தெருவுக்கு தெரு கிட்ஸ் ஸ்கூல், பிரைவேட் ஸ்கூல், இன்ஜினியரிங் காலேஜ் என்று கல்வி கொள்ளை கூட்டங்கள் பல்கிப் பெருகி கிடக்கிறது. இப்படி கொள்ளை கூட்டங்கள் பெருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பதினைந்து மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடப்பட்டு வருவதாகவும், அனைத்து அரசு பணியாளர்களின் பிள்ளைகள், எம்எல்ஏக்களின் பிள்ளைகள், எம்பிக்களின் பிள்ளைகள் எல்லோரும் அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து புகார்களும் கோரிக்கைகளும் எழுந்துள்ளது. ஒரு சில பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களும் கட்டடங்களும் மட்டும் தான் இருக்கிறது ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை அதைவிட குறைவாக இருக்கிறது. எல்லாம் தனியார் பள்ளிகள் முளைத்ததால் வந்த வினை. இப்படி இந்தியாவின் கல்வித் தரம் கேவலமாக இருப்பதற்கு சில காரணங்களும் உண்டு.
முதலில் கல்விச் சாலைகள் எப்படி உருவானது என்று பார்ப்போம்.
கிளர்க்குகளை உருவாக்குகிறது!
ஆங்கிலயே ஆட்சிக்கு முன்பு மத சம்பந்தமான கல்வி தான் பிரதானமாக இருந்தது. ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பிறகு கணிதம், வரலாறு, பூகோளம், அறிவியல் போன்ற பாடங்கள் பள்ளிகளில் உருவாக்கப் பட்டன. ஆனால் இந்தக் கல்வி முறை எதற்காக தொடங்கப் பட்டது என்றால், ஆங்கிலேயர்களுக்கு அரசாங்கத்தை நடத்த ஆங்கிலம் தெரிந்த பலர் ( கிளர்க்குகள்) தேவைப் பட்டது. அதற்கு தான் இந்தக் கல்வி முறை. இந்தக் கிளர்க்குகள் ஆங்கில அரசாங்கத்தை வழி நடத்தினார்கள். எத்தனை பேர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் பார்த்தீர்கள். அதில் ஆர்ஜே பாலாஜி நமது கல்வி முறை குறித்து வசனம் பேசி இருப்பார் கவனித்தீர்களா?
இந்தியாவில் பல காலமாக தமிழகம் முழுவதும் பல சாதிகள் பரவிக் கிடந்தது. அதில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாகவே அந்தண வகுப்பைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே கோயில்களில் அர்ச்சகர்களாகவும், வேதங்கள் கற்றுத் தரும் பாட சாலைகளிலும் ஆசிரியர்களாகவும் இருந்தார்கள். இப்படி அவர்கள் எல்லோரும் முன்னதாகவே இந்திய நாட்டுக் கல்வி பெற்றிருந்தார்கள். ஆதலால் ஆங்கில ஆட்சியின் போது கொண்டு வந்த கல்வி முறையை புரிந்து கொள்ள இவர்களுக்கு இயற்கையாக சக்தி இருந்தது என்று கூறலாம். இப்படி ஆங்கிலேயர் புகுத்திய புதுக் கல்வி முறையை கற்றோருக்கு அரசாங்க வேலை கிடைத்ததால் அரசு வேலைக்கு அந்தணர் வகுப்பையே அதிக அளவில் சேர்த்துக் கொண்டனர். முதலில் கிளர்க்கு வேலை செய்த இவர்கள் பிறகு அதிகாரிகளாக உயர்ந்து ஆங்கில அரசாங்கத்தை வழி நடத்தினர். இவை தான் மற்றவர்களை விட அந்தணர்கள் உயர்ந்தவர்களாக கருதப் படுவதற்கு காரணம். கிளர்க்குகளை தயார் செய்வதற்கு கொண்டு வரப்பட்ட கல்விமுறையை தான் இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம். அந்தணர் வகுப்பினரை போல மற்ற வகுப்பினர்கள் ஏன் கல்வியில் அதிக ஈடுபாடு காட்டவில்லை என்ற கேள்விகள் எழவும் செய்யும். காரணம் அவர்கள் கல்வி நிலையங்கள், வேலை வாய்ப்புகள் நிலையங்கள் போன்றவற்றில் இட ஒதுக்கீடு பெற முயன்று அதன் மூலமாக வேலை பெற்றதும் அவர்களுக்கு கல்வியில் அதிக நாட்டமில்லாமல் போனதற்கு காரணம் என்று கூறலாம். ( இது மட்டுமே காரணம் என்றும் கூற முடியாது).
இப்படி சாதிய அந்தஸ்து வைத்து கல்வி அறிவு பெற்றவர்கள், தங்களை சமூகத்தில் உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்றி அவர்களுடைய சமூகத்தை மட்டுமே மென்மேலும் உயரச் செய்கின்றனர். வங்கியை அடுத்து, கோவிலை அடுத்து, அதிக பணங்கள் புழங்கும் இடம் கல்வி நிலையங்களாகத் தான் உள்ளது. அத்தனையும் திருட்டுக் கும்பல். இந்தக் கும்பலால் ஒட்டு மொத்த இந்தியாவின் கல்வி சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக ஏழைகளின் கல்வி கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த திருட்டுக் கும்பலின் மையமாக நாமக்கல் மாவட்டம் விளங்கி வருகிறது என்று கூறலாம். நண்பன் படத்தில் வருவதை போல் ரன் ரன்… லைப் இஸ் ரேஸ்… என்று மாணவர்களுக்குள் பதற்றத்தை உண்டாக்கி அவனை இந்த சமூகத்தில் பயந்தாங்கோழியாகவே வைத்திருக்க முயல்கிறது. நாமக்கல் பள்ளிகள் எப்படி இயங்கி வருகிறது என்று ஆறு வருடங்களுக்கு முன்பே விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் ( Hotstar ல் முன்னூற்று பதினான்காவது எபிசோட் – ஜூலை 1, 2012) வந்துள்ளது. அன்று முதல் இன்று வரை அந்தப் பள்ளிக்கூடங்கள் இன்றும் அப்படியே செயல்படுகிறது. பள்ளி விளம்பரங்களுக்கு மாணவ மாணவிகளின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்று இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பை ஒரு பயலும் மதிக்கவில்லை.
வரும் கல்வி ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இணையதள வசதியுடன் வகுப்பறைகள் நடக்கும் என்று அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அந்த இணைய தள வசதியை ஆசிரிய பெருமக்கள் முறையாகப் பயன்படுத்தி பாடம் கற்பிப்பார்களா? அடுத்தது ஒன்றாம் வகுப்பு முதல் பண்ணிரண்டாம் வகுப்பு வரை மூன்று விதமான பள்ளி சீருடைகள் வழங்கப் படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதில் இன்னும் எத்தனை ஊழல் நடக்கப் போகிறதோ?
Be the first to comment on "தமிழகத்தில் மட்டும் இதுவரை 2000ம் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன! – EducationMafia"