள் படும்பாடு பெரும்பாடு. இந்த சமூகம் தமிழ்மீடியம் மாணவனை அந்த அளவுக்கு வேண்டாதவனாக பார்க்கிறது. பிரசண்டேசனுக்கு போனால் அவமானம். கம்பெனி இண்டர்வியூக்கு போனால் அவமானம்…, என்று பல இடங்களில் தலைகுனிந்து அத்தனை அவமானங்களையும் கடந்து வந்து அடித்து பிடித்து சாதித்துக்காட்டுகிறான்… அந்த உத்வேகத்தை தர தாய்மொழியால் மட்டுமே முடியும். அதுதான் தாய்மொழிக்கல்வியின் சிறப்பம்சம்.

தாய்மொழிப்பற்று பற்றி காந்தியடிகள்

” தாய்மொழியை வளமுறச் செய்வதற்குத் தேவையானவை, தங்கள் தாய்மொழியில் உள்ள பற்றும் மதிப்பும் தான் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ”

” ஜெகதீஷ் சந்திரபோஸ், பி.சி.ராய் முதலியோர் சாதனைகளைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால், தாய்மொழிமூலம் நமக்குக் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும் இராய்களும் தோன்றியிருப்பார்கள். ”

இது 1917 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் நாளில், புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை.

இதனை உணர்ந்துகொள்ளாத தமிழர்களிடையே தாய்மொழிப்பற்று எப்படி இருக்கிறது?

அவலம் 1:

உலகின் மூத்தமொழி என்றும் ஹார்வேர்டு பல்கலைகழகத்தில் இருக்கை அமைத்த முதல் மொழி என்றும் தமிழுக்கு பெருமை உண்டு. அப்படிபட்ட தமிழுக்கு, தமிழ்நாட்டில் மதிப்பு இல்லை என்பதுதான் அவலம்.

அவலம் 2:

அரசுப்பள்ளிக்கூடத்தில் படித்தவனுக்கு ஆங்கிலம் ததக்கா புதக்கா என்றால் சிரிக்கும் சமூகம், தனியார் பள்ளிக்கூடத்தில் படித்தவனுக்கு தமிழ் ததக்கா புதக்கா என்றால் சாதாரணமாக கடந்து செல்கிறது. இன்றைய தமிழக மாணவர்களின் உண்மையான நிலைமை இதுதான்.

அவலம் 3:

நல்ல தமிழ்பெயரை தேடி எடுத்து பள்ளிக்கூட பெயராக வைத்திருக்கும் தனியார் பள்ளிக்கூடங்களில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுவதால் தமிழ் இன்றும் உயிர்பெற்று வருவது அரசு பள்ளிகளில் மட்டுமே. அதாவது அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் கூலிகளின் பிள்ளைகள் தான் இன்னும் தமிழை உயிருடன் வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தமிழ் மீடியம் என்பதாலோ என்னவோ இந்த சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவே கருதப்படுகிறார்கள். காரணம், தமிழர்களிடையே  தாய்மொழிப்பற்று இல்லாததே. இந்த தாய்மொழிப்பற்று இல்லாத அறிவு ஜீவிகள் முன்பு தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள் படும்பாடு பெரும்பாடு.

ஒன்றாம் வகுப்பு முதல் பண்ணிரண்டாம் வகுப்பு வரை தமிழ்மீடியத்தில் படித்த மாணவர்கள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பின்பு தான் அவர்களுக்கு அவமானங்கள் குவிகிறது. சாதாரண பேப்பர் பிரெசண்டேசன் செய்ய முடியாமல் திக்கி திணறினால், வாத்தியார் ” ஏய் ச்சீ கீழ வா… இங்கிலீஷ் பேச தெரிலனா நீ ஏன் இங்க வந்து எங்க உயிர வாங்குற… ” என்று எகத்தாளம் பேசுகிறார். அதைப்பார்த்து,  தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் எழுத படிக்க தெரியாத சிபிஎஸ்இ மாணவர்கள் கொள்ளென சிரிக்கிறார்கள். அவர்களுடன் மெட்ரிக்குலேசன் மாணவர்களும் சேர்ந்துகொள்ள நம்ம ஆட்களுக்கு அன்றைக்கு முழுக்க தலைகுனிவு தான்.

அதற்கடுத்த பேப்பர் பிரசண்டேசனுக்கு நம்மாட்ளுக்கு கைகால் உதறும். எங்காவது ஓடிடலாமா என்று எண்ணுவார்கள். இந்த முறையும் சிரிப்பார்களோ என்று அஞ்சுவார்கள். தெரியாத்தனமா இந்த தமிழ் மீடியத்துல படிச்சது தப்பா போச்சு என்று தன்னுடைய அவல நிலையை கண்டு வருந்துவார்கள்.

தாய்மொழிக்கல்வியின் அம்சம்

ஆனால் இத்தனை அவமானங்களை சந்தித்தாலும் கான்செப்ட்டை புரிந்து கொள்வதில் நம்ம ஆட்கள் தான் கெட்டிக்காரர்கள். சில நாட்களில் தன்னை மேம்படுத்திக்கொண்டு, கல்லூரியின் ஆரம்ப காலகட்டத்தில் ஆங்கிலம் பேசத்தெரியாததால் கொள்ளென சிரித்து அவமானப்படுத்தியவர்களுக்கு, அவர்கள் தான் கான்செப்ட்டை வாத்தியாரைக் காட்டிலும் எளிமையாக புரிய வைக்கிறார்கள். கருத்தூன்றி படிக்க தாய்மொழிக்கல்வி அவசியம் என்பதை உணர்த்துகிறார்கள். ஆங்கில வழிக்கல்வியில் படித்தவர்களைவிட தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் குறைவாகத்தான் அரியர் வைக்கிறார்கள். அவர்களைக் காட்டிலும் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரியில் இருந்து வெளியேறுகின்றனர்.

