கடன் மீட்பு முகவர்களால் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயி

Tractor

ஐந்து லட்சம் கடன் தொகைக்காக விவசாயி ஒருவரை டிராக்டர் ஏற்றிக் கொன்ற விவகாரம் உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடன் மீட்பு முகவர்களால் விவசாயியின் டிராக்டரை பயன்படுத்தியே இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று உள்ளது.

டிராக்டர் ஏற்றி கொலை

ஞான் சந்திரா என்ற நாற்பத்து ஐந்து வயதான விவசாயி, எல் அன்ட் டி நிதி நிறுவனத்திடம் இருந்து ரூபாய் ஐந்து லட்சம் கடன் தொகையை சில வருடங்களுக்கு முன்பு பெற்று இருந்தார். கடன் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வந்த ஞான் சந்திராவுக்கு, பாக்கி தொகையாக இன்னும் 125000 திருப்பிச் செலுத்த வேண்டி இருந்தது. ஜனவரி மாத தொடக்கத்தில் ரூபாய் முப்பத்து ஐந்தாயிரம் செலுத்திய அவர், கூடிய விரைவில் மீதம் உள்ள தொகையையும் செலுத்தி விடுவதாகவும் உறுதி அளித்தார். இந்த நிலையில் தான் இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், லக்னோவில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சித்தாப்பூர் என்னும் கிராமம். அந்தக் கிராமத்தில் தனது நிலத்தில் ஞான் சந்திரா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்துக்கு வந்த ஐந்து கடன் மீட்பு முகவர்கள், சந்திராவின் டிராக்டரை பறிமுதல் செய்ய வந்திருப்பதாகச் சொல்லி அவரது டிராக்டர் சாவியை அடாவடியாகப் பிடுங்கினர்.

நடந்த சம்பவத்தை விளக்கும் ஞான் சந்திராவின் சகோதரர் ஓம் பிரகாஷ், ‘தான் இம்மாத தொடக்கத்தில் தான் 35000 பாக்கி தொகையை செலுத்தியதாகவும், கூடிய விரைவில் மீதமுள்ள தொகையை செலுத்தி விடுவதாகக் கூறிய போதும் அவர்கள் டிராக்டரை மூர்க்கமாக ஒட்டிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களில் ஒருவன் நின்று கொண்டிருந்த என் சகோதரனை பிடித்துத் தள்ளினான். அவர் ட்ராக்டரின் முன் சக்கரத்தில் விழுந்து தலை நசுங்கி எங்கள் கண் முன்னேயே இறந்தார்’ என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

‘கடன் மீட்பு முகவர்களுக்கும், ஞான் சந்திராவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதில் கோபமடைந்த கடன் மீட்பு முகவரிகளில் ஒருவன் அவரைப் பிடித்து தள்ளியிருக்கிறான். அவர் ட்ராக்டரின் முன் சக்கரத்தில் விழுந்து உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளார்’ என்று காவல்துறை மூத்த அதிகாரி திரு. எம்பி சிங் தெரிவித்தார். இது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், கூடிய விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

ஐந்து பெண் குழந்தைகள்

இரண்டரை ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்த ஞான் சந்திரா, அதை மட்டுமே நம்பிப் பிழைப்பு நடத்தி வந்தார். அவர் அவரது மனைவி உட்படக் குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர். அதில் ஐந்து பெண் குழந்தைகளும் அடக்கம். அவர்களில் ஒருவர் கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திர பிரதேச அரசு கடந்த ஆண்டு விவசாயிகளின் மரணத்தைத் தடுக்கும் பொருட்டும், விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் அவர்களுக்குக் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால் கடன் தொகையின் அதிகபட்ச அளவு ஒரு லட்சம் மட்டுமே. இதனால் விவசாயிகள் தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறும் சூழல் நிலவி வருகிறது.

பொதுவாக நம் நாட்டில், ஒரு பிரச்சனையின் மீது நடவடிக்கை எடுக்க ஒரு உயிர் காவு வாங்கப்பட்ட வேண்டும். உதாரணத்துக்குப் பள்ளி பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய, ஏதாவது ஒரு குழந்தை சாக வேண்டும். அடுத்த நாளே மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி பேருந்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆனால் நாட்டில் எண்ணிலடங்கா விவசாயிகளின் உயிர் காவு வாங்கப்பட்ட பிறகும், அவர்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படாமலேயே இருக்கின்றன. அரசு என்னும் இந்த பெரும் பூதத்திற்கு இன்னும் எத்தனை விவசாயிகளின் உயிர் தேவையாக இருக்கிறதோ தெரியவில்லை.

Related Articles

இதாங்க ஆயிரத்தில் ஒருவன் படத்தோட கதை!... இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே. சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.ஒரு குக்கிராமம்... தற்போதைய தஞ்சாவ...
ஆளுநர் மாளிகையில் மூன்றாவது நாளாக டெல்லி... டெல்லி ஆளுநரைச் சந்திப்பதற்காக நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர...
சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்... சுஜாதா எழுதிய புத்தகங்களில் ரொம்ப பிராடு தனம் நிறைந்த புத்தகம் என்றால் அது கண்டிப்பாக அவர் எழுதிய "சிறுகதை எழுதுவது எப்படி?" என்ற புத்தகம் தான். அந்த ...
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண் ... கடந்த 2007ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில் நாட்டில் 53.2 சதவீத குழந்தைகள் ...

Be the first to comment on "கடன் மீட்பு முகவர்களால் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயி"

Leave a comment

Your email address will not be published.


*