இருந்தாலும் நேர்முகத்தேர்வில் தமிழ்மீடியம் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ, மெட்ரிக்குலேசன் மாணவர்களைக்காட்டிலும் மதிப்பு குறைவு. நல்ல அறிவு பெற்றிருந்தாலும் சரளமாக
ஆங்கிலம் பேசத்தெரியவில்லை என்ற காரணத்தால் அவர்களும் அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார்கள். இன்னும் ஒருசில கம்பெனிகள் தமிழ்மீடியம் மாணவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்று வெளிப்படையாகவே கூறிவிடுகிறது. இப்படி எத்தனை அவமானங்களை சந்தித்தாலும் விடாமல் முயற்சி செய்து சாதித்துவிடுகிறார்கள்.

இந்த சமூகம் மொத்தமாக சீர்குலையாமல் காப்பவர்கள் தாய்மொழிக்கல்வியில் பயின்றவர்கள் என்பது தான் முற்றிலும் உண்மை. அப்துல் கலாம், சகாயம் போன்றோரெல்லாம் தமிழ்மீடியத்தில் படித்து முன்னேறியவர்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு சமூகத்தை நல்வழியில் இயக்க முற்படுபவர்கள் தாய்மொழிக்கல்வியில் படித்தவர்கள் மட்டுமே!

உலக அளவில் சாதனை படைத்தவர்கள் பெரும்பாலும் தாய்மொழிக்கல்வியில் படித்தவர்களே! உதாரணமாக  ஜப்பானை எடுத்துக்கொள்வோம். அவர்கள் தாய்மொழியை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. அதனால் தான் புதுப்புது கண்டுபிடிப்புகள் குவியும் நாடாக ஜப்பான் இருக்கிறது.

தமிழை வைத்து அரசியல்

ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் மைக்கை பிடித்துக்கொண்டு தமிழண்டா, தமிழ்டா என்று வாய்கிழிய கத்தியவர்களின் பிள்ளைகளும், அரசியல் மேடைகளிலும் பட்டிமன்ற மேடைகளிலும் வக்கனையாக பேசுபவர்களின் பிள்ளைகளும், சிபிஎஸ்இ பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு, எந்த இடத்திற்கு துணைக்கால் போட வேண்டும், எந்த இடத்தில் ண, ன போட வேண்டும், எந்த இடத்தில் ஒற்றைக்கொம்பு இரட்டைக்கொம்பு போட வேண்டும் என்பதெல்லாம் தெரியாமல் சரளமாக தமிழ் படிக்க தெரிந்தவனை வாய் ஆவென்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் விடுப்பு எடுக்காமல் இந்தி டியூசன் சென்று உஷாராக வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசுபள்ளிகளின் அவலம்

அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச தெரியாது என்பதும், அரசுப்பள்ளி தமிழாசிரியர்களின் பிள்ளைகளுக்கு சரளமாக தமிழ் படிக்க தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றவனை எப்படி பார்க்கிறது இந்த தாய்மொழிப்பற்று இல்லாத சமூகம்?

அரசுப்பள்ளியில் படிப்பவனை இந்த சமூகம் கேனையனாக பார்க்கிறது என்பதும், அதிலும் தமிழ்மீடியத்தில் படிப்பவனை மகாமட்டமானவனாக பார்க்கிறது என்பதும், அதைவிட கேனையனாக தனியார் பள்ளிக்கூடத்தில் பணம் கட்டி தமிழ்மீடியம் படிப்பவனை கேனையோ கேனையாக பார்க்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

நொடிக்கு நொடி சிலிர்க்க வைத்த 2.O! ̵... செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிகிறதா? இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லையே... இதை மையமாக வைத்து 500 கோடி போட்டு படம் எடுத்து வச்சிரு...
நீ Bad – u ! நா Dad – u ! தன... மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. அதன் இரண்டாம் பாகமே கவிழ்ந்துவிட ஓடாத மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி ரிலீஸ் வரை வந்துவிட...
ஜமால் மாலிக் போன்ற சிறுவர்கள் ஜெயிப்பதை ... ஜமால் மாலிக் என்று இங்கு குறிப்பிடப்படுவது ஒரு நிஜ மனிதரை அல்ல. ஏ. ஆர். ரகுமான் எந்த படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கினாரோ அந்தப் படத்தின் கத...
ஒரே ஒரு தமிழ்படம் (2) தான், ஒட்டுமொத்த த... தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சில படங்களையும் தமிழக அரசியலின் சில தவிர்க்க முடியாத சம்பவங்களையும் கலந்து கட்டி கலாய்த்து தள்ளி இருக்கும் தமிழ்ப்படம...

Be the first to comment on "தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்கள் படும்பாடு – தாய்மொழிப்பற்று இல்லாத தமிழகம்!"

Leave a comment

Your email address will not be published.


